செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், ஏப்ரல் 20, 2016

தினமலர் - தேர்தல் களம் பகுதியில் எனது கட்டுரை... (03-04-2016)


'அதிமுக, திமுக: நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு!' - ஓர் வாசகர் குரல்

விகடன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை

முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சி முடியும் அந்திமக் காலத்தில், மதுவிலக்கு குறித்து திருவாய் மலர்ந்திருக்கிறார்.
ஐந்து ஆண்டு காலத்தில் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என ஒட்டுமொத்த தமிழகமுமே,  'மதுக்கடைகளை மூடுங்கள், மதுவிலக்கு பற்றி அறிவியுங்கள்'  என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டபோதெல்லாம், வாய் திறக்காத ஜெயலலிதா, தேர்தல் வந்துவிட்டதும், மதுவிலக்கு குறித்து பேசாமல் வெற்றியை பெற முடியாது என்றெண்ணி, முதல் நாள் பிரசாரத்திலேயே, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்' என்று சொல்லியிருக்கிறார். 

இதற்கு அடுத்த நாளே திமுக,  தனது தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. தேர்தல் நடவடிக்கையாக இருந்தாலும், இரு தலைவர்களின் உறுதிமொழியை வரவேற்கலாம். ஆனால்….

‘’மதுவிலக்கைப் பொறுத்தவரை எனது நெஞ்சார்ந்த குறிக்கோள் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான். பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை ஆகும். ஆனால், பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது என்பது இயலாது. இது படிப்படியாகத்தான் கொண்டுவர முடியும். முதலில் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். பின்னர் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை நாம் அடைவோம்’’ என்று நீட்டி முழக்கியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என பாடிய கோவன் நள்ளிரவில் தேச விரோத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிப்ரவரி மாதம்,  திருச்சியில் பூரண மதுவிலக்கு கோரி மாநாடு நடத்திய ஏழு பேர் மீது தேச விரோத வழக்குப் போடப்பட்டது. மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. மதுக்கடைகளை மூடச் சொல்லி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், காவல்துறையினரின் அலட்சியத்தால் களத்திலேயே பலியானார். இப்படியெல்லாம் போராட்டம் நடந்தபோது, எங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்தது ஜெயலலிதாவின் பூரண மதுவிலக்கு கொள்கை?
மதுக்கடைகளை ஒழித்து, மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் உண்மையான எண்ணம் என்றால், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கலாமே? கடந்த ஐந்து ஆண்டுகளில், 110விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்த 187 திட்டங்களும் ‘நிறைவேற்றப்பட்டதாக’ பெருமிதம் அடைந்த ஜெயலலிதா, அதுபோல், மதுவிலக்கு குறித்து ‘110’ வாசித்து அமல்படுத்திய சாதனையை நிகழ்த்தியிருக்கலாமே? அதையெல்லாம் செய்யாமல், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என்று கூறும் அவரது பேச்சை எப்படி நம்ப முடியும்? 

ஒரே கையெழுத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது, படிப்படியாகத்தான் கொண்டுவர இயலும் என்று கூறுவதன் மூலம், அவரின் கடந்த கால மதுவிலக்கு கொள்கை மீது சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 1991-1996 ம் ஆண்டு தவிர, 2001-2006, 2011-2016 என்று மூன்று ஐந்தாண்டுகளை முழுமையாக ஆட்சி செய்த காலத்தில்,  அவர் நினைத்திருந்தால், எப்பொழுதோ மதுக்கடைகளை மூடியிருக்கலாம். ஆனால், செய்தது என்ன?

1991-ம் ஆண்டில் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றபோது ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் இடம்பெற்றிருந்த, பாக்கெட் சாராயத்தை ஒழிக்க முதல் கையெழுத்திட்ட அவர், அப்போதே படிப்படியாக, மதுவிலக்கை கொண்டு வருவதாக அறிவித்து அந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக்குள் முழுமையான மதுவிலக்கை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
பின்னர் 2001-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தப் பிறகாவது மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்றியிருக்கலாம். அதை செய்யாமல், மதுக்கடைகளை அரசுடைமையாக்கி, மது விற்பனையை அதிகப்படுத்தினார். அதன் பிறகாவது அவருக்கு ஞானோதயம் வந்ததா என்றால் இல்லை. 2011-ம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 300 க்கும் மேற்பட்ட புதிய மதுக்கடைகளையும், உயர்தர எலைட் மதுக் கடைகளையும் திறந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை, போராடியவர்களை கைது செய்தார். 

இப்படி 15 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து மதுவிலக்கை கொண்டுவர முடியாத ஜெயலலிதா, இப்போது தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவேன் என்று வாக்குறுதி தருகிறார். அவரது வாக்குறுதியை ‘தண்ணியில்’  எழுதி வைத்து, வெறிக்கப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 

ஜெயலலிதா அவர்களே...தேர்தல் மட்டும் தற்போது வரவில்லை என்றால், இந்த அறிவிப்பைக் கூட வாய்திறந்து சொல்லியிருக்க மாட்டீர்கள். சட்டப்பேரவையில் மதுவிலக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம், அத்துறையின் அமைச்சரை விட்டு பதில் தர வைத்த நீங்கள், தற்போது மதுவிலக்கு குறித்து பேசுவது முரண்பாட்டின் மொத்த உருவமாகதான் பார்க்க முடிகிறது. 

இதுமட்டுமா? மதுவிலக்கை அமல்படுத்தினால் வருமானம் போய்விடும் என்றும், மதுவிலக்கை அமல்படுத்தும் எண்ணமே இல்லை என்றும் சட்டப்பேரவையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் தடாலடியாக அறிவித்தவர், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியவர் ஜெயலலிதா அரசின் அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

சரி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதே,  அப்பொழுதாவது மதுக்கடைகளை அகற்றி, உங்கள் மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், அதை செய்ய மனமில்லாமல், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வரைக்கும் அதிமுக அரசு சென்றது என்றால், அது நியாயமான செயலா? 

மதுவிலக்கு கொள்கைதான் நெஞ்சார்ந்த குறிக்கோள் என்று கூறும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், ரூ.1.90 லட்சம் கோடிக்கு மது விற்பனையை செய்திருக்கிறார். இதை எப்படி ஒரே கையெழுத்தில் விட்டுகொடுக்க மனம் வரும்? அதனால்தான் படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்து, மக்களை நம்பவைத்து, வாக்கு அறுவடை செய்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் வருமானம் போய்விடும், அதனால் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. மதுவிலக்கை அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களில் போய் குடிப்பார்கள், கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்றெல்லாம் அவிழ்த்துவிடுவார்கள்.
திமுகதான் மதுக்கடைகளை திறந்தது என்று அதிமுகவும், அதிமுகதான் மதுவிலக்கை ரத்து செய்தது என்று திமுகவும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. 1971ல், கருணாநிதி தலைமையிலான  திமுக ஆட்சியில் மதுவிலக்கை நீக்கி, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள், சாராயம் மற்றும் கள் விற்பனைக்கான கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன. பின்னர், அதே ஆட்சிக் காலத்தில், 1974 ல் மீண்டும் மதுக்கடைகளை மூடி, மது விலக்கை கருணாநிதி நடைமுறைப்படுத்தினார். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்டமுன்வடிவு,  சட்டப்பேரவையில் 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, 1981ல் கள், சாராய விற்பனைக்காக, மதுவிலக்கை ரத்து செய்தது. தொடர்ந்து, 1991ல் பாக்கெட் சாராயத்தை ஒழித்த ஜெயலலிதா, பின்னர் மது விற்பனையை அரசுடைமையாக்கினார்.
சசிபெருமாள் மரணத்திற்கு பிறகு, தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான ஒரு கொந்தளிப்பான நிலை ஏற்பட்டவுடன், திமுகவுக்கு ஞானோதயம் வந்தது. அதன் எதிரொலியாக தற்போது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருக்கிறது. 5 முறை முதலமைச்சராக இருந்தபோது எதையும் செய்ய மனமில்லாத கருணாநிதி, தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக, மதுவிலக்கு குறித்து பேசுகிறார். இதை எப்படி நம்புவது? சட்டப்பேரவையில் மதுவிலக்கு பற்றி பேசினால் ஜெயலலிதா வாய் திறப்பதில்லை. அவருக்கு பதிலாக நத்தம் விஸ்வநாதன் பதில் கொடுப்பார். அதேபோல்தான் கடந்த காலங்களில் கருணாநிதியும் செயல்பட்டிருக்கிறார். 

2007-ம் ஆண்டு சட்டப்பேரவையில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டுமென பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேசியபோது, ''நான் அவர்களுக்கெல்லாம் சொல்வது... அறவே கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாததற்குக் காரணம், மதுவிலக்குத் திட்டத்தில் நாம் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது என்றால், அவர்களை விட இன்னும் நல்ல சரக்குகளை இங்கே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலேதான் வெற்றி பெற முடியுமே தவிர, வேறு வழியிலே வெற்றி பெற முடியாது என்பதற்கு இன்றைய உலக நிலை, பண்பாடு, உலகக் கலாச்சாரம் சாட்சியாக இருக்கிறது’’ என்று கருணாநிதி கூறினார்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வைகோ 1,500 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், வயது, உடல் நலம் பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாமல் சென்னை முதல் குமரி வரை பாதயாத்திரை மேற்கொண்டார். காந்தியவாதி சசிபெருமாள், ஒவ்வொருவரின் காலில் விழுந்து குடிக்காதீர்கள், குடிக்காதீர்கள் என்று கெஞ்சினார். பெண்கள், மாணவிகள், மாணவர்கள், சிறுவர்கள் என பலரும் மதுக்கடைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தனர். ஆனால், அதிமுக மற்றும் திமுக அரசுகள் சாராய விற்பனையில் ஒரே கொள்கையை கடைப்பிடித்து, கூட்டு கொள்ளையடித்து வந்திருக்கின்றன.

மக்களை குடிகாரர்களாக மாற்றி, ஒரு தலைமுறையையே சீரழித்து விட்டன. பள்ளிக்கு போகும் மாணவ – மாணவிகளை குடிக்கும் நிலைக்கு இரு அரசுகளும் மாற்றிவிட்டன. அரசே முன்னின்று மது விற்பனையை செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்மூலமாக்கி, கஜானாவை பெருக்கிக் கொள்கிறது. மதுபோதையில் மக்களை தள்ளாட வைத்து, அதில் வரும் வருமானத்தை, இலவசம் எனும் ஊறுகாயாக தந்து மக்களை எப்போதும் ஏமாற்றியே வந்திருக்கிறது அதிமுகவும், திமுக வும். குடிப்பழக்கம் மட்டுமல்ல, அதிமுகவும், திமுகவும் நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு!

- ஜி.எஸ்.பாலமுருகன் (மயிலாடுதுறை)

சனி, ஏப்ரல் 09, 2016

நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள் திரு வைகோ அவர்களே...!

விகடன் இணையதளத்தில் வெளிவந்த எனது கட்டுரை

பொதுவாழ்வில் ஈடுபட்டு ஜனநாயகத்தை தழைத்தோங்க செய்யவேண்டும், சமூகத்திற்கும், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணிய காலங்கள் மறைந்து, அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் ஊழல் செய்து கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற மனநிலை இன்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையை இன்றைய தமிழக தேர்தல் களம் நமக்கு நன்கு உணர்த்துகிறது.
மக்கள் நலனுக்கான கூட்டணி என்று தொடக்கத்தில் கூறி வந்த, அதன் தலைவர்கள் தற்போது, எந்தப் பாதையை நோக்கிச் செல்கிறோம் என்பதை அறியாமல் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்கிறார்கள். அதிமுகவும், திமுக.வும் வேண்டாம் என்றும், தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும் என்ற வேட்கையுடன் உருவான மக்கள் நலக் கூட்டணியையும், அதன் தலைவர்களையும் பொதுமக்களாகிய வாக்காளர்கள் விசித்திரமாக பார்க்கிறார்கள்.
கேப்டன் விஜயகாந்த் அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, பெரியண்ணன் தோரணையில் எதிர்க்கட்சிகளை மிகவும் கீழ்த்தரமாக வசைப்பாடுகிறார். இதற்கு ஊடகங்களும் விதிவிலக்கல்ல. ஆதாரமில்லாமலும், அருவறுக்கத்தக்க வகையிலும் தொடர்ந்து கூறி வரும் வைகோவின் குற்றச்சாட்டுகளில் எந்தளவிற்கு காழ்ப்புணர்ச்சியும், சுயநலமும் கலந்திருக்கிறது என்பதை, சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் விமர்சிக்கப்படுதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பெரியார், அண்ணாவின் பாசறையில் வளர்ந்த வைகோ, ’கருணாநிதி நாகூசும் வகையில் பேசுகிறார் என்றால், வைகோ எப்படிப்பட்ட அரசியல்வாதியாக இருக்க முடியும் என்ற கேள்வி, அவரது கட்சியினர் இன்றி, பிற கட்சிக்காரர்களைத் தாண்டி, நடுநிலையாளர்களிடம் எழுகிறது.
திரு வைகோ அவர்களே, இந்த தேர்தல் களத்தில் நீங்கள் ஆற்றி வரும் அரும்பணிகளை பார்க்கும்போது,உங்களோடு கைகோர்த்துள்ள பிற கட்சிகளை நீங்கள் கூண்டோடு காலி செய்யப் போகிறீர்கள் என்பது, விஜயகாந்துக்கோ, இடதுசாரிகளுக்கோ, திருமாவளவனுக்கோ தெரியாமல் போகலாம். உண்மையை உணரும்போது, அவர்கள் உங்களை கைவிட்டுவிடுவார்கள்.
எல்லாவகையிலும் சாதகமான திமுக கூட்டணியை விட்டு விஜயகாந்தும், உங்களின் அனுபவம் நிர்வாகத்திறமை இவற்றை நம்பி மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளும் உங்களுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. அவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்கள் வைகோ.


அரசியலில் வெற்றியோ, தோல்வியோ, தொழிலாளர் வர்க்கத்திற்காக, விளிம்பு நிலை மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரலுக்கு குரல் கொடுத்து வரும் இடதுசாரிகளுக்கோ, திருமாவளவனுக்கோ விஜயகாந்துக்கோ வெற்றி தேவைப்படும். ஆனால் கடந்த காலங்களில் நீங்கள் அந்த இலக்கை நோக்கி ஓடியவரில்லை. உங்களின் பேச்சும் செயலும் உங்களை நம்பி வந்த அவர்களுக்கு வெற்றியை கடினமாக்குகிறது.
ஆனால் உங்களுக்கு வெற்றி இப்போதைக்கு தேவையில்லை. பக்குவமும், பிறரை மதித்து, அனுசரித்துப் போகும் குணமும்தான் தேவை. கால்போன போக்கில் போகாதீர்கள். மனம் போன போக்கில் செயல்படாதீர்கள். எதிர்க்கட்சிகளை கருத்து ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் விமர்சித்து தேர்தல் கால இலக்கையும், அரசியல் பயணத்தையும் தொடருங்கள் வைகோ. அதைவிடுத்து, ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதும், பிறர் மீது எரிந்து விழுவதும், இலக்கில்லாமல் பயணிப்பதும் எஞ்சிய அரசியல் வாழ்க்கைக்கு ஒத்து வராது.
-ஜி.எஸ்.பாலமுருகன், (மயிலாடுதுறை)
http://www.vikatan.com/news/vasagar-pakkam/62089-control-yourself-mr-vaiko.art

எதிர்க்கட்சி அரசுகளே இருக்கக் கூடாதா மோடி?`


மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’’ என்பது தன் நோக்கமென்று முழங்கினார் நரேந்திர மோடி. பிரதமர் ஆனதும் இதை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார் என்பதை அவரது அண்மைக்கால செயல்பாடுகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் நபம் துகிக்கு எதிராக அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதால் ஏற்பட்ட குழப்பத்தில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு பா.ஜ.க ஆதரவுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தலைவர் கலிக்கோ புல் முதலமைச்சரானார். தற்போது 6 மாத இடைவெளிக்குப் பிறகு உத்தரகண்ட் மாநிலத்தில் கைவைத்திருக்கிறார் மோடி.
உத்தரகண்டில் என்ன பிரச்னை?
உத்தரகண்ட்டில் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் பகுகுணா, உட்கட்சி குழப்பம் காரணமாக பகுகுணா பதவி விலகி, 2014 பிப்ரவரி 1ஆம் தேதி ஹரீஷ் ராவத் முதலமைச்சராகப் பதவியேற்றார். எனினும் ஆரம்பம் முதலே விஜய் பகுகுணாவுக்கும், ஹரீஷ் ராவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, விஜய் பகுகுணா தலைமையில், நிதி அமைச்சர் ஹரக் சிங் ராவத், அம்ரிதா பத்ரா, குன்வார் பிரணவ் சிங், ஷைலா ராணி ராவத், பிரதிப் பத்ரா, சுபோத் உனிவால், சைலேந்திர மோகன் சிங்கால், உமேஷ் சர்மா, விம்லால் ஆரியா ஆகிய 9 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து, மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.
இதையடுத்து, அடுத்தடுத்த நாட்களில் அரசுக்கு எதிரான நெருக்கடி அதிகரித்ததால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரின் பதவியையும் கட்சித் தாவல் சட்டப்படி பேரவைத் தலைவர் பறித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, ஒரு நியமன எம்.எல்.ஏ உட்பட காங்கிரஸூக்கு 27 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்த நிலையில், முற்போக்கு ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். மேலும், அதிருப்தி அணியைச் சேர்ந்த விம்லால் ஆரியா என்ற எம்.எல்.ஏ. அரசை ஆதரிப்பதாக கூறினார். இதனால் பேரவையில் எளிதாக காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது.
மத்திய அரசு திடீர் நடவடிக்கை


பெரும்பான்மையை நிரூபிக்கும்போது பேரவையில் அமளி நடக்க வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் கே.கே.பால் அறிக்கை அளித்தார். இதையடுத்து அவசரம் அவசரமாக பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவையில், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின் கீழ், கடந்த 27ஆம் தேதி பேரவையை முடக்கி வைத்து, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது, அக்கட்சி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது என்றும், ஜனநாயக படுகொலை நடத்துவதாகவும் குற்றம்சாட்டிய பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி செய்ததையே இப்போது பா.ஜ.க.வும் செய்கிறது. காங்கிரஸ் கட்சி, தனது முடிவை அல்லது செயல்பாட்டை எதிர்க்கும் முதலமைச்சருக்கு எதிராக 356ஆவது பிரிவை பயன்படுத்தியது போன்றே, பா.ஜ.க.வும் அருணாச்சலை தொடர்ந்து உத்தரகண்ட்டிலும் செயல்படுத்தியது.
356ஆவது பிரிவு என்ன சொல்கிறது?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவு குடியரசுத்தலைவர் ஆட்சியை குறிக்கிறது. அதாவது, இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்விதிபடி ஓர் மாநில அரசு இயங்காமல் இருக்கும்போது, அந்த அரசை கலைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் பெரும்பாலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காகவே 356ஆவது பிரிவு பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக கூறப்படுவது உண்டு. இதற்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டது.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கு
கர்நாடகத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், முதலமைச்சராக இருந்த ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மையின் அரசு கலைக்கப்பட்டு, 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின்பேரில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பொம்மையின் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் குல்தீப் சிங் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பொம்மையின் அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தது. 356ஆவது பிரிவை பயன்படுத்துவதில் மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விளக்கங்களையும் தெளிவாக வரையறுத்தது உச்சநீதிமன்றம். ஆனால், அதையெல்லாம் மத்திய பா.ஜ.க அரசு அருணாச்சலிலோ, உத்தரகண்ட்டிலோ கடைப்பிடிக்கவில்லை.
உத்தரகண்டில் பா.ஜ.க.வின் நோக்கம் என்ன?


உத்தரகண்ட் மாநிலங்களவை எம்.பி.யாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த தருண் விஜய் உள்ளார். இவர் அடிக்கடி தமிழுக்காக குரல் கொடுப்பவர். இவரது பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைகிறது. காங்கிரஸ் அரசு, உத்தரகண்டில் நீடித்தால் தருண் விஜய் மீண்டும் எம்.பி.யாவது சாத்தியமில்லை. இப்பின்னணியில்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தூண்டிவிட்டு அரசியல் குழப்பத்தை பா.ஜ.க அரங்கேற்றுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் செய்வது சரிதானா மோடி?
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருக்கலாம். தலைமையோடு பிரச்னை ஏற்படலாம். பதவிக்காக அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கலாம். இதையெல்லாம் காரணமாக வைத்து, ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சாசனத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது, அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துவது, சட்டத்துக்கு விரோதமானது மட்டுமல்ல; அரசியல் காழ்ப்புணர்ச்சியும்கூட.
இதுபோன்றதொரு நிலை எங்கள் மாநிலத்திலும் தொடரும் என்று, காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் வீரபத்ர சிங், தனது கட்சித் தலைவர் சோனியாவிடம் புலம்பும் அளவுக்கு ஆளும் பா.ஜ.க அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நடந்துக் கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள இயலாது. உத்தரகண்ட் நடவடிக்கையை ‘ஜனநாயக படுகொலை’ என்று காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் கூறும் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. காங்கிரஸ் ஆளும் ஒவ்வொரு மாநிலத்தையும் குறிவைத்து, குழப்பத்தையும், அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்துவதை பார்த்தால், மோடியின் பின்னணியில் உள்ள ’காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற ரகசியத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
மோடியின் விரோதப் போக்கு தொடரும்?
அருணாச்சல், உத்தரகண்ட்டை தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் அடுத்தடுத்து அரசியல் குழப்பம் நிகழ இருக்கிறது. ஹிமாச்சலில் முதலமைச்சர் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், வீரபத்ர சிங் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இதை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த மோடி அரசு காய் நகர்த்தி வருகிறது. இதேபோல், மணிப்பூர் முதலமைச்சர் இபோபி சிங், மேகாலயா முதலமைச்சர் முகுல் சங்கமா, மிசோரம் முதலமைச்சர் லால்தன் ஆகியோரின் அரசுகளுக்கு எதிராக, அந்தந்த மாநில அரசியல் நிலவரங்களை வைத்து குழப்பம் செய்திட பா.ஜ.க திட்டம் வகுத்து வருகிறது.
கர்நாடக காங்கிரசுக்கும் சிக்கல்?
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகம்தான். அங்கு, மொத்தமுள்ள 124 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 65க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சோனியாவிடம் முறையிட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையாவை உடனடியாக நீக்காவிட்டால், உத்தரகண்ட் நிலைமை கர்நாடகாவிலும் நடைபெறலாம் என்று கூறியிருக்கிறார். இப்படி காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளை அலற வைத்து மகிழ்ச்சிக் கொள்வதிலும், அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் மோடிக்கு என்னதான் சுகமோ? இந்தியாவில் எங்கும் எதிர்க்கட்சிகளின் அரசுகள் இருக்கக் கூடாது என்று நினைத்தால், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வுக்கோ, நரேந்திர மோடிக்கோ நல்ல பெயரை பெற்றுத் தராது!
-ஜி.எஸ்.பாலமுருகன், மயிலாடுதுறை.

வியாழன், மார்ச் 31, 2016

உணர்ச்சிவயப்படாதீர்கள் வைகோ...

விகடன் இணையதளத்தில் எனது கட்டுரை
மிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம், கொளுத்தும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது. தேமுதிக யாருடன் கூட்டு சேரும் என்று எதிர்பார்த்து இலவு காத்து வந்த தி.மு.க, பா.ஜ.க இன்னும் பிற கட்சிகள், மக்கள் நலக் கூட்டணியுடன் அது இணைந்ததையடுத்து, அந்த கூட்டணியை தற்போது விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. இது ஒருபுறமிருக்க கேப்டன் விஜயகாந்த் அணியில் இணைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நாளுக்கு ஒரு கருத்தைக் கூறி, கூட்டணிக்குள் குழப்பமான நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். 

கேப்டன் விஜயகாந்த் அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ கூட்டணி அமைத்ததே மாபெரும் சாதனையாக நினைத்து, மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார். மிகவும் உற்சாகத்தில் திளைக்கிறார். அதனாலேயே என்ன பேசுகிறோம் என்பதை அறியாமலேயே உணர்ச்சிவயத்தால் சர்ச்சை கருத்துகளைக் கூறி விழிபிதுங்கி நிற்கிறார். 

பேச்சும்... குழப்பமும்...

ம.ந.கூ இனி விஜயகாந்த் அணி என அழைக்கப்படும் என வைகோ தம் கூட்டணிக்கு புதிய திருநாமம் சூட்டியபின் இன்னும் மோசமாகிவருகிறது நிலைமை. ஏற்கனவே விஜயகாந்த் தலைமையை பிடிக்காமல் இடதுசாரிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதை உறுதிபடுத்தும் விதமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனோ, ‘’கேப்டன் விஜயகாந்த் அணி கிடையாது, அது மக்கள் நலக் கூட்டணிதான். அதில்தான் விஜயகாந்த் இணைந்திருக்கிறார்’’ என்று கூறுகிறார். மேலும், ‘’மன்னனை அதாவது கிங்கை உருவாக்குமா கம்யூனிஸ்ட்’’ என்றும் கேள்வி எழுப்புகிறார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இது ‘’மக்கள் நலக் கூட்டணிதான்’’ என்று அழுத்தந்திருத்தமாக தெரிவித்திருக்கிறார். 

இந்த அணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனோ, தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணிதான் என்று தெள்ளத் தெளிவாக தெரிவித்துவிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனோ, விஜயகாந்த் அணி என்று அழைப்பதில் எங்களுக்கு எந்த கவுரவக் குறைச்சலும் இல்லை என்கிறார். குடியாத்தம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த பிரேமலதாவோ மக்கள் நலக் கூட்டணி என்றால் கிராமப்புற மக்களுக்கு புரியாது என்று நகைக்க வைக்கிறார்.
இப்படி கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு தலைவரும், கூட்டணி பெயர் விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை கூறுகிறார்கள். அவர்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லை. இப்படி போகிறப் போக்கில் ஒவ்வொருவரும் ஏதோ ஏதோ கூறி செல்கிறார்கள். 

வைகோவின் சர்ச்சை பேச்சு

கேப்டன் விஜயகாந்த் கூட்டணியில் மக்கள் நலக் கூட்டணியை இணைத்த மறுநாளே, தே.மு.தி.க.வுக்கு 500 கோடி ரூபாயும், 80 சீட்டுகளும் தருவதாக, தி.மு.க தரப்பில் துண்டுச் சீட்டில் எழுதி தந்து பேரம் பேசப்பட்டதாகவும், மாநிலங்களவை எம்.பி சீட், மத்திய அமைச்சர் பதவி தருவதாக பா.ஜ.க தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும் கூறி அரசியல் அரங்கில் வைகோ புதிய பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பிரேமலதா, வைகோவின் கருத்தை உடனடியாக மறுத்து, மறைமுகமாக குட்டு வைத்தார். உடனே தான் நாளிதழ்களில் வந்த செய்தியை சுட்டிக்காட்டியே பேசியதாக வைகோ கூறுகிறார். அடுத்தகட்டமாக வைகோவுக்கு தி.மு.க வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் வைகோ, இதை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று படபடக்கிறார். 

வைகோ அவர்களே, ஒரு இயக்கத்திற்கு தலைவராக இருக்கும் நீங்கள், கேப்டன் விஜயகாந்த் அணிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நீங்கள் இப்படி ஆதாரமற்ற, உறுதியற்ற தகவல்களை தந்து மக்களை குழப்பலாமா?

நீங்கள் என்ன பேசுகிறீர்கள் வைகோ?


கேப்டன் விஜயகாந்த் அணிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நீங்கள்தான், நீண்ட நெடிய காலத்தை அரசியல் வாழ்க்கைக்காக செலவிட்டிருப்பவர். உங்களைவிட அரசியலை பற்றி முழுமையாக‌ அறிந்திராத, கொள்கையே கிடையாத, எந்தவொரு சமூகப் பிரச்னைக்கும் கருத்து தெரிவிக்காத, பிரச்னை என்னவென்றுகூட அறிய முயற்சிக்காத, விஜயகாந்தை தலைவராக ஏற்றுக் கொண்டு, முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து அவரை முதலமைச்சராக ஆக்கியே தீருவேன் என்று சபதம் எடுத்திருப்பது முரண்பாட்டின் உச்சமல்லவா? 

விஜயகாந்த் தலைமையில் நீங்கள் இணைந்துவிட்டதும், ஏதோ ஆட்சியையே பிடித்துவிட்டது போல மகிழ்ச்சியில் திளைக்கிறீர்கள். நாள்தோறும் செல்லும் இடங்களிலெல்லாம் தாறுமாறாகப் பேட்டி கொடுக்கிறீர்கள். தி.மு.க.வை விமர்சிக்கிறீர்கள். அதே நேரம் அ.தி.மு.கவை போகிறப் போக்கில் குற்றம்சாட்டுகிறீர்கள். நாளுக்கொரு கருத்தை கூறுகிறீர்கள். பின்னர் அதை மறுக்கிறீர்கள். அதில் ஒன்றுதான் தி.மு.க, பா.ஜ.க பேரம் பற்றிய உங்கள் கருத்தும். இப்பொழுது கேட்க தோன்றுகிறது, என்னதான் உங்களுக்குப் பிரச்னை என்று?

விதண்டாவாதம் ஆகுமா?


பேரம் பற்றி குற்றம்சாட்டிய வைகோவிடம், அ.தி.மு.க. தரப்பில் உங்களுக்கு 1,500 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறதே என்று கேட்டு முடிக்கும் முன்னரே கோபம் கொப்பளிக்க, பேட்டியை முடித்துக் கொள்வதாக ஒரு தொலைக்காட்சியில் இருந்து எழுந்து செல்கிறீரே. ஏன் இந்த உணர்ச்சிவயம்?... மற்றவர்களுக்கு வந்தால் ரத்தம். உங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? உண்மையோ‌, பொய்யோ கேள்விக்கு நீங்கள் அங்கேயே மறுப்பு தெரிவித்திருக்கலாமே. நீங்கள் உணர்ச்சிவயப்பட்டதை பார்க்கும்போதுதான் மக்கள் மத்தியில் உங்களைப்பற்றிய தவறான புரிதல் உண்டாகிறது.
தே.மு.தி.க.விற்கு தி.மு.க 500 கோடி ரூபாய் பேரம் பேசியது உண்மை என்றால் நீங்களும் கடந்த காலங்களில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மாறி மாறி கூட்டணி வைத்து ‌50 ஆண்டுகால அரசியல் வாழ்வை கடந்திருக்கிறீர்கள். தி.மு.கவுடன் கூட்டணி வைத்தபோது அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபோது எவ்வளவு பேரம் பேசினீர்கள்? எவ்வளவு வாங்கினீர்கள்? என்று கேட்டால் விதண்டாவாதம் என்பீர்கள். ஆனால் கேட்காமல் இருக்க முடியாது அல்லவா? பொதுமக்கள் கேட்கிறார்கள். இப்போது கூறுங்கள், இதற்கு முன்பு நீங்கள் எவ்வளவு வாங்கினீர்கள்? இப்போது மக்கள் நலக் கூட்டணியை தே.மு.தி.க.வுடன் இணைத்ததால் உங்களுக்கு கிடைத்த லாபம் என்ன? என்று நீங்கள் தெரிவித்தாதல் நன்றாக இருக்கும்.

உங்களின் நேர்மையை, பேசும் பேச்சை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. உங்கள் சொல்லும், செயலும் மாறி மாறியிருக்கிறது. நீங்கள் ஒரு வழக்கமான அரசியல்வாதியாக மாறிவிட்டீர்கள் என்பதைதான் உங்கள் செய்கைகள் நிரூபித்துவருகின்றன. முதலில் மக்கள் நலக் கூட்டணியில்தான் தே.மு.தி.க இணைய வேண்டும் என்று கூறினீர்கள். பின்னர், மக்கள் நலக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். எங்களின் செயல்திட்டம்தான் ஹீரோ என்றீர்கள். 

பிறகு 'தலித் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம்' என்றீர்கள். மறுநாள் 'முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவதற்கு நான் ஒன்றும் துறவியல்ல' என்றீர்கள். பிறகு திடீரென விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தீர்கள். ஏன் என்று கேட்டால், ''இது ஒரு யுத்தம். இந்த யுத்தத்திலே ஊழல் பணத்திலே இருக்கிற ராட்சச பலம் கொண்ட இரு கட்சிகளை வீழ்த்த வேண்டியிருக்கிறது. ஆகவே இதில் வியூகங்கள் அவ்வப்போது மாறும். எங்களுக்கு இலக்கு வெற்றி. அந்த இலக்கு நோக்கி செல்கிற போது நாங்கள் சில வேலைகளை, உபாயங்களை மாற்ற வேண்டும். இதில் தவறேதும் இல்லை'' என்று கூறுகிறீர்கள். இது எப்படி சாத்தியம்?

சில நாட்களாக உங்களின் நிலைப்பாடுகள் பற்றி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. 

கொள்கையே கிடையாத விஜயகாந்தை முதலமைச்சராக ஆக்க தீர்மானிப்பீர்கள், ஈழத்திற்கு எதிராக இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைப்பீர்கள், தலித்துக்கு குரல் கொடுத்துக் கொண்டே திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயங்குவீர்கள்? என்ன வைகோ உங்களின் நிலைப்பாடு?

தி.மு.க.வை விட்டு வெளியேறியபோது, கருணாநிதியை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றீர்கள். மீண்டும் கூட்டணியாக இணைந்தபோது, தலைவர் கருணாநிதி கட்சியை விட்டு பிரிந்து போனாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர் என்றீர்கள். அ.தி.மு.க.வுக்கு தாவிய போது, அன்புச் சகோதரி ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர பாடுபடுவேன் என்று திருவாய் மலர்ந்தீர்கள். முதல் முறை விலகியபோது, பாசிச‌ ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றீர்கள். 

பா.ஜ.க.விடம் ஓடிச்சென்று, மோடி வந்தால் தமிழகத்தில் சுவிட்சை போடாமலே கலர் கலர் பல்புகள் எரியும் என்றீர்கள். அவர்கள் துரத்திவிட்டபோது, தமிழகத்தில் மதவாத சக்திகளை காலூன்ற விடமாட்டேன் என்றீர்கள். கருணாநிதி வீட்டு கல்யாணத்தின் போது, தலைவர் கருணாநிதி தங்கமானவர் என்றீர்கள். அடுத்த வாரம் கூட்டணி பேரம் படியாது என்று தெரிந்தபோது தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதியை ஒழிக்க ஒன்றுபடுவோம் என்றீர்கள். 

ஒருநாள் போற போக்கில், தமிழ் தேசியத்தை ஒழிக்க தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்றீர்கள். சில நாட்களுக்கு முன்பு, மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் கண்டிப்பாக வருவார். அவரை முதல்வராக ஏற்றுக் கொள்ள எந்த ஆட்சேபணையும் இருக்காது என்றீர்கள். பின்னர், நாங்கள் விஜயகாந்த் தலைமையேற்க மாட்டோம் என்றீர்கள். எங்கள் கூட்டணியில் இடமில்லை, விமானி இல்லாமலே விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது என்றீர்கள். மறுபடி விஜயக‌ாந்தை மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றீர்கள். திடீரென ஒருநாள் விஜயகாந்துடனேயே மக்கள் நலக் கூட்டணியை இணைத்துவிட்டீர்கள். 

இதுமாதிரியான உங்களின் குழப்பமான பேச்சும், செயலும் கேப்டன் விஜயகாந்த் அணி வாக்குப்பதிவு வரை கரைதேறுமா என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் எழுப்பியிருப்பதுதான் மிச்சம். வயது ஆக ஆக முதிர்ச்சியும், பொறுமையும் வேண்டும் என்பார்கள். ஆனால், உங்களிடம் அதை காணமுடியவில்லை. நேற்றும், மக்கள் நலக் கூட்டணி தொடர்பான கேள்வியால் கொந்தளித்து, செய்தியாளர்களிடமும், உங்கள் கட்சிக்காரரிடமும் கோபமாக பேசுகிறீர்கள். உணர்ச்சிவயப்படாதீர்கள் வைகோ!
- ஜி.எஸ்.பாலமுருகன், ( மயிலாடுதுறை)