செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், மே 31, 2012

சிதம்பரம் துரோகம்: ஸ்வீடனும் இந்தியாவும்.!


ஸ்வீடன் நாட்டு பீரங்கிக் கம்பெனியான போபார்ஸ் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் சிதம்பரத்தின் எஜமான் ராஜிவ் காந்தி லஞ்சம் பெற்றதை அறிந்த அளவுக்கு ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளை அறியவில்லை. இது  துரதிர்ஷ்டமே. ஸ்வீடன் நாட்டின் அறிவாளிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப்பெரும் பங்கு ஆற்றியுள்ளனர். ஐரோப்பிய மக்களுக்கு இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற அடிமைப்பட்ட நாடுகளில் வெள்ளையின அரசாங்கங்கள் நடத்தும் படுகொலைகளையும் கொடுங்கோல் ஆட்சியையும் வெளிக் கொண்டுவந்ததில் இவர்களது பணி மிகவும் முக்கியமானது. இந்த வகையில் ஜான் மிர்தால் அவர்களின் குடும்பம் அளப்பறிய பணியாற்றியிருக்கிறது.

அடிப்படைப் பொருளாதாரக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள், அரசியல் ஊழியர்கள் தாம் அவசியம் படித்துத் தேற வேண்டிய அடிப்படை நூல்கள், ஆய்வுகள் பலவும் ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளால் வெளியிடப்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல.அதிலும் குறிப்பாக, இன்றளவும் இந்திய அரசு பொருளாதார ரீதியாக விவசாயிகளைப் பிரித்து ஆராயவும், அதற்கான திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தும் மூல விபரங்கள் குன்னர் மிர்தால் எழுதிய ‘ஆசிய நாடகம்’ என்ற ஆய்வு நூலில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. 

அவர் வழங்கிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தான் இந்திய அரசால் விவசாயிகள் தரம் பிரிக்கப்பட்டு சிறிய (small), நடுத்தர (medium), பெரிய (Big) விவசாயிகள்,  நிலச்சுவான்தார்கள் (Landlords) என்று வகைப்படுத்தப் பட்டுள்ளனர். இதனையே அரசின் திட்டங்கள் அடிப்படியாகக் கொண்டுள்ளன. இவரைப்போலவே, வெள்ளையர் ஆட்சியின் பொழுது, இந்தியாவின் வறுமையின் காரணம் என்ன, நாடு எப்படி வெள்ளையர்களால் கொள்ளை யிடப்படுகிறது என்பதை ஒரு நீண்ட ஆய்வின் அடிப்படையில் மிகப் பெரும் புள்ளி விபரங்களுடன் “இன்றைய இந்தியா (India Today)” என்ற ஒரு மிகப் பெரிய நூல் வெளியிட்ட ரஜனி பாமி தத் (Rajani Palme Dutt)என்ற அறிஞரும் ஸ்வீடன் நாட்டு வம்சாவழியில் வந்தவரே.

சிதம்பரமும் ஜான் மிர்தாலும்
ஜான் மிர்தால்

இந்தியாவை ஒட்டச் சுரண்டும் ஐரோப்பியக் கம்பெனிகள், அமெரிக்கக் கம்பெனிகளின் அதிகாரிகள், சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் ஆட்டக் காரர்கள், அழகிப் போட்டி நடத்தும் நிறுவனங்கள், மூட நம்பிக்கையைப் பரப்பும் மதவெறிப் பிரச்சாரகர்கள்,ஆபாசப் படங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் இந்தியாவில் பயணம் செய்யவும், கூட்டங்கள் நடத்தவும், தொழில் நடத்தவும் சிதம்பரம் தலைமையிலான உள்துறை அமைச்சகம் சிறப்புச் செய்து அவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறது. 

ஏன்,உலகறிந்த கொலைகாரன் ராஜ பக்சேவும் அவன் சகோதரர்களும் இந்தியாவுக்கு வரவும் அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கவும் இதே சிதம்பரம் தயங்கியதில்லை. இப்படிக் கொள்ளையர்கள், கொலைகாரகள், சரச சல்லாபத் தொழில் செய்வோரை வரவேற்று அவர்களுக்கு ஜமுக்காளம் விரித்து, உடனிருந்து பாதுகாப்பும் உபச்சாரமும் செய்யும் சிதம்பரத்தின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவாளியை இந்தியாவுக்குள் வரக் கூடாது என்ற அறிவிப்புச் செய்துள்ளது நமக்கு வியப்பைத்தரவில்லை.

இந்தியப் பாரம்பரியம் பற்றி அடிக்கடி பேசும் சிதம்பரத்தின் முன்னோர்கள் கந்து வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த பரம்பரை என்பது தமிழர்கள் அறிந்த விஷயம். தமிழரான சிதம்பரத்தின் முன்னோர்கள் (நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள்) இந்தியா,மலேசியா, பர்மா போன்ற உலகின் பல நாடுகளில் வெள்ளையர்களின் துணையோடு வட்டிக் கடைகள் நடத்தச் சென்ற போது ஐரோப்பியரான ஜான் மிர்தாலின் குடும்பம் உலகெங்கும் உள்ள அடிமைப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தது, போராடியது.


அது இன்றும் தொடர்கிறது. சிதம்பரம் கொள்ளைக்காரக் கம்பெனிகளுக்கு எடுபிடியாக, துணைவனாக இருந்து நாட்டைக் காட்டிக் கொடுக்கிறார். மிர்தால் போராடும் மக்களுக்கு துணையாக இருந்து அவர்களது நியாயத்தை பேசுகிறார். எழுதுகிறார்.

சிதம்பரத்தின் முன்னோர்கள் வெள்ளையர்களுக்கு சேவகம் செய்த காலத்தில் அதற்கு எதிராக சர்வதேச மக்களுக்காகக் குரல் கொடுத்த ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளின் மரபில் வந்தவர் ஜான் மிர்தால். சிதம்பரம் தன் முன்னோர்கள் சென்ற அதே துரோகப் பாதையில் செல்கிறார். மிர்தால் மக்களுக்காக பாடுபடுகிறார். எப்படி வேசமிட்டாலும் சிதம்பரம் போன்றவர்கள் இனம் இனத்தோடே சேரும் என்ற விதியை மீண்டும் மீண்டும் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

தடையை விலக்குக

கிடைக்கும் இடங்களில் எல்லாம் தம்மை ஒரு படிப்பாளியாக அறிவாளியாகக் காட்டிக் கொள்ளும் சிதம்பரம் தாம் உண்மையில் ஒரு ஒரு பொய்யர் மட்டும் அல்ல அறிவாளிகளின் எதிரி என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியுள்ளார்.அறிவாளிகளை, ஆய்வாளர்களை இந்தியாவுக்குள் நுழையவும், ஆய்வு செய்யவும், பேசவும், எழுதவும் அனுமதியில்லை என்று அறிவிப்புச் செய்திருக்கும் மன்மோகன் சிங் சிதம்பரத்தின் கூட்டணி ஒரு நேர்மையில்லாத ஒரு அயோக்கியர்களின் கூட்டணி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.


இதை இந்திய மாணவர்கள் அறிவாளிகள் அனுமதிக்க முடியாது, கூடவும் கூடாது. இந்திய அறிவாளிகள், மாணவர்கள், இளைஞர்கள் பலவாறாக ஸ்வீடன் நாட்டு அறிவாளிகளுக்கு கடன் பட்டுள்ளார்கள். இந்த அநீதிக்கும் சிதம்பரத்தின் துரோகத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தமிழ் நாட்டு மாணவர்கள், இளைஞர்கள், அறிவாளிகளது கடமை. இந்திய அரசின் இந்த தடையை கண்டிக்க வேண்டியது அணைத்து சனநாயக சக்திகளின் கடமையும்கூட.

கட்டுரையாளர் ராமசாமி,சென்னை 
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

செவ்வாய், மே 29, 2012

சிதம்பரம் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடை.!


ஜான் மிர்தால் (Jane Myrdal) ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர். உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகார, கொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர். 85 வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை ‘இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது’ என அறிவித்துள்ளது இந்திய அரசு. ‘மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்ற குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

யார் இந்த ஜான் மிர்தால்?

ஜான் மிர்தால் புகழ் பெற்ற ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பொருளாதார நூலை இயற்றிய மறைந்த குன்னர் மிர்தால் (Gunner Myrdal) அவர்களின் புதல்வர். அவரது தாய் ஸ்வீடன் நாட்டின் புகழ் பெற்ற அமைச்சராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிகளுக்காகவும் பாராட்டப் பெற்ற காலம் சென்ற ஏவா மிர்தால் (Eva Myrdal). கொள்கை அடிப்படையில் இருவரும் சமுக ஜனநாயக வாதிகள், மக்களின் நல்வாழ்வுக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உடையவர்கள். இவர்கள் இருவரது பணிக்காகவும் தனித்தனியாக உலகின் அதி உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு தரப்பட்டுள்ளது. இத்தகைய மிகவும் உயர்ந்த சமுக லட்சியங்களுக்காக வாழ்ந்து மறைந்த இந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஜான் மிர்தால்.

தமது பெற்றோரைப் போலவே தாமும் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜான் மிர்தால். தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது சுமார் அறுபது ஆண்டுகளாக ஜான் மிர்தால் மக்கள் பணி ஆற்றி வருகிறார். உலகின் பலபகுதிகளில் நடைபெறும் அமைதி போராட்டங்களுக்கு, இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். போராடும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எப்போதும் ஆதரித்து வருபவர். தமது நாட்டு அரசாங்கத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து இவர் பெரிய அளவில் இயக்கங்கள் நடத்தி உள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ஆய்வாளர்,ஜனநாயகவாதி, எழுத்தாளர், பேச்சாளர்.


இவர் சில காலம் இந்தியாவில் தங்கியும், பல முறை பயணம் செய்தும் பிரபலமான நூல்களை எழுதியிருக்கிறார். 1983-ம் ஆண்டு இவர் எழுதிய ‘இந்தியா காத்திருக்கிறது’ (India Awaits) என்ற நூல் தமிழ் உள்பட பல மொழிகளில், பல பதிப்புகள் வெளிவந்துள்ளது. இதே போலவே கடந்த ஆண்டில் ‘இந்தியாவின் மீதொரு சிவப்பு நட்சத்திரம் ௲ அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழும்காலையில் நமது பார்வைகள், பிரதிபலிப்புகள், விவாதங்கள்” (Red Star Over India. Impressions, Reflections and Discussions when the Wretched of the Earth are Rising.) என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூல் இந்தியாவின் கல்கத்தா, டில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இவர் நேரடியாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் முன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
குன்னர் மிர்தால் 

ஆங்கிலத்தில் மட்டும் தற்போது கிடைக்கும் இந்த நூல் இந்தி, தெலுங்கு, வங்காளி, தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் அச்சில் வெளிவர இருக்கின்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் வரவேற்புப் பெற்ற இந்த நூலையும் அதன் மொழி பெயர்ப்புகளையும் கண்டு கிலி கொண்ட மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அதன் எழுத்தாளரையே தடை செய்துவிட்டனர். இது மட்டும் அல்லாது தம்மை ‘அறிவாளிகளாக’ கருதிக் கொள்ளும் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளியுமான சிதம்பரமும் செய்து வரும் படுகொலைகள் பேராசை பிடித்த தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் செய்து வரும் சேவை என்ற விபரத்தை ஜான் மிர்தால் உலகின் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

பல ஐரோப்பிய,ஆசிய மொழிகளில் வெளியாகும் அவரது எழுத்துகள் சமீப காலமாக இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் (அவ)மானப் பிரச்சனையாகியுள்ளது. எனவே, இவரது எழுத்துகளைத் தடை செய்ய ஒரு வழியாக அவரையே தடை செய்து விட்டனர்.

மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை?

மாவோயிஸ்டுக் கட்சியினரின் கருத்துகளை இந்தியப் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது இயக்கம் பணி செய்யும் பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தின் தலைவர்களையும் மக்களையும் நேரடியாகக் கண்டு பேட்டியெடுத்து வெளியிட்டவர் ஜான் மிர்தால். அவரது பேட்டிகளும் குறிப்புகளும் மத்திய இந்தியாவில் நடக்கும் அடக்குமுறை பற்றிய விபரங்களை சர்வதேசத்திற்கும் சிறப்பாக அறிமுகம் செய்தது.  

இதில் இருந்து தான் உலகம் மாவோயிஸ்டுகளின் உண்மையான நிலைபாடுகளை அவர்களின் வெட்டிச் சிதைக்கப் படாத முழுமையான பேட்டிகள் மூலம் நேரான வழியில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்போதிருந்தே அவரைக் குறி வைத்திருந்த இந்திய அரசு காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் ‘மாவோயிஸ்டுகளுக்கு அவர் ஆலோசனை சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளது’.  தாம் ஆலோசனை எதுவும் சொல்லவில்லை என்றும் தான் பேசிய அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், அறிவாளிகள் பங்கேற்ற அரங்கக் கூட்டங்கள் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார். 

Model Photo for maoists
இவருடைய சமீபத்திய நூல், மத்திய இந்தியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலங்களை சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பிடுங்கி வருவதை விளக்குகிறது. இந்தியாவின் போலீசையும், ராணுவத்தையும் கொண்டு பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை இந்த நூல் தமது கள ஆய்வு விபரங்களுடன் வெளியிட்டுள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போர் நடத்துகிறோம் என்று சிதம்பரம் சொல்வது உண்மையில் பழங்குடிகளின் நிலத்திற்கான போர் என்ற விபரங்களை மீண்டும் ஒருமுறை இந்த நூல் நிறுவியுள்ளது. 

குறிப்பாக மாணவர்கள்,அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த நூல் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு சகிக்காத சிதம்பரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை இந்த நூலை இந்திய அரசு தடை செய்ய வில்லை. ஆயினும், அது குறித்துப் பேசவோ மீண்டும் ஆய்வுக்கான விபரங்கள் சேகரிக்கவோ ஜான் மிர்தால் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடையை விதித்துள்ளது.

கட்டுரையாளர் ராமசாமி,சென்னை 
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
(தொடர்ச்சி நாளை மறுநாள்...)

திங்கள், மே 28, 2012

ஜனாதிபதி தேர்தல் நடப்பது எப்படி?இந்தியாவின் 14-வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்கிறது. இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே. சரி ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்; அதற்கான தேர்தல் நடைமுறைகள் என்ன?

வாக்காளர் கல்லூரி: முதல்வர்கள் மற்றும் பிரதமரைப் போல, ஜனாதிபதி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபை எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் அடங்கிய "வாக்காளர் கல்லூரி' மூலம், ஒற்றை மாற்று ஓட்டு முறையில் (single transferable vote) ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார். ஜனாதிபதி தேர்தலையும், தேர்தல் ஆணையமே நடத்துகிறது.


இந்தியாவில் மொத்தம் (லோக்சபா 543 + ராஜ்யசபா 233) 776 எம்.பி.,க்களும், 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். எம்.எல்.ஏ.,க்களில் 28 மாநிலங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இத்தேர்தலுக்கு கணக்கில் கொள்ளப்படுகிறது. இத்தேர்தல், டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபை வளாகம் ஆகிய இடங்களில் நடைபெறும்.

ஜனாதிபதி ஆவதற்கான தகுதி

* இந்தியக் குடிமகனாக, 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
* ஊதியம் பெறும் மத்திய, மாநில அரசு பணி வகிப்பவராக இருக்கக் கூடாது.
* லோக்சபா எம்.பி., ஆவதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
* துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இத்தேர்தலில் போட்டியிடலாம்.
அவர்கள் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், முந்தைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
* ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.
* டெபாசிட் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய்.


ஜனாதிபதியின் அதிகாரம்

* லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியை, ஆட்சியமைக்க (பிரதமராக பதவியேற்க) அழைப்பது,
* பிரதமரின் ஆலோசனைப்படி, மத்திய அமைச்சர்களை நியமிப்பது, பார்லிமென்ட் கூட்டத் தொடரைக் கூட்டுவது, அதில் உரையாற்றுவது இவரது பணிகள்.
* பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்படும் அனைத்து மசோதாக்களும், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகும்.
* பிரதமரின் அறிவுரைப்படி, மாநில கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தலைமை நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமைத் தேர்தல் ஆணையர், வெளிநாட்டு தூதர்கள் ஆகியவற்றை நியமித்தல்.
* அரசியல் சட்டப் பிரிவு 352ன் படி நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய , லோக்சபாவை கலைக்க, பிரிவு 356ன் படி மாநில அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
* சுப்ரீம் கோர்ட்டின் தண்டனைக் காலத்தை குறைப்பதற்கும்; மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவும் இவருக்கு அதிகாரம் உள்ளது.

மொத்த ஓட்டு எவ்வளவு:

ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த ஓட்டு மதிப்பு = (எம்.எல்.ஏ.,க்கள் + எம்.பி.,க்களின் ஓட்டு) மொத்த ஓட்டுகள் = 10,98,882 (5,49,474 + 5,49,408). இதில் "மெஜாரிட்டி' பெறும் வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுகிறார்.

எம்.எல்.ஏ., ஓட்டுகள்:


விதி 52 (2)ன் படி, "1971 சென்செஸ்' மக்கள்தொகைதான், ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு எத்தனை ஓட்டு என்பது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது. (உதாரணமாக) தமிழகத்தின் மக்கள் தொகை 4,11,99,168 பேர். எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 234. இதன் படி 4,11,99,168/ (234*1000)= 176. ஒரு எம்.எல்.ஏ., வுக்கு 176 ஓட்டு. அதன்படி தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மொத்த ஓட்டு மதிப்பு (234 * 176) 41,184. இதன்படி அனைத்து மாநிலங்களையும் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு 5,49,474.

எம்.பி., ஓட்டுகள்

அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு / மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை; இதன் படி 5,49,474/776 = 708. இதன் மூலம் ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு 708. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த எம்.பி.,க்களின் ஓட்டுமதிப்பு (776*708) 5,49, 408

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

ஞாயிறு, மே 27, 2012

கொஞ்சம் பொறுமை வேணும்யா.!


சார்லஸ் டார்வின் (1809-1882) ஒரு ஆங்கில இயற்கை விஞ்ஞானி. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். உயிரின உலகின் பரிணாம வளர்ச்சி பற்றி அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சி பற்றிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார். இன்றைய உயிரியல் கண்டுபிடிப்புகளுக்கான அடிப்படைத் தத்துவமே டார்வினியமாகும். சிறு வயதிலேயே மிகவும் பொறுமையானவராக சார்லஸ் டார்வின் இருந்தார்.


வயது முதிர்ந்த பிறகும் இந்தக் குணம் அவரிடம் அப்படியே இருந்தது. டார்வினின் கொள்கைகளைத் தாக்கி நாளும் பல கடிதங்கள் வரும். பத்திரிகைகளில் பல கேலிச் சித்திரங்களும் வெளிவந்தன. ஒரு சமயம் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற அவருடைய சித்தாந்தத்தைத் தாக்கி பத்திரிகை ஒன்றில் கேலிச்சித்திரம் வெளியானது. அதில் குரங்கின் உடலும் டார்வினின் தலையும் கொண்ட உருவம் வரையப்பட்டிருந்தது.


ஒரு நண்பர், அதை எடுத்து வந்து டார்வினிடம் காட்டினார். டார்வின் அதைப் பார்த்து சிரித்துவிட்டு, “தலை நன்றாக வரையப்பட்டிருக்கிறது. ஆனால் உடல்தான் சரியில்லை.! மார்பு அகலமாக உள்ளது. உண்மையில் அப்படி இருக்காது.!” என்று நிதானமாக கூறினார். தன்னைத் தாக்குபவர்கள் மீதுகூட சார்லஸ் டார்வின் கோபம் கொண்டது கிடையாது.! ஆனால், நம் அரசியல் தலைவர்கள் அப்படியா? கொஞ்சம் பொறுமை வேணும்யா...!

கருத்துரை: சி.ஹேமகாவியா, 10 ஆம் வகுப்பு, இமாகுலேட் பள்ளி, புதுச்சேரி.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, மே 19, 2012

வறண்டு வரும் பெட்ரோல் கிணறுகள்.!பெட்ரோல் இன்னும் எத்தனை நாட்களுக்கு? நடுங்கியபடி உலகம் தன்னைத் தானே கேட்டுவரும் தினசரி கேள்விகளில் ஒன்றுதான் இது. வானளாவ உயர்ந்து வரும் விலை, அதிகரித்து வரும் உபயோகம் - இவற்றுக்கு இடையே இந்த கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளத்தையும், அதன் சராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்னும் 40 வருடங்களுக்கே எண்ணை கிடைக்கும் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது.


உலகம் எங்கும் சுமார் 1.24 லட்சம் கோடி பீப்பாய் எண்ணை இருப்பு உள்ளது. இதில் சவுதி அரேபியா 21.3 சதவீதமும், ஈரான் 11.2 சதவீதமும் இருப்பு வைத்துள்ளன. பெட்ரோல் உற்பத்தியில் சவுதி அரேபியாவே முன்னணியில் உள்ளது. ஒரு காலத்தில் ரஷ்யாவே அதிகமாக எண்ணையை உற்பத்தி செய்து கொண்டு இருந்தது. ஆனாலும் ஏற்றுமதியில் சவுதியே முன்னணியில் இருந்தது - இருக்கிறது. ரஷ்யாவில் எடுக்கப்படும் எண்ணையில் பாதிக்கு மேல் அந்த நாட்டிலேயே செலவாகி விடுகிறது.

ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உற்பத்தியாகும் மொத்த பெட்ரோலில் கால் பங்கு (25 சதவீதம்) அமெரிக்காவே பயன்படுத்துகிறது. அதற்கடுத்து சீனா (9.3 சதவீதம்), ஜப்பான் (5.8 சதவீதம்), இந்தியா (3.3 சதவீதம்), ரஷ்யா (3.2 சதவீதம்), ஜெர்மனி (2.8 சதவீதம்), தென்கொரியா (2.7 சதவீதம்), கனடா (2.6 சதவீதம்), சவுதி அரேபியா (2.5 சதவீதம்), பிரேசில் (2.4 சதவீதம்) என்ற கணக்கில் பெட்ரோலை பயன்படுத்துகின்றன.


எண்ணை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு சவுதி அரேபியா. இங்கு தினமும் 12 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. ரஷ்யா 12.6 சதவீதம், அமெரிக்கா 8 சதவீதம், ஈரான் 5.4 சதவீதம், சீனா 4.8 சதவீதம், மெக்சிகோ 4.4 சதவீதம், கனடா 4.1 சதவீதம், ஐக்கிய அரபு குடியரசு 3.5 சதவீதம், வெனிசுலா 3.4 சதவீதம், குவைத் 3.3 சதவீதம் என்ற அளவில் தினசரி உற்பத்தியாகிறது.

எண்ணை இருப்பு அதிகம் உள்ள நாடுகளில் இன்னும் எத்தனை ஆண்டுகள் எண்ணை வளம் இருக்கும் என்பதையும் ஆய்வு செய்து கூறியுள்ளனர். அதன்படி சவுதி அரேபியாவில் 69.5 ஆண்டுகள் வரை எண்ணை பூமியில் இருந்து எடுக்கலாம். அதேபோல் ஈரான் 86.2 ஆண்டுகள், ஈராக் 100 ஆண்டுகள், குவைத் 115 ஆண்டுகள், ஐக்கிய அரபு குடியரசு 91 ஆண்டுகள், வெனிசுலா 91.3 ஆண்டுகள், கஜகஸ்தான் 73.3 ஆண்டுகள், நைஜீரியா 41.1 ஆண்டுகள் எண்ணை வளம் கொண்டு இருக்கும். ஏற்கனவே உள்ள எண்ணைக் கிணறுகள் வறண்டு வரும், அதேவேளையில் புதிய புதிய எண்ணைக் கிணறுகள் கண்டுபிடிக்கப் பட்டு வருவது ஆறுதல் தரும் செய்தியாகும்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் மக்கள் பாலா.

வியாழன், மே 17, 2012

மம்தா பானர்ஜிக்கு என்ன ஆச்சு?கருத்துப்படம் வெளியிட்டவர் கைது, நூலகங்களில் நாளிதழ்களுக்குத் தடை, பாடப் புத்தகங்களில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் கட்டுரைகள் நீக்கம், தனியாக நாளிதழ்கள், டி.வி. தொடங்க முடிவு என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்வது எல்லாம் சமீப காலமாக அடாவடியாக மாறிக் கொண்டிருக்கின்றன. என்னதான் பிரச்சனை கருத்துப்படம் வெளியிடப் பட்டதில்.?

ஜாத்வபூர் பல்கலைக்கழகத்தின் வேதியியில் துறை பேராசிரியர் மொகாபத்ர வரைந்தது உண்மையில் கார்ட்டூன் எனப்படும் கேலிச் சித்திரம் அல்ல. அதில் இடம் பெற்றுள்ளவை மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் முகுல் ராய், முந்தைய அமைச்சர் தினேஷ் திரிவேதி ஆகியோரின் புகைப்படங்கள் மட்டுமே. இந்தப் படங்களில் சத்யஜித்ரே இயக்கிய ‘சோனார் கெல்லா’ என்ற படத்தின் வசனத்தை அப்படியே மறுபதிவு செய்துள்ளார் பேராசிரியர். இதனை தன் சமூக வளைதளப் பக்கத்துக்கு வந்திருந்த நண்பருடன் பகிர்ந்து கொண்டார்.

ரயில்வே பட்ஜெட்டில் தினேஷ் திரிவேதி, பயணக் கட்டணங்களை உயர்த்தியதால் அவரை நீக்கிவிட்டு முகுல் ராயை அமைச்சராக நியமித்தார் மம்தா. இதனையொட்டி அவர் அந்த படத்தின் கருத்தை இந்த கேலிச் சித்திரத்தில் சேர்த்து வெளியிட்டு இருக்கிறார். அவ்வளவே.! அப்படி என்ன அந்த படத்தில் கூற்பட்டுள்ளது என்று கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை. இவ்வளவுதான்.!

சத்தியஜித்ரே இயக்கிய சோனார் கெல்லா (தங்கக்கோட்டை) திரைப்படத்தில், தான் முந்தைய ராஜகுலத்தில் பிறந்ததாக, தங்கக்கோட்டையில் வாழ்ந்ததாக பழம் நினைவுகளைப் பெற்றிருக்கும் முகுல் என்ற சிறுவனை ஆய்வுக்காக ராஜஸ்தான் அழைத்துச் செல்கிறார் ஒரு மனோதத்துவ டாக்டர். தங்கக் கோட்டை என்பதைப் புதையல் என்று புரிந்து கொண்டு பின்தொடரும் இரண்டு திருடர்கள், டாக்டரை மலையிலிருந்து தள்ளிவிடுகின்றனர். அப்போதைய உரையாடலை மொகபத்ர பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

‘முகுல், தங்கக் கோட்டையை பார்த்தாயா?’ இது அந்தப் படத்தில் வரும் ஒரு திருடனின் வசனம். இது கேலிப்படத்தில், மம்தா முகுலிடம் கேட்பதாக உள்ளது. ‘அந்த ஆளு (டாக்டர்) கெட்டவன்’ என்று முகுல் சொல்ல, ‘அவன் காணாம போயிட்டான்’ என்று மம்தா சொலகிறார். பேராசிரியர் மொகாபத்ராவின் கேலிப் படத்தில் இடம் பெற்ற வசனம் இவ்வளவுதான்.

தமிழகத்தில் நாமும் ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் இடம் பெறும் தருமி வசனத்தை சற்று மாற்றியும் மாற்றாமலும் பல வகையாகப் பயன்படுத்துவதைப் போல, ‘நாயகன்’ படத்தில் வரும் ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ வசனத்தை வைத்துக் கேலி செய்வதைப் போல, ‘ஒரு பழம் இங்க, இன்னொரு பழம் எங்க’ என்கின்ற செந்தில் - கவுண்டமணி காமெடியை வைத்து அரசியலை விமர்சிப்பது போல, இதுவும் ஒரு வகையான கேலி, அவ்வளவே...
Jadavpur University professor Ambikesh Mahapatra 
2001 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த போது, ‘மம்மி ரிட்டர்ன்ஸ்’ திரைப்பட விளம்பர போஸ்டரில் முதல்வரின் படத்தைக் கணினி மூலம் பொருத்தி அனுப்பப்பட்ட இமெயில் பலருக்கும் வந்தது. தற்போது, தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு படுபயங்கரமாக இருக்கிறபோது, பலருக்கும் வந்த குறுந்தகவல் இது: ‘ஆத்தா மிக்ஸி கொடுத்தா கிரைண்டர் கொடுத்தா கம்யூட்டர் கொடுத்தா... கரண்ட் கொடுக்கலியே...’ ஒரு மனக் கொதிப்பான வேளையில், அதை மறக்கச்செய்து, ஒரு மெல்லிய சந்தோஷத்தை விரித்து, நம்மை இலகுவாக்கிக்கொள்ள உதவுபவை இத்தகைய கேலிகள் - இதை விமர்சனம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.


இது ஒரு மனவெளிப்பாடு. படைப்பாற்றல் கொண்ட நபர் இதை நுட்பமான கேலிச் சித்திரமாக்குகிறார். அவ்வளவே.! இதற்காக அவர் கைது என செல்வது ஏற்கக் கூடியது அல்ல. மிகச் சாதாரண கிண்டலைப் பொறுத்துக்கொள்ளும் மனவலிமை இல்லாத முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னை இன்னும் மோசமாகக் கேலிக்கு உரிதாக்கிக் கொண்டிருக்கிறார். சிரித்து ஒதுக்கத் தெரியாமல் சிரிப்புக்கு ஆளாகியிருக்கிறார். இதற்கு முன் 1987-ல் ஆனந்த விகடன் அட்டையில் அரசியல்வாதிகளை தோலுரித்த ஒரு கார்ட்டூனுக்காக விகடன் ஆசிரியரைக் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவமும்... அதைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் பேராசிரியர் ஒருவர் கைதும் என தொடர்கிறது.

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ நாவலில் பெரிய அண்ணன் என்ற சர்வாதிகார கதாபாத்திரம் மிகப்பிரபலம். மேற்குவங்க மக்கள் மம்தாவை ‘பெரிய அக்கா’ என்கிறார்கள். நடப்பதையெல்லாம் பார்த்தால் பெரியண்ணன் மனோபாவ மாகத்தான் தெரிகிறது.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் மக்கள் பாலா.

புதன், மே 09, 2012

“எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்.!”லஞ்சம் வாங்குபவர்கள் குறைவான எண்ணிக்கையிலும், லஞ்சம் தருபவர்கள் அதிகமான எண்ணிக்கையிலும் இருப்பதால்தான், லஞ்சம் வளர்ந்து கொண்டே போகிறது என்கிறார் ‘லஞ்சம் வாங்காதீர்கள், கொடுங்கள்’ என்ற நூலின் ஆசிரயர் ஆர்.நடராஜன். இதற்கு ஓர் உதாரணம்:


இந்தியாவின் இடைக்கால பிரதமராக இரண்டு முறை இருந்தவர் குல்சாரிலால் நந்தா. லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்த ‘சதாச்சார் சமிதி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ‘லஞ்சம் வாங்கக்கூடாது, லஞ்சம் தரக்கூடாது’ - இவை இரண்டும்தான் இந்த சமிதியின் கொள்கைகள். ‘என்னுடைய அமைப்பில் நீங்களும் சேர வேண்டும்’ என்று ஸ்ரீபிரகாசாவைக் கேட்டுக்கொண்டார் நந்தா. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழக கவர்னராக இருந்தவர் இவர்.


‘நீங்கள் இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறீர்கள். ஒரு நிபந்தனையைத்தான் என்னால் ஏற்க முடியும்’ என்றார் ஸ்ரீபிரகாசா. விளக்கம் கேட்டார் நந்தா. ‘லஞ்சம் வாங்கக்கூடாது என்ற நிபந்தனை சரியானது. நான் வாங்க மாட்டேன். ஆனால் கொடுக்காதே என்று சொல்லாதீர்கள். லஞ்சம் கொடுக்காமல் என்னால் இருக்க முடியாது. எனக்கு காரியம் ஆக வேண்டாமா?’ என்றார் ஸ்ரீபிரகாசா. இது ஒரு கவர்னரின் மனநிலை மட்டுமல்ல. அப்பாவி மக்கள் முதல் அனைவரும் இப்படித்தான் நினைக்கிறார்கள். என்ன செய்ய?

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

செவ்வாய், மே 08, 2012

“சிக்கலைத் தகர்த்தெறிக.!”குறிப்பிட்ட முக்கியமான விசயங்களில் சிலரால் எதையும் உறுதியாகத் தீர்மானிக்க முடிவதில்லை. அவர்களிடம் சுயேச்சையான தீர்மான சக்தி இருப்பதில்லை. அவர்கள் அந்த விசயத்தை அர்த்தமின்றி தள்ளிப்போட்டுக் கொண்டே போவார்கள். அவர்கள் தீர்மானமான, உடன்பாடான முடிவுக்கு வரமாட்டார்கள். சந்தர்ப்பம் நழுவி விடும். குளிர் காலத்தில் தேன் சேகரிப்பது போல் காலந்தாழ்ந்து விடும்.


நீங்கள் ஒரு விசயத்தை சிறிது நேரம் ஆழ்ந்து சிந்தித்து ஒரு உறுதியான தீர்மானத்திற்கு வர முயல வேண்டும். உடனே உங்கள் மொத்த சக்தியையும் பிரயோகிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தை உடனே செயலில் காட்ட முற்பட வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் வெற்றியடைவீர்கள். அளவுக்கு மிஞ்சி சிந்தனையில் ஈடுபடுதல் காரியத்தைக் கெடுத்துவிடும்.

முக்கியமான விசயங்களில் உங்களை விட அதிக அனுபவமும், உங்கள் நலனில் உண்மையான நாட்டமுடையவர்களுமான மூத்தோர்களைக் கலந்து ஆலோசிப்பது நலம். “சிக்கலைத் தகர்த்தெறிக” என்ற முதுமொழியை நினைவில் வைத்திருங்கள். - சுவாமி விவேகானந்தர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, மே 05, 2012

போபர்ஸ் ஊழல் என்ன ஆகிறது?


போபர்ஸ் என்றால் என்ன?

போபர்ஸ் என்பது, சுவீடனின் பிரபல இரும்பு தொழில் நிறுவனம். சுவீடனின் கார்லஸ்கோ என்ற இடத்தில் இந்த நிறுவனம் உள்ளது. பீரங்கி தயாரிப்பில் சிறந்த நிறுவனமாக இது பிரபலம் அடைந்தது. இந்த நிறுவனம் கடந்த 1873-ல் தொடங்ப்பட்ட பழமையான நிறுவனம். தற்போது பி.ஏ.இ.போபர்ஸ், சாப் போபர்ஸ் என 2 பிரிவுகளாக செயல்படுகிறது. 2-ம் உலகப்போரின் போது, இந்நிறுவனம் தயாரித்த பீரங்கிகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

போபர்ஸ் ஒப்பந்தம்:

கடந்த 1985-ம் ஆண்டின் மத்தியில், நாட்டின் பாதுகாப்பு கருதி, ராணுவத் துக்காக நவீன பீரங்கிகள் வாங்க நடுவண் அரசு முடிவு செய்தது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. ராஜிவ் பிரதமராக இருந்தார். சுவீடனின் ஏ.பி.போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து ‘ஹவிட்சர்’ ரக பீரங்கிகள் வாங்க அரசு முடிவு செய்தது. 

ராஜீவ் காந்தி
இந்த விவகாரம், போபர்ஸ் நிறுவனத்தின் காது களுக்கு எட்டியது. உடனடியாக அந்த நிறுவனம் களத்தில் இறங்கியது. கடந்த 1985-ம் ஆண்டு நவம்பர் 15-ல், இத்தாலியை சேர்ந்த தொழிலதிபர் குட்ரோச்சியை, இந்த பேரத்தில் இடைத்தரகராக ஈடுபடுத்த முடிவு செய்தது. 1986 மார்ச் 31-ம் தேதிக்குள், இந்தியாவிடமிருந்து இந்த ஒப்பந்தத்தை பெற்று தந்தால், ஒப்பந்தத்தின் மொத்த தொகையில் 3 விழுக்காட்டை, குட்ரோச்சியின் ஏ.இ. சர்வீஸ் நிறுவனத்துக்கு தருவதாக, போபர்ஸ் நிறுவனம் கூறியது.

இதையடுத்து, போபர்ஸ் நிறுவனத்துக்கும், இந்தியாவுக்கும் இடையே, 1986 மார்ச் 24-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. 1437 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவுக்கு 400 பீரங்கிகளை போபர்ஸ் நிறுவனம் டெலிவரி செய்ய வேண்டும். முதல் தவணையாக போபர்ஸ் நிறுவனத்துக்கு 1986 மே 2-ம் தேதி, 296 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தியாவை பொறுத்த வரை, ராணுவத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் இடைத்தரகர் களை பணியில் அமர்த்த கூடாது என்ற விதிமுறை உள்ளது.

குட்ரோச்சி
அந்த விதிமுறைகளை மீறி, குட்ரோச்சி இந்த பேரத்தில் இடைத்தரகராக ஈடுபடுத்தப்பட்டார். குட்ரோச்சியை தவிர துபாயை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனங்களின் அதிபரான வின்சத்தா என்பவரும் இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக தகவல் வெளியானது.

வின்சத்தா:

Win Chadha

பீரங்கி பேரத்தில் இவரும் இடைத்தரகராக செயல்பட்டதாகவும், அதற்காக இவரது நிறுவனத்துக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதாக வும், மத்திய வருமான வரி தீர்ப்பாயம் கருத்து தெரிவித்தது. இவருக்கு எதிராக, 1999-ல் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த 2001 அக்டோபர் 24-ல் வின்சத்தா, மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். 

குட்டு உடைந்தது:

கடந்த 1987-ல் சுவீடன் ரேடியோ, ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டது. போபர்ஸ் நிறுவனம், இந்திய அரசிடம் இருந்து ஒப்பந்தத்தை பெறுவ தற்காக, இந்தியாவை சேர்ந்த வி.ஐ.பி.,களுக்கும், அதிகாரிகளுக்கும் 64 கோடி ரூபாய் கமிஷன் கொடுக்கப்பட்டதாக அதில் கூறப் பட்டது. இது, இந்திய அரசியலில் மட்டும் அல்லாமல், சுவீடனிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை பூதாகரமாக்கின. தற்போது ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்தியாவின் மூலை, முடுக்கெல்லாம் எப்படி பேசப்படுகிறதோ அதைபோல், அப்போது போபர்ஸ் விவகாரம் பேசப்பட்டது. இடைத்தரகராக செயல்பட்ட குட்ரோச்சி, இத்தாலியை சேர்ந்தவர் என்பதா லும், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவர் என கூறப்பட்டதாலும், போபர்ஸ் விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. மக்களும் இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து, கவனிக்க தொடங்கினர்.

ராஜிவ் மறுப்பு:

இதுகுறித்து லோக்சபாவில் பேசிய அப்போதைய பிரதமர் ராஜிவ், போபர்ஸ் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறப்படுவதை மறுத்தார். எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையவில்லை. போபர்ஸ் விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. கடந்த 1990-ல், இதுகுறித்து சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. குட்ரோச்சி மற்றும் வின்சத்தா ஆகியோரை கைது செய்யவும், நாடு கடத்தவும் மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளின் போலீசாருக்கு, சி.பி.ஐ., சார்பில் கடிதம் எழுதப் பட்டது.

குட்ரோச்சி மனு தள்ளுபடி:

கடந்த 1998-ல் தனக்கு எதிரான விசாரணையை தள்ளுபடி செய்யும்படி, குட்ரோச்சி சார்பில் டில்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, குட்ரோச்சி, வின்சத்தா, முன்னாள் பாதுகாப்பு துறை செயலர் பட்நாகர், போபர்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மார்டின் அர்ட்போ ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ., சார்பில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. குட்ரோச்சிக்கு எதிராக கைது வாரண்டும் பிறப்பிக்கப் பட்டது.

இந்துஜா சகோதரர்களுக்கும் சிக்கல்:

வெளிநாடுவாழ் இந்திய தொழில் அதிபர்களான இந்துஜா சகோதரர்களும் போபர்ஸ் விவகாரத்தில் மோசடி, ஊழல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 2002 நவம்பரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்த குட்ரோச்சியை, சி.பி.ஐ., கண்டுபிடித்தது. ஆனால், அவரை நாடு கடத்த முடியாது என, மலேசிய அரசு கூறிவிட்டது. கடந்த 2003-ல் குட்ரோச்சியின் வங்கி கணக்குகளை பிரிட்டன் அரசு முடக்கியது.


hinduja brothers

கடந்த 2004 பிப்ரவரி 4-ம் தேதி, போபர்ஸ் வழக்கில் இருந்து, முன்னாள் பிரதமர் ராஜிவை விடுவித்தது டில்லி ஐகோர்ட். அடுத்த ஆண்டிலேயே இந்துஜா சகோதரர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2009-ல் குட்ரோச்சியை கைது செய்ய முடியாததாலும், அவருக்கு எதிரான ஆதாரங்கள் இல்லாததாலும், இந்த வழக்கை முடித்து கொள்ள விருப்பம் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப் பட்டது. இதையடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது. டில்லி பெருநகர கோர்ட்டில் சி.பி.ஐ.யும் இதேபோல் மனுதாக்கல் செய்துள்ளது.

போபர்ஸ் கதை முடிகிறதா?

போபர்ஸ் பேரத்துக்காக குட்ரோச்சிக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை, பல வங்கி கணக்குகளுக்கு பயணித்து, இறுதியாக அவரது லண்டன் வங்கி கணக்குக்கு வந்தபோது, பிரிட்டன் அரசு அதை முடக்கியது. கடந்த 2004-ல், ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அந்த வங்கி கணக்கை பிரிட்டன் அரசு திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பணத்தை வேறொரு வங்கி கணக்குக்கு மாற்றி கொண்ட குட்ரோச்சி, அந்த பணம் முழுவதையும் வசப்படுத்திக் கொண்டார்.

இன்றுவரை, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு, மூச்சுக்கூட விடவில்லை. இந்நிலையில்தான் நாடாளுமன்றத்தில் போபர்ஸ் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தி பணம் பெற்றதற்கான ஆவணங்கள் இல்லை என இவ் வழக்கை விசாரித்த சுவீடன் காவல்துறை தலைவர் லின்டர்ஸ்டிரோம் தெரிவித்ததுள்ளார்.

இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக நீதி விசாரணைத் தேவை என்றும் பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளன. ஆனால், போபர்ஸ் வழக்கு முடிந்து போன ஒன்று என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, மே 04, 2012

கோயில் கொள்ளையன் கஜினி.!


கஜினி முகமது
கஜினி முகமது இந்தியாவின் மீது 17 முறை படைஎடுத்தார் அல்லவா? அப்போது, கைபர் பாதையைக் கடந்துதான் இந்தியாவுக்குள் வந்து இருக்கிறார். “கஜினியின் நோக்கம் நாடு பிடிப்பது இல்லை; கோயில்களில் கொள்ள அடிப்பதுதான்” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் எம்.ஆர்.ராஜகோபாலன். இவரது ஆய்வுப்படி, “கஜினி முகமது 16 முறை தோல்வி அடையவில்லை. அத்தனை போரிலும் கஜினி ஜெயித்து இருக்கிறார்” என்று குறிப்பிடுகிறார். அதோடு, இந்தப் படையெடுப்புகளின் விரிவான பட்டியலையும் முன்வைக்கிறார்.


கஜினியின் முதல் படையெடுப்பு கைபர் கணவாயை ஒட்டிய இந்தியாவின் எல்லை நகரங்களின் மீதான தாக்குதல். 2 கி.பி. 1001-ல் பெஷாவர் நகரங்களின் மீதான தாக்குதல். 3. பீராவின் மீது. 4. மூல்தான் மீதான தாக்குதல். இவை நடந்தது கி.பி. 1006-ல். அதன் பிறகு, 5. படையெடுப்பு நவாஸாவின் மீது. 6. நாகர்கோட். 7. நாராயண். 8. மறுபடியும் மூல்தான். 9. நிந்துனா. 10 தானேசர். 11.லோக்காட். 12. மதுரா மற்றும் கனோஜீ. 13. ராகிப். 14. லோக்காட் மற்றும் லாஹோர். 15. குவாலியர். 16. சோம்நாத். 17-வது முறை ஜாட் மன்னர்கள் மீது படை எடுத்துச் சென்று வென்று இருக்கிறான்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வியாழன், மே 03, 2012

பெட்ரோல், டீசலுக்கு பதில் எத்தனால்.!நினைத்தவுடன் பெட்ரோல் விலையை உயர்த்துவது இந்தியாவில் சகஜமான ஒன்று. ஆனால், உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை தங்கள் கட்டுப்பாட்டுக் குள் வைத்திருக்கின்றன. அப்படி கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளில் பிரேசிலும் ஒன்று.


பெட்ரோலின் பயன்பாட்டை குறைக்கவும், அதில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவும், 1927-ம் ஆண்டே எத்தனாலை வாகன எரிபொருளாக விற்பனை  செய்யத் தொடங்கிவிட்டது பிரேசில். இங்கு 1942-ல் எத்தனால் உற்பத்தி 16 ஆயிரம் டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் இதை 5 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் எத்தனால் உற்பத்தி 4.8 லட்சம் டன்தான். இதன் உற்பத்தியை பெருக்குவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வருட இறுதிக்குள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.100 ஆகவும், டீசல் விலையை ரூ.70 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.


பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பம் போல் பெட்ரோலுடன் எத்தனால் கலந்து கொள்ளலாம். மேலும் அங்கு எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டருக்கு ரூ.20 தான். இது மட்டுமன்றி எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர்.

பெட்ரோலுடன் 24 % எத்தனால் கலந்து ஓட்டலாம். இதற்கு வாகனத்தில் என்ஜினில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. இதேபோல் எத்தனால் 85 %, பெட்ரோல் 15 % கலந்து பயன்படுத்தலாம். இதற்கு என்ஜினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இதுபோக 100 % எத்தனாலில் ஓடும் வாகனங்களும் உண்டு. பிரேசிலில் உள்ள போர்டு நிறுவனம் 2 வகையான என்ஜின்களையும் தயாரித்து வருகிறது.


இந்தியாவில் எத்தனால் விலையை லிட்டர் ரூ.27 என்று அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,500 கொடுக்க வேண்டும் என்றால், எத்தனாலை லிட்டர் ரூ.32-க்கு விற்க வேண்டும் என்கிறார்கள். இதுதவிர மத்திய அரசின் வரி 16% விற்பனையாளர் கமிஷன் 5 %, போக்குவரத்து செலவு 50 பைசா இதர செலவுகள் 53 காசு ஆக மொத்தம் ஒரு லிட்டர் எத்தனால் ரூ.40 ஆகும்.

அமெரிக்கா போன்ற நாடுகள் ஒரு லிட்டர் எத்தனாலுக்கு ரூ.6 மானியமாக கொடுக்கின்றன. இந்தியாவிலும் இதுபோல் செய்தால், எத்தனால் உற்பத்தி அதிகமாகும். மக்களும் 70 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதை விட 24 % எத்தனால் கலக்கும் போது லிட்டருக்கு ரூ.9 குறையும். 85 % எத்தனாலை கலந்தால், ரூ.30 குறையும். சுற்றுச்சூழல் சீர்படும்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

செவ்வாய், மே 01, 2012

மௌனத்தால் வ(ரும்)ந்த நன்மை.!யுகதர்மம் என்றுள்ளது. அந்தந்த யுகங்களில் தர்மமும் மாறுவதுண்டு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என 4 யுகங்கள். தானே சென்று கொடுப்பர் கிருத யுகத்ததில்; கூப்பிட்டுக் கொடுப்பர் திரேதா யுகத்தில்; வந்து கேட்டால்தான் கொடுப்பர் துவாபர யுகத்தில்; கசக்கிப் பிழிந்து கேட்டால்தான் கொடுப்பர் கலியுகத்தில். நாம் இருப்பது இந்த யுகத்தில்தான்.


தர்ம தேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்டதால், இந்தக் கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்குதான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப்போது இல்லை. இனி, அடுத்த கிருத யுகம் வரும்போதுதான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இன்னும் பல வருடங்கள் இருக்குமாம்.

கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலியுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை புராணங்களில் காணலாம். முந்தைய யுகங்களில் பொய் சொல்ல பயப்படுவர். ஒருவர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பசுமாட்டைக் கொல்வதற்காக துரத்தி வந்தான் ஒருவன். அந்த பசு மாடு, இவர் பக்கமாக ஓடி வந்து, பக்கத்து சந்து வழியாக ஓடி தப்பித்துக் கொண்டது. 

திண்ணையில் உட்கார்ந்திருந்தவரிடம் வந்து, “இந்தப் பக்கம் ஒரு பசு மாடு வந்து போயிற்றா? என்று கேட்டான் துரத்தியவன். இவர் யோசித்தார்... பசு மாடு இந்தப் பக்கம் போயிற்று என்றால் அது உண்மை. உண்மையைச் சொன்னால், அவன் பசு மாட்டை தேடிப் போய் கொன்று விடுவான்; அந்தப் பாவம் நம்மைச் சேரும். பசு மாடு வரவில்லை என்றால் அது பொய்யாகி விடும்; அந்த பொய் சொன்ன பாவம் நமக்கு வரும்...” என்று யோசனை செய்தபடி பேசாமல் இருந்தார்.


பசுவை தேடி வந்தவன் இரண்டு, மூன்று தடவை கேட்டும், இவர் பதில் சொல்லவே இல்லை. “ஓகோ! இவர் செவிடு போலிருக்கிறது...” என்று நினைத்து திரும்பிப் போய் விட்டான். பசு மாடு தப்பியது; தான் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று சந்தோஷப்பட்டார். மௌனமாக இருப்பதும் கூட நல்லதுதான். அதிகம் பேசப், பேச அதுவே மனஸ்தாபத்தில் முடியும்.

அதனால்தான், சில பெரியவர்கள் மௌன விரதம் கடைப்பிடிப்பதுண்டு. இப்போது இளைஞர்களும் இதை உணர்ந்துள்ளனர்.! வீண் பேச்சு பேசினால்தானே விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. அகம் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசுபவர்களை யும் ஒதுக்க இந்த மௌனம் சிறந்த வழி என்பதை அறிந்தவர்கள் நம்மிடம் கூறியது உண்டு.! இதனால் வீண் விவாதம் இருக்காது. அதற்காக, பேசாமல் இருக்கவும் கூடாது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சாமர்த்தியமாக பேச வேண்டும்; ஆனால் சந்தர்ப்பவாதியாக இருக்கக்கூடாது என்பதே நம்முடைய வேண்டுகோள். உங்களால் முடியுமா?

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.