செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஏப்ரல் 28, 2012

பங்காருவுக்கு நான்கு ஆண்டு ஜெயில்.!


ஆந்திர பா.ஜ.க.வின் அசைக்க முடியாத சக்தியாக பங்காரு லஷ்மண் விளங்கினார். மத்தியில் பா.ஜ.க.வின் வாஜ்பாய் பிரதமாரக இருந்த போது தலித் தலைவரான இவரை கட்சியின் தேசிய தலைமை பொறுப்பை கொடுத்து அழகு பார்த்தது. ஒரு தலித்தை தலைவராக்கி பார்த்ததுடன் கட்சிக்கு ஒரு புதிய முகத்தை அளிக்க பா.ஜ.க. விரும்பியது. ஆனால் இந்த முயற்சி சறுக்கலை தந்தது.

பாரதிய ஜனதா கட்சித் தலைவராக 2001ஆம் ஆண்டு பங்காரு லஷ்மண் பதவி வகித்தார். அப்போது தெஹல்கா.காம் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவியலாளர், இங்கிலாந்தைச் சேர்ந்த ‘வெஸ்ட் எண்ட் இன்டர்நேஷனல்’ என்ற ஆயுத கம்பெனி பிரதிநிதி போல பங்காரு லஷ்மணைச் சந்தித்தனர்.


இந்திய ராணுவத்திற்கு தெர்மல் இமேஜர்ஸ் எனப்படும் நவீன கருவி சப்ளை செய்யும் காண்ட்ராக்டை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, அதற்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம் தருவதற்கான பேரத்தை அவர் நடத்தினார். அதற்கு பங்காரு லஷ்மண் ஒப்புக்கொண்டதும், முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது.

அதனை பங்காரு பெற்றுக்கொண்ட போது, அந்நிருபர் தனது ரகசிய கேமராவில் அதை அப்படியே வீடியோவாகவும் படம் பிடித்தனர். லஞ்சத் தொகையை பெறும் போது, அதனை கட்சியின் நிதிக்காகத்தான் தாம் பெறுவதாக பங்காரு லஷ்மண்  கூறியிருந்தார். ஆனால் ராணுவ அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்வதற்கான லஞ்சமே இது என்பது பின்னர் தெரியவந்தது.

அவரது அமைச்சக அலுவலகத்தில் வைத்து, லஷ்மண் லஞ்சம் பெற்ற காட்சிகளை 2001 மார்ச் 13-ம் தேதி தெஹல்கா செய்தி நிறுவனம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஹெகல்கா கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பங்காரு லஷ்மண் வாங்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது. இவர் பணம் வாங்கும் காட்சி வெளியான சில மணி நேரங்களிலேயே பங்காருவின் அத்தனை புகழும் சரிந்து போனது.


நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தெஹல்கா ஊழல் வழக்கில் பா.ஜ.க. தலைவர் பதவியை பங்காரு லஷ்மண் இழக்க நேரிட்டது. மேலும் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

11 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பங்காரு லஷ்மண் குற்றவாளி என டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 27/04/12 அன்று தீர்ப்பளித்தது. அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி கான்வல் ஜீத் தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப் பட்டார். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ், பா.ஜ.க.விற்கு இது ஒரு பாடமாக அமையும் என்று கருத்து தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பா.ஜ.க.வும் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை வரவேற்றுள்ளது.


ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பங்காரு லட்சுமண் கைது செய்யப் பட்டிருப்பதால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. தற்போது, 72 வயதாகும் பங்காரு லஷ்மண் தேசிய செயற்குழுவில் உறுப்பினராகவும், பா.ஜ.க.வின் தலித் அங்கமான எஸ்.சி.மோர்ச்சாவின் உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

மணமுறிவுக்கு இதுதான் காரணமா?



பணம், காதல் இரண்டில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்து நடக்கும் திருமணங்கள் முறிவில் போய் நிற்கின்றன. அதனால்தான், ‘பணத்துக்காகத் திருமணம் செய்து கொண்டவனைப் போல் அயோக்கியனும் இல்லை. காதலுக்காக மட்டுமே கல்யாணம் செய்து கொண்டவனைப் போல் முட்டாளும் இல்லை’ என்று மேலை நாட்டு தத்துவாசிரியன் ஜான்சன் எழுதினார். பொறுப்புணர்வு, அன்பு, பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல்... மூன்றும் இருக்குமானால் மணமுறிவு குறையலாம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

புதன், ஏப்ரல் 25, 2012

எல்லாமே மனசுதான்.!


மின்சாரத்தை எப்படிக் கண்களால் பார்க்க முடியாதோ அதைப்போல மனசையும் பார்க்க முடியாது. உண்மையில் மனசு என்ற ஒன்றே இல்லை என்பதும் தௌ¤வு. ஆனால், மனிதனின் எல்லாச் செயல்களுக்குமே மனசுதானே ஆணிவேராக இருக்கிறது.

‘ஆயிரம் வாசல் இதயம் - அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம், யாரோ வருவார், யாரோ போவார் - வருவதும், போவதும் தெரியாது.’ கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் வரிகளைப் போலவே மனிதனின் மனதில் எத்தனையோ எண்ணங்கள் உள்ளே நுழைந்து வெளியே போகின்றன. சிலர் நல்லதையும், சிலர் தீயதையும் எடுத்துக் கொள்கிறார்கள். அதுபோலவே அவரது வாழ்வும் அமைகிறது.


எந்நேரமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் தந்தைக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரில் மூத்தவரிடம் குடிப்பழக்கம் இருந்தது. இளையவரிடம் எந்தத் தீய பழக்கமும் இல்லாத நல்லவராக இருந்தார். மூத்த மகனைப் பார்த்து, ‘ஏன் எப்போதும் நீ குடித்துக் கொண்டே இருக்கிறாய்’ என்ற போது, அவரோ, ‘என் தந்தையைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அந்தப் பழக்கம் வந்துவிட்டது’ என்றார். இளையவரிடம் ‘நீ ஏன் குடிப்பழக்கம் இல்லாதவராக இருக்கிறாய்?’ என்று போது, அவரோ ‘என் தந்தையைப் பார்த்துப் பார்த்து நானும் அவரைப் போல் ஆகிவிடக் கூடாது’ என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் என்றார்.


வாழும் சூழ்நிலையும் ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், இருவரின் மனசு மட்டும் வேறுபட்டிருக்கிறது. ஒருவர் தீயவராகவோ அல்லது நல்லவராகவோ இருக்க அவர் அவர் மனசுதான் காரணமாக இருக்கிறது. மனதைப் பக்குவப்படுத்தப் பழகிக் கொண்டால் எந்த தீய எண்ணங்களும் மனதுக்குள் நுழைந்து விடாதபடி, மனசே மனசைப் பாதுகாத்துக் கொள்ளும் என்பதுதான் சத்தியமான உண்மை. எனவே, எவரும் எண்ணங்களை வலிமையானதாகவும், நல்லதாகவும் ஆக்கிக் கொண்டால் அதுவே நம்மைத் தானாகவே உயர்த்தும் சக்தி உடையதாக மாறிவிடும்.


‘நீ என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். ‘உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’ என்கிறார் கவிஞர் கண்ணதாசன். எனவே எண்ணங்கள், விதைகளாக இருந்தால், செயல்கள் அழகிய மலர்களாக மலர்ந்து மணம் பரப்புகின்றன.

கல்யாணமான ஏழாவது நாளே விவாகரத்து பெற்ற தம்பதியரும் இருக்கிறார்கள். கல்யாணமாகி வயது எழுபதை எட்டிய பிறகும் விவாகரத்து பெற்ற தம்பதியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டுக்குமே மனசுதான் ஆதிவேர், ஆணிவேர். சுருங்கச் சொன்னால் எல்லாமே மனசுதான்.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

செவ்வாய், ஏப்ரல் 24, 2012

தாஜ்மஹாலை கட்டியவருக்கு என்ன பரிசு?


உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலைக் கட்டியவர் ஷாஜகான். தமது மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டினார் என்பது அனைவருக்கும் தெரியும். எத்தகு சூழ்நிலையில், யாருடைய கற்பனையில் தாஜ்மஹால் உருவாக்கப்பட்டது என்பது தெரியுமா? ஈரான் நாட்டில் சிராசி என்ற சிற்பி வாழ்ந்து வந்தார். பிறரின் முகத்தினைப் பார்க்காமலேயே சிற்பங்களைச் செதுக்குவதில் வல்லவர். சிராசியின் திறமையைக் கேள்விப்பட்ட மன்னர் ஷாஜகான் அவரை டில்லிக்கு வரவழைத்தார். 


சிற்பியை நோக்கி, உமது திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை நிரூபிக்குமாறு எனக்கு ஒரு சிற்பத்தை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார் மன்னர். இதனைக் கேட்ட சிற்பி, சிற்பம் வடித்துத் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. உங்கள் நாட்டில் உள்ள 25 அழகான பெண்களைத் திரையின் மறைவில் நிறுத்துங்கள். அவர்களின் கையை மட்டும் நான் பிடித்துப் பார்ப்பேன். யாருடைய கை எனக்குப் பிடிக்கிறதோ அப்பெண்ணின் உருவத்தை, அப்பெண்ணைப் பார்க்கா மலேயே சிற்பமாகச் செதுக்கித் தருவேன்.

மேலும், நான் யாருடைய சிலையைச் செதுக்குகிறேனோ, அப்பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்றார் சிற்பி. மன்னரும் சிற்பியின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டார். முகத்தைப் பார்க்காமல் கையைப் பார்த்து மட்டும் எப்படி சிற்பம் வடிக்க முடியும் என்ற பேச்சு டில்லி முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட மன்னரின் மகளும் போட்டியைக் காண வந்திருந்தாள். அழகிய பெண்கள் அனைவரும் திரைமறைவில் நிறுத்தப்பட்டு, சிற்பி கையினைப் பிடித்துப் பார்க்கும் நாளும் வந்தது.


திரை மறைவில் நின்ற பெண்களின் வரிசையில், கடைசியாக மன்னரின் மகளும் சென்று விளையாட்டாக நின்றாள். திரைமறைவில் நின்ற பெண்கள் ஒவ்வொரு வராகக் கையை நீட்ட, சிற்பி கையைப் பிடித்துப் பார்த்தார். கடைசியாக நின்ற பெண்ணின் கையைப் பிடித்துப் பார்த்த போது, இந்த உருவத்தைச் சிலையமைத்துத் தருகிறேன் என்றார். சிற்பி தேர்வு செய்த கை யாருடையது என்பதைப் பார்க்க ஆர்வத்துடன் உள்ளே சென்றார் மன்னர். அது அவருடைய மகளின் கை என்று தெரிந்ததும், தன் மகளிடம் முகம் பார்க்காமல் சிலை வடிக்க முடியாது என்று சமாதானம் கூறி அழைத்துச் சென்றார்.

மன்னரின் மகளோ, வேடிக்கையாகப் போய் நிற்க அது விபரீதமாக முடிந்து விட்டதே என்று அஞ்சினார். சிற்பி, மூன்று மாதங்களில் சிலையினை வடிவமைத்து முடித்தார். மன்னரையும், மந்திரிகளையும், சபையோரையும் அழைத்துவந்து காட்டினார். மன்னரின் மகளை நகல் எடுத்தது போல இருந்த சிலையினைக் கண்டு அனைவரும் பிரமித்து நின்றனர்.சிலையில் ஏதாவதொரு குறையினைச் சுட்டிக்காட்டி ஒதுக்கி விடலாம் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தவர்கள் தோல்வியே கண்டனர்.


மன்னருக்கோ கொடுத்த வாக்கை எப்படி மீறுவதென்று தெரியவில்லை. மன்னரின் மனைவி மும்தாஜோ, ஓர் ஏழைச் சிற்பிக்குத் தன் மகளை மணமுடித்துக் கொடுப்பதா என்ற கவலையிலேயே உடல்நலம் குன்றி இறந்தார். மனைவியின் இறப்பு, ஷாஜகானைத்தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. அவசரப்பட்டு வாக்குக் கொடுத்து விட்டோமே என நினைத்து வருந்தினார் மன்னர். அரச குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்த சிற்பி மன்னரை அழைத்தார். மன்னா! தங்கள் மனைவியின் இறப்பிற்கு நான் காரணமாக அமைந்துவிட்டேன்.

எனவே, தாங்கள் தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றார். ஆனால், மன்னர் இதற்கு உடன்படவில்லை. கொடுத்த வாக்கு கொடுத்தது தான். அதேநேரத்தில் எனது மனைவிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அந்தச் சிற்பியை வைத்தே கலைநயமிக்க தாஜ்மஹாலைக் கட்டினார். முடிவில் அவருக்கு கிடைத்தப் பரிசு என்ன? இன்னொரு கட்டுரையில் இருக்கிறது. கண்டுபிடித்துப் படியுங்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

திங்கள், ஏப்ரல் 23, 2012

கிழமைகள் ஏற்பட்டது எப்படி?


கிழமைகளுக்கு பெயர் வந்த வரலாறு ஒரு சுவையான கதை. மனிதனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழமைகளுக்குப் பெயர் கிடையாது. அப்போதெல்லாம் காலத்தை மாதமாகவே பிரித்திருந்தனர். மாதங்கள் வாரங்களாக கணக்கிடப் பட்டதும், வாரத்திற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க்கலாம்... ஆரம்ப காலத்தில் பகல் - இரவு, சந்திரன் வளர்ச்சியைக் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் கிழமைகள் உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு மாதத் திலும் ஏராளமான நாட்கள் உள்ளன. அத்தனை நாட்களுக்கும் தனித் தனியாகப் பெயர் வைப்பதற்கு சாத்தியப்படவில்லை.


மனிதர்கள் சமுதாயமாக கூடி வாழப் பழகிய பிறகு நகரங்களும், வாணிபமும் வளர்ந்தது. வாணிபம் செய்வதற்கு அதாவது சந்தை கூடிப் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் வசதியாக அவர்களுக்கு தனியாக ஒருநாள் தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் 10 நாட்களுக்கு ஒருநாள் சந்தை நாளாக ஒதுக்கினார்கள். சில சமயங்களில் ஏழு நாட்களுக்கு ஒருநாள் ஒதுக்கப்பட்டது. பண்டைக்காலத்து பாபிலோனியர்களே இதற்கு முன்னோடியாக இருந்தனர். 

அவர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளையும் வணிகத்திற்கும், மத விசயங்களுக்கும் மட்டும் ஒதுக்கினர். அந்த நாட்களில் அவர்கள் இந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. யூதர்கள், பாபிலோனியர்களைப் பின்பற்றினர். ஒவ்வொரு ஏழாவது நாளையும் மத விசயங்களுக்கு மட்டுமே அவர்கள் ஒதுக்கினர். இவ்வாறு இரு வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட காலம் (7 நாட்கள்) வாரம் என்று கணக்கில் கொள்ளப்பட்டது.


வாரம் பிறந்த வழக்கிலேயே கிழமைகளும் தோன்றின. வாரம் கணக்கிடப் பழகியவர்கள் சந்தைக்கு அடுத்த நாளை ஒன்றாம் நாள், இரண்டாம் நாள் என்று எண்ணிட்டு வழக்கப்படுத்தினர். அடுத்த 7-வது நாள் மீண்டும் சந்தை வந்தது. வாரத்திற்கு 7 நாட்கள் என்ற முறையை கடைபிடித்த எகிப்தியர்கள், வாரத்தின் நாட்களுக்கு பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்தனர். அவர்கள் 5 கிரகங்களின் பெயர்களை கிழமைகளுக்கு சூட்டினர். 

மற்ற இரண்டு நாட்களும் சூரியனின் (ஞாயிறு) பெயராலும், சந்திரனின் (திங்கள்) பெயராலும் வழங்கப்பட்டது. ரோமானியர்கள், எகிப்தியர் வைத்த பெயர்களைப் பின்பற்றினர். மார்ஸ் அல்லது டியூரோமானியர்களின் யுத்த தெய்வம். அந்தப் பெயர் (டியூஸ்டே) செவ்வாய் கிழமையாயிற்று. மற்றோர் தெய்வத்தின் பெயர் வெனஸ், அது (வெனஸ்டே) புதன் கிழமையாயிற்று. இடியை உருவாக்கும் தெய்வமாக ரோமானி யர்கள் வழிபட்டது ‘தர்’ தெய்வமாகும். அதன் பெயரே (தர்ஸ்டே) வியாழக்கிழமை. 


பரிக் என்பது ரோமானியர்களின் மற்றோர் தெய்வத்தின் மனைவி. அந்தப் பெயர் பிரைடே வெள்ளிக்கிழமை ஆயிற்று. சனிக் கிரகத்தின் பெயர் சனிக்கிழமை ஆயிற்று. சூரியன் உதயமான நேரத்திற்கும், மறையும் நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் பகலாகக் கணக்கிடப்பட்டது. ஒரு நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள காலத்தை ரோமானியர் ஒருநாளாகக் கொண்டனர். அந்த முறையைத்தான் இன்றைய நாடுகள் பின்பற்றி வருகின்றன.

நன்றி: கிரிபிரசாத், எட்டாம் வகுப்பு, மகரிஷி பன்னாட்டு உறைவிடப்பள்ளி, சந்த வேலூர் - 602106.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, ஏப்ரல் 21, 2012

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் அரசியல் வாழ்க்கை.!


சுதந்திரமான சிந்தனை கொண்டவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்க முடியாது. ராதாவின் நிலைமையும் அதுதான். பெரியாரைத் தலைவர் என்றவர் ராதா. ஆனால், அவரையே விமர்சித்து... அவருக்கு முன்னாலேயே பேசுவார். திராவிடர் கழகத்தில் இருப்பவர் போலக் காட்டிக் கொண்டார்... அவ்வளவுதான். ‘காமராஜர் தான் தமிழர் தலைவர்’ என்று சொன்னார். அதற்காக, காங்கிரஸ் கட்சியை ராதா ஏற்றுக்கொள்ளவில்லை. கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க.வினர் சிலரைப் பிடிக்கும். ஆனால், அந்தக் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.


எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு அரசியல் தேவை இல்லை என்றார். எமர்ஜென்சிக்கு எதிராகப் பலரும் சென்னை சிறையில் அடைக்கப் பட்டபோது ராதாவும் உள்ளே இருந்தார். எமர்ஜென்சிக் கொடுமைகளுக்கு எதிராக அவர் வாயைத் திறக்கவில்லை. ‘நான் ஒரு நடிகன். எனக்கு அரசியல் எண்ணங்கள் உண்டு.


ஆனால் கட்சி ஈடுபாடு தேவை இல்லை’ என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தார். தன்னுடைய சிந்தனையின் போக்குக்கு ஏற்ப தனது அரசியலை வடிவமைத்துக் கொண்டார். அதில், சுயநலம் எந்தக் காலத்திலும் இல்லை. எவருடைய தயவுக்காகவும் எம்.ஆர்.ராதா தனது சிந்தனையை அவர் அடமானம் வைத்ததும் இல்லை.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

பனிச்சரிவு என்ற பயங்கரம்.!


பனிச்சரிவு பற்றி தெரியும் முன், பனிக்கட்டியை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பனிக்கட்டி என்பது சாதாரண நீர், குளிர் நிலையால் உறைந்து திடப்பொருளாக மாறுவது. வெப்பநிலை, ‘0’ டிகிரி செல்சியசை விட, குறையும் போது, பனிக்கட்டி உருவாகின்றது. அதிகளவிலான பனிக்கட்டிகள், ஒன்று சேர்ந்து உயரமான மலைப் பகுதிகளில் படர்ந்திருக்கும்.

இப்பனிக்கட்டிகள் சரிவதுதான், பனிச்சரிவு என அழைக்கப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும் போது மிக வேகமாக கீழ் நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்கள், பொருட்கள், மனிதர்கள் என அனைத்தையும் அடித்துச் சென்று மூடி மறைக்கின்றது.


பனிச்சரிவு, மூன்று விதங்களில் நிகழ்கிறது., 1. ஈரமான பனி: இது வசந்த காலத்தின் (ஸ்பிரிங்) போது அடிக்கடி நடைபெறும். பனி உருகும்போது இச்சரிவு ஏற்படுகிறது. இது மெதுவாக சரியும் இயல்புடையது. 2. உலர்ந்த பனி: இவ்வகைப் பனிச்சரிவு ஆபத்தானது. வேகத்தில் கூட சரியும். கூடவே கடும் குளிர் காற்றும் வீசும். 3 பனிப் பாளம் (Slab Avalanche): இது திடீரென, புவி ஈர்ப்பு விசையின் காரணமாக சாய்வான பகுதிகளில் சரியும். பல நூறு கி.மீ., தூரத்துக்கு இது தொடர்ந்து சரியும். 

எப்படி தடுப்பது?

பனிச்சரிவு, திடீரென நிகழும் இயற்கை சீற்றம். இதைத் தடுக்க முடியாது. இருப்பினும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், பாதிப்புகளை குறைக் கலாம். மலைப்பகுதிகளில் அதிக மரங்களை நடுவது, தடுப்பு உபகரணங்களை பயன்படுத்துவது போன்றவை மூலம் பாதிப்பை தடுக்கலாம். 
முக்கிய பனிச்சரிவுகள்: 


1910, மார்ச் 10: அமெரிக்காவில் வாஷிங்டனில் நிகழ்ந்த பனிச்சரிவில் 96 பேர் பலி.
மார்ச் 14: கனடாவில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டி ருந்தபோது, ஏற்பட்ட பனிச்சரிவில் 62 பேர் பலி.
முதலாம் உலகப்போரின் போது 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் பனிச் சரிவில் இறந்தனர்.
1950-1951: ஆஸ்திரியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளில் 649 முறை பனிச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 265 பேர் பலியாகினர்.


1990: கிர்கிஸ்தானில் நடந்த நிலச்சரிவில் 43 பேர் பலியாகினர்.
1993: துருக்கியில் ஏற்பட்ட பனிச்சரிவில் 60 பேர் பலியாகினர்.
1999: பிரான்சில் பெரிய அளவிலான பனிச்சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிலான பனிக்கட்டிகள் சரிந்தன.
2012 ஏப்ரல் 7: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சியாச்சின் மலைப் பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 135 பாகிஸ்தான் வீரர்கள் பலி.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வியாழன், ஏப்ரல் 19, 2012

“காங்கிரஸ்காரனுக்கு வரலாறு தெரியுமா?”


இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா முதலில் ஆதரிக்காது என்று மறைமுகமாக அறிவித்தது. ஒருபடி மேலே போய், குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டுக்கும் எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிப்பது இல்லை என்பதுதான் இந்தியாவின் பாரம்பரிய நிலைப்பாடு என்று பிரணாப் முகர்ஜி கூறினார். பின்னர் ஐ.நா.அவையில் இந்தியா வாக்களித்தது வேறு கதை.!

இருந்தாலும், பிரணாப் கூறியது உண்மையா? அவருக்கு இந்தியாவின் வரலாறே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். உலகில் எங்கெல்லாம் அடக்கு முறையும் ஒடுக்கு முறையும் நடந்திருக்கிறதோ, அங்கெல்லாம் இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்து வந்திருப்பதுதான் பாரம்பரிய நிலைப்பாடு.!


யூதர்களின் மீது இனப் படுகொலையை நடத்திய ஹிட்ரலைக் கண்டிப்பதில் முதல் ஆளாக இருந்தவர் காந்தி. ‘மனித குலத்துக்காக ஒரு போர் நடத்தலாம் என்றால், ஓர் இனத்தைப் படுகொலை செய்கிற ஹிட்லரை எதிர்த்துப் போர் செய்வது முற்றிலும் நியாயமானதே’ என்றார் அவர். “உலகம் 2 முகாம்களாகப் பிரிந்து இருக்கிறது. ஏகாதிபத்தியவாதிகளும் பாசிஸ்ட்டுகளும் ஓர் அணியில் இருக்கிறார்கள். சோஷலி ஸ்ட்களும் தேசியவாதிகளும் எதிர் அணியில் இருக்கிறார்கள். பாசிசத்தையும் ஏகா திபத்தியத்தையும் எதிர்க்கிற உலக முற்போக்கு சக்திகளுடன் நாம் சேர்ந்திருக்கி றோம்” என்று லக்னோ காங்கிரஸில் பகிரங்கமாக அறிவித்தார் நேரு.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா - சோவியத் என, உலகம் இரண்டு குழுக்களாகப் பிரிந்தபோது, இந்தியா அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அப்போதும் பிரதமர் நேரு, “பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகிய வற்றை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று சொன்னார். இந்தோனேசியாவில் டச்சு அரசாங்கம் படைகளைக் கொண்டுபோய்க் குவித்தபோது எதிர்த்தார் நேரு.


அதற்குப்பிறகுதான், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலே தலையிட்டது. வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் மோதல் ஏற்பட்டபோது, போரை நிறுத்த இந்தியா கடுமையாக முயற்சித்தது. போர்க்கைதிகளின் பரிவர்த்தனைக்கு நடுநிலை நாடுகளின் கமிஷன் நியமிக்கப்பட்டது. அதன் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெனரல் திம்மையா இருந்தார். அமெரிக்கா, சோவியத், சீனா ஆகிய மூன்று நாடுகளையும் பகைத்துக் கொண்டு எடுத்த முடிவு இது.

இந்தோசீனா - பிரெஞ்சு காலனிப் படைகளுக்கும் வியட்நாம் புரட்சிக்காரர்களுக்கும் நடந்த போரை முடிவுக்குக் கொண்டுவர நம்முடைய நாட்டைச் சேர்ந்த கிருஷ்ண மேனனின் ஆறு அம்சத் திட்டம் பயன்பட்டது. சூயஸ் கால்வாயை எகிப்து நாட்டு உடைமை ஆக்கியபோது, பிரிட்டனும் பிரான்சும் அந்த நாட்டின் மீது படை எடுத்தன. ‘இது ஆக்கிரமிப்பு’ என்று நேரு கண்டித்தார். பெல்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற காங்கோ உள்நாட்டுப் போரை நிறுத்தியது இந்திய ராணுவம். சீனாவை, ஜப்பான் ஆக்கிரமித்தபோது, இந்தியா கண்டித்தது.

மக்கள் சீனக் குடியரசு அமைக்கப்பட்டபோது இந்தியாதான் அதை முதலில் அங்கீகரித்தது. ஐ.நா. சபையில் மக்கள் சீனாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வாதிட்ட நாடும் இந்தியாதான். அதே சீனா, திபெத் நாட்டை ஆக்கிரமித்தபோது இந்தியா கண்டித்தது. தலாய்லாமா ஆயிரக்கணக்கான கைதிகளுடன் இந்தியா வர அனுமதித்தது. இப்படித் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத் தன்மைகளுக்கு எதிராகப் போராடிய பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு.


கிழக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் துணிச்சலான முடிவுகளை இந்திரா எடுத்தார். ராணுவ ஆட்சியில், வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். பலரும் கொல்லப்பட்டார்கள். சுமார் ஒரு கோடி மக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள். ஜெனரல் அரோரா தலைமை யில் இந்திய ராணுவத்தை கிழக்கு பாகிஸ்தானுக்குள் விட்டார் இந்திரா. 93 ஆயிரம் வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தார்கள்.

வங்காளதேசம் என்ற நாடு உருவானது. அமெரிக்காவையும் சீனாவையும் எதிர்த்தே எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. இந்தப்பின் புலத்தில்தான், “இலங்கையில் நடப்பது உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது இனப் படுகொலை” என்று இந்திய நாடாளுமன்ற த்திலேயே பிரதமர் இந்திரா அறிவித்தார். உள்ளூர்த் துப்பாக்கிகளையும், தங்களுக்கு தொரிந்த தொழில் நுட்ப அறிவுடன் தயாரிக்கப்பட வெடிகுண்டுகளையும் வைத்து சிங்கள ராணுவத்துடன் போராடிக்கொண்டு இருந்த போராளி அமைப்புகளுக்கு நவீன ஆயுதங்களையும், உயர்தரப் பயிற்சிகளையும் கொடுத்தது இந்திராதான்.


தமிழ்நாட்டின் பல்வேறு மலைப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் பயிற்சி எடுத்துக் கொண்டது, பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன்தான் என்பது இன்றைய இளைய தலைமுறை பலருக்கும் தெரியாது. யாழ்பாணத்துக்குள் தடையை மீறி ஹெலிகாப்டரை அனுப்பி உணவுப் பொட்டலங்களைப் போட்டவர் ராஜீவ்காந்தி. தமிழர்கள் உரிமையைக் காக்க ஜெயவர்த்தானவுக்கு எதிரில் உட்கார்ந்து கையெழு த்துப் போட்டவர்.

“அணு ஆயுதங்களை 2010-ம் ஆண்டுக்குள் தடை செய்ய வேண்டும்” என்று ஐ.நா. பொதுச்சபையில் பேசியவர். தென் ஆப்பிரிக்க நிறவெறியை எதிர்த்தவர். நிறவெறி கொண்ட அந்த நாட்டுடன் வர்த்தகம் கூடாது என்ற முடிவெடுத்த நாடும் இந்தியா தான். இப்படி வர்த்தகம் செய்யாத ஆப்பிரிக்க அரசுகளுக்கு உதவ ‘ஆப்பிரிக்க நிதி திரட்ட வேண்டும்’ என்று அறிவித்தவரும் ராஜீவ்தான்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுதலை பெறப் போராடிய நமீபியாவின் ஸ்வாபோ இயக்கத்தை இந்தியா ஆதரித்தது. நமீபியா விடுதலை அடைந்தபோது, தான் பிரதம ராக இல்லை என்றாலும், ராஜீவ் அந்த விழாவில் பங்கேற்றார். கம்போடியாவை வியட் நாம் ஆக்கிரமித்தபோது, இந்தியா எதிர்த்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் இதற்கான முயற்சி எடுத்தார். வியட்நாம் ராணுவம் இறுதியில் வெளி யேறியது. 


இப்படி நேருவும், இந்திராவும், ராஜீவும் தங்களுக்கென ஒரு கொள்கை வகுத்துக் கொண்டு, அதற்கு எதிரான நாடுகளைக் கண்டிக்கவும் தண்டிக்கவுமான முயற்சி களில் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய விசயங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் பூசி மொழுகிவிட்டார் பிரணாப் முகர்ஜி. “எந்த ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்தது இல்லை” என்று எஸ்.எம். கிருஷ்ணா சொன்னது நம்முடைய பாரம்பரிய குணாம்சத்துக்கே எதிரானது.

‘அநியாயம் எங்கே நடக்கிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்’ என்ற கிருஷ்ணரின் கீதா உபதேசமே நம்முடைய பாரம்பரியம். ‘சொந்தச் சகோதரர்களே தவறு இழைத்திருந்தாலும் தண்டனை கொடு’ என்று உபதேசித்தான் கிருஷ்ணன். மகாபாரதக் கதையில் மட்டுமல்ல... மகாவம்சக் கதையில்கூட நாம் பாடம் கற்கத் தயாராக இல்லை என்றால் பழியும் பாவமும் யாருக்கு?

நன்றி: ப.திருமாவேலன், முதன்மை செய்தி ஆசிரியர், ஜூனியர் விகடன்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

காதலின் சின்னமா தாஜ்மஹால்?



காதல் என்றாலே எல்லோருக்கும் நிச்சயம் நினைவுக்கு வரும் ஒரு விசயம் தாஜ் மஹால். அதனை காதலின் சின்னமாக எல்லோரும் கருதுகிறோம். மிகவும் அற்புத மாக வடிவமைக்கப்பட்ட நினைவகம் புகைப்படத்தில் பார்க்கும் போதே மிகவும் ரம்மிய மாக உணருகிறோம். அதனால்தான் இது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கி றது. தாஜ்மஹாலை உலக அதிசயங்களில் ஒன்றாக அதன் கட்டடக் கலைக்காக வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.


ஆனால் அதனை காதலின் சின்னமாக அறிவித்தது யார்? ஷாஜகான் மும்தாஜ் மீது வைத்திருந்த காதலால் கட்டியதுதான் தாஜ்மஹால் என்று நாம் நினைத்திருக்கி றோம். ஆனால் உண்மை அதுவா? ஷாஜகான் மும்தாஜின் இரண்டாவது கணவர். மும்தாஜ் ஷாஜகானின் மூன்றாவது மனைவி. இதுதவிர பல மனைவிகள் உண்டு. மும்தாஜ் அவளது 14 ஆவது குழந்தை பிறக்கும்போது இறந்தாள். ஷாஜகான் பெண்களுக்கான தேடல் அதிகம் கொண்டவர். அவருடைய அரசவை யில் அழகான பெண்களுக்கென்றே ஒரு இடம் வைத்திருந்தார். அங்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. 


ஆனால் அழகான பெண்களுக்கு மட்டும் அனுமதி. தாஜ்மஹாலை கட்டி முடித்தவுடன் இதேபோன்று இன்னொரு கட்டடம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக, அங்கு பணிபுரிந்த 22,000 பணியாளர்களின் கைகளும் துண்டிக்கப்பட்டன. மேலும் கட்டட வடிவமைப்பாளரின் விழியைப் பிடுங்கி, தலையை வெட்டிக்கொலை செய்திருக்கிறார் ஷாஜகான். தன்னுடைய மகள் ஜஹானாரா பேகமுடன் முறை தவறிய உறவு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலே சொல்லப்பட்ட விசயங் களில் எங்கு காதல் இருக்கிறது? இத்தனை பேரை கொடுமைப்படுத்தி கட்டப்பட்ட கல்லறை எப்படி காதலின் சின்னமாகும்?

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வியாழன், ஏப்ரல் 12, 2012

தாஜ்மஹால் இடிந்துவிழுமா?



உலக அதிசயங்களால் ஒன்றான தாஜ்மஹால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 358 ஆண்டு கால பழமை வாய்ந்த சலவைக்கல் சமாதியை (தாஜ்மஹால்) பார்வையிட ஆண்டு தோறும் ஆக்ராவிற்கு நான்கு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

யமுனை நதி நாளுக்கு நாள் மாசுப்படுதலும், தொழிற்சாலைப் பெருக்கமும், காடுகள் அழிப்பும் தாஜ்மஹாலை அழித்துவிடும் என்று விழிப்புணர்வு ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும், சமாதியில் விரிசல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கட்டுமானம் மேலும் தளர்ந்து வருகின்றது. அது மிகவும் பலவீனமாக உள்ளது. சுற்றியுள்ள நான்கு தூண்களும் ஆட்டம் கண்டு வருகின்றன எனவும் விழிப்புணர்வு ஆர்வலர்கள் தெரிவித் துள்ளனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

நினைவு என்பது என்ன?



சில விவரங்கள் நினைவில் இருக்கின்றன. சில மறந்த போகின்றன. நினைவு என்பது என்ன? எல்லாம் நியூரான்களின் சாகசம். நியூரான் (Neuron) என்பது மூளையில் உள்ள ஆதாரமான நரம்பு செல். கோடிக்கணக்கில் இருக்கும் இந்த செல்களின் இணைப்பில்தான் நம் நினைவு இருப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அறிவியலறிஞர்கள் ஒரு பாட்டி நியூரானைத் தேடினார்கள். அதாவது உங்கள் பாட்டியை உங்களுக்கு நினைவு இருந்தால் அவள் முகத்திற்கு ஒரு நியூரான் இருக்கிறது. 


குரலுக்கு ஒரு நியூரான் இருக்கிறது. அவள் வாசனைக்கு ஒரு நியூரான் இருக்கிறது. இப்படித்தான் நம்பினார்கள். இப்போது தனிப்பட்ட நியூரான்களில் நம் நினைவு இல்லை என்கிறார்கள். பாட்டி நினைவுகள் நியூரான்களின் இணைப்பில் ஏற்படுத்திய மாறுதல்களில்தான் வகிக்கிறது என்கிறார்கள். நினைவு என்பது வீடியோ காமிரா போலவோ, டேப்ரிக்கார்டர் போலவோ இல்லை. இன்ன இடத்தில் இது பதிந்திருக் கிறது என்று சொல்ல இயலாது.

மேலும் ஒரு சம்பவத்தை முழுவதும் நினைவுபடுத்துவது என்பது சாத்தியமில்லை. ஒரு சம்பவத்தை வெவ்வேறு செய்தித்தாள்கள் விவரிப் பதைப் படித்தால் உங்களுக்கு இது புரியும். மிகத்தளிவான நினைவிலும், நினைவு கூர்வதிலும் சில குறைபாடுகள் இருக்கும். அரிதான சம்பவங்கள், விபத்துக்கள், அனுபவங்கள் தௌ¤வாக நினைவி ருக்கும். தினம் அலுவலகம் செல்வது நினைவிருக்காது. பேருந்து சன்னல் வழியாக ஒரு கல் வந்து விழுந்தால் அந்த தினம் நினைவிருக்கும்.

காரணம் அந்தச் சம்பவம் தனிப்பட்டது. நினைவு ரீதியில் குழப்பமில்லாதது. எந்தச் சம்பவத்தையும் நாம் நினைவு படுத்தும்போது நாளாக நாளாக அது மாறுகிறது. நடந்ததிலிருந்து நடந்ததாக நாம் நினைக்க விரும்புவதற்கு மாறிவிடும். மனமும், சுவையும் நம் நினைவுகளுடன் ஒன்றியிருப்பவை. ஒரு மகிழம்பூ வாசனை, உங்களைப் பள்ளிப் பருவத்தில் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண்ணின் நினைவுக்கும் கொண்டு போகலாம்.

“மற்றதெல்லாம் அழிந்தபின், உடல் அழிந்தபின் மணமும், ருசியும்தான் தனிப்பட்ட விசுவாசமான உணர்ச்சிகளாக மிச்சமிருக்கும்” என்றார் மார்செல் பிரௌஸ்ட். நம் எல்லோருக்கும் நினைவு ஆற்றலை இழப்பதில் இருக்கிறது. இது வயதாகிக் கொண்டிருப்பதால் நிகழ்கிறது என்று நம்புகிறோம். உண்மையல்ல. பிறந்த கணத்திலி ருந்து நாம் நியூரான்களை இழந்து கொண்டிருக்கிறோம். நியூரான்கள் புதுப்பிக்கப்படுவதில்லை.

நன்றி: சுஜாதா, விகடன் பேப்பர் 18-1-1998.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

திங்கள், ஏப்ரல் 09, 2012

‘பால் கமிஷன்’ அறிக்கை வெளியிடப்பட்டது சரியா?



மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரைக்கும் நீதி கேட்டு நெடும் பயணமாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி நடந்து செல்லக் காரணமான சம்பவம் அது. திருச்செந்தூர் முருகன் கோயில் உதவி ஆணையர் சுப்பிரமணிய பிள்ளையின் மர்ம மரணம் பற்றி விசாரிக்க அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., சி.ஜெ.ஆர்.பால் என்பவர் தலைமை யில் ஒரு கமிஷனை அமைத்தார். அவர் தந்த அறிக்கை அன்றைய அரசுக்கு எதிராக இருந்ததால், அதனை வெளியிடவில்லை. கருணாநிதி அதை ‘எப்படியோ வாங்கி’ வெளியிட்டார்.


பொதுவாக விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட பிறகு வெளியிட வேண்டும் என்பதுதான் மரபு. அதை சட்டமன்றத்தில் வைக்க அரசு மறுத்தபோது, அதை வெளியிட வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. சபை மரபு என்ற காரணத்தைக் காட்டி ஒரு தவறு மறைக்கப்பட்டுவிடக் கூடாது அல்லவா? ‘பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்த்த நன்மை பயக்கும் எனின்’ - என்கிறது வள்ளுவம். அந்த அடிப்படையில் பார்க்கலாமே.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, ஏப்ரல் 07, 2012

“கணவன் தலை... மனைவி இதயம்...”



பெண்களின் ஆயுதங்கள் கண்ணீர்த் துளிகள் - ஜியார்ஜியா.
ஆணுக்கு அவக்கேடு செய்தாலும், பெண்ணுக்குப் பிழை சொல்லல் ஆகாது.
பத்து மனிதர்களின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது - சுவீடன்.
நூறு தௌ¢ளுப்பூச்சிகளைக் காத்துவிடலாம். ஆனால், ஒரு கன்னியைக் கட்டிக்காப்பது கஷ்டம் - போலந்து.
ஒரு பெண் ஒரு செயலைச் செய்து முடித்தால், அது பெரிய சாதனையாகக் கருதப்படவில்லையென்றால், அதுதான் பெண்ணுரிமை.! - சூசன் சரண்டான் (அமெரிக்க நடிகை).


ஆண்டவன் எல்லா இடத்திலும் இருக்க முடிவதில்லை.  அதனால்தான் அன்னையைப் படைத்தான் - இஸ்ரேல்.
ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள். பெண்ணோடு பழகிய பின்பும் சிரிக்காதவன் ஏமாளி - ஜப்பான்.
கெட்டிக்காரப் பெண்தான் காதலிப்பவனை விட்டுவிட்டு தன்னைக் காதலிப்பவனை மணப்பாள் - செக்கோஸ்லேவியா.
கணவன் தலை... மனைவி இதயம் இப்படியுள்ள திருமணம் இன்பமானது - எஸ்தோனியா.
உண்மையிலேயே, சிறந்த நாடு, பண்பாடு மிக்க நாடு என்று உலக வரலாற்றில் எந்த நாடுமே இல்லை. எல்லா நாடுகளிலும் பெண்கள் இழிவுப்படுத்தப் படுகிறார்கள் - லிக்ரிடா மாட் (அமெரிக்க சீர்த்திருத்தவாதி).


சமூகத்தின் ஒரு பாதியான பெண்களை விடுதலை செய்தால் மட்டுமே, அவர்கள் மற்றொரு பாதியான ஆண்களை விடுதலை செய்ய முன் வருவார்கள் - எம்மிலீன் பாங்க்ஹர்ஸ்ட் (பெண்களின் ஓட்டுரிமைக்காகப் போராடியவர்).
ஒரு பெண்ணை வளர்ப்பதைக் காட்டிலும், திருமணம் செய்து வைப்பதுதான் கடினம் - போலந்து.
பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள். மறுத்ததையே விரும்பி வாடுவார்கள் - ஸ்பெயின்.
இயன்ற பொழுதெல்லாம் பெண்கள் சிரிப்பார்கள். அழ வேண்டுமென்று தீர்மானித்து விட்டால் அழுவார்கள் - பிரான்ஸ்.


மனிதர்களுக்குக் குணத்திற்கு முன்னால் அறிவு தேவை. பெண்களுக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை - ஜெர்மனி.
பெண்களின் பங்களிப்பு இல்லாமல் புதியதோர் உலகத்தை உருவாக்க முடியாது... பெண்கள் பங்கேற்காத அரசியல், அரசியலே அல்ல.! - அருந்ததி ராய்.
மனிதர்கள் மனிதர்களாகப் பார்க்கப்பட வேண்டும். அவர்களை ஆணா, பெண்ணா என்ற அடிப்படையில் வேறுபடுத்தக்கூடாது - மில்ஸ் லேன் (குத்துச் சண்டை வீரர்)

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

மனைவி சொல்லே மந்திரம்.!



பெரும்புகழ் வாய்ந்த அமெரிக்க நாவலாசிரியர் நந்தானியல் ஹார்த்தான் அவர் பார்த்து வந்த அரசாங்க உத்தியோகம் திடீர்னு போயிடுச்சு. இதனால ரொம்ப கவலை யோட வீட்டுக்கு வந்தாரு. மனச்சோர்வோட இருந்தாரு. அவருடைய மனைவி காரணத்த கேட்டாங்க. அவரு காரணத்த சொன்னாரு. உடனே மனைவி அதிர்ந்து போகல. க்வலப்படாதீங்க, இதைவிட அற்புதமான ஆற்றல் உங்ககிட்ட இருக்கு. அது உங்களுக்கு தெரியுமா?


நீங்க அப்பப்போ என்கிட்ட கதை சொல்லுவீங்க. அற்புதமான கற்பனையா இருக்கும். இனிமே அதை என்கிட்ட சொல்றது மட்டுமல்ல, இதோ பேப்பரும், பேனாவும் எடுத்து வெச்சுருக்கேன். நீங்க என்ன என்ன எழுதணும்னு நினைக்கி றீங்களோ அத எல்லாத்தையும் எழுதுங்க. அத புத்தகங்களா போடுவோம் அப்படினு ஆலோசனை சொன்னாங்களாம். அவருக்கும் உற்சாகம் வந்துட்டுது. மனச்சோர்வு நீங்கி எழுத ஆரம்பிச்சாராம். முதல்ல அவரு எழுதினது ஒரு நாவல். அதுதான் இப்போ மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுகின்ற கருஞ்சிவப்பு எழுத்து அப்படிங் கின்ற நாவல். ஆக மனைவி யோட ஆலோசனை அவர உற்சாகப்படுத்திருக்கு.

அமெரிக்க ஜனாதிபதி ஆன்டோன் ஜாக்சன், அவருடைய மனைவி அவருக்கு செஞ்ச உதவி ரொம்ப மகத்தானதாம். திருமணத்துக்கு முன்னாடி அவர் எழுத படிக்க தெரியாதவரா இருந்தாராம். இவருக்கு கல்விய போதிச்சு, அறிவு வளர வெச்சு, அவருடைய சிந்தனையை தூண்டி, கடைசியில் அவரு அமெரிக்க ஜனாதி பதியா ஆகுற அளவுக்கு அவருடைய மனைவி துணையாக இருந்தாங்க.


அதேபோல அதிர்ச்சியான நிகழ்ச்சிகள் ஏற்படும் போதெல்லாம் சர்ச்சில் தன்னுடைய மனைவி கிட்ட போயி ஆலோசனை கேட்பாராம், அறிவுரை கேட்பாராம். அந்த கலந்துரை யாடலுக்கு பிறகு அவருக்கு புதுத்தெம்பு வருமாம். அதுக்குபிறகு வந்து அவரு பணியைத் தொடங்கு வாராம்.மோட்டார் மன்னன் அப்படின்னு பாராட்டப்படுற ஹென்றி போர்டு ஹோல் முதல்ல அவர் ஆராய்ச்சியில் தொடர்ந்து தோல்விகளே கிடைச்சுட்டு இருந்தது. இத கண்டு பிடிக்கிறேன், அத கண்டுபிடிக்கிறேன்னு கடைசியில் தோல்விலதான் முடியுமாம். 


அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க, நண்பர்கள் எல்லாம் அவர வந்து அரை பைத்தியம்னு கிண்டல் பண்ண ஆரம்பிச் சுட்டாங்க. அவருக்கு சோர்வு வந்து விட்டது. ஆனா, அவரு மனைவி பாத்தாங்க. அவருடைய சோர்வ அகற்றுவதற்கு நல்ல நம்பிக்கையான ஆலோசனையெல்லாம் சொன்னாங் களாம்.

சோர்வடை யாதீங்க.! நிச்சயமா உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொடர்ந்து முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க! அப்படின்னு தூண்டிகிட்டே இருந்தாங் களாம். அந்த உற்சாகம்தான் அவருக்கு கடைசியில் வெற்றிக்கு வழி பண்ணிருக்கு. அந்த உற்சாகத்தின் அடிப்படையில்தான் கடைசியில் ஹென்றி மோட்டார் கார் கண்டு பிடிச்சாராம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வியாழன், ஏப்ரல் 05, 2012

கெட்டப் பெண்ணிடமும்... நல்லப் பெண்ணிடமும்...?



பெண்டாட்டியை அடிப்பவன், அவளுக்கு 3 நாள் ஓய்வு கொடுத்து, தானும் 3 நாள் பட்டியினிருப்பாள் - சுவிட்சர்லாந்து.
இந்த உலகில் அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநிறுத்தும் கடமை ஆண், பெண் இருவருக்கும் இருக்கிறது. அது ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. லிலியன் வால்ட் (எழுத்தாளர்).
பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்களா என்று எனக்குத் தெரியாது;  ஆனால் கண்டிப்பாகத் தாழ்ந்தவர்கள் அல்ல - கோல்டர் மேயர் (முன்னாள் இஸ்ரேல் அதிபர்).


அத்திப் பூவையும், வெள்ளைக் காகத்தையும், நீரிலுள்ள மீனின் காலையும் பார்த்தாலும் பார்க்கலாம். ஒரு பெண்ணின் மனதிலுள்ளதைப் பார்க்கவே முடியாது - இந்தியா.
பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் இல்லாதவரை அவர்களுக்கு இந்த சமூகத்தில் சம உரிமை கிடைக்காது - எலிசபெத் ஸ்டாண்டன்.
பாதிரிமார்களுக்கும், பெண்களுக்கும் மறதி என்பது கிடையாது - ஜெர்மனி.
பெண்கள் யாரை மனதாரக் காதலிக்கிறார்களோ, அந்த ஆண்கள், அந்தப் பெண்கள் எதிரில் பச்சைக் குழந்தைகளாகிவிடுவர் - ரவீந்திரநாத் தாகூர்.
பெண்ணியம் என்பது வேறொன்றுமில்லை.பெண்களையும் மனிதர்களாகப் பார்ப்பதுதான் - பௌலர் த்ரேச்சர் (பெண்ணியவாதி).


எல்லா ஆண்களும் சுதந்திரத்தோடு பிறந்தவர்களாம்;  அது எப்படி பெண்கள் மட்டும் அடிமைகளாகவே பிறந்தார்கள்? - மேரி ஆஸ்டல் (இங்கிலாந்து எழுத்தாளர்).
கெட்ட பெண்ணிடம் அவளைப் புகழ்ந்து ஒரு வார்த்தை சொல். நல்ல பெண்ணிடம் உன் விருப்பம் போல் பேசு - போலந்து.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். ஆண்களோ பெண்களோ எந்த வேறு பாடுமின்றி நடத்தப்பட வேண்டும் - ஒலிம்பி டி களக்ஸ் (பிரெஞ்சு நாடக ஆசிரியர்).
எந்தக் கண்ணாடியும் ஒரு பெண் அழகில்லை என்று சொல்லியதில்லை பிரெஞ்சு.
பெண்ணுரிமை என்பது வேறொன்றுமில்லை. மனித உரிமைதான் - மஹ்னாஸ் ஆஃப்கமி (இராணிய பெண்ணுரிமைப் போராளி).


சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண் - காந்தியடிகள்.
எந்த நாடாக இருந்தாலும் பெண்கள் சமத்துவம் என்பது முன்னேற்றத்தின் முதல் படி - கோஃபி அன்னான் (ஐ.நா.சபையின் முன்னாள் தலைவர்).
பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் சமூகம் முன்னேறும். வருங்காலத் தலைமுறை வாழ்வில் உயரும் - கோஃபி அன்னான்.
ஒருவரது தகுதியை முடிவு செய்வது திறமைதான். மரபணு தரும் பாலின வேறுபாடு அல்ல - பெல்லா  அப்சக் (அமெரிக்க வழக்கறிஞர்).
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்கும் - பாரதியார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

புதன், ஏப்ரல் 04, 2012

‘முதன் முதலாய்... பெண்கள்’



இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் விஜயலெட்சுமி பண்டிட் (உ.பி.).
இந்திய மாநில சட்டசபையின் முதல் பெண் சபாநாயகர் ஷான்னோ தேவி.
இந்தியாவில் பெண் மருத்துவராக பணியாற்றிய முதல் பெண் மருத்துவர் முத்து லெட்சுமி ரெட்டி.
இந்தியாவிலேயே சட்டமன்ற துணை சபாநாயகராக பதவியேற்ற முதல் பெண் முத்து லெட்சுமி ரெட்டி.
தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை முதலில் அமுல்படுத்திய முதல் இந்திய பெண்மணி முத்துலெட்சுமி ரெட்டி.
இந்திய அரசின் உதவித்தொகைப் பெற்று அயல்நாடு சென்று உயர்கல்வி பயின்ற முதல் இந்திய பெண் முத்துலெட்சுமிரெட்டி.

முத்துலெட்சுமிரெட்டி.
தண்டி யாத்திரையில் கைது செய்யப்பட்ட முதல் பெண்மணி சரோஜினி நாயுடு.
ராஜ்யசபாவின் முதல் பெண் செயலாளர் வி.எஸ்.ரமாதேவி.
ஜிப்ரால்டர் ஜலசந்தியை நீந்திக் கடந்த முதல் இந்திய பெண் ஆர்த்தி பிரதான்.
இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் வசந்தகுமாரி (கன்னியாகுமரி).
இந்தியாவின் முதல் பெண் டீசல் எஞ்சின் டிரைவர் மும்தாஜ் கத்வாலா.
இந்தியாவின் முதல் பெண் பைலட் சுசாமா.
இந்தியாவின் முதல் ஏர்பஸ் பெண் பைலட் தாபா பானர்ஜி.
இந்தியாவின் முதல் பெண் கிருஸ்துவ மதகுரு மரகதவல்லி டேவிட் (28.05.1989).
முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சுசீலா சௌராஸியா.
ஞானபீடம் பரிசுப் பெற்ற முதல் இந்திய பெண் ஆஷா பூர்ணாதேவி (வங்காள எழுத்தாளர்).
இந்தியாவின் முதல் பெண் சுதந்திர புரட்சியாளர் கிட்டூர் ராணி சென்னம்மா.

கிட்டூர் ராணி சென்னம்மா.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறைத் தண்டனைப் பெற்ற முதல் பெண் துக்கரி பாலர் தேவி.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சாந்தகுமாரி பட்நாகர்.
இந்தியாவில் போலோ விளையாடும் முதல் பெண்மணி தேவயாணி ராவ் (டெல்லி).
இந்திய ராணுவத்தின் முதல் பெண் ஜெனரல் மேஜர் ஜெனரல் கொட்ரூட் அலிராம்.
பதம்ஸ்ரீ விருதுப்பெற்ற முதல் இந்திய நடிகை நர்கீஸ்தத்.
பெண்கள் கைப்பந்தாட்டத்தில் முதன்முதலாக அர்ஜூனா விருது பெற்ற முதல் இந்திய பெண் மியூனிலி ரெட்டி.

ஆஷா பூர்ணாதேவி 
பி.சி.ராவ் விருது பெற்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர் லலிதா காமேஸ்வரன்.
எவரெஸ்ட் சிகரத்தை இருமுறை ஏறி சாதனைப் படைத்த முதல் இந்தியப் பெண்மணி சந்தோஷ் யாதவ் (ஹரியானா) (1992, 1993).
இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்த உலகின் முதல் மாற்றுத்திறனாளி பெண் சி.என்.ஜானகி (இந்தியா, 28-07-1992).
இந்தியாவில் மனை இயல் பாடத்தை முதலில் அறிமுகப்படுத்திய பெண்மணி ஹன்சா மேத்தா.
விடுதலைப் போராட்ட காலத்தில் முதன் முதலில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய முதல் பெண் காடம்பினி கங்குலி (1901).

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

முட்டாள்கள் தினம்: யாரிடமும் ஏமாறாதீர்கள்.!



ஏப்ரல் 1-ந் தேதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். ஏமாற்று வதும், ஏமாற்றப்படுவதும் இன்றுதான். ஏப்ரல் 1-ந் தேதியை பெரியவர்கள் எதிர்பார்க்கிறார் களோ இல்லையோ, குழந்தைகள் பெரிதும் வரவேற்கிறார் கள். காரணம், அன்றைய தினம் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி நண்பர்கள், உடன் பிறந்தோர், பெற்றோர் என அனைவரையும் ஏமாறச் செய்து மகிழ்ச்சியில் குதூகலிப்பது குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.


முட்டாள்கள் தினம் எப்படி வந்தது? என்பதற்கு பல்வேறு சுவாரசியமான வரலாற்று தகவல்கள் உள்ளன. நாம் இதற்கு முன்பு ஒரு வரலாற்று தகவல் கொடுத்துள்ளோம். இருப்பினும் இன்னொரு வரலாறு உங்களுக்காக...! பண்டைய காலத்தில் ரோமானி யர்கள் ஏப்ரல் 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்தனர்.ஐரோப்பிய நாடுகளிலும் இதுதான் நடைமுறையில் இருந்துள்ளது. இந்தநிலையில், 1562-ம் ஆண்டு கிரகோரி என்ற துறவி போப் ஆண்டவராக இருந்தார். இவர், ‘ஜார்ஜியன்’ என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். 

அதில் புத்தாண்டு தினம் ஏப்ரல் 1-ந் தேதிக்கு பதிலாக ஜனவரி 1 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. “இனிமேல் எல்லோரும் ஜனவரி 1-ந் தேதியைத்தான் புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்” என்று போப் கிரகோரி உத்தரவும் போட்டார்.


பல்வேறு நாடுகள் புதிய காலண்டர் முறையை ஏற்றுக்கொண்டாலும் இங்கிலாந்து போன்ற நாடுகள் அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், புத்தாண்டு தினம் மாற்றப்பட்ட தகவல் பல நாடுகளை சென்றடையவில்லை. அந்த நாடுகளில் முன்பு போலவே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடினர்.

இவ்வாறு காலண்டர் மாற்றப்பட்டு புதிய காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது தெரியாமல் பழைய முறைப்படியே ஏப்ரல் 1-ந் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடியவர்களை கேலி செய்தனர். அவர்களை முட்டாள்கள் தினம் என்று சித்தரித்தனர். காலப்போக்கில் ஏப்ரல் 1-ந் தேதி முட்டாள் தினமாக மாறியது என்பது வரலாறு. அந்த வகையில் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதால் யாரிடமும் ஏமாந்துவிடாமல் உஷாராக இருங்கள்.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

முட்டாள்கள் தினம்...யாருய்யா கண்டுபிடித்தது?



ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்.

ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஒவ்வொரு நாள் இருப்பது போல, ஏப்ரல் முதல் நாள் முட்டாள்கள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒருவரை ஒருவர் எந்த விதத்திலாவது ஏமாற்றுவதில் குறியாக இருப்பார்கள். அவர்கள் கூறும் தகவல்களை உண்மை என்று நாம் நம்பி விடுவோம். ஆனால், அவை உண்மையல்ல என்று பின்னால் தெரியவரும் போது முட்டாள்களாகி விடுகிறோம்.


அப்போதுதான் தோன்றும்... ஓ... இன்றைக்கு ஏப்ரல் 1-ம் தேதியல்லவா? நம்மை முட்டாளாக்கவிட்டார்களே என்று எண்ணத் தோன்றும். மனதுக்குள் ஒரு புன்சிரிப்பு தோன்றி மறையும். இந்த முட்டாள்கள் தினம் ஏற்பட்டது குறித்து பார்ப்போம்.,

முட்டாள்களுக்காக ஒரு தினத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையை முதன் முதலில் வெளியிட்டவர் ‘பாஸ்வெல்’ என்பவர் ஆவார். சூரிய வழிபாட்டிற்கும் இந்த விழாக் கொண்டாட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது. ஆதிகுடிகளான ‘ஷெல்ட்’ இன மக்கள், சூரிய கடவுகளைக் குறித்து இதை வசந்த விழாவாகக் கொண்டாடினர். இவ்விழாவின் முக்கிய அம்சம் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து மகிழ்வதாகும்.


இப்படி முட்டாளாக்கப்படுபவர்கள் பிரான்சில் ‘ஏப்ரல் ஃபிஷ்’ என்று அழைக்கப்படு கிறார்கள். ஏனென்றால் அன்று காகிதத்தால் செய்த மீன் வடிவம் ஒன்றை ஒருவரின் முதுகில் அவருக்கு தெரியாமல் ஒட்டிவைத்து விட்டு, ஏப்ரல் ஃபிஷ் என்று கூவிக்கூவி அழைப்பார்கள். முதலில் ஏப்ரல் முதல் நாள் முழுவதும் இந்த விழா கொண்டாடப் பட்டது. மாலை வரை அவர்களை முட்டளாக்கிக் கொண்டிருந்தனர். பின்னர் நண்பகல் வரைதான் இந்த வேடிக்கைகளைச் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தனர். அதன் பிறகு முட்டளாக்க முயல்பவர்கள் முட்டாள்களாக கருதப்பட்டனர்.
இப்படியொரு பழக்கம் கனடா, இங்கிலாந்து, சைப்ரஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்றும் தொடர்கிறது.கிழக்கு நாடுகளில் இந்த முட்டாள்கள் தினம் கொண்டாட்டம் வழக்கத்தில் இல்லை. ஆனால், மேலை நாடுகளைப் பார்த்து நாமும் இப்போது இத்தினத்தைக் கொண்டாடு கிறோம். ஏப்ரல் முதல் நாளை அரசாங்க விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல நாடுகளில் விவாதங்கள் நடைபெற்றன.முடிவில் விடுமுறை தேவையில்லை என்று முடிவு செய்யப் பட்டது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.