செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், நவம்பர் 02, 2011

நவீன நரகாசுரர்கள்!


உத்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் உம்லேஷ் யாதவ் கடந்த (2007) சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, பத்திரிகைகளுக்குப் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டார் (PAID NEWS) என்ற புகார் எழுந்தது. விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அப்புகார் உண்மை என்பதால், அவரைத் தகுதி நீக்கம் செய்துள்ளது. உம்லேஷ் யாதவ் தேர்தல் நேரத்தில் சில இந்தி பத்திரிகைகளில் தன்னுடைய படம், செய்தி வருவதற்காக பணம் கொடுத்துள்ளார் என்பது உண்மைதான்.

என்றாலும், இவரது தகுதிநீக்கம் என்பது பணம் கொடுத்து வாங்கிய செய்திக்காக அல்ல. இந்தச் செய்திகள் விளம்பரம் என்பதைக் குறிக்கும் அடையாளக் குறிப்புடன் (ஏடிவிடி) பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அதைச் செய்தியாகவே கருதிக் கொண்ட உம்லேஷ் யாதவ், தேர்தல் செலவில் கணக்குக் காட்டத் தவறிவிட்டார். ஆகவே, இது விளம்பரச் செலவாகக் கருதப்பட்டு, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.
umlesh yadav
 இதுபோன்று, தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதாகப் புகார்கள் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் இருப்பவர் மகாராஷ் டிரத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவாண். அவர் மீதான அனைத்துக் குற்றச் சாட்டுகளும் ஆதாரங்களுடன் உள்ளன. அவருடைய செய்திகளில் விளம்பரம் (ஏடிவிடி) என்பதற்கான அடையாளக் குறிப்பு கிடையாது.

தேர்தலின் போது அசோக் சவாண் பணம் கொடுத்து செய்திகள் வெளியிடச் செய்தார் என்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஒரே ஆதாரம் - அவரைப் புகழ்ந்து தள்ளும் ஒரே செய்தி, ஒரு வார்த்தை மாறாமல், எல்லாப் பத்திரிகைகளிலும் அப்படியே பிரசுரமாகியிருக்கிறது என்பதுதான். பணம் கொடுக்காமல் இப்படி ஒரே செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளியாக வாய்ப்பே இல்லைதான். ஆனாலும் அவர் பணம் கொடுத்தார் என்பதை நிரூபிக்க வழியில்லாத நிலையில், தேர்தல் ஆணையம் தனது விசாரணையை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ashok chavan 
 இவ்வாறு பணம் கொடுத்து செய்தி வாங்கி, விளம்பரம் தேடிக் கொள்ளும் நுகர்வுக் கலாசாரம் பத்திரிகை உலகில் நுழைந்துவிட்ட நிலையில், அதை சில வேட்பாளர் களும், சில பத்திரிகைகளும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்கின்றனர். முன்னணி யில் உள்ள ஆங்கிலத் தொலைக்காட்சி செய்திச் சேனல்களும் பத்திரிகைகளும் தேர்தல் நேரங்களில் இதில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுகின்றன.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் (2011), செய்திப் படங்களை தினமும் பிரசுரிக்க அதன் அளவுக்கேற்ப பணம் வழங்கியதாக ஒரு வேட்பாளர் கூறிய தகவலை ஓர் ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

ஒரு பத்திரிகையில் ஒரு வேட்பாளர் குறித்து எத்தனை செய்திகள் வரலாம், அல்லது எத்தனை சதுர சென்டி மீட்டர் செய்தி இடம் பெறலாம் என்பதையெல்லாம் தேர்தல் ஆணையம் வரையறுக்க முடியாது. ஒரு பத்திரிகை உரிமையாளர் தேர்தலில் போட்டி யிட்டால், அவரைப் பற்றித்தான் அந்தப் பத்திரிகை அதிகமாக செய்தி வெளியிட முடியும். கட்சி சார்புடைய பத்திரிகை என்றால், அவர்களது வேட்பாளர்களைப் பற்றி மட்டும்தான் செய்தி வெளியிடும். இதில் வரையறைகள் சாத்தியமே இல்லை.

பத்திரிகைகள் மட்டுமல்ல, ஊடகங்களிலும் இதுதான் நிலைமை. போதாக்குறைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கென்று ஒரு தொலைக்காட்சி சேனலையே நடத்தும்போது, நடுநிலையாக ஊடகங்கள் செயல்படுவது என்பது இந்தியாவில் சாத்தியமே இல்லை. அதற்காக, அரசியல் கட்சிகள் தொலைக்காட்சிச் சேனல்களை நடத்தக் கூடாது என்று தடுப்பதும் இயலாத காரியம்.

ஆளுங்கட்சியின் தவறுகளை வெளிச்சம் போடப் பத்திரிகைளால் முடியுமே தவிர, செய்திகளைத் தொடர்ந்து பிரசுரித்துத் தகுதியில்லாத ஒருவரை வெற்றி பெறச் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.வேண்டுமென்றே திணிக்கப்பட்ட செய்திகள் ஒரு போதும் வாக்குகளாக மாறுவதில்லை என்பதுதான் மிகப்பெரிய உண்மை. அந்த அளவுக்கு வாசகர்கள் தௌவானவர்களாக இருக்கிறார்கள். 

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி சார்பாக தமிழகத்தின் மிகப் பிரபலமான தொலைக்காட்சி சேனல் ஒரு நகைச்சுவை நடிகரைக் களமிறக்கி அவருக்கு முக்கிய த்துவம் கொடுத்துத் தனிநபர் தாக்குதல் நடத்தியும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லையே. ஆகையால் பத்திரிகைச் செய்திகளோ காட்சி ஊடகப் பிரசாரங் களோ தனிநபரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில்லை என்பதுதான் உண்மை.

உண்மையிலேயே பயமுறுத்துவது தொழில்நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை விளம்பரப்படுத்துவதற்காகப் பணம் கொடுத்துத் திணிக்கும் செய்திகள் (PLANTED NEWS)தான். கார்ப்பரேட் கலாசாரத்தின் இன்றியமையாத பகுதியாக இது மாறிவிட்டி ருக்கிறது. இதற்காக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டு விடுகிறார். அல்லது இதற்காகவே பத்திரிகைத் தொடர்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த அதிகாரிகள் அல்லது நிறுவனங்கள் பத்திரிகை நிருபர்களைத் தங்களது நட்பாலோ, அன்பளிப்புகளாலோ, விருந்துகளாலோ, பணத்தாலோ வசப்படுத்தி அவர்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டிய விஷயங்களைச் செய்திகளாக நுழைந்து விடுகின்றனர். அந்தச் செய்தி திணிக்கப்பட்டது என்பது தெரியாத அளவுக்கு சுவாராஸ்யமாக எழுதப்படுவதுடன், பத்திரிகை செய்தி ஆசிரியர்களின் கண்களிலி ருந்தும் இந்தத் திணிப்புகள் தப்பிவிடுகின்றன.

செய்திகள் திணிக்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல, ஏதாவது ஒரு விதத்தில் பத்திரிகையாளர்களை இந்தக் கார்ப்பரேட் கலாசாரம் விலைபேசி விடுகிறது என்பது தான் வேதனைக்குரிய ஒன்று. அன்பளிப்புக்கு அடிமையாகிவிட்ட பத்திரிகையாளர் களை எப்படி மீட்டெடுப்பது? நிருபர்களிலிருந்து பத்திரிகை அதிபர்கள் வரை பலரையும் விலைபேசத் தயங்காத கார்ப்பரேட் நரகாசுரர்களிடமிருந்து பத்திரிகை தர்மத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான் ஊடகங்களையும் இந்திய ஜனநாயகத் தையும் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால்.!

பத்திரிகைகளும் ஊடகங்களும் தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளவும், பத்திரிகை அறம் சார்ந்து நிற்பதும் மட்டுமே இத்தகைய போக்குகளைத் தடுக்க முடியும் என்பதுதான் உண்மையான கருத்து

நன்றி: தினமணி, 26-10-2011
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. பெயரில்லாபுத. நவ. 02, 09:35:00 AM 2011

    என்ன மாதிரியான காலத்தில் நாம் வாழ்கின்றோம்? பயமாக இருக்கின்றது. - முனைவர் ப. சரவணன்

    பதிலளிநீக்கு