செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, பிப்ரவரி 24, 2012

மத்திய அரசின் பட்ஜெட் எப்படி நடக்கும்?


ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி, அதற்கு முந்தைய ஆண்டின் செப்டம்பரில் தொடங்கிவிடுகிறது. எல்லா அமைச்சர் களுக்கும், நிதிநிலை அறிக்கை தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்படும். அமைச்சகத்தின் வரவு-செலவு மதிப்பீட்டு கணக்கு விவரத்தை சமர்ப்பிக்கும் படி இந்த 109 பக்க சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்படும்.

இதன்படி, எல்லா அமைச்சங்களுக்கும், தங்களுக்கு தேவையான வழக்கமான செலவுக் கணக்கு மதிப்பீடுகள், புதிய திட்டங்களின் நிதி மதிப்பீடுகளை குறிப்பிட்டு, நிதிநிலையில் அதற்கான நிதி ஒதுக்கும்படி விரிவான அறிக்கையுடன், பதில் அறிக்கை அனுப்பும்.



நவம்பர் முதல், டில்லியில் நிதியமைச்சகம் உள்ள ரெய்சானா ஹில்ஸ் பகுதி வடக்கு பிளாக் பரபரப்பாகி விடும். வர்த்தக, தொழில், விவசாய தொழிற்சங்கம் உட்பட, பல்வேறு தரப்பினரின் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார். தங்களுக்கு என்னென்ன திட்டங்களில் சலுகை அளிக்க வேண்டும்; வரியை குறைக்க வேண்டும் என்பது போன்ற விசயங்களில் கோரிக்கை வைப்பார்; இதன் அடிப்படையில், மாத இறுதியில் நிதியமைச்சக அதிகாரிகள், ஒரு விரிவான மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பார்.

புத்தாண்டு பிறந்த நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நிதியமைச்சர் நேரடியாகவே பேசுவார். அவர்களின் கோரிக்கைகளை அறிந்து கொள்வார். நிதிநிலையில் ஏதாவது திட்டங்கள் சேர்க்க வேண்டு மானால், அது பற்றி கூட்டணி கட்சித் தலைவர்கள், அறிக்கையாக சமர்ப்பிப்பார்.

அதை பரிசீலித்து நிதி நிலைக்கு ஏற்ப நிதிநிலையில் அறிவிப்பது பற்றி நிதியமைச்சர் இறுதி முடிவெடுப்பார். சில சமயம், சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றவை பற்றி உறுதி மொழி மட்டும் அளிக்கவும் கூடும்.


நிதிநிலை உரை நகல்களை அச்சடிப்பது தொடர்பாக அச்சக தொழில் நுட்ப வல்லுநர்கள், உளவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஸ்டெனோகிராபர்கள் போன்ற முக்கிய பிரிவு அதிகாரிகளுடன் பேச்சு நடக்கும். நிதிநிலை விவரம் எதுவும் கசியக்கூடாது என்பதற்காக, சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கேற்ப, நிதிநிலை தாக்கலாகும் நாள் வரை, ஏழு நாளுக்கு இவர்கள், 'வடக்கு பிளாக்' கில் தங்க வைக்கப்படுவர்.



குடும்பத்தினருடன் கூட இவர்கள் இந்த ஏழு நாள் பேச முடியாது. நேரில் பார்க்க முடியாது. ஒரு ரகசிய போன் எண் மட்டுமே குடும்பத்தினருக்கு தரப்படும். முக்கிய தகவலாக இருந்தால் மட்டும், அதை இந்த எண்ணில் சொல்லலாம். அந்த தகவல், குறிப்பிட்ட ஊழியருக்கு போய்ச் சேரும். உளவு அதிகாரிகள் சுற்றி வளைத்து, முழு அளவில் கண்காணிப்பை மேற் கொள்வர். செல்போன் வேலை செய்யாது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த செல்போன் ஜாமர் கருவி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்களின் வெப்சைட்களை பராமரிக்கும், நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், நிதிநிலை தாக்கலாகும் முன் ஏழு நாள் மட்டும் வடக்கு பிளாக்கில் உள்ள கம்ப்யூட்டர்கள் தனி, சர்வர் மூலம் இயங்கும்.

 வெளித்தொடர்பு இருக்காது. நிதிநிலை உரை புத்தகம் இறுதி செய்யப்பட்டு விட்டதும், தாக்கலாகும் இரண்டு நாளுக்கு முன் நள்ளிரவில்தான் ஏற்குறைய அச்சடிப்பு துவங்கும். தொடக்கத்தில், ஜனாதிபதி மாளிகையில்தான் நிதிநிலை உரை அச்சடிக்கப்பட்டு வந்தது.

ஒரு முறை கசிந்ததால், மின்டோ சாலையில் உள்ள அரசு அச்சகத்தில், 1950 ல் இருந்து அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால், பாதுகாப்பு கருதி,1980ல் இருந்து, வடக்கு பிளாக் வளாகத்தில், தரை தளத்தில் அச்சடிக்கப்படுகிறது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

“தி டிப்டெட்என்ட்”


ஒரு விசயம் கடினமாக இருக்கும் என்றால் இது நமக்கு வேண்டாம் என்று விட்டுடக்கூடாது. அதையே திரும்பத் திரும்ப நல்லா பயிற்சி செய்யவும். இந்த அறிவுரையைத்தான், உடைத்துப்போடுகிறார் தன்னுடைய “தி டிப்டெட்என்ட்” என்ற புத்தகத்தில் சேத் கோடின் என்ற புகழ் பெற்ற சுயமுன்னேற்ற எழுத்தாளர். எல்லா சந்தர்ப்பங்களிலும் தடைகளை மீறிச் செல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சில சமயங்களில் விலகிச் செல்வதும் கூட புத்திசாலித்தனம்தான் என்று அடித்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

ஆக, நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் தடைகள் எதிர்ப்பட்டால், சில சமயங்களில் இன்னும் கடினப்பட்டு உழைக்க வேண்டும், வேறு சில சமயங்களில் விட்டு விலகிவிட வேண்டும். இந்த வித்தியாசத்தை துல்லியமாக புரிந்துகொள்வதுதான் வெற்றிக்கான சூத்திரம் என்கிறார் சேத் கோடின்.

எந்த ஒரு வேலையையும் நாம் தொடங்குகிறபோது நமக்குள் ஒரு பெரிய உற்சாகம் இருக்கும். இதை முடித்தே தீரவேண்டும் என்கிற ஆவேசத்துடன் சுறுசுறுப்பாக வேலை பார்ப்போம். புதுப்புது விசயங்களை கற்றுக் கொண்டு அதிவேகமாக முன்னேறுவோம். ஆனால் ஒரு கட்டத்தில் சுலபமான விசயங்கள் தீர்ந்துபோய், கொஞ்சம் கடினமான சமாசாரங்கள் எதிர்ப்படும். இதற்கு மேலும் இந்த வேலையை செய்வது அவசியமா என்று கூடத் தோன்றும். அதை சமாளிக்க பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும் என்கிறார் சேத் கோடின்.

இப்போது, உங்கள் முன் இரண்டு விருப்பங்கள் உள்ளன. அவற்றைத்தான் டிப் டெட்என்ட் என்று அழைக்கிறார் சேத்கோடின். டிப் என்றால் மிக கடினமான தடை. ஆனால் அப்போது இன்னும் கூடுதல் உழைப்போடு அதை எதிர்த்து முன்னேறிச் சென்றால் மூழ்கி முத்தெடுத்துவிடலாம்.

டெட்என்ட் என்பது இதற்கு நேர் எதிர். இங்கேயும் நீங்கள் ஒரு பெரிய தடையைச் சந்திக்கிறீர்கள். ஆனால், அந்த இடத்தில் நீங்கள் எவ்வளவுதான் முட்டி மோதினாலும் பலன் இருக்காது. முன்னேற வாய்ப்பே இல்லாத முட்டுச் சந்து. அதற்காக, கடினம் வரும்போதெல்லாம் அது முட்டுச்சுவர் என்று நினைத்து விலகிவிடக்கூடாது. அது சுத்த முட்டாள்தனம். ஓர் இடத்தில் பத்து அடி தோண்டி விட்டு தண்ணீர் வரவில்லை என்று நம்பிக்கை இழந்து, இன்னோர் இடத்தில் இன்னொரு பத்து அடி தோண்டி, மீண்டும் நம்பிக்கை இழப்பதைவிட, முதல் இடத்திலேயே இன்னும் ஆழமாக இருபது அடி தோண்டியவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் இல்லையா?

ஆக, எப்போது விலகவேண்டும், எப்போது இன்னும் தீவிரத்துடன் போராடவேண்டும் என்கிற வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது அவசியம். நீங்கள் கேள்விப்பட்ட வெற்றியாளர்கள் எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இதுமாதிரி பல தடைகளைச் சந்தித்திருப்பார்கள். டெட்என்ட் களைவிட்டு விலகி டிப்களை எதிர்த்துப் போராடி முன்னேறியிருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால்;

* தேவையில்லாத விசயங்களில் அதிக நேரம் செலவிடுவதன் மூலம் நாம் நம்முடைய உழைப்பை வீண்டிக்கிறோம்.

* பயனில்லாத முயற்சிகளை சீக்கிரத்தில் அடையாளம் காணவேண்டும், தயவு தாட்சண்யமே பார்க்காமல் அவற்றை விலக்கிவிடவேண்டும்.

* அதே நேரம் நமக்கு எது அவசியம் என்பதில் தௌ¤வாக இருக்க வேண்டும், எங்கே நம்முடைய முயற்சியைச் செலுத்தினால் வெற்றி உறுதிப்படும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப உழைப்பைப் புத்திசாலித்தனமாகச் செலவிட வேண்டும்.

இந்த மூன்று அம்சங்களை முக்கியமாக சொல்கிறது இந்தப் புத்தகம். நீங்களும் பழகிப் பாருங்கள் வெற்றி நிச்சயம்.!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

வெற்றி பெற வாழ்க்கையில் ஓட வேண்டும்!


தனக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பேசி முடித்து இறங்கிய நண்பர், வருத்தத்துடன் சொன்னார்: “நான் வெற்றி பெற்ற பிறகு இவ்வளவு பேரும் என்னைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், நான் வெற்றி பெறப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில், யாருமே என்னைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், இன்று பாராட்டுகிறார்கள். நியாயப்படி தொடக்ககால கட்டத்தில் தானே எனக்கு அங்கீகாரம் தேவை.”

மற்றொரு நண்பர் இதை மறுத்துவிட்டு விளக்கிச் சொன்னார்: “யார் முதலில் வருகிறார்களோ, அவர்களுக்குத்தான் முதல் பரிசு என்பதால்தான் போட்டியில் கலந்து கொள்கிறவர்களுக்கு வேகமே வருகிறது. அதற்கு பதிலாக, எல்லோரும் உற்சாகமடையட்டும் என்று,'ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர்களுக் கெல்லாம் பரிசு’ என்று அறிவித்தால், யாருமே ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓட மாட்டார்கள். அப்படியே ஓடினாலும், ஓடுகிறவரை எல்லோரு மாக சேர்ந்து இழுத்துப்பிடித்து, ‘அதான் பந்தயத்தில் கலந்து கொண்டாலே பரிசாமே! ஏன் இவ்வளவு வேகம்?’ என்று உட்கார வைத்துவிடுவார்கள்.


ஓட நினைத்தவர் இப்போது வேகமாக நடக்க ஆரம்பிப்பார். அதற்கும் இரண்டு பேர், ‘கலந்துகொண்டாலே பரிசு என்றாகிவிட்டது. பிறகு எதற்கு இவ்வளவு வேகம்?’ என்று தடை சொல்வார்கள். இப்போது அவர் மிக மெதுவாக நடக்க ஆரம்பிப்பார். அப்போதும் விடமாட்டார்கள். ‘எதற்காக நடந்து கொண்டிருக் கிறீர்கள்? கலந்து கொள்வது என்பதற்கு டிராக்கில் நின்று கொண்டிருந்தாலே கூட போதுமானது’ என்று நடப்பதையும் நிறுத்திவிடுவார்கள்.

இன்னொரு சோம்பேறி சொல்வார், ‘கலந்து கொள்வது என்றால் டிராக்கில் இருந்தாலே போதும். பிறகு எதற்கு நிற்கிறீர்கள்?’ என்று சொல்லி உட்காரவும் வைத்துவிடுவார்கள். வெற்றி பெற்றால்தான் பரிசு என்பதனால்தானே நாம் வெகுவேகமாக ஓடச் செய்கிறோம். எனவே, அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். தொடக்க அங்கீகாரத்திலேயே திருப்தி அடைந்து விட்டால் ஓடுவதற்கான உத்வேகத்தை நீங்கள் ஒருநாளும் பெறவே மாட்டீர்கள்.” எனவே, தொடக்க காலத்தில் கிடைக்கும் அவமானத்தை சகித்துக் கொண்டால், எதிர்காலத்தில் வெற்றியைப் பெறலாம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

சனி, பிப்ரவரி 18, 2012

காதல் பள்ளிக்கூடங்கள்..!


காதலை கற்றுத்தர தற்போது பல ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வசதிகள் இல்லை. அதனால், கோவில்களில் காதலை கற்றுத் தரும் விதமாக சிலைகள் அமைத்தார்கள். இந்த வகையில் முழுக்க முழுக்க ஆண், பெண் உடலுறவு தொடர்பான விசயங்களை மட்டுமே கொண்டு சிலைகள் வடிவமைக்கப் பட்டன. இவற்றைதான் ‘காதல் பள்ளிக் கூடங்கள்’ என்று அழைக்கிறார்கள்.


மத்தியப்பிரதேசத்தின் ஒரு மூலையில் அமைந்துள்ள சிற்றூர் கஜூராஹோ. அந்த சின்ன ஊரின் கோவில் கற்களில் செதுக்கப்பட்டிருக்கும் அழகிய சிற்பங்களை சிற்றின்ப கண்கொண்டு பார்ப்பதா அல்லது பேரின்ப உணர்வுடன் காண்பதா என்று விளங்காமல் ஆன்மிகவாதிகளே திகைக்கிறார்கள். அந்த சிற்பங்கள் ஆண், பெண்ணின் பிறந்த மேனி, அங்க அழகுகளை அற்புதமாக சித்தரிக்கின்றன. போதாக்குறைக்கு ஆண், பெண் உடலுறவு காட்சிகளை விதவிதமாக வகை வகையாக விளக்குகின்றன.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கஜூராஹோவில் சண்டெல்லா என்ற அரச பரம்பரையினர் ஆட்சி நடத்தி வந்தனர். அவர்கள் சிற்றின்பப் பிரியர்கள். பெண்ணிடம் இன்பம் காண்பதுதான் பிறவி எடுத்த தன் பெரும் பயன் என்று கருதியவர்கள். அவர்கள் காலத்தில் கோவில் பணிக்கென ஆயிரக்கணக்கில் தாசிகள் இருந்தனர். ஆலய தாசிகள் என்றாலே அவர்கள் அரண் மனைக்கும் தாசிகளாதானே இருக்க முடியும். அவர்களுடன் கூடி பல விதங்களில் தாங்கள் அனுபவித்த இன்ப விளையாட்டு களை நிரந்தரப்படுத்தி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சண்டெல்லா வம்ச அரசர்கள் இத்தகைய சிலைகளை அமைத்தனர்.

இந்த சிற்பங்களைக் காண உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.ஒரிசா மாநிலத்தில் கொரைக் என்ற இடத்தில் அமைந்துள்ள அற்புதமான பழங்கால சிற்பங்கள் காணப்படுகின்றன. சிற்பங்கள் அமைந்திருக்கும் இந்த இடத்தை ‘காதல் பள்ளி’ என்று குறிப்பிடுகிறார்கள். அந்த சிற்பங்கள் அனைத்துமே ஆண், பெண் உடலுறவு கொள்ளும் காட்சியை விதவிதமாக சித்தரிக்கின்றன.

கொரைக் சிலைகள் ஆபாசம் என்ற நினைவு எழாத வகையில் அற்புதமான கலை வளர்ச்சி மிளிர இந்த சிற்பங்களை அமைத்துள்ளனர். அந்த காலத்தில் காதலை கற்றுத் தரும் பள்ளிக் கூடங்களாக இந்த இரண்டு இடங்களும் அமைந்திருக்கின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வியாழன், பிப்ரவரி 16, 2012

நூலகம் ஒரு கோவில், நூல்கள் தெய்வம்!




‘அறிவு ஆற்றலுடையது’ என்பார்கள். ஆமாம், பல வெற்றியாளர்கள் தாங்கள் பெற்ற அறிவாற்றலால்தான் வாழ்க்கையில் தங்களை நிரூபித்துள்ளனர். கல்வியால் அறிவாற்றலைப் பெற முடியும். கல்வி இளமையில் தொடங்கி இருபதுகளில் வளர்ச்சி அடைகிறது. வெற்றிக்குத் தேவை நல்ல சிந்தனை. நல்ல சிந்தனைக்கு தேவை நல்ல நூல்கள். நல்ல நூல்கள் சிந்தனையை சிறகடிக்கும். சிறகடித்து வானம் தொடும். பார்த்தல், கேட்டல் அறிவை விட, படித்தல் அறிவு சிறந்தது. வாசித்தல் அனுபவத்திற்கு வார்த்தைகள் இல்லை.

புத்தகங்களும், ஆசிரியர்களும் கடைசி வரை நல்ல வழிகாட்டிகளாக இருப்பார்கள். அவர்களே நமது நல்ல நண்பர்கள். இளமையில் நமக்கு நிறைய நண்பர்கள் இருக்கலாம். இளமை பருவத்திற்குப் பிறகு தனிமையை உணரும் போது புத்தகம் படித்தல்தான் உண்மையான துணையாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருக்கும்.



ஒருவனை ‘புழு’ என்றால் கோபம் கொள்வான். புத்தக விரும்பியை ‘புத்தக புழு’ எனக் கூறி பாருங்கள். ரசித்து சிரிப்பான்.! புத்தக பைத்தியம் என்றால் புன்னகை பூப்பான்.! படித்தவர்களுக்கே அதன் சுகம் தெரியும். புத்தகப் பிரியர்களுக்கு புத்தகம் சொர்க்கம். எழுத்துக்கள் அமுதம். புத்தகம் நமக்கு தோழன். புத்தகம் நமது அறிவின் குரு. புத்தகம் வாழ்வின் வழிகாட்டி. கன்னிமாரா நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் படித்தவர் என்று அண்ணாவை சொல்வார்கள். தூக்கு மேடைக்குச் செல்லும் சில நிமிடங் களுக்கு முன்னால்கூட லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலை வாசித்து விட்டுதான் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங்.

ராபர்ட் சவுதே எனும் ஆங்கிலக் கவிஞர், தன் கடைசிக் காலம் வரை புத்தகங்களே தனக்கு உண்மையான நண்பர்களாக இருந்தன என்று கூறியுள்ளார். புத்தகம் படிப்பது ஒரு நல்ல பொழுது போக்காகவும், அதிக மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்கும். புத்தகம் படிப்பது மனித நேயம் வளர்ப்பதற்கும் புதுமையாகச் சிந்திப்பதற்கும், சமுதாயத்தைப் புரிந்து கொள்வதற்கும், பல்துறை அறிவு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் தொடர்ந்து நூலகம் செல்வதன் மூலமும் அங்கு புத்தகங்களைப் படிப்பதன் மூலமும் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

புத்தகங்கள் மட்டும் இல்லையென்றால் கடவுள் இல்லை. நீதி சகிக்க முடியாததாக இருக்கும். இயற்கை விஞ்ஞானம் குத்திட்டு அசையாமல் நின்றுவிடும். தத்துவங்கள் ஊமையாகிவிடும். சகலமும் இருண்டு விடும். வாசிப்பின் பலத்தை இப்படி மிகைப்படுத்தியுள்ளனர் அறிஞர்கள். அவர்கள் சொல்வது போல் புத்தகம் என்ன செய்யும்? புத்தகம் புது உலகம் காட்டும். புரட்சி செய்யும். புதுமை படைக்கும். தாலாட்டும். தாகம் தீர்க்கும். வலிக்கச் செய்யும். வலியை மறக்கச் செய்யும். நல்ல வாசிப்பாளருக்கு, ‘நூலகம் ஒரு கோவில், நூல்கள் தெய்வம்’.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

முத்தமிட்டால் ஆயுள் அதிகரிக்கும்.?!

  •  உலகின் மிகப்பழமையான காதல் பாடல் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பே யூப்ரடிஸ் - டைக்ரீஸ் நதிகளுக்கிடையே தோன்றிவிட்டது.
  • ஒவ்வொரு வேலன்டைன் தினத்தின் போதும், இத்தாலியின் வெரோனா நகரில் ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ ஜூலியட்’ நாடகம் நிகழ்த்தப்படும். அப்போதெல்லாம் ஜூலியட்டுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான காதல் கடிதங்கள் வரும்.
  • கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘லவ் டிடெக்டர்’ என்ற வேடிக்கைக் கருவி காதல் உரையாடல்களின் நம்பகத்தன்மையையும் காதலின் அளவையும் குரல் ஆய்வு மூலம் வெளிப்படுத்துகிறது.
  •  ஒருவருக்கு காதல் பிறந்துவிட்டால் மனதிலும் உடலிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. மனதையும் உடலையும் அமைதியாக்குவதோடு, நரம்பு வளர்ச்சிக் காரணிகளை சில காலத்துக்கு அதிகரிக்கும். இதனால் காதலர்களின் நினைவாற்றல் அதிகமாகிறது.
  •  65 சதவிகிதத்தினர் தங்கள் தலையை வலப்பக்கமாக சாய்த்து முத்தமிடவே விரும்புகிறார்கள். காலை நேரத்தில் முத்தமிட்டுக் கொள்ளும் தம்பதிகளின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள் அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வு.
  கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் வேலங்குடி பாலா.

“நீ என்னை ஏற்றுக்கொள்வாய்...”


“அன்பே... நீ நலமாக இருக்கிறாய் என்று அறிவதை விட வேறு எதுவும் என்னை சந்தோஷமாக வைத்திருக்க முடியாது. நீ அருகில் இல்லாததால் தோட்டத்தையும் பூக்களையும்கூட ரசிக்க முடியவில்லை. நீ இன்னும் என்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட உன் நினைவுகளை சுமந்தபடியே நான் வாழ்கிறேன்.
மேரி க்யூரி

நாம் இருவரும் ஒன்று சேர்ந்தால் விஞ்ஞானத்திலும் வாழ்க்கையிலும் புதிய அத்தியாயங்கள் படைப்போம். உனது கனவை நிறைவேற்றித்தரும் கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. நீ என்னை ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்...”

- இது மேரிக்கு, ப்யூரி க்யூரி எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி. இக்கடிதத்துக்குப் பிறகுதான் இருவரும் காதலராகி மணம் செய்து கொண்டனர். கடிதத்தில் எழுதியவாறே அறிவியலில் பல சாதனைகள் படைத்து நோபல் பரிசும் பெற்றனர். இக்கடிதம் எழுதப்பட்ட நாள்: ஆகஸ்ட் 10, 1894.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் வேலங்குடி பாலா.

திங்கள், பிப்ரவரி 13, 2012

எல்லாம் அவளே!

காதல் என்பது எதுவரை? என்று கேட்டால் கல்யாணக் காலம் வரும் வரை என்பார்கள். பொதுவாகவே எல்லாக் காதலுமே கல்யாணத்தோடு முற்று பெற்றுவிடுகிறது. ஆனால் முகலாய சக்கரவர்த்தி ஷாஜகானுக்கும் மும் தாஜுக்கும் இடையே இருந்த காதல் அப்படிப்பட்டதல்ல...! அது ஒரு காவியம்.

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ரா அரண்மனைக்குள் அரச குலப்பெண்கள் ஒரு பொருட்காட்சியை நடத்துவார்கள். ஒரு முறை பொழுது போகாத இளவரசர் ஷாஜகான், அந்த பொருட்காட்சிக்கு விஜயம் செய்தார். ஒரு கண்ணாடிப் பொருட்கள் விற்கும் கடையில் பேரழகி அர்ஜூமான் பானு பேகம் (இதுதான் மும்தாஜின் நிஜப் பெயர்) பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார். பார்த்த மாத்திரத்தில் நிலை தடுமாறிப் போன ஷாஜகான், கையில் கிடைத்த ஒரு கண்ணாடி பொருளை எடுத்து, ‘என்னவிலை’ என்றார். ‘இது கண்ணாடி அல்ல வைரம் உங்களால் விலை கொடுக்க முடியுமா?!’ என்று குறும்பாகக் கேட்டாள்.

shajakhan
 ‘உன் போன்ற பேரழகியின் கைப்பட்டபின் அது எப்படி வெறும் கண்ணாடியாக இருக்கும்? வைரமாக அல்லவா மாறி இருக்கும்! என்று கூறிய ஷாஜகான், கேட்ட பணத்தை கொடுத்தார். கொடுத்தது பணத்தை மட்டுமல்ல. இதயத்தையும் சேர்த்துதான். பட்டத்து இளவரசர்களின் ‘முதல் திருமணம் சாதாரண விஷயமல்ல.  ஒரு நாட்டின் இளவரசியாக இருப்பவர் மட்டுமே இளவரசர் களை மணக்க முடியும். அர்ஜூன்மான் பானு பேகம் ஒரு சாதாரண அமைச்சரின் மகள். மன்னரிடம் தனது காதலை சொல்லி சம்மதம் வாங்குவது சிரமமான காரியம் என்பது ஷாஜகானுக்கு தெரியும். தெரிந்தே தனது தந்தை ஜஹாங்கீரிடம் காதலைச் சொன்னார்.

1612 ஆம் ஆண்டு ஷாஜகான்-அர்ஜூன்மான் பானுபேகம் திருமணம் நடந்தது. பேரரசர் ஜஹாங்கீரின் காலில் விழுந்து வணங்கியவுடன், ‘இன்றி லிருந்து நீ மும்தாஜ் என்று அழைக்கப்படுவாய்! என்று அறிவித்தார். மும்தாஜ் என்றால் அரண்மனையில் முதன்மையானவள் என்று பொருள். திருமணத்துக்குப்பின் ஷாஜகானும் மும்தாஜும் வாழ்ந்த 18 வருட இல்லற வாழ்க்கை ஒரு பிரம்மிப்பூட்டும் காதல் காவியத்தின் மறுபகுதி. வயதில் கூட இருவருக்கும் வித்தியாசமில்லை. ஒரே வயதுதான். ஆனாலும் இளவரசர், இளவரசியிடம் உடலிலும், உள்ளத்தாலும் காதல் வயப்பட்டுக் கிடந்தார். தம்பதிகளுக்கு பிறந்தது மொத்தம் 14 குழந்தைகள்.

Mumtaz
மும்தாஜ் அழகில் மட்டும் சிறந்து விளங்கவில்லை. அவள் ஒரு ராஜதந்திரி. மதி நுட்பம் நிறைந்தவள்.. கணவருக்கு நல்ல மனைவியாய், நண்பராய், மந்திரியாய், நல்லாசிரியனாய் என்று எல்லாமே அவளாக ஷாஜகானுக்கு இருந்தாள். அரசின் சட்டம், அறிவிப்பு கடிதங்கள் என்று எதுவாக இருந்தாலும் மும்தாஜின் அனுமதி பெறாமல் ஷாஜகான் நிறைவேற்றியதில்லை. எவ்வளவு தான் மனைவி மேல் பிரியம் என்றாலும் வெளியூர் போகும் போது கணவன், மனைவியை வீட்டில் விட்டுத்தான் செல் வார்கள். ஆனால் ஷாஜகான் எந்தவொரு சூழ் நிலை யிலும் மனைவியை விட்டு பிரிந்ததுஇல்லை. வெளியூர் மட்டுமல்ல போர் களத்திற்கு கூட மனைவியுடனே போனார்.

1631 ஜூன் 7 ந் தேதி... பீஜப்பூர் சுல்தானுடன் ஷாஜகான் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது போர்களத்தில் இருந்த மும்தாஜூக்கு 14வது குழந்தை பிறந்தது. பிரசவம் முடிந்த கையோடு மும்தாஜுக்கு ஜன்னி கண்டது. தகவல் தெரிந்து ஓடோடிவந்தான் ஷாஜகான். அன்பு மனைவியை மடியில் போட்டு குலுங்கி குலுங்கி அழுதான். பொதுவாகவே அரசர்கள் உணர்ச்சி களை சோகத்தை அவ்வளவு எளிதாக மற்றவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த மாட்டார்கள். ஷாஜகான் மும்தாஜ் விசயத்தில் இந்த மரபு களையெல்லாம் உடைந்தெறிந்தான். மன்னரின் மடியில் கிடந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. கதறித் துடிததான் ஷாஜகான், பிரம்மைப் பிடித்தவன் போல் மாறினான்.

Jahangir
மன்னரின் தலையிலும், முகத்திலும் கருகரு வென்று கருமையாக இருந்த முடிகள், மும்தாஜ் இறந்த சில நாட்களிலேயே திடீரென்று வெள்ளை வெளேர் என்று நரைத்துப் போனது. மும்தாஜின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மன்னர் ஒரளவு மீளவே இரண்டாண்டுகள் பிடித்தது. அதற்குள் மன்னரின் தோற்றம் முழுவதுமாகவே மாறி கிழத்தன்மை வந்துவிட்டது. முக்கியமான அரசியல் ஆலோசனையைத் தவிர வேறு எதிலுமே அவர் ஈடுபடவில்லை. அலங்காரம், புத்தாடை, வாசனைத்திரவியம், அறுசுவை உணவு என எல்லா வற்றையுமே துறந்து விட்டிருந்தார் மன்னர்.

ஒருநாள் தனது நெருங்கிய நண்பர்களுடன் மனைவியைப் பற்றிப் பேசி கண் கலங்கினார். அப்போது காதலும் துக்கமும் ஏக்கமும் பொங்க ‘அவளு க்காக ஒரு நினைவுச் சின்னம் கட்ட வேண்டும்’ என்றார். அதுதான் தாஜ்மஹாலாக உருவெடுத்தது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

இதான்யா காதல்...!


முதலில் காதல் ஆண்களின் கண் வழியாகவும், பெண்களின் காது வழியாகவும் நுழைகிறது என்கிறது போலந்து நாட்டு பழமொழி. அதேசமயம், இளம் காதலர்கள் விரும்புகிறார்கள். விவேகமானவர்கள் வருந்துகிறார்கள் என்கிறது இந்திய பழமொழி. காதல் ஒருவிநாடி, ஆனால், துக்கம் வாழ்க்கை முழுவதும் என்கிறது அரேபிய பழமொழி. காதல் செய்யும் பெண், நரியை விட ஆயிரம் மடங்கு தந்திரசாலி என்கிறது பிரான்ஸ் நாட்டு பழமொழி. கல்வீடு என்பது சுவர்களாலும், தூண்களாலும் ஆனது, காதல்வீடு என்பது அன்பும், கனவும் நிறைந்தது என்கிறது இந்திய பழமொழி.


காதலைப் பற்றிப் பேசும்போது பலமாகப் பேசாதீர்கள் மெதுவாகப் பேசுங்கள் என்கிறார் எழுத்தாளர் ஷேக்ஸ்பியர். தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவை இல்லை. காதல் வந்து விட்டால் அழகு தேவையில்லை என்கிறார் ஆப்ரகாம் லிங்கன். அதேநேரத்தில், அழகைப் பார்த்து வருவதில்லை காதல். ஆனால் காதலிக்கப்படுபவர்கள் எல்லோரும் அழகானவர்கள் என்கிறது இந்திய பழமொழி. இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். உண்மையான காதலுக்கு முதுமையே கிடையாது. காதலுக்கு ஆதரவு இல்லாவிட்டாலும் அதை அழிக்க முடியாது. காதலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஒருவர் மீது ஒருவர் அவர்களே தானாக காதல் வலையில் சிக்குகிறார்கள்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

திங்கள், பிப்ரவரி 06, 2012

வள்ளலார் என்னும் வாழ்வியல் சகாப்தம் !


வள்ளலார் பிறந்த பிறகுதான் பயிர்ச் செடிகளுக்கும் ஒரு பாசமுள்ள அன்னை உண்டு என்று உலகுக்குத் தெரிந்தது. அகத்தே கருத்தும், புறத்தே வெளுத்த மனிதர்களை சகத்தே திருத்த தெய்வமாக பிறந்தவர்தான் வள்ளலார். ‘ஜுவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு, பசி நெருப்பை அணைப்பதே ஜுவகாருண்யம்’ என்ற புதிய வேதத்தை தோற்றுவித்தவர். இந்தியாவில் 7 லட்சம் கிராமங்களில் வாழும் உயிர்களை காக்க தமிழகத்தில் அன்னதானம், சம்போஜனம் என்ற விதைகளை முதலில் விதைத்தவர் வள்ளலார்தான். பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல்களை விட அருளை அள்ளி அள்ளி வழங்கிய அருட்பிரகாசரை உலகமே வியப்புடன் பார்த்தது, பார்க்கிறது!

ஆன்மிகப் பேரொளி வள்ளலார் ராமலிங்கர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி மாலை ஐந்தரை மணிக்கு, தென்ஆற்காடு மாவட்டம் மருதூரில் வசித்த இராமையா-சின்னம்மை தம்பதியருக்கு தோன்றினார். வள்ளலார் என்று அழைக்கப் படும் இராமலிங்க சுவாமிகள் ஞானி மட்டுமல்ல. சமுதாயத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் செய்யவே அவதரித்தார்.

இராமலிங்கர் குழந்தையாக இருந்த போதே, பெற்றோர் இறந்து விட்டனர். எனவே, இராமலிங்கரை அவருடைய தமையனார் சபாபதி வளர்த்தார். இராமலிங்கருக்கு பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. சிறு வயதிலேயே இராமலிங்கருக்கு ஆன்மிக நாட்டம் அதிகம் இருந்தது. ஐந்து வயதிலேயே சந்தநயம் மிக்க பக்திப் பாடல்களை இனிய குரலில் பாட தொடங்கினார். சென்னை கந்தர் கோட்டத்தில் சரமாரி பொழியும் பாடலைக் கேட்டு, “ படிக்காதவன், முரட்டுப்பிள்ளை” என்று கருதிய சபாபதி இவற்றைக் கண்டு வியந்தார்.


வீட்டு மாடி அறையில் கண்ணாடி முன் விளக்கை ஏற்றிவைத்து அந்த வெளிச்சத்தில் படித்து வந்தார் இராமலிங்கர். அங்குதான், ஒன்பது வயதில் இராமலிங்கருக்கு ‘ஞானோதயம்’ கிடைத்தது. ‘ஒருநாள், கண்ணாடியில் இருந்து அருட்சோதி கிளம்பி என்னை சூழ்ந்தது. இறையருளின் ஈடு இணையற்ற கருணையில் பரவசப்பட்டேன்’ என்று பக்தர்களிடம் தெரிவித்துள்ளார், இராமலிங்கர்.

அண்ணன் சபாபதியின் ஆன்மிக சொற் பொழிவுகளின் போது உதவியாளராக செயல்பட்டு வந்தார் இராமலிங்கர். ஒருநாள் இராமலிங்கரை சொற் பொழிவாற்றக் கூறினார் சபாபதி. திருஞான சம்பந்தர் பற்றி இராமலிங்கர் சொற் பொழிவாற்றினார். மெய்மறந்த கூட்டம் ‘12 வயதிலேயே அந்த ஞானமா!’ என போற்றி துதித்தது. பல பகுதிகளிலும் இராமலிங்கரின் அருளுரைகள் தொடர்ந்தன.

வள்ளலார் பாதை: மக்கள் மனதில் வள்ளல் வள்ளலார் ஆனார். அவர் அருள்மனம் பல மதத்தினரும் கூடி வழிபடும் ஞானசபை ஆயிற்று. வடலூரில் வசிக்க ஆரம்பித்த இராமலிங்கர், 1867 மே 23 ல் ‘தர்மசாலை’ யைத் தொடங்கி ஏழை எளியோர்க்கு உணவு, மருத்துவ சேவை அளித்து அருளுரைகளையும் நிகழ்த்தி வந்தார். அங்குதான், இராமலிங்கரின் தெய்வீக சக்தி சித்து வேலைகளாகப் பொங்கி பிரவாகித்தது.

கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, மறுமுறை கண்ட வாசகம், ஜுவகாருண்ய ஒழுக்கம் என்ற நூல்களை இயற்றிய நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், போதாகாசிரியர், சித்த மருத்துவர், அருள்ஞானி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தமிழகத்தில் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர், மும்மொழி கல்வியை கொண்டுவந்தவர், முதல் முதியோர் கல்விக்கு வித்திட்டவர் என்று பல சிறப்பு பெயர்களை பெற்றார்.

ஆழ்மன வழிபாடு, தியானம் பற்றிய வழி காட்டுதல்கள் போன்றவை ‘வள்ளலார் பாதை’ என்று பிரசித்தி பெற ஆரம்பித்தது. அவரது பன்முக ஞானமும், முதன்மையும் நம்மை வியக்க வைக்கின்றன. 1867 ல் இராமலிங்க அடிகளாரின் பாடல்களை ‘திருஅருட்பா’ என்ற பெயரில் வெளியிட்டார் அவரது முதல் சீடரான வேலாயுத முதலியார்.

வள்ளலாரின் கொள்கைகள்: மதங்களின் மூன்று முக்கிய அம்சங்கள் தத்துவம், ஒழுக்கம், சடங்குகள். இவற்றில் மக்களிடம் மதவெறியைத் தூண்டுவது சடங்குகளே எனக் கண்டு அவற்றை ஒதுக்கி, மனித இனங்களை இணைப்பது ஒழுக்க நெறியே என்பதை உணர்ந்து 1865 ஆம் ஆண்டு சமரச சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறுவினார். அதன்படி எல்லோரும் பின்பற்றக்கூடிய கொள்கைகளையும், வாழ்க்கையின் ரகசியங்களையும் கூறினார்.

“நாம் எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்க வேண்டும். உயிர்க் கொலை செய்தலும், புலால் உண்ணுதலும் கூடாது. சாதி, மதம், குலம் என்ற வேற்றுமைகளை பார்க்கக் கூடாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் கூடாது, பதட்டப்படக்கூடாது” என்பவை, இராமலிங்கரின் முக்கிய கொள்கைகள்.

அருட்பெருஞ்சோதி: இராமலிங்க சுவாமிகள் வடலூரில் தருமசாலை ஒன்றை அமைத்தார். அங்கே தினமும் அன்னதானம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார். அது இன்றும் தொடர்கிறது.

1870ல் வடலூரில் மேட்டுக்குப்பம் கிராமத்தில், “சத்திய ஞான சபை” என்னும் கோவிலைப் புது முறையில் கட்டினார். அதனுள், விளக்கு ஒன்றும், விளக்கின் முன் கண்ணாடி ஒன்றையும் கட்டினார். விளக்கின் முன் ஏழு திரைகள் வைத்து மறைக்கப்பட்டிருக்கும். இதனை ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு தோன்றும் விளக்கொளியை “அருட்பெருஞ்சோதி” ஆண்டவராகக் கருதி வழிபடுமாறு மக்களை இராமலிங்க அடிகள் கேட்டுக் கொண்டார்.



1872 ஜனவரி 25 ல் ‘ஞானசபை’ துவக்கப்பட்டது. அதனுள்தான் இந்த “அருட்பெருஞ்சோதி” உள்ளது. ஏழு மாயைகளை அகற்றினால் தெய்வீகப் பேரொளியைக் காணலாம் என்பதே தத்துவ விளக்கம்.

சத்மார்க்கம் என்ற வடமொழிச் சொல்லே தமிழில் சன்மார்க்கம் என உருமாறிற்று. சத் என்றால் நிலைத்திருப்பது, உண்மை என்று பொருள்படும். சன்மார்க்கம் என்பது எல்லா மதங்களும் கூறும் நிலையான, உண்மையான ஒழுக்கம். இச்சன்மார்க்க சமயம் கலப்பதற்கு, சுத்தமானது. எனவேதான் வள்ளலாரின் இயக்கம் சமரச, சுத்த சன்மார்க்க, சத்திய சங்கமாக மலர்ந்தது.

அதனால்தான் திருமணம் நடந்தும் முதலிரவு அன்றே மனைவியிடம் “உடல் மீதான ஆசையை ஒழித்து விடு. நான் சன்மார்க்கத்தை நாடுபவன். சிற்றின்பத்துக்கு அடிமையாக மாட்டேன்” என்றார். சன்மார்க்கத்தின் இரு கண்கள் அன்பும், அறிவும்தான். அன்பு முற்றிய நிலையில் அருளாகவும், அறிவு முற்றிய நிலையில் அறியாமை இருளை அகற்றும் சோதியாகவும் மலர்கிறது. இதுவே அருட்பெருஞ்சோதியாகும். இந்த அருட்பெருட்சோதியை வழிபடத் தேவையானது தனிப்பெருங்கருணை, தயவு, தொண்டு, உயிர் இரக்கம் மட்டுமே.

மண்ணில் பிறந்த விருட்சம்: விக்கிரகங்களுக்கு முன்நின்று பரவசமாகப் பாடி, அதற்காகப் படையல் செய்து, தான் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாக காசுகளை கொட்டிக் குவிப்பதுதான் பக்தி என்று இருக்கும் இக்காலத்தில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருப்பதை அறிவதே ஈசுவர பக்தியாகும் என்று பக்திக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தவர் வள்ளலார்.

வள்ளல் பெருமான் வறட்டு ஆத்திகரும் அல்ல. முரட்டு நாத்திகரும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்டவர். மனிதனை தினம் தினம் வதைக்கும், பயமுறுத்தும் பிணிகளில் ஒன்று பசிப்பினி, மற்றொன்று மரணப்பினி. இந்த இரண்டையும் எதிர்த்து குரல் கொடுத்தவர் வள்ளலார்.

ஜோதியில் கலந்தார்: தாம் 51 ஆவது வயதில் உலக வாழ்வை விட்டுச் செல்லப் போவதாக சீடர்களிடம் கூறி, அவர்களைப் பக்குவப்படுத்தினார். மறைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்தே சாப்பிடும் உணவின் அளவைப் படிப்படியாக குறைக்கலானார். முடிவில் தேன் மட்டும் அருந்தினார்.

1874 ஜனவரி 30... அது, நள்ளிரவில் புனிதமான பூச நட்சத்திரம் உதிக்கும் புனிதநாள். இராமலிங்கர் அன்று நிகழ்த்திய சொற்பொழிவில், “அன்பர்களே! அருட்பெருஞ்சோதி எப்போதும் எரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இறை ஜோதியுடன் ஐக்கியமாகப் போகிறேன். அறையை வெளியில் தாழ்ப்பாள் போட்டு விடுங்கள். மீண்டும் கதவைத் திறக்கும் போது அறை காலியாக(இருந்தது) இருக்கும்” என அறிவித்தார். அறைக்குள் புகுந்து கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டார். அதிர்ந்த பக்தர்கள், சிறிது நேரம் கழித்து அறையைத் திறந்தனர். உள்ளே அவர் இல்லை. மாயமாக மறைந்திருந்தார்.

அடிகளாரின் மறைவு பற்றி அரசாங்கத்துக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அப்போது தென் ஆற்காடு மாவட்டக் கலெக்டராக இருந்த ஜே. எச். கார்டின்ஸ் மற்றும் சில அதிகாரிகள், டாக்டர் ஆகியோருடன் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் அரசாங்கத்துக்கு அவர் அனுப்பிய அறிக்கையில், “இராமலிங்கர், இறைவனோடு ஐக்கியமாகி விட்டதாக அவர் மீது பக்தி கொண்டவர்கள் நம்புகிறார்கள். ஒரு மதத் தலைவர் பற்றி கருத்து வேற்றுமை எழுதுவது இயற்கை என்றாலும், அவருடைய பாடல்களைப் பொறுத்தவரை, அவை மிக உயர்தரமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

வள்ளலார் ஏற்றிவைத்த அருட்பெருஞ்சோதியும் அவர் தொடங்கிய ஆன்மிக மறுமலர்ச்சி சேவைகளும் இன்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றன. இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17 ல் அரசு வள்ளலார் தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.

முடிவுரை: இறைவனுக்கு எப்படி முடிவுரை எழுத முடியும். இந்த சிறிய கட்டுரைக்கு மட்டுமே இது முடிவுரை. வள்ளலார் ஒவ்வோர் இதயத்திலும் நீக்கமற வாழ்ந்து வருகிறார். வீதி தோறும் தர்ம சாலைகள் தோற்றுவிதார். மரணத்தை ஒழுக்கத்தால், நித்திய கரும விதிகளால், சாகாக் கல்வியால், தத்துவ நிக்கிரகத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உதயமாகி இருக்கிறது வள்ளலார் என்ற சகாப்தத்தால்.! மாணிக்க வாசகரிடம் உருகி ஞானப் பாதையில் நடந்து, சைவ சித்தாந்த எல்லைகளைக் கடந்து, சன் மார்க்கம் என்னும் சிகரத்தை தொட்டவர் வள்ளலார்.

சிந்தைக்கு அருட்பெருஞ்சோதி என்றார். செயலுக்கு தனிப்பெருங்கருணை என்றார். சிந்தையின் ஞானத்தை செயலின் சக்தியாக மாற்ற அவர் அமைத்தது சத்திய ஞானசபை. ஜுவகாருண்யமே கடவுள் வழிபாடு என்ற சத்தியவாக்கின் பிரதிபலிப்பே அவரது சத்திய தருமச் சாலை. சாதி, மத, சமயம் கடந்த சன் மார்க்கப் பாதையே சமரச, சுத்த, சன்மார்க்க சத்திய சங்கம். இந்த சரணத்தை இயற்றியது வள்ளலார். இதுவரை யாரும் கூறாதது; வாழ்ந்து காட்டாதது.

உயிர்களிடத்து அன்பு செய், பசிபோக்கு, தயவுகாட்டு அவற்றுக்கு மனதாலும் தீங்கு நினைக்காதே என்ற வள்ளலாரின் புதிய சிந்தனைகள், புதிய கண்ணோட்டங்கள் உலகம் முழுவதும் பரவினால் தீவிரவாதம் மறையும்; பயங்கரவாதம் அழியும்; உலகம் செழிப்படையும்.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வியாழன், பிப்ரவரி 02, 2012

இவர்களா கட்சித் தலைவர்கள்?


கவிஞர் கண்ணதாசன் திரைப்படம், அரசியல் என அனைத்திலும் பிரபலமா னவர். அவர் 1990 ஆம் ஆண்டு வாக்கில் எழுதிய, ‘நான் பார்த்த அரசியல்’ என்ற தலைப்பில், தமிழகத்தின் பிரபலமான அரசியல் தலைவர்கள் பற்றி விமர்சித்துள்ளார். அதிலிருந்து...

ஈ.வெ.ராமசாமி: பெரியாரிடம் சலியாத உழைப்பிருந்தது. கொச்சையான பாஷை இருந்தது. பலர் சொல்லத் தயங்கிய விசயங்களை அவர் சொன் னார். ஆனால், அவரைப் பொறுத்தவரை ஒரு சுயேச்சையான அபிப்பி ராயக்காரராக மட்டும் இல்லாமல், மற்ற யாரையும் நம்புவதில்லை. ‘யாரும் யோக்கியர் இல்லை’ என்று கூறியபடி சம்பாதிக்கின்ற ஒருவராகவே காட்சி யளித்தார். கடைசி வரை அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

அண்ணாதுரை: அண்ணா மிகவும் உத்தமமானவர். தங்கமானவர். பழகுவதற்கு அவரைவிட இனிமை யானவர் கிடையாது. என் குடும்பத்தில் ஒரு இழப்பு என்றால் முதல் கண்ணீர் அவரின் கண்களில் இருந்துதான் வரும். அன்புக்கு உறைவிடம். அற்புதமான பேச்சாளர். ஆனால், ஒரு கட்சியின் தலை வராக கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், மற்றவர்களை கட்டி மேய்க்கவும் இயலாதவராகவே அவர் விளங்கினார். அதனால்தான், ‘கட்டுப்பாடு’ என்ற கோசத்தோடு தி.மு.க., விளங்கிற்று. ஆகவேதான், அவரை மீறிக்கொண்டு கருணாநிதி உருவாக முடிந்தது.

காமராஜர்: நாணயம், திறமை இரண்டும் அவரிடம் குடிகொண்டிருந்தன. ஆனால், ஒரே ஒரு சுபாவம் அவரிடம் காணப்பட்டது. இன்னொருவன் மேலேறி வரும்பொழுது, அவனை தலையில் தட்டி வைத்துக் கொண்டே இருப்பதுதான் ராஜதந்திரம் என்பது. ஆனால், அதை என்னிடம் காட்டிய தில்லை. மற்ற தலைவர் களோடு ஒப்பிடுகையில் அவர் உன்னதமானவர், உயர்ந்தவர்.

கருணாநிதி: கருணாநிதியை ஒரு தலைவராக பார்த்திருக்கிறேன். அவரைப் பொறுத்தவரை, ‘பணம் கிடைத்தால் குடும்பத்திற்கு, பதவி கிடைத்தால் மருமகனுக்கு’ என்று வாழ்க்கை நடத்துபவராகவே அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறார். வீட்டை மறந்து நாட்டுக்குப் பாடுபட்டவராக அவர் ஒரு காலத்திலேயும் வாழ்ந்ததில்லை.

அரசியலிலும் சரி, சாதாரண காலங்களிலும் சரி, முக்கியமான நேரங் களிலும் சரி, தனக்கு, தனக்கு என்பதிலேயேதான் முக்கியமாக இருப்பார். அந்த நினைவுகள்தான் அவருக்கு இருக்கும். எழுத்தாளர் என்றால் தான் தான்; கலைஞர் என்றால் தான் தான்; நடிகன் என்றால் தான் என்றுதான் உலகத்தைக் கணித்தாரே தவிர, பிறருக்கும் அந்த திறமை உண்டு என அவர் ஒரு நாளும் மதித்ததில்லை.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.