செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், ஜூலை 31, 2012

பிரணாப்புக்கு கிடைக்கும் வசதிகள்.!புதிய குடியரசுத்தலைவராக பதவியேற்றுள்ள பிரணாப்புக்கு மாத சம்பளமாக ஒன்றரை லட்சம் கிடைக்கும். பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையில் அவர் வசிப்பார். ஜனாதிபதி மாளிகையை பராமரிக்க 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். சிம்லாவிலும், ஐதராபாத்திலும் குடியரசுத்தலைவருக்கு ஓய்வு இல்லங்கள் உள்ளன. அவர் பயணம் செய்ய குண்டு துளைக்காத மெர்சிடெஸ் பென்ஸ் கார் வழங்கப்பட்டுள்ளது.


குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், மாத ஓய்வூதியமாக 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய அவர் விரும்பும் நகரத்தில் ஒரு பங்களாவும் வழங்கப்படும். மேலும், ஒரு கார், 2 டெலிபோன் இணைப்புகள், ஒரு செல்போன் இணைப்பு ஆகியவையும் வழங்கப்படும். அவருக்கு உதவியாக ஒரு தனிச்செயலாளர் உள்பட ஐந்து ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள். ஊழியர்கள் செலவுக்காக ஆண்டுக்கு 60 ஆயிரம் வழங்கப்படும்.விமானத்திலும்,ரெயிலிலும் மனைவியுடன் இலவசமாக பயணம் செய்யலாம்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

திங்கள், ஜூலை 30, 2012

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.!நாட்டின் 13 ஆவது குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க ஜூலை 19, 2012 ல் தேர்தல் நடந்தது. இதில், ஐக்கியமுற்போக்குக்கூட்டணி அரசின் வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்டக் கட்சிகளின் வேட்பாளராக பி.ஏ.சங்மா களமிறங்கினார். தேர்தல் முடிவுகள் ஜூலை 22 ல் அறிவிக்கப்பட்டன. அதன் படி பிரணாப் 7,13,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிரணி வேட்பாளரான பி.ஏ.சங்மாவுக்கு 3,15,987 வாக்குகள் கிடைத்தன.


பதிவான வாக்குகள் - 4659.
செல்லத்தக்கவை - 4578
மொத்த வாக்குகளின் மதிப்பு - 10,29,750
பிரணாப் பெற்ற வாக்குகள் - 3095.
வாக்குகளின் மதிப்பு - 7,13,763


பி.ஏ.சங்மா பெற்ற வாக்குகள் - 1483
வாக்குகளின் மதிப்பு - 3,15,987
செல்லாத வாக்குகள் - 81
வாக்குகளின் மதிப்பு - 18,221


இத்தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள 776 எம்.பி.க்களில் 748 பேர் வாக்களித்தனர். அதில் பிரணாப்புக்கு ஆதரவாக 527 பேரும், சங்மாவுக்கு ஆதரவாக 206 பேரும் வாக்களித்தனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் உள்ளிட்ட 9 பேர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக போட்ட வாக்குகளும், பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவாக போட்ட 6 வாக்குகளும் செல்லாதவையாகின.

கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த மாநிலத்தில் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தனர். கர்நாடகப் பேரவையில் மொத்தம் உள்ள 224 எம்.எல்.ஏக்களில் 223 பேர் வாக்களித்தனர். ஆளும் பாஜகவுக்கு 120 உறுப்பினர்கள் உள்ளனர்.


ஆனால், தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஆதரித்த சங்மாவுக்கு 103 வாக்குகளே கிடைத்தன. பிரணாப்புக்கு 117 வாக்குகள் கிடைத்தன. பிரணாப் முகர்ஜிக்கு 98 வாக்குகள்தான் (காங்கிரஸ் 71, மதசார்பற்ற ஜனதாதளம் 27) கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு கூடுதலாக 19 வாக்குகள் கிடைத்து இருக்கின்றன. கர்நாடகாவில் 3 வாக்குகள் செல்லாதவையாகின.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

பிராணாப்புக்கு ராசியான எண் ‘13’குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜிக்கு ராசியான எண் 13 என்று கூறப்படுகிறது. அந்த எண் ராசியற்றது எனப் பொதுவாக பலர் கருதும் நிலையில், பிரணாப்பின் வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் எல்லாம் இந்த எண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது. அவர் முதன்முதலாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டது 2001 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி. (அதற்கு முன் பல ஆண்டுகளாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்)
அவரது திருமணம் நடைபெற்றது 1957 ஆம் ஆண்டு ஜூலை 13. அவர் குடிரயரசுத்தலைவாரக ஆவதற்கு முன் வசித்து வந்த தால்கடோரா சாலையில் உள்ள கதவு எண் 13 கொண்ட வீட்டில்தான். மக்களவைத் தலைவராக இருந்த போது, நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு ஒதுக்கப் பட்ட அலுவலக அறை எண் 13. அவர் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், நாட்டின் 13 ஆவது குடியரசுத் தலைவராகத்தான். 

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

ஞாயிறு, ஜூலை 29, 2012

மன்மோகனிடம் சண்டைப்போட்ட பிரணாப்.!
முதன் முதலாக காங்கிரஸ் மையக்குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பிரணாப் முகர்ஜியை ‘சார்’ என்று அழைத்தார். பிரணாப்புக்கு செல்லக்கோபம் வந்துவிட்டது. இனி மையக்குழு கூட்டத்துக்கே வரமாட்டேன் என்று கூறினார். அதன் பின்னர்தான் பிரணாப்பை பிரதமர் ‘பிரணாப் ஜி’ என்றும், பிரணாப் முகர்ஜி மன்மோகன்சிங்கை ‘டாக்டர் சிங்’ என்றும் அழைப்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டது.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

துர்கா பூஜையை விடாத பிரணாப்.!மேற்குவங்க மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது துர்கா பூஜை. இதற்காக எவ்வளவு பெரிய அப்பாயிண்ட்மென்ட் இருந்தாலும் ஒத்திவைத்து விடுவார்கள். அதில் பிரணாப் முகர்ஜியும் விதிவிலக்கல்ல.! இதை அவரது தனிப்பட்ட வாழ்வில் விடமுடியாத பழக்கம் என்று கூட சொல்லலாம். ஆண்டு தோறும் ‘துர்கா பூஜை’ விழாவினை தனது சொந்தக் கிராமமான மிரதியிலுள்ள மூதாதையர் இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


இந்தியா - அமெரிக்கா இடையேயான சிவில் அணு ஒப்பந்தத்தில் அமெரிக்க மந்திரி காண்டலீசா ரைசுடன் கையெழுத்திடுவதையே ஒரு வாரம் ஒத்தி வைத்து, துர்கா பூஜையைக் கொண்டாடி மிரதி கிராமத்துக்கு சென்றார் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, ஜூலை 28, 2012

பிரம்மிப்பில் ஆழ்த்திய தொடக்க விழா.!எங்கும் ஒளிவெள்ளம்! உற்சாகம் பொங்க திரண்டிருந்த ரசிகர்கள்! கலை எழில் கொஞ்சிய ஏற்பாடுகள்! ஒலிம்பிக் போட்டியை 3ஆவது முறையாக நடத்தும் பெருமை பெற்றுள்ள லண்டன் மாநகரத்தில்தான் இந்த கவின்மிகு காட்சிகள்!  குழந்தைகளின் பாடலுடன் தொடங்கிய விழாவில், ஒலிம்பிக் சின்னமான ஐந்து வட்டங்கள் ஒளிவெள்ளத்தில் வானில் ஒன்று சேர்ந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.இதனையடுத்து பிரிட்டனின் எலிசபெத் அரசி மைதானத்துக்கு வருகை தந்ததும் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கம் முறைப்படி அறிவிக்கப்பட்டது. அப்போது அரங்கத்துக்குள் பிரிட்டனின் தேசியக் கொடி எடுத்து வரப்பட்டு ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஏராளமான கலைஞர்களின் ஆடல், பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறுவர்களையும் இளைஞர்களையும் கவரும் வகையில் நடைபெற்ற இக்கலை நிகழ்ச்சிகள் ரசிகர்களின் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து படைத்தன.அதன்பின்னர் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மைதானத்துக்குள் அணிவகுத்துச் சென்றனர். முதலாவதாக, ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமான கிரீஸ் நாட்டு வீரர்கள் தங்கள் தேசியக் கொடியுடன் அணிவகுத்துச் செல்ல, பின்னர் ஒவ்வொரு நாட்டு வீரர்களாக கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர். மல்யுத்த வீரர் சுஷில்குமார் நமது மூவர்ணக் கொடியை மிடுக்குடன் ஏந்திச் செல்ல, அவரது பின்னால் இந்திய வீரர்களும் வீராங்கனைகளும் அணிவகுத்து சென்றபோது,  ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 


முடிவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரிட்டன் வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர் ஜாக்குவஸ் ரோக் தொடக்க விழாவின் தலைமை உரையாற்றினார். பின்னர் பிரிட்டன் அரசி ஒலிம்பிக் போட்டிகள் குறித்த அறிவிப்பை  வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, தேம்ஸ் நதியின் வழியாக ஒளிவெள்ளத்திற்கிடையே படகில் கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் சுடரை இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் பெற்றுக் கொண்டார். இதன்பின்னர் ஒலிம்பிக் சுடர் வண்ணமயமான திடலின் நடுவே ஏற்றப்பட்டது.  

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்

லண்டன் ஒலிம்பிக் : கோலாகல தொடக்கம்.!லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. 4 மணிநேரம் நடைபெற்ற தொடக்க விழாவின் போது ஒளி வெள்ளத்தில் மிதந்த மைதானத்தில் ஆடல், பாடல்களுடன் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இசை நிகழ்ச்சிகளும் லட்சக் கணக்கான ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின. அடுத்த மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் நீண்ட நெடிய வரலாறு சுருக்கமாக...! 


வரலாறு :

கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியா நகரில் கி.மு. 776 ல் நடந்த விளையாட்டு போட்டியே முதலாவது ஒலிம்பிக். இப்போட்டியை அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ள 500 ஆண்டுகள் ஆனது. ஒலிம்பிக்கில் முதலில் தடகள போட்டிகள் மட்டுமே நடத்தப் பட்டன.  பின்னர் மல்யுத்தம், குத்துச்சண்டை, குதிரை யேற்றம், போன்ற விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன. பிற்காலத்தில், ரோம் மன்னர் முதலாம் தயோடோசியஸ் ஒலிம்பிக் போட்டிகளை தடை செய்தார். 

பல நூற்றாண்டுகள் நடத்தப்படாமல் இருந்த ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, 1894 ஆம் ஆண்டு ஒலிம்பிக் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி கிரேக்கத் தலைநகர் ஏதென்சில் 1896ம் ஆண்டு நடத்தப்பட்டது. தொடக்க காலங்களில், ஒலிம்பிக் போட்டிகள் உலக மக்களால் அறியப் படாமல் இருந்தது. 


1924ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற்ற போட்டிகள்தான் முழுமையான ஒலிம்பிக் போட்டிகள் எனலாம். அதன் பின்னர், நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட பல சாதனைகள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தன. குறிப்பாக, கார்ல் லூயிஸ், செர்ஜி புப்கா, மைக்கேல் ஜான்சன், உசேன் போல்ட் ஆகிய வீரர்களின் சாதனைகள் மறக்க முடியாதவை. 1940 - 44 ஆண்டுகளில் உலகப்போர் காலத்தில் மட்டும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. 

மூன்றாவது முறையாக லண்டனில் :


2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி 3வது முறையாக லண்டனில் நேற்று (28-7-12) நள்ளிரவு தொடங்கியது. இதில் 204 நாடுகளை சேர்ந்த10 ஆயிரத்து 500 வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் கனவுடன் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 81 பேர் பங்கேற்றுள்ளனர். லண்டன் ஒலிம்பிக்கை பிரிட்டன் ராணி 2 ஆம் எலிசபெத் தொடங்கி வைத்தார்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்

பிரணாப்பின் நெடிய அரசியல் பாதை.!இதுவரை காங்கிரஸ் தலைமையிலான அரசிலும், அக்கட்சியிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த பிரணாப், இந்தியாவின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 76 வயதாகும் பிரணாப்பிற்கு  ஆட்சியிலும், அரசியலிலும் 45 ஆண்டுகள் அனுபவம் உள்ளவ ராவார். 

இந்திராவுக்குப் பிறகு ராஜீவ்காந்தி, அவருக்கு பிறகு நரசிம்மராவ், தொடர்ந்து மன்மோகன்சிங் என நான்கு தலைவர்களின் மந்திரிசபையிலும் பிரணாப் முகர்ஜி தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தைப் பெற்று அரசியலில் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்தார். எமர்ஜென்சி காலகட்டத்தில் அதிகாரமுள்ள வருவாய்த் துறை இணையமைச்சராகப் பணியாற்றினார். 

ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி, உயரிய அரசியல் சட்டபதவிக்கு செல்வதன் மூலம் புதிய பயணத்தை துவக்கியுள்ளார். எனவே குடியரசுத்தலைவராகவும் அவரது பணி சிறப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


குடும்பம் :

பிரணாப் முகர்ஜி, 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் மிரதி என்ற கிராமத்தில் பிறந்தார். குலீன் பிராமண இன குடும்பத்தை சேர்ந்தவர். பிரணாப்பின் தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர். 

1952 - 64 வரை காங்கிரஸ் சார்பில் மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். பிரணாப் முகர்ஜி 1957 ஜூலை 13 ஆம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித் முகர்ஜி மேற்குவங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

அரசியல் வாழ்க்கை :


பிரணாப் எம்.ஏ. அரசியல், அறிவியில், எம்.ஏ. வரலாறு ஆகிய பட்டங்களை பெற்றவர். கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் வழக்குரைஞர், ஆசிரியர், பத்திரிகை யாளராக பணியாற்றிய  அனுபவம் உண்டு. பிரணாப்பின் அரசியல் வாழ்க்கை 1960-ல் தொடங்கியது. மேற்குவங்காள மாநிலத்தின் மங்களா காங்கிரஸில் இணைந்த அவர், குறுகிய காலத்திலேயே அம்மாநிலத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். 

1969 ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரணாப் மாநிலங்களவைக்கு உறுப்பினராகவே இருந்தார். 1969, 1975, 1981, 1993 மற்றும் 1999 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில்தான் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 

அப்போது மேற்குவங்கத்தின் ஜான்கிபூர் தொகுதியில் போட்டி யிட்டு வென்றார். 2009 ஆம் ஆண்டில் மீண்டும் அதேதொகுதியில் வெற்றி பெற்றாலும், தனக்கு வயதாகவிட்டதால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பிரணாப் தெரிவித்திருந்தார். 

முக்கிய பொறுப்புகள் வகித்தவர் :


1973 ஆம் ஆண்டு அவரது 39 வயதிலேயே மத்திய தொழில் வளர்ச்சித்துறை இணையமைச்சராக்கி அழகுப் பார்த்தார் இந்திரா. அவரது அமைச்சரவையில் 1982 முதல் 1984 வரை நிதியமைச்சராக பணியாற்றினார். அப்போதுதான் தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை பிரணாப் முகர்ஜி ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமித்தார்.

1984-ல் பிரிட்டனை சேர்ந்த ஈரோமனி நாளிதழ், பிரணாப்பை உலகின் சிறந்த நிதியமைச்சராக தேர்வு செய்து பாராட்டியது. 1980 முதல் 1985 வரை பிரதமருக்கு அடுத்தப்படியாக அவரது தலைமையில்தான் மத்திய அமைச்சரவை கூட்டங்கள் நடைபெற்றன.

1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி காலத்துக்குப் பின், பிரணாப் பிரதமராக விரும்பினார். ஆனால், அந்த எண்ணம் நிறைவேறவில்லை. இதனால் அதிருப்தி யடைந்து காங்கிரஸில் இருந்து வெளியேறி ராஷ்டிரிய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற தனிக் கட்சி தொடங்கினார். பின்னர் ராஜீவ் காந்தியுடன் சமரசம் செய்து கொண்டு தனது கட்சியை மீண்டும் காங்கிரஸில் இணைத்தார். 


அதன் பின்னர் கட்சியிலும், ஆட்சியிலும் அவரது வளர்ச்சி எவராலும் தடுக்க முடியாததாக மாறி போனது. 1978-ல் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்க காரியக்கமிட்டி உறுப்பினர் ஆனார். அதே ஆண்டு காங்கிரஸ் பொருளாளராகவும் உயர்ந்தார்.

நிதியமைச்சர் பிரணாப் :

1980-ல் மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1987 முதல் 1989 வரை கட்சியின் பொருளாதார ஆலோசனைப் பிரிவின் தலைவராகவும் பணி புரிந்தார். 1991 முதல் 1996 வரை பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த போது திட்டக்குழுத் துணைத் தலைவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் என இரு முக்கியப் பொறுப்புகளை பிரணாப் வகித்தார். 

பாதுகாப்பு, வர்த்தகத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2004 - 2006 ஆம் ஆண்டுகளில் ராணுவ அமைச்சராகவும், 1995 முதல் 1996 வரை, 2006 முதல் 2009  வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். 

கடைசியாக 2008 ஆம் ஆண்டில் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து ப.சிதம்பரம் மாற்றப்பட்டபோது பிரணாப் மீண்டும் நிதியமைச்சரானார். அவர் 2012 ஜூன் 15 ஆம் தேதி ஐ.மு.கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் ஜூன் 26 ஆம் தேதி நிதியமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.

சமாதானத் தூதுவர் பிரணாப் :

கடந்த எட்டு ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பிரணாப் முக்கிய பங்காற்றி வந்தார். கூட்டணி கட்சிகளுடன் ஏற்படும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பது, அரசில் முக்கிய முடிவுகளை எடுப்பது உள்ளிட்ட பணிகளில் அவரது பங்களிப்பு சிறப்பானது. அரசியல் சாசன சட்ட விசயங்களிலும், அரசு நிர்வாகத்திலும் தனித்திறமை உடையவாரக இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராகவும் பதவி வகித்தார். இதுதவிர காங்கிரஸ் கட்சி அளவிலும் பல உயரிய பொறுப்புகளில் இருந்துள்ளார். மத்திய அரசில் 2 ஆவது இடத்தைப் பிடித்திருந்த அவர், இந்திரா காலத்தில் இருந்தே காங்கிரஸ் தலைமையிலான நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். 


நடமாடும் பல்கலைக்கழகம் என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எப்போது கேட்டாலும் நினைவு கூர்ந்து சொல்லக்கூடியவர் பிரணாப் என்று அக்கட்சியினரே வியக்கும் அளவுக்கு ஞாபக சக்தி அதிகமுள்ளவர். வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம், பிரணாப் முகர்ஜிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து இருக்கிறது. 

அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக 5 நூல்களை வெளியிட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதி விருதையும், 2007 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

ஞாயிறு, ஜூலை 22, 2012

ஜனாதிபதியானார் பத்திரிகையாளர்.!நாட்டின் 14 ஆவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் அரசியலில் நுழைந்து காங்கிரசில் படிப்படியாக முன்னேறியவர். இவருடைய ‘பிரதமர் கனவு’ நிறைவேறாவிட்டாலும் அதைவிட உயரிய பதவி இன்றைக்கு கிடைத்திருக்கிறது. 

பத்திரிகையாளர்:


மேற்குவங்க மாநிலம் மிர்தி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த பிரணாப், 3 முதுகலைப் பட்டங்களைப் பெற்று கல்லூரி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர்.அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆசிரியர், பத்திரிகை யாளராக பணியாற்றியுள்ளார். 1960-ல் காங்கிரசில் இணைந்த அவர், குறுகிய காலத்திலேயே கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். 1969ல்  மாநிலங்களவை உறுப்பினரானார்.

1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தியின் மறைவுக்குப் பின், பிரதமராக விரும்பினார். ஆனால், அந்த ஆசை நிறைவேறாததால், அதிருப்தியடைந்து காங்கிரசிலிருந்து வெளியேறி கட்சி தொடங்கி, சிறிது காலத்துக்குப் பின்னர் மீண்டும் கட்சியில் இணைந்தார். நடமாடும் தகவல் களஞ்சியம், அரசியல் சாணக்கியர் என அறியப்பட்ட பிரணாப், கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிகளிடையேயும் பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் சமாதானத் தூதுவராக செயல்பட்டார்.


முதல் குடிமகன் :

1973ஆம் ஆண்டு நடுவண் அரசில் தொழில் வளர்ச்சித்துறை இணை யமைச்சரான பிராணாப், அதன்பின்னர் நிதி. பாதுகாப்பு, வெளியுறவு, வர்த்தகம், என பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக 5 நூல்களை படைத்துள்ள பிரணாப் முகர்ஜி, சிறந்த நாடாளுமன்றவாதி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று இன்று நாட்டின் முதல் குடிமகன் என்ற உயரிய பதவியை அடைந்துள்ளார்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, ஜூலை 13, 2012

வண்ணமயமான வாழ்க்கை.!மனிதர் தூக்கத்தில் காணும் கனவுகளில் வர்ணங்கள் தெரியாது என்றும், எல்லாம் கறுப்பு - வெள்ளைப் பிம்பங்கள்தான் என்றும் ஒரு அமெரிக்க ஆய்வர் கூறுகிறார். நாம் கண்களால் பொருள்களைப் பார்க்கிற போது அவற்றின் பிம்பம் விழித்திரையில் விழும். அதிலுள்ள கூம்பு ஸெல்களும், தண்டு ஸெல்களும் பிம்பத்தைப் பகுப்பாய்வு செய்து வெவ்வேறு நிறங்களுக்கு வெவ்வேறு மின் சைகைகளை மூளைக்கு அனுப்பும். மூளை அவற்றைத் தொகுத்துக் கலர்க் காட்சியாக மாற்றிக் காட்டுகிறது.


கனவு காண்பதில் விழித்திரையின் பங்குப் பணி ஏதுமில்லை. எனவே கனவுகள் கறுப்பு - வெள்ளையாகத்தான் தெரியும். ஆனாலும் நம் மனதில் உள்ள முன்பதிவுகள் காரணமாக கறுப்பு - வெள்ளை ஒளிப்படங்களை அல்லது திரைப்படங்களைப் பார்க்கிறபோது குங்குமம் சிவப்பு, கூந்தல் கறுப்பு என்று கற்பித்துக்கொண்டு விடுவைப்போலவே கனவுகளிலும் கலர்களைக் கற்பித்துக் கொண்டுவிடுகிறோம் என்றும் அந்த ஆய்வர் கூறுகிறார்.

கலர் இல்லாத கனவு எல்லாம் ஒரு கனவா? நல்ல வேளையாக நனவுலகம் கலர்ஃபுல் லாக உள்ளது. கட்டடங்களுக்குப் பூசும் வர்ணங்களை முடிவு செய்ய அதற்கென்று ள்ள ஆலோசகர்கள் வாஸ்து, மருத்துவம், மனோதத்துவம் என்று பல உத்திகளைக் கையாள்கிறார்கள். நீலமும் பச்சையும் உடலையும் மனதையும் நலமாக்கும். அதனால தான் மருத்துவமனைகளில் நீல நிறச்சீருடைகளையும் மறைப்புகளையும் விரிப்பு களையும் பயன் படுத்துகிறார்கள். 


சிவப்பு ஆற்றலையும் வேகத்தையும் அதிகாரத்தையும் அடையாளப் படுத்துவது. வெள்ளையர் ஆட்சியில் சிவப்புத் தொப்பி (காவல்துறை)யைக் கண்டாலே மக்களுக்கு உதறல் எடுக்கும். காவல் நிலையங்களும் அரசு அலுவலகங்களும் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலிருக்கும். எல்லா நிறங்களும் அடங்கியதான வெண்மை மனதை அமைதிப்படுத்தும். மருத்துவர்களும் தாதிகளும் வெள்ளைச் சீருடை அணி வதன் நோக்கம் நோயாளியின் அச்சத்தை தணிப்பது ஆகும்.


நிறமில்லாத நிலையான கறுப்பு வெறுப்பு, எதிர்ப்பு, துயரம் ஆகியவற்றின் சின்னமாகப் பயன்படுத்தப்படுகிறது. துறவிகள் அணியும் காவி தீயின் குறியீடாக அமைந்து சிதையை நினைவூட்டி எல்லா உயிர்களும் இறுதியில் மடிந்து போகும் எனும் உண்மையைச் சுட்டிக்காட்டும். கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வதை விட நீல வானத்தில் அல்லது பசும்புல் வெளியில் ஒரு புள்ளியைக் கண்ணிமைக்காமல் பார்ப்பதன் மூலம் மனதை விரைவாக ஒருமுகப்படுத்திக் குவித்து மோன நிலையை அடைய முடியும் எனச் சில யோகிகள் கூறுகிறார்கள்.

அந்த உத்தி கண்ணுக்கு வலுவூட்டிப் பார்வையை மேம்படுத்தும் என மருத்துவர்கள் கருதுகிறார்கள். நீல வானையும் நீலக்கடலையும் கூர்நோக்குச் செய்வதன் மூலம் அவற்றின் விசாலத்தை மனதில் நிரப்பிச் சிந்தனைகளற்ற வெற்றிடமாக்க முடியும். குளிர்பருவங்களில் அடர்நிற ஆடைகளை அணிவது உடலில் கதகதப்பை உண்டாக்கும் எனவும் வெப்பப் பருவங்களில் வெளிர்நிற ஆடைகளை அணிவது உடலைக் குளிர வைக்கும் எனவும் உடையலங்கார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிற சிகிச்சை பற்றிய கருத்துகள் புராதன இந்திய, சீன, எகிப்திய மருத்துவர்களால் சுவடி நூல்களில் குறித்து வைக்கப்பட்டுள்ளன. அவை தற்காலத்தில் உயிர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. சில நிறங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் பயக்கும். வேறு சில ஊறு விளைவிக்கும். வீடுகளையும் அறைகளையும் சரியான நிறங்களில் அமைத்து நலம் பெறலாம் என நிற சிகிச்சை நிபுணர்கள் கூறுகிறார்கள். வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் ஆகியவற்றின் நுழைவாயில்களிலும் முகப்பு களிலும் ஊதா நிறத்தைப் பூசினால் வருகிறவர்களின் உடலும் மனதும் சஞ்சலம் நீங்கித் தொழுகை அல்லது சிகிச்சை அல்லது கற்றலுக்கு ஆயத்தமாகும்.

படுக்கையறை, படிப்பறை, பணியறை, ஓய்வறை ஆகியவற்றில் கரு நீல நிறத்தைப் பூசினால் உள்ளுணர்வுகளும் ஆன்மிக அறிவுகளும் கூர்மையாகும். நீல நிற அறைகள் இறுக்கத்தைத் தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தி உபாதைகளைக் குறைக்கும். மனம் விட்டு வெளிப்படையாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஊக்கமளிக்கும். அடர் பச்சை நிறச் சுவர்களில் இடையிடையே வெளிர் பச்சைப் பரப்புகளை அமைப்பது சமநிலை, இணக்கம், சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றை மேம்படுத்தும்.


மஞ்சள் பூச்சு மனதில் சுறுசுறுப்பையும் உஷார் தன்மையையும் வளர்க்கும். ஆரஞ்சு நிறம் படைப்பாற்றல், உல்லாசம், உறவுச் சமநோக்கு ஆகியவற்றை மேம்படுத்தும். சிவப்பு நிறம் உணர்ச்சிகளையும் பசியையும் தூண்டும். அது உணவகங்களுக்கு ஏற்றது. ஆனால், சிவப்பு நிறச் சுவர்கள் அறையின் பரிமாணங்களைக் குறைத்துக் காட்டும். அறைகளின் உட்கூரை வெள்ளையாக இருப்பது நல்லது. ஒரு குறிப்பிட்ட நிறம் குறிப்பிட்ட நல்விளைவுகளை உண்டாக்குவதாயிருந்தாலும் அதையே எல்லா இடங்களிலும் அளவுக்கு மீறிப் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.

அண்டை வீட்டுக்காரர்கள் உங்களுடன் சுமுகமாகப் பழகாமலிருந்தால் அதற்கு உங்கள் வீட்டின் வெளிச்சுவர்களில் உள்ள நிறங்களின் தாக்கம் காரணமாயிருக்க லாம். பச்சை, நீலம், ஊதா ஆகியவற்றை வெளிர் நிறத்தில் சுவர்களில் பூசி அடர் நிறத்தில் விளிம்புப் பட்டைகளை அமைப்பதன் மூலம் அண்டை வீட்டுக்காரர்கள் அன்பைப் பெறலாம். உயர்குலம், நல்லொழுக்கம், அறிவாற்றல், உடல்நிலம், தூய்மை ஆகியவற்றைக் குறிக்கும் பெயரடையாக நீலம் பயன்படுத்தப்படுகிறது.


நிறுவன வரவு செலவு அறிக்கைகளில் கறுப்பு லாபமாக இயங்குவதையும் சிவப்பு நட்டத்தில் இயங்குவதையும் குறிக்கின்றன. ஆங்கிலத்தில் வெள்ளைப் பொய் நல்ல நோக்கத்தில் சொல்லப்படுவது. கறுப்புப் பொய் தீய நோக்கமுள்ளது. தமிழில் பச்சைப் பொய், பச்சை பச்சையாகப் பேசுவது ஆகியவை வெறுப்புக்குரியவை. ஆனால், பச்சைத்தமிழன் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர்.

மஞ்சள் முகமே வருக என வரவேற்கலாம். மஞ்சள் பத்திரிகை புறக்கணிக்கப்பட வேண்டியது. மஞ்சள் கடுதாசி தவிர்க்கப்பட வேண்டியது. சிவப்பு விளக்கு, சிவப்பு விளக்குப்பகுதி ஆகியவை எச்சரிக்கை செய்கிறவை. இளஞ்சிவப்பு ஆரோக்கியம், புகழ், பெருமை ஆகியவற்றின் உச்சத்தைக் குறிப்பது. பச்சைக்கொடியும் பச்சை விளக்கும் தொடர்ந்து முன்னேறு என அறிவிப்பவை.

கட்டுரையாளர்: கே.என்.ராமச்சந்திரன்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.