செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, நவம்பர் 19, 2010

வாழும் வரலாறு ஆங் சான் சூச்சி !


மியான்மரின் விடுதலைக்கு வித்திட்ட ஆங்சானின் மகள்தான் ஆங்சான் சூச்சி. ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட ஆங்சானை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இரண்டு வயதிலேயே தந்தையை இழந்த சூச்சி, இ¢தியாவிலும், இங்கிலாந்திலும் தனது படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பை முடித்து லண்டனில் திருமணமாக இரண்டு குழந்தைகளுடன் வசித்த வந்த அவர், உடல் நலமில்லாத தனது தாயை பார்க்க மியான்மர் வந்தபோது சுதந்திரத்திற்கான போராட்டம் வெடித்தது. சுமார் 5000 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொங்கி எழுந்த சூச்சி ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக களமிறங்கினார். இவரின் ஆக்ரோஷமான செயல்பாட்டால் ராணுவம் திணறிப் போனது.

1990-ல் பொதுத் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்ட போது சூச்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதித்தனர். அப்படியும் 82 விழுக்காடு வாக்குகளுடன் சூச்சியின் சுதந்திரத்துக்கான தேசியக் கட்சி வெற்றி பெற்றபோது அந்தத் தேர்தலை, ராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை. சூச்சி அவரது வீட்டிலேயே தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்.

1989-ல் முதன் முறையாகக் கைது செய்யப்பட்டது முதல் மூன்று முறை விடுதலை செய்து உடனே மீண்டும் கைது செய்யப்பட்டுவிட்டார் சூச்சி. யாங்கூனை விட்டு வெளியே போகக் கூடாது என்று ராணுவம் தடை விதித்த போது, ஆறு நாள்கள் காரிலேயே இருந்து போராடிக் கைதானவர்.


ஆங்சானின் கணவர் மைக்கேல் ஆரிஸ் புற்றுநோய் காரணமாக 1999-ல் இறந்தார். அவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கல்வியாளர். அவர் இறப்பதற்கு முன்னால் தன்னுடைய மனைவியைப் பார்க்க விரும்பினார். ஆனால் அவருக்கு விசா தருவதற்கு மியான்மர் அரசு மறுத்துவிட்டது. கணவர் இறந்ததற்கு கூட அனுமதி வழங்காத கொடுமைகள் எல்லாவற்றையும் சொல்லி மாளா.

மியான்மரின் ஸ்தாபகர் என்று கொண்டாடப்படும் சூச்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகச் சிறைவாசம் செய்த பின்னர் நவம்பர் 14 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு அவரைச் ஆளும் ராணுவ அரசு சுதந்திரமாக நடமாடவிடும் என்பது யாருக்கும் தெரியாது.

ராணுவ சர்வாதிகாரிகளை எதிர்த்து கடந்த இருபது ஆண்டுகளாக போராடி வரும் ஆங்சான் சூச்சி நோபல் பரிசு பெற்றவர். ஆனால் தான் எதிர்கொண்ட சவால்கள், துன்பங்கள் எல்லாம் ஒருநாள் நிச்சயம் வெல்லக்கூடும் என்ற நம்பிக்கையோடு செயல்படுகிறார். உலக வரலாற்றில் நெல்சன் மண்டேலாவுக்குப் பிறகு அதிக காலம் அரசியலுக்காகச் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் ஆங்சான் சூச்சிதான்.! ஆனால் சுதந்திரம், ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொள்ளும் உலக நாடுகள், மியான்மரில் நடக்கும் அடக்கு முறைகளை வேடிக்கை பார்ப்பது நியாயமா?

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்களுக்காக பாலமுருகன்...

வியாழன், நவம்பர் 18, 2010

உண்மையே கடவுள்.!


நாராயணமூர்த்தியின் வெற்றி பயணம் பத்தாயிரம் ரூபாயில் தொடங்கியது. பொறியியல் பட்டதாரியான நாராயணமூர்த்தி, தனது நண்பர்கள் ஆறு பேரோடு சேர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினார்.

1981-ல் சொற்பமான முதலீட்டில், மாபெரும் கனவுடன் தொடங்கப்பட்ட இன்போசிஸ் இன்று, இந்திய ஐ.டி. துறையின் மதிப்புமிகு பெயராக இருக்கிறது. தொழில் முனைவோராக வேண்டும் என்ற ஆர்வத்தை பலருக்கு ஏற்படுத்தியிருக்கும் இவரது சொல்லும், செயலும் முன்னேற்றத்தின் பாதையை உணர்த்தக் கூடியவை. நேர்மையின் அடையாளமாகவும் அறியப்படும், நாராயணமூர்த்தி பேட்டிகளிலும், உரைகளிலும் தனது நம்பிக்கைகளையும், வெற்றிக்கான வழிகளையும் உற்சாகத் தோடு பகிர்ந்து கொள்வார். அவற்றில் நமது வெற்றிக்கு உதவும் ரகசியங்கள் சில...

 100 விழுக்காடு சுதந்திரச் சந்தையின் ஆதரவாளன் நான். ஆனால், என்னை ஒரு இதயமுள்ள முதலாளி என்றே அழைத்துக் கொள்வேன்.
 முதலாளித்துவம், மார்க்சியம் இரண்டுமே மனித குலத்திற்கு தொண் டாற்றவே பிறந்தது. பொறுப்புள்ள முதலாளித்துவம், செல்வத்தை உருவாக்கி கீழ் நோக்கி பாயச் செய்கிறது.

 தொழில் முனைவோரின் பயணம் என்பது மாராத்தானைப் போல நீண்டது. உண்மையே கடவுள். தொடர்ந்து கற்பதே எங்களின் வேதம்.

 கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ வசதி, உபரி வருமானம் கொண்ட வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்றால், நாமும் சீனாவைப் போல முதலில் மலிவு விலை உற்பத்தியை தொடங்கி பின்னர் பெரிய அளவிலான உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்

 உலகமயமாதல் என்பது என்னைப் பொறுத்த வரை மலிவான இடத்திலிருந்து பொருள்களை வாங்கி, சிறந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி, குறைந்த செலவில் உற்பத்தி செய்து, தடைகளற்ற சந்தையில் விற்பதாகும்.

 நாம் எல்லோருமே யாரோ வைத்த மரங்களின் கனிகளை சுவைத்து வளர்ந்திருக்கிறோம். இப்போது, வருங்கால தலைமுறை சுவைப்ப தற்கான கனிகளை தரும் தோட்டத்தை உருவாக்க வேண்டியது நம்முடைய கடமை.

 சமூக சிக்கலை தீர்ப்பதில் அக்கறை இல்லாததே வளர்ச்சியை தடுக்கிறது. பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர் தன்மையே வறுமையை போக்குவதற்கான வழியாகும்.

 சமூக நலனை விட தனிநபர் மற்றும் குடும்ப நலனை முக்கியமாக கருதுவதே வசூலுக்கான காரணம். மேற்கில் இந்த அளவுக்கு ஊழல் கிடையாது.

 உழைப்பை மதிப்பது மேற்கத்திய நாடுகளில் பழக்கமாக இருக்கிறது. அங்கே இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வேலையை பெருமையாக கருதுகின்றனர். இந்தியாவில் மட்டும்தான் ஒரு சில வேலைகளே கவுரமாக கருதப்படுகின்றன.

 அங்கீகாரம் மதிப்பை தேடித் தருகிறது. மதிப்பு அதிகாரத்தை தருகிறது. அதிகாரம் பெறும்போது பணிவுடனும், பெருந்தன்மை யோடும் நடந்து கொள்வது ஒரு நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துகிறது.

 வேறுபாடு என்பது இயல்பானது. பரஸ்பரம் மதிப்பு கொண்டவர்கள் ஒரே குழுவாக செயல்படும்போது மேற்கொள்ளப்படும் பணி மேம்படும். இன்போசிஸில் உணர்ந்த அனுபவம் இது.

 நிறுவனங்களுக்கு சமூகத்திற்கு சேவை செய்யும் கடமை இருக்கிறது. தனது சமூகத்திற்கு பங்களிப்பு செலுத்தாத எந்த ஒரு நிறுவனமும் நீடித்த வளர்ச்சியை பெற முடியாது. நிறுவனங்களே மனமுவந்து இத்தகைய சேவையில் ஈடுபட வேண்டும். எல்லா விசயங்களிலும் ஒருவர் நம்பிக்கை உள்ளவராக திகழ வேண்டும். இத்தகைய அடிப்படையை கொண்ட நிறுவனங்கள் முன்னேறுகின்றன.

 தன்னை விடவும் அதிகமாக சாதித்தவர்களை மதித்து நடப்பதே முன்னேறிய சமூகத்தின் அடையாளமாகும். இந்தியா போன்ற நாட்டின் முதலாளித்துவத்தை ஏற்புடையதாக மாற்ற வேண்டும். ஏழைகள் மீது பரிவு கொள்வது முக்கியமானதாகும்.

 அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். அவநம்பிக்கை உற்சாகத்தை உறிஞ்சி எதிர்மறையான சிந்தனைகளை வளர்த்துவிடுகிறது. புலம்பலில் இருந்து விடுபட்டு செயலில் இறங்குங்கள். முன்னனி இடத்தை பிடிக்க முதலில் செயல்படுங்கள்.

 சொந்த நலனை விட பொது நலனுக்கு முன்னுரிமை தருவது நீண்ட கால நோக்கில் நல்ல பயனைத்தரும். நல்ல மனிதராக இருந்தால் மட்டும் போதாது. நல்ல குடிமகனாக இருப்பதும் முக்கியம்.

 எங்கே தொடங்குகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. எதனை, எவ்வாறு கற்றுக் கொள்கிறீர்கள் என்பதே முக்கியமானது. கற்றுக் கொள்ளும் திறன் உயர்வாக இருந்தால் வளர்ச்சியும் உறுதியாக இருக்கும். அதன்பிறகு உயர்ந்த இடம் தானாக கிடைக்கும்.

 நேர்மை, கடின உழைப்பு மற்றும் சிறப்பு ஆகியவற்றை கொண்ட சூழலை உருவாக்குங்கள். நீண்ட நேரம் உழைப்பது, ஊழியருக்கும், நிறுவனத்திற்கும் ஏற்றதல்ல.

 சமூக உணர்வை ஏற்படுத்தி மிகச் சிறந்தவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். நேர்மையோடு துணிச்சலாக செயல்படுங்கள். கற்பனை ஆற்றல் மற்றும் மனநிலை மற்ற மூலப் பொருட்களை விட முக்கியமானது.

 ஒரு அளவிற்கு மேல் ஒருவருடைய செல்வமானது, சமூகத்தில் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்பாக கருதப்பட வேண்டும்.

 எப்போதும் உண்மையை நாடுங்கள். அயல் நாடுகளின் முன்னேற்ற ங்களில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். பள்ளி போன்ற உங்கள் வளர்ச்சிக்கு வித்திட்ட அமைப்புகளுக்கு பதில் உதவி செய்யுங்கள்.

 எளிமை, மன உறுதி மற்றும் முன்னுதாரணமாக திகழ்வதன் மூலம் மகாத்மா காந்தி தலைமை பண்புக்கான உறைகல்லாக விளங்குகிறார். அறிவு சார்ந்த நிறுவனங்களின் தலைமையில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

 24 மணி நேரமும் உழைப்பது சாத்தியம் இல்லை. நடுவே குட்டித் தூக்கம் போடுங்கள். அது புத்துணர்ச்சியை அளிக்கும். உங்கள் நிறுவனத்தை நேசிப்பதை விட வேலையை நேசியுங்கள். பயணத்தை அனுபவியுங்கள். இலக்கை அல்ல!

நாராயணமூர்த்தியின் கருத்துகள் எவரையும் ஊக்கம் பெற வைத்துவிடும். நேர்மையையும், நாட்டு நலனையும் பிரதானமாக வலியுறுத்துபவர். அதனால்தான் அவர் தனித்து நிற்கிறார்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்களுக்காக பாலமுருகன்...

உண்மை மட்டும்தான் ஜெயிக்கும்.!


‘உலகின் ஒட்டுமொத்த ஹீரோ அவர்தான்’-அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது உதிர்த்த வார்த்தை இது. ‘வருங்காலச் சமூகம் இவரை புத்தருக்கும் ஏசுவுக்கும் இணையாக வைத்துப் பேசும்!’ சுதந்திர இந்தியாவுடைய முதல் கவர்னர் ஜெனரலான மவுண்ட்பேட்டன் பிரபு மகாத்மா காந்தியைப் பற்றிச் சொன்ன வாசகம். ஆம் ஒவ்வொரு நாடும் காந்தியைப் பற்றி வியந்து பேசுகின்றன.


காந்தி மறைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்டதால், கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் அவரைப் பற்றிக் கதைகளில் மட்டுமே கேட்டிருக்கின்றன. அவை நிஜமா, பொய்யா என்று நம்ப முடியாமல் சிரமப்படும் அளவுக்கு நேர்மையானதொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அவரின் வாழ்க்கைப் பாடத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை:

முடிவெடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் ஒருவருக்காக மட்டுமல்ல. எல்லோரு க்காகவும்.! நன்றாக யோசித்து ஒரு செயலில் இறங்க வேண்டும். ஆனால் அப்படி இறங்கிய பிறகு சலனங்கள் கூடாது. பலன்களை எண்ணிக் கவலைப்படக் கூடாது.

ஒத்துழையாமை என்பது அற்புதமான ஆயுதம். நமக்குப் பிடிக்காதவர்கள் மீது கல் எடுத்து வீசுவதை விட அவர்களைப் புறக்கணித்துப் பாருங்கள். தானாக உங்கள் வழிக்கு இறங்கி வருவார்கள். உங்களுடைய நண்பர் அல்லது உறவினர் அல்லது உங்களுக்கு பிடித்தவர் என்பதற்காகச் சிலருக்கு மட்டும். அதிக முக்கியத்துவம் தந்து பழகாதீர்கள். எல்லோருக்கும் சமஅளவு வாய்ப்புக் கொடுங்கள்.

புதுப்புதுவிசயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்களுடைய கற்பனைகள் வானத்தில் பறந்தாலும் கால்கள் எப்போதும் தரையில் இருக்கட்டும். வெற்றுக் கனவுகள் யாருக்கும் உபயோகப்படாது.

ஆயிரம் கட்டுரைகள், கதைகள், தத்துவ அலசல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள் தராத ஞானத்தை நன்கு வாழ்ந்த ஒரு மனிதரின் வாழ்க்கை சொல்லித் தந்துவிடும். நாம் முடியாது என்று நினைக்கிற விசயத்தை கண்ணெதிரே சாதித்து முடித்தவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.


வன்முறை எதையும் சாதிக்காது. ஒரு வேளை நீங்கள் வன்முறையின் மூலம் வெற்றி பெற்றாலும் அதனால் வாழ்நாள் முழுவதும் ஏற்படுகிற குற்றவுணர்ச்சியை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எப்படியும் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற உறுதியை, கட்டுப்பாட்டை, ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்தவர்களை அதிகாரத்தின் மூலம் ஜெயித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். சர்வாதிகாரத் தனத்தை தவிர்த்து அனைவரையும் அன்பால் கட்டிப் போடப் பாருங்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் ஒரு விசயத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். எதையும் கேள்வி கேட்கப் பழகுங்கள்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன் கூடவே ஆடம்பரமும் ஒட்டிக் கொள்ளப் பார்க்கும் அனுமதிக்காதீர்கள். எப்போதும் சேவை மனப்பான்மை உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும். உண்மை என்பது உங்களுடைய வாழ்க்கையின் ஒற்றைவரி விளக்கமாக இருக்கட்டும். ஏனெனில் கடைசியில் உண்மைதான் ஜெயிக்கும். உண்மை மட்டும்தான் ஜெயிக்கும்.! கேள்வி கேட்காமல் நான் சொல்வதை செய் என்று அதிகாரம் செய்யாமல், அவர்களோடு அன்போடு பேசி வெற்றியை பெறுங்கள்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்களுக்காக பாலமுருகன்...

புதன், அக்டோபர் 27, 2010

தரணி போற்றும் தஞ்சை பெரிய கோவில்!

தஞ்சையின் தனிநிகர் சிறப்பு மட்டுமல்ல இந்தியாவின் கட்டடக் கலைக்கு சான்றாக திகழும் தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டை கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அதன் சிறப்புகளையும் வரலாற்றையும் கடந்த இரண்டு கட்டுரைகளில் மிக நுட்பமாக எழுதியிருந்தாலும் இன்னும் அதன் சிறப்புகள் எண்ணிலடங்காமல் இருப்பதால் மீண்டும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்.

இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும் வாணவன் மாதேவிக்கும் பிறந்த மைந்தன் இராஜராஜ சோழன். அருள் மொழிவர்மன் என்பது இவனது இயற்பெயர். கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடி சோழன், சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன் என்ற பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கினான்.


‘செந்திரு மடந்தை மண் ஸ்ரீராஜராஜன் இந்திர சமாணண் இராஜசர் வக்ஞன்’ என்று, திருக்கோயிலூர் கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது. ஐப்பசி மாதம் சதய நாளில் இராஜராஜன் பிறந்தான். அவனது பிறந்த நாளான ஐப்பசி சதய நாளில் திருவெண்காடு, திருப்புகலூர், எண்ணாயிரம், கோபுரப்பட்டி (பாச்சூர்) போன்ற பல கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்க தானம் அளிக்கப்பட்டதாகவும் கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

கட்டுமான கற்கோயில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில். இராஜராஜன் கி.பி.985 ல் அரியனை ஏறுகிறார். அவரது ஆட்சியில் கி.பி.1003 ல் துவங்கிய கோயில் கட்டுமானம், அரியனை ஏரிய இருபத்தைந்தாம் ஆட்சியாண்டு 275 ஆம் நாளில் நிறைவுபெற்றதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. கல்வெட்டு அடிப்படையில் கி.பி. 1010 ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள், தஞ்சை பெரிய கோயிலுக்கு மாமன்னன் இராஜராஜனால் முதல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது.


பிரகதீசுவரர் கோவில் என்று இன்று அழைக்கப்ட்டாலும், இராஜராஜீச்சுரம் என்றும், ஸ்ரீஇராஜராஜீசுவர முடையார் கோவில் எனவும் கல்வெட்டுக்களில் உள்ளதைக் காணலாம். கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், தட்சிண மேரு எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது. கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது. இவ்வகையான கோவில் அமைப்பை, சாந்தாரக் கட்டடம் கலை அமைப்பு எனக் கூறுவர். கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது. மேற் தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக, நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன. நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைடந்ததாக உள்ளது. இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, கதலிகா கர்ணம் என்ற கட்டடக்கலை அமைப்பில் அமைந்துள்ளது சிறப்பு.

தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும்தான் சோழர் கலை ஓவியங்கள் காணப்படுவது சிறப்பாகும். மேலும் நாயக்கர் கால ஓவியங்கள் மராட்டியர் கால ஓவியங்களும் இக்கோவிலில் காணப்படுகின்றன. இத்திருக் கோவிலில், உலக முழுவதுமுடைய நாயகி எனப்பெயர் கொண்ட அருள் வழங்கும் அம்மன் கோவில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

கோயிலின் இரண்டாம் கோபுரம் இராஜராஜன் திருவாயில் இதில் நாற்பதடி உயரமுள்ள ஒற்றைக்கல் நிலைகால்கள் இரண்டு உள்ளன. கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் பதினெட்டு அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன இரண்டு துவார பாலகர் சிற்பங்கள் மிக அபூர்வமானது. அவற்றின் கீழ், பீடப் பகுதியில் சிவபுராணக் கதைகளின் சிற்பத் தொகுப்புகள் உள்ளன.

இராஜராஜன் திருவாயில் சுற்றுச்சுவர் கற்கோட்ட மதில்களில் எட்டு இடங்களில் எட்டுத் திசைத் தெய்வங்கள் எனப்படும் அஷ்டதிக்கு பாலகர்களின் சன்னிதிகள் இராஜராஜன் காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கில் இந்திரன் சன்னிதி உள்ளது. ஆனால் இந்திரன் சிலை இல்¬. தென்கிழக்கில் அக்னி, தெற்கில் எமன், தென்மேற்கில் நிருதி, மேற்கில் வருணன், வடமேற்கில் வாயு, வடக்கில் ஈசானன் ஆகிய சன்னிதிகள் உள்ளன.


கி.பி. 1311 ல் மாலிக்காபூர் படையெடுப்பின் விளைவாக இந்திரன் இல்லாமலும், வருணண், அக்னி, ஈசானன் ஆகிய திருவுருவம் சிலைகள் சிதைந்தும் காணப்படுகிறது. மகாநந்தி மண்டபத்திலிருந்து தெற்கே திருமாளிகைச் சுற்று அருகே, வராஹி அம்மன் சன்னிதி உள்ளது. இது இராஜராஜன் காலத்தில் அமைந்தது எனச் சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே காசியிலும், தஞ்சைப் பெரிய கோயிலும் மட்டுமே இந்தச் சன்னிதி உள்ளதெனக் கூறப்படுகிறது.

திருச்சுற்றில் வடமேற்கில் காணப்படும் சுப்பிரமணியர் கோவில் தஞ்சை நாயக்கர் மன்னர்களின் கலைப்படைப்பாகும். திருச்சுற்றில் தென் மேற்கில் காணப்படும் விநாயகர் சன்னிதி மராட்டியர் கால கலைப்படைப்பாகும். யுனெஸ்கோ அமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலை உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 1987 ல் அறிவித்தது. அதன் இலச்சு இராஜராஜன் திருவாயிலில் நிறுவப்பட்டுள்ளது.

இப்படி தஞ்சைப் பெரிய கோவில் ஒப்பற்ற ஓர் கலை வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

மக்கள் தொகை கணக்கெடுப்பு!


இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட மக்களின் புள்ளி விவரங்களை பட்டியலாக தருவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவுகிறது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்கி வைத்தவர் (கி.பி.320) சந்திர குப்¢த மௌரியர். அமைச்சராக இருந்த சாணக்கியரின் ஆலோசனைப்படி விவசாயம், உற்பத்தி, இளைஞர்களின் எண்ணிக்கை என விரிவாகக் கணக்கெடுப்பு செய்து பதிவேடுகள் பராமரிக்கப்பட்டன. பிரிட்டிஷ் காலத்தில் 1824-ல் அலகாபாத் நகரிலும், 1827-ல் பனாரஸ் நகரிலும், 1830-ல் டாக்காவிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதிகாரபூர்வமான கணக்கெடுப்பு 1860-ல் தொடங்கி 1871-ல் நிறைவுற்றது. பகுதி பகுதியாக நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பு ஒன்றாக்கப்பட்டு ஆங்கிலேயர் ஆட்சியில் 1872 ஆம் ஆண்டு, முதல் முறையாக வெளியிடப் பட்டது. அதன்பின் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக் கெடுப்பு எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் எடுக்கப்பட்ட சில மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள், பல்வேறு அரசியல் காரணங்களால் பாதிக்கப்பட்டதும் உண்டு. முதல் முதலில் கடந்த 1861 ஆம் ஆண்டு எடுக்கப்பட இருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் சுதந்திர போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 1981-ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தமிழ்நாட்டின் மக்கள்தொகை பதிவேடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. பின், 1921 மற்றும் 1931 ஆகிய ஆண்டுகளில் எடுக்கப்பட இருந்த கணக்கெடுப்பு ஒத்துழையாமை இயக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டம், தேசப் பிரிவினை, போர், நிலநடுக்க காலங்களில்கூட திட்டமிட்டப்படி கணக்கெடுப்பு நடந்தது. ஏதேனும் ஒரு பகுதியில் கணக்கெடுப்பு நடத்தும் நிலை இல்லையெனில் இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை தீர்மானிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்படும்.

கடந்த 1941 ஆம் ஆண்டு நடைபெற இருந்த கணக்கெடுப்பு இரண்டாம் உலகப்போர் காரணமாக நிறுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்னும் கூட 1981 ஆம் ஆண்டு அசாமிலும், 1991 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரிலும் சில அரசியல் காரணங்களுக்காக கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டது. 15-வது கணக்கெடுக்கும் பணி 2010 ஆம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. நாடு முழுவதும் ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் உள்பட 25 லட்சம் பேர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். ஒரு அலுவலர் 120 முதல் 150 வீடுகள் அல்லது 600 நபர்கள் வரை கணக்கெடுப்பார். இந்த கணக்கெடுப்புப் பணிக்கு ரூ.2209 கோடியும், பதிவேடு தயாரிக்கும் பணிக்கு ரூ.3540 கோடியும் செலவிடப்படட்டது.


மற்ற ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு போல் அல்லாமல் இம்முறை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான தகவல்களும், இந்த கணக்கெடுப்பு பணியின் போது எடுக்கப்பட்டது. இதன் மூலம், உள்நாட்டு பாதுகாப்பு, சமூக நலத் திட்டங்கள் போன்றவற்றிற்கு ஆதாரமாக தேவைப்படும் அடையாள அட்டைகள் தயாரிக்க முடியும்.

இந்தியாவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு மாபெரும் பணியாகும். கடந்த 1948 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சட்டம் இயற்றப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், முதல் முறையாக கடந்த 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின் 1969 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த சட்டப்படி பிறப்பு மற்றும் இறப்பு குறித்து பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டமும், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கே நடத்தப்பட்டது.

இதையடுத்து, 12 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 31 லட்சம் மக்களிடம் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்றன. தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது என்ன?
இதனால் பயன் என்ன?

பிறப்பு, இறப்பு, நோய், பொருளியல், மக்கள் தொடர்பான விவரங்கள், மக்களின் சமுதாய வாழ்க்கை, புள்ளி விவரங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பால், இந்தியாவின் பொருளாதார நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம், மக்கள்தொகை கணக்கெடுக்கும் ஆணையர் மற்றும் பதிவாளர் அலுவலகம் ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச ஏஜென்சிகள், அறிஞர்கள், தொழில் நிறுவன அதிபர்கள் உள்ளிட்ட பலருக்கும் தேவையான விவரங்கள் கிடைக்கும்.

அரசியல் அமைப்பு அளித்துள்ள இடஒதுக்கீடு, நாடாளுமன்ற தொகுதிகள், சட்டசபை தொகுதிகள், உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகள் ஆகியவை மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டே அமைக்கப் படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம், அமல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளில் ஏற்பட்ட முன்னேற்றம், எதிர் காலத்தில் செய்ய வேண்டிய திட்டங்கள் ஆகியவைகளை அரசு அறிந்து கொள்ள உதவுகிறது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, அக்டோபர் 17, 2010

பிரகதீஸ்வரம் அதுவே விஸ்வரூபம்!


அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப் படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியி ருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா.

ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.


திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும்.

பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கான வர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று.

இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.


எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப் பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது.

கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகை யானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத் தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை.

உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர்.

தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியி ருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வியாழன், அக்டோபர் 14, 2010

தமிழரின் பெருமை: தஞ்சை பெரிய கோவில் !


தமிழர்களின் பண்டைய பெருமையை பறைசாற்றும் வரலாற்று சான்றுகள் எவை எவை என்று பட்டியலிட்டால் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை மிக்க இலக்கியங்கள், வானுயர எழுந்து நிற்கும் கற்றளி எனப்படும் கோவில்கள் இவை இரண்டும்தான் முன்னணியில் வந்து நிற்கும். இத்தகைய பெருமை மிக்க கட்டடங்களுள் ஒன்றுதான் தஞ்சை பெரிய கோவில்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் ஆன்மிகக் களஞ்சியமாகவும், தமிழர்களின் கட்டடத் திறமைக்கு ஒரு சான்றாகவும் திகழ்கிறது ராஜராஜேஸ்வரம் எனப்படும் தஞ்சை பெரிய கோவில். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாய் காட்சி தரும் இக்கோவில், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

சோழ மன்னர்களில் தலைசிறந்த மன்னராகிய முதலாம் ராஜராஜ சோழனின் காலத்தில் கட்டப்பட்டது தஞ்சை பெரிய கோவில். கி.பி.1005 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு கி.பி.1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளில் கட்டப்பட்ட இக்கோவில், ஆயிரம் ஆண்டுகைக் கடந்தும் கம்பீரமாய் காட்சி தருவதை பார்க்கும்போது, பண்டைய தமிழர்களின் கட்டட நிபுணத்துவத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு தஞ்சை பெரிய கோவிலுக்கு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் சன்னதி திருவில்லிபுத்தூர் போன்ற கோவில் கோபுரங்களின் வடிவத்திற்கும் தஞ்சை கோவிலின் கோபுரத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஆகம விதியோடு அதேசமயம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டது இதன் கோபுரம். தரைத்தளத்தில் இருந்து மொத்தம் 216 அடி உயரம் கொண்டது இதன் கோபுரம். கர்ப்பகிரகத்தில் இருந்து எகிப்திய பிரமிடுகளைப் போன்று 190 அடி உயரத்திற்கு சீரான வடிவில் உயர்ந்து செல்கிறது.

பொதுவாக கோபுரத்தின் ஆதிதளம் முடிந்து முதல் தளம் ஆரம்பிக்கும்போது சுற்றளவு குறையத் தொடங்கும். மேலே செல்ல செல்ல குறுகியப்படி செல்வதால் பிரமிடு போல் காட்சி அளிக்கும். ஆனால், ஆதிதளத்தின் தொடர்ச்சியாக முதல் தளத்தின் சுற்றளவும் இருப்பது இக்கோவிலின் சிறப்பினும் சிறப்பாகும்.

அதேபோன்று பெருவுடையார் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து மேலே பார்த்தால் சிகரத்தின் அடிப்பாகம் தெரியும். அதுவும் கீழே சதுரமாக தெரிய ஆரம்பித்து மேலே செல்ல செல்ல வட்டமாக மாறும் விந்தை எளிதில் புரியாத புதிர்தான். கோபுர உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவிலான கல் சுமார் 80 டன் எடையுடையது. கோவிலின் உள்ளே கர்ப்பகிரகத்தில் காட்சி தரும் லிங்கம் 13 அடி உயரம் உடையது. ஆவுடை எனப்படும் லிங்கத்தின் கீழ்ப்பகுதி வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாகும். இந்த லிங்கம் மத்தியப்பிரதேசம் மாநிலம் நர்மதை ஆற்றங்கரையில் இரந்து எடுத்து வரப்பட்டதாகும்.

கோவிலின் மற்றொரு ஆச்சர்யமாக விளங்கும் மிகப்பெரிய நந்தி பார்ப்போரை விய்ப்போடு வணங்க வைக்கிறது. 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்ட நந்தி உருவம் இந்தியாவில் வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒன்று.

தஞ்சை முழுக்க முழுக்க வேளாண் பூமியாகும். காவிரி ஆற்றின் செழித்த வண்டல் மண் கொழிக்கும் பூமி தஞ்சை. கையால் கிண்டி விதை நட்டாலே, பூ மலரும் மகத்துவம் கொண்டது தஞ்சை மண். இங்கு கனத்த பாறைகளோ, மலையளவு உயரம் கொண்ட கற்களோ இருந்ததற்கான நிலவியல் சான்றுகள் இல்லை. அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய தஞ்சை பெரிய கோவிலைக் கட்ட தேவையான கற்களையும், குறிப்பாக விமானத்திற்கு தேவையான கல்லை ராஜராஜ சோழன் எங்கிருந்து கொண்டு வந்தான், எப்படி சாரம் எழுப்பி அதனை மேலே கொண்டு சென்றான் என்பதை எண்ணிப் பார்க்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் கட்டட ஞானம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

தச்சை பெரிய கோவிலுக்குள் கர்ப்பகிரகமான சிவலிங்கம் மட்டுமல்லாது வடமேற்கு மூலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில், வடகிழக்கு பகுதியில் வராகியம்மன் கோவில், சண்டி கேசுவரர் கோவில், கணபதி கோவில், நடராஜர் சன்னதி போன்றவையும் அமைந்துள்ளன. கருவூரார் சித்தரைப் போற்றி கருவூரார் கோவிலும், சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சிலைகளும், 108 சிவலிங்கங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இரண்டு திருவாயில்களைக் கொண்டு அமைக்கப்பட்ட முதற்கோவில் தஞ்சை பெரியகோவில்தான். கட்டப்பட்ட காலத்தோடு இன்றளவும் காட்சி அளிப்பதும் இதுதான்.

பல்வேறு கோவில்களில் சுற்றுச் சுவர்களை அழகிய ஓவியங்கள் அலங்கரிக்கும் நிலையில், இலக்கிய ஆக்கங்களை கல்வெட்டுகளாக பதிவு செய்த முதல் கோவில் தஞ்சை பெரிய கோவில். 50 மீட்டருக்கும் மேலான நீளத்தில் அமைந்த கல்வெட்டுகளும், கட்டுமானப்பணியில் பங்கேற்றவர்களையும் கல்வெட்டில் செதுக்கி பெருமைப்படுத்தியதும் இக்கோவிலில்தான்.

கோவில் உருவாக்கப்பட்டபோது, கோவில் பணிக்கென பூசகர்கள், ஓதுவார்கள் என 50 பேரும், ஆடல்கலையில் சிறந்த நடனமாதர்கள் 400 பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கோவிலுக்கு அருகே தளிச்சேரி என்ற இடத்தில் குடியிருப்புகள் ஏற்படுத்தியதோடு, கோவில் வருமானத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்க முறை செய்யப்பட்டது. ராஜராஜசோழனின் நிர்வாகத் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு பொக்கிசம் என்றால் அது மிகையல்ல. சுற்றுச்சுவர், தூண்கள், கைப்பிடிகள் போன்றவற்றிலும் புதைந்து கிடைக்கும் கல்வெட்டுகள் அன்றைய காலத்தின் தமிழர்களின் கொடைத் தன்மையை பறை சாற்றுபவை.


கோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கை எது, எவ்வளவு, அதனைக் கொண்டு செய்யப்படும் காரியம் எது, அதனை மேற்பார்வையிடும் அதிகாரி யார், அவருக்கு என்ன ஊதியம் என்பது போன்ற விரிவான தகவல்கள் அந்த கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. ராஜ ராஜ சோழன் வழங்கிய நிவேந்தங்களும், குந்தவை நாச்சியார் வழங்கிய செப்புத் திருமேனிகள் குறித்த கல்வெட்டுக்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் பலப் பல.

கோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்பது போன்ற பல்வேறு கட்டுக்கதைகள் தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி கர்ணப் பரம்பரைக் கதையாக கூறப்படுகிறது. ஆனாலும், அவ்வாறு கூறப்படுவது உண்மையல்ல. கோபுரத்தின் நிழல் சில டிகிரி அளவுக்கு பூமியில் விழுகிறது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது அது சரியாக நிற்கவில்லை என்றும் கருவூரார் சித்தர் வெற்றிலைச்சாறு துப்பி நிற்க வைத்தார் என்றும், தனக்கு ஏற்பட்ட கருங்குஷ்டம் நோய் சரியாவதற்காவே ராஜராஜசோழன் இக்கோவிலை கட்டினான் என்றும் பல்வேறு கட்டுக்கதைகள் இதைப்பற்றி கூறப்படுகின்றன.

ஆனால் எதற்கும் வரலாற்று சான்றுகள் இல்லை. கதைகள் அனைத்தையும் தன்னகத்தே அடக்கி மவுன சாட்சியாய் நின்று கொண்டிருக்கிறது பெரிய கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம்18 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அதே போன்று வருடந்தோறும் ராஜராஜசோழன் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது வில்வ இலை, வன்னி இலை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்திக் கொழுந்து, அரசங்கொழுந்து உள்ளிட்ட 47 வகையான அபிஷேகம் நடத்தப்படும்.

இத்தனை பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலை 1985 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலுக்கு உள்ளே அழகிய நடைபாதை, வெளியே அகழி போன்றவை யுனெஸ்கோ நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய கட்டட ஞானத்தை பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவிலை இனிவரும் தலைமுறையினரும் கண்டு களிக்கும் வகையில் பேணிப் பாதுகாத்திட அனைவரும் ஒத்துழைப்பு அளியுங்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.