செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், மார்ச் 01, 2012

857 நாட்கள் ஆட்சி செய்த மாமனிதர்.!


நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அபூர்வமான நாள் பிப்ரவரி 29. அந்த நாள் மாமனிதர் மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள் எனும்போது அந்நாளுக்கான முக்கியத்துவமும் மரியாதையும் இன்னும் கூடி விடுகிறது.

இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’வையும், அதற்கு இணையான பாகிஸ்தானின் ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ என்ற விருதையும் பெற்ற ஒரே பாகிஸ்தானியர் கான் அப்துல் கபார்கான் என்றால், அவ்விரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே இந்தியர் மொரார்ஜி தேசாய்.


115 ஆண்டுகளுக்கு முன்பு, 1896 ஆம் ஆண்டு பிப்ரவரி 29-ம் நாள் இன்றைய குஜராத் மாநிலத்தின் பல்சார் மாவட்டத்தில் இருக்கும் பதேலி என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய தந்தை ரங்கோட்ஜி தேசாய், பவநகரில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். தாய் வஜியா பென் மிகச்சிறந்த குடும்பத்தலைவி. தன்னுடைய தந்தை இறந்தபோது தேசாய் சொன்னார், ‘அவரிடமிருந்து நான் எந்தச் சொத்தையும் பெறவில்லை.
கடமை உணர்வையும், சமய நம்பிக்கைகளையும், எல்லாச் சூழ்நிலைகளையும் சமமாகப் பாவிக்கும் மனப் பக்குவத்தையும் பெற்றுக்கொண்டேன். நான் பெற்றுக்கொண்டவை உண்மையில் விலை மதிக்க முடியாதவை ஆகும்’.

1911 ஆம் ஆண்டு அவர் மாணவராக இருந்தபோதே,  அவருடைய தந்தை மரண மடைந்தார். பிறகு மூன்றாவது நாளில், கராஜ்பென் என்ற பெண்ணோடு அவருக்குத் திருமணம் நடைபெற்றது. பல்சாரில் இருந்த பாய் அவாபாய் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த அவர், மும்பை வில்சன் கல்லூரியில் பி.எஸ்.சி. பயின்று, 1916 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். 

1918 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற அவர், 12 ஆண்டுகள் மும்பை மாகாணத்தில் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணிபுரிந்தார். பின்னர் 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் விடுதலைப் போரால் ஈர்க்கப்பட்டு, சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபடுவதற்காகத் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தார்.

1931 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், குஜராத் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலராக உயர்ந்து, 1937 ஆம் ஆண்டு வரை அப்பதவியை வகித்தார். இதற்கிடையே சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டதற்காக 1932 முதல் 1934 வரை இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். 1935 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிச்சேரிக்குச் சென்று ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்த பிறகு, திருவண்ணாமலையில் ரமண மகரிஷியின் முன்பு தன்னுள் முழுமையான அமைதியை உணர்ந்தார்.

1935 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசு சட்டத்தில் அடிப்படையில், 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தல்களில் போட்டியிட காங்கிரஸ் தீர்மானித்ததால், மும்பை மாகாணத்தில் பி.ஜி.கெர் தலைமையில் முதல் காங்கிரஸ் அரசாங்கம் அமைந்தது. அதில் மொரார்ஜி தேசாய் வருவாய், விவசாயி, வனம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

அக்காலகட்டத்தில் 2ம் உலகப் போர் ஏற்பட்டது. மாகாண அரசாங்களைக் கலந்தாலோசிக்கா மலேயே ஆங்கிலேய அரசாங்கம் இந்தியத் துருப்புகளை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தத் தொடங்கியது. அம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1939 ஆம் ஆண்டு மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகியபோது மொரார்ஜி தேசாயும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அச்சூழ்நிலையில் குஜராத் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் செயலராக மீண்டும் பொறுப்பேற்ற அவர் 1946 ஆம் ஆண்டு வரை அப்பதவி வகித்தார். குஜராத் வித்யாபீடத்தின் வேந்தராகவும் அவர் விளங்கினார்.

அண்ணல் காந்தியின் அகிம்சைப் போராட்டத்தில் ஆர்வத்தோடும் அர்ப்பபணிப்பு உணர்வோடும் பங்கேற்ற அவர், பலமுறை சிறை சென்றார். ‘செய் அல்லது செத்துமடி’ என்ற மகாத்மாவின் மந்திரத்துக்குக் கட்டுப்படு, 1942 ஆம் ஆண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டார். அதன் காரணமாகக் கைது செய்யப்பட்ட அவர் 1945 ஆம் ஆண்டுதான் விடுதலை பெற்றார்.

1946 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண தேர்தல்களுக்குப் பிறகு மீண்டும் பி.ஜி.கெர் தலைமையிலான அரசாங்கம் அமைந்தபோது, தேசாய் அதில் உள்துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1952 ஆம் ஆண்டு புல்சார் தொகுதியில் போட்டியிட்டு வென்று பம்பாய் மாகாண முதலமைச்சர் ஆனார்.

1956 வரை அப்பதவியில் இருந்த அவர் பின்னர் ஜவஹர்லால் நேருவின் அழைப்பை ஏற்று 1956, நவம்பர் 14 முதல் மத்திய அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். நிதி அமைச்சராகப் பத்து நிதிநிலை அறிக்கைகளைச் சமர்பித்த பெருமைக் குரியவர் அவர்.

‘மூத்த தலைவர்கள் எல்லாம் ஆட்சிப் பணியைத் துறந்து கட்சிப்பணிக்குச் செல்ல வேண்டும்’ என்ற காமராஜரின் திட்டத்தை ஏற்று 1963 ஆம் ஆண்டு அவர் பதவி விலகினார். 1964 ஆம் ஆண்டு பண்டித நேருவின் மரணத்தால் இந்திய அரசியலில் ஒரு மாபெரும் வெற்றிடம் ஏற்பட்டது. இனி இந்தியாவை வழிநடத்தப் போகிறவர் யார்? அடுத்த இந்தியப் பிரதமர் யார் என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுந்தன.



அச்சூழ்நிலையில் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவிக்குப் போட்டியிட விரும்பினார். ஆனால், இந்திய தேசியக் காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் காமராஜர், லால்பகதூர் சாஸ்திரியை அப்பதவிக்கு முன்னிறுத்த விரும்பினார். தலைவர் காமராஜரின் அறிவுரையை ஏற்று மொரார்ஜி தேசாய் போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, பிரதமர் பதவியை லால்பகதூர் சாஸ்திரிக்கு விட்டுக்கொடுத்தார். சாஸ்திரியின் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தக் குழுவுக்குத் தலைவராக மொரார்ஜி தேசாய் பொறுப்பேற்றார்.

1966 ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி மரணமடைந்தபோது, பண்டித நேருவின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதே சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டது. அடுத்த இந்தியப் பிரதமர் யார் என்ற போட்டியில் மொரார்ஜி தேசாய் மீண்டும் முன் நின்றார். இம்முறை அவர் உறுதியாக இருந்தார். போட்டியிலிருந்து விலகத் தயாராக இல்லை.

ஆயினும், ஜனநாயக முறைப்படி நடந்த உள்கட்சித் தேர்தலில், பெருந்தலைவர் காமராஜரின் ஆதரவு பெற்ற இந்திரா காந்தி 355 வாக்குகள் பெற, முதுபெரும் காங்கிரஸ் தலைவரான மொரார்ஜி தேசாய் 169 வாக்குகள் மட்டுமே பெற்று தோற்றுப்போனார். தோல்வியால் அவர் துவண்டுவிடவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.

இந்திரா காந்தியின் அழைப்பை ஏற்று 1967 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால், 1969 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான நீலம் சஞ்சீவரெட்டியைத் தோற்கடிக்க பிரதமர் இந்திரா காந்தி முனைந்ததோடு, தேசாயிடமிருந்து நிதித்துறையையும் பறித்துக் கொண்டதால், மொரார்ஜி தேசாய் துணைப்பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இந்திரா காந்தியின் நடவடிக்கைகளால் 1969 ஆம் ஆண்டு இந்திய தேசியக் காங்கிரஸ் பிளவுப்பட்டபோது, இந்திரா காந்திக்கு எதிராக ஸ்தாபன காங்கிரஸில் இணைந்தார். இந்திரா காந்தியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.

1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி குஜராத் மாநில சட்டசபைபைக் கலைத்ததால், மொரார்ஜி தேசாய் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். அதன் விளைவாக, அவ்வாண்டு ஜூன் மாதம் குஜராத் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜனதா முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெற்று பாபுபாய் படேல் முதல்வரானார்.

1975 ஜூன் 12 அன்று, அலகாபாத் நீதிமன்றம் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்த பிறகு, மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தினார். ஆனால், இந்திரா காந்தி பதவி விலகவில்லை. இந்தத் தேசத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். அடிப்படை உரிமைகள் முடக்கி வைக்கப்பட்டு, அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பத்திரிகைச் சுதந்திரம் பறிபோனது.

பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் 1975 ஆம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட மொரார்ஜி தேசாய், 1977 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி சிறையிலிருந்து வெளிவந்த தலைவர்களுடன் ஒன்றிணைந்து ஜனதா கட்சியை உருவாக்கினார். பின்னர் ஏற்பட்ட ஜனதா புரட்சியின் விளைவாக, மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 542 இடங்களில் 330 இடங்களைக் கைப்பற்றி ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.

1977 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி, 81 வயதான மொரார்ஜி தேசாய் இந்தியாவின் நான்காவது பிரதமராகப் பொறுப்பேற்றார். பதவி ஏற்றவுடன் அவசரநிலைக்காகக் கொடுமைகளை நீக்கி, ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டார்.

அடிப்படை உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம், அரசியல் கட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை மீட்டெடுத்தார். 44 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்புக்கு ஏற்பட்ட ஊறுகளைக் களைந்தார்.

மாநில சட்டசபைகளும், மத்திய நாடாளுன்றமும் கொண்டுவரும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதுதானா என ஆய்வு செய்யும், உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டன. ‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்ற அண்ணல் காந்தியின் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கிராமங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சிறுதொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நிலவரியைக் குறைத்தல் மற்றும் பெருமளவில் மானியம் அளித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் விவசாய முன்னேற்றம் வேகப்படுத்தப்பட்டது.

ஏழை விவசாயிகளின் வாழ்வில் பெரிதும் அக்கறை கொண்டிருந்த அவர், வேலை வாய்ப்பற்ற கிராமப்புற மக்களுக்காக, வேலைக்கு உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம், கிராமங்களில் சாலைகளை அமைத்தல், பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற ப ணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அது மட்டுமன்றி, ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற தேசியக் கவி பாரதியின் வார்த்தைகளை உண்மையாக்கிக் காட்டியவரும் அவரே. ஏனென்றால், ஒவ்வோர் உணவு விடுதிகளும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார். அதை ஏற்றுக்கொண்ட உணவு விடுதிகளுக்கு மட்டுமே உரிமம் அளிக்கப்பட்டது. அந்த ‘ஜனதா சாப்பாடு’ ஏழைகளின் பசியைப் போக்கி அவருக்குப் பெரும் புகழைத் தேடித் தந்தது.

இரண்டு ஆண்டுகள், மிகச்சரியாகச் சொல்வதெனில் 857 நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அவருடைய ஆட்சிக்காலம் கடும் பஞ்சங்களையும், இயற்கைச் சீற்றங்கள் பலவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தபோதிலும் மக்கள் எந்த வகையிலும் இன்னல் அனுபவிக்காவண்ணம் மிகச்சிறப்பான, நிர்வாகத் திறமை மிகுந்த, ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான ஆட்சியை மக்களுக்குத் தந்தார்.

சர்வதேச அளவிலே பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் உயர்ந்த போதிலும், தனது திறமையான நிர்வாகத்தால் விலைவாசியைப் பெரிதும் கட்டுக்குள் வைத்திருந்தார். ரேஷன் பொருள்கள் மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்தார். அதன்மூலம் உற்பத்திப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதையும், அப்பாவி மக்கள் ஏமாறுவதையும் தடுத்தார். உற்பத்திப் பொருள்களின் மீது அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி) குறிக்கப்படவேண்டும் என்பதை அறிமுகப்படுத்தி அதைக் கட்டாயமாக்கினார்.

இன்றைக்கு ஒரு மாநிலத்துக்குள்ளேயே விவசாயப் பொருள்களை ஓரிடத்தில் இருந்து, வேறொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஆனால், மொரார்ஜி தேசாய் இந்தியா முழுமைக்கும் ஒரே வேளாண்மைப் பிரந்தியமாக அறிவித்து விவசாயிகளின் விளை பொருட்கள் இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வகை செய்தார்.

அதன் மூலம் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்க வழி ஏற்படுத்தினார். உள் நாட்டில் மட்டுமன்றி, அயலுறவுக் கொள்கையிலும் அவர் தூய்மையைக் கடைப்பிடித்தார். அவர் தூய அணி சேராக் கொள்கையை அறிவித்து அதைச் செயல்படுத்தினார். அமெரிக்கா வுடனும், சோவியத் ரஷியாவுடனும் சம மட்டத்திலான உறவுகளைப் பராமரித்தார்.


பாகிஸ்தானின் ‘ஜியாஉல்ஹக்’ உடன் நேசக்கரம் நீட்டி அந்நாட்டுடன் நல்லுறவைப் பராமரித்தார். சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை மறு சீரமைத்து பலப்படுத்திக் கொண்டார். அமைதிக்காகக்கூட அவர் அணு ஆயுதம் வெடிக்க விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, அண்ணல் காந்தியின் அப்பழுக்கற்ற தொண்டரான அவர், இந்திய தேச மக்களுக்காக ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்துக் கொடுத்தே அவர் செய்த மாபெரும் சாதனையாகும்.

ஜனசங்கத்தினர், ஜனதா கட்சியிலும் ஆர்.எஸ்.எஸ்.இயக்கதிலும் ஒரே சமயத்தில் அங்கம் வகித்ததால் எழுந்த இரட்டை உறுப்பினர் பிரச்சனையாலும் சரண்சிங் ஜனதா கூட்டணி யிலிருந்து விலகியதாலும் 1979 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் மொரார்ஜி தேசாய் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.

தனது 83 வது வயதில் பிரதமர் பதவியிலிருந்து மட்டுமன்றி, அரசியலில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், மும்பை மாநகரத்தில் வாழ்ந்த அவர், 10 ஏப்ரல் 1995 ஆம் ஆண்டு தனது 99 வது வயதில் இப்பூவுலகை விட்டு மறைந்தார்.

பொதுவாழ்வில் நல்ல பல விழுமியங்களையும், அஞ்சாத நேர்மைத் துணிவையும், கொள்கை உறுதியையும் கொண்டிருந்த அவர், அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘ஒருவர் தன் வாழ்வில் உண்மைக்கும், தனது நம்பிக்கைக்கும் விரோதமில்லாமல் செயல்பட வேண்டும்’ என்பதே. அவ்வார்த்தைகளுக்கு அவரே மிகச்சிறந்த உதாரணம்.

கட்டுரையாளர்: நா.சேதுராமன் கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

1 கருத்து:

  1. உயர்திரு மொரார்ஜி தேசாய் அவர்களைப்பற்றிய பல அரிய தகவல்கள். சிறப்பான கட்டுரை.. இப்படிப்பட்ட தலைவர்களை நினைத்து ஏக்க பெருமூச்சு விட்டுக்கிடுதரத்தவிர நம்மால் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு