செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

சாதனைக்கு ஒரு புத்தகம்நாள்தோறும் உலகில் பலர் சாதனை புரிகிறார்கள். அந்த சாதனைகள் வெறும் வார்த்தைகளுடன் மட்டும் நின்று போகாமல் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் படி உருவாக்க நினைத்தார்கள். அந்த புத்தகம்தான் கின்னஸ்.
அயர்லாந்தை நாட்டை சேர்ந்த சர்க்யூபீவர் என்பவர்தான் கின்னஸ் புத்தகத்தை உருவாக்கினார். சாதனைகள் அத்தனையையும் கொண்ட இந்த புத்தகத்தை தன் ஒருவனால் எழுத முடியாது என்று உணர்ந்தார். அதற்காக லண்டன் சென்றார். பிரிட்டன் அரசாங்கத்திற்கு புள்ளி விவரங்களை சேகரிக்கும் நோரிஸ் மைக் வைகட்டர் மற்றும் ரோஸ்மைக் வைகட்டர் என்ற இரட்டையர்களை சந்தித்து தனது யோசனையை சர்க்யூபீவர் தெரிவித்தார். அவர்களும் முழு மனதுடன் ஒத்துழைப்பு தர முன்வந்தார்கள். 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் வெளிவந்தது. 198 பக்கங்களைக் கொண்டதாக அது இருந்தது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் வெளிவருகிறது. 

இடையில் 1957 மற்றும் 1959 ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்த புத்தகம் வெளிவரவில்லை. அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.  முன்பெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே கின்னஸ் புத்தகம் வெளிவந்தது. இப்போது 40க்கும் மேற்பட்ட மொழிகளில் ‘கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ வந்து கொண்டிருக்கிறது. இதில் இடம்பிடிக்கத்தான் எத்தனை எத்தனை விதமான போட்டிகள்.! புத்தகத்தை ஒரு முறை வாங்கிப் படித்து பாருங்கள் மலைத்துப் போய்விடுவீர்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

புனிதர் அன்னை தெரசா.!யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரசா. பிறந்தது 1910 ஆகஸ்ட் 27-ம் நாள். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயால் வளர்க்கப்பட்டவர். 1929-ல் இந்தியாவிற்கு வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 


அன்னை வசதியற்ற வீட்டுப் பிள்ளைகளுக்குத்தாமே கல்வி கற்பித்திருக்கி றார்.ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தவர்களைத் தத்தெடுத்து அவர்கள் நிம்மதியாய் மரணத்தை ஏற்கச் செய்வதற்காக ‘நிர்மல் இதயம்’ என்ற ஆசிரமத்தை ஏற்படுத்தினார்.

மனிதனின் முதல் தேவை அன்புதான் என்பதை உணர்ந்த தெரசா, தொழு நோயாளிகளுக் கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சேவையை விரிவுபடுத்தினார். தொழு நோயாளிகளுக்கு என்று ‘ப்ரேம் நிவாஸ்’ இல்லம் தொடங்கினார். அன்னையின் தொண்டு இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஆஸ்திரேலியா, வெனிசுலா, கொலம்பியா, ஜோர்டான், ஏமன், ரோம், பொலிவியா ஆகிய நாடுகளிலும் கிளை விரித்திருக்கிறது.


1962-ல் பத்மஸ்ரீ விருது, 1962-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘ராமோன் மக்ஸேஸே’ விருது, 1971-ல் போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் ‘நல்ல சமாரித்தான் விருது’, 1972-ல் சர்வதேச நேரு சமாதனாப் பரிசு, 1976-ல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம் இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.

இந்திய அரசு அவருடைய நினைவாய் தபால் தலை வெளியிட்டிருக்கிறது. 1980-ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கிக் கவுரவித்தது. அன்னை தெரசாவின் பணியைப் போற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு 1979-ல் வழங்கப்பட்டது. வாட்டிகன் நகரம் ‘புனிதர்’ பட்டத்தை வழங்கியுள்ளது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இப்படி,தமது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மற்றவர்களின் நலனுக்காகவே செலவிட்ட அன்னை 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் மரணமடைந்தார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, ஆகஸ்ட் 25, 2012

ஜனாதிபதி தேர்தல் விசித்திரங்கள்.!  • 1952 ஆம் ஆண்டு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் 5 பேர் போட்டியிட்டனர்.
  • ஜனாதிபதி தேர்தலில் ஆர்.கே.நாராயணன்தான் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் (9,05,659) வெற்றி பெற்றவர்.
  • குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் (87,967) வெற்றி பெற்றவர் வி.வி.கிரி.
  • 1967 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகபட்சமாக 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 9 வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. 

  • இதற்கு அடுத்ததாக 1969 ஆம் ஆண்டு தேர்தலில் 15 பேர் போட்டியிட்டனர். இதில் 5 வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
  • போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி. மேலும் லோக்சபா சபாநாயகராக இருந்த ஜனாதிபதியானவர் இவர் மட்டுமே.
  • 1974, 1982, 1987, 1997, 2002, 2012 ஆகிய தேர்தல்களில் 2 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டனர்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

இந்திய ஜனாதிபதிகள் - ஓர் பார்வை.!1. ராஜேந்திர பிரசாத் 
பதவிக்காலம்: 13.5.1952 - 13.5.1957
வாக்குகள்: 5,07,400
இரண்டாமிடம் : கே.டி.ஷா
வாக்குகள்: 92,827 
வித்தியாசம் : 414573

2. ராஜேந்திர பிரசாத்
பதவிக்காலம்: 13.5.1957 - 13.5.1962
வாக்குகள்: 4,59,698
இரண்டாமிடம்: என்.என்.தாஸ்
வாக்குகள்: 2,000
வித்தியாசம்: 4,57,698

3. எஸ்.ராதாகிருஷ்ணன்
பதவிக்காலம்: 13.5.1962 - 13.5.1967
வாக்குகள்: 5,53,067
இரண்டாமிடம்: ஹரிராம்
வாக்குகள்: 6,341
வித்தியாசம்: 5,46,726

4. ஜாகீர் உசேன்
பதவிக்காலம்: 13.5.1967 - 13.5.1969
வாக்குகள்: 4,71,244
இரண்டாமிடம்: சுப்பாராவ்
வாக்குகள்: 3,63,971
வித்தியாசம்: 1,07,273

5. வி.வி.கிரி 
பதவிக்காலம்: 24.8.1969 - 24.8.1974
வாக்குகள்: 4,01,515
இரண்டாமிடம்: நீலம்சஞ்சீவ ரெட்டி
வாக்குகள்: 3,13,548
வித்தியாசம்: 87,967


6. பக்ருதீன் அலி அகமது 
பதவிக்காலம்: 24.8.1974 - 21.2.1977
வாக்குகள்: 7,65,587
இரண்டாமிடம்: சதூரி 
வாக்குகள்: 1,89,196
வித்தியாசம் 5,76,391

7. நீலம் சஞ்சீவ ரெட்டி 
(போட்டியின்றி தேர்வு)
பதவிக்காலம்: 25.7.1977 - 25.7.1982

8. ஜெயில்சிங் 
பதவிக்காலம்: 25.7.1982 - 25.7.1987
வாக்குகள்: 7,54,113
இரண்டாமிடம்: எச்.ஆர்.கண்ணா
வாக்குகள்: 2,82,685
வித்தியாசம்: 4,71,428

9.ஆர்.வெங்ட்ராமன் 
பதவிக்காலம்: 25.7.1987 - 25.7.1992
வாக்குகள்: 7,40,148
இரண்டாமிடம்: கிருஷ்ண ஐயர் 
வாக்குகள்: 2,81,550
வித்தியாசம் 4,58,598

10.சங்கர் தயாள் சர்மா
பதவிக்காலம்: 25.7.1992 - 25.7.1997
வாக்குகள்: 6,75,804
இரண்டாமிடம்: ஜி.ஜி.ஸ்வெல்
வாக்குகள்: 3,46,485
வித்தியாசம்: 3,29,319

11. கே.ஆர்.நாராயணன்
பதவிக்காலம்: 25.7.1997 - 25.7.2002
வாக்குகள்: 9,56,290 
இரண்டாமிடம்: டி.என்.சேஷன்
வாக்குகள்: 50,631
வித்தியாசம்: 9,05,659

12. ஏ.பெ.ஜெ.அப்துல் கலாம்
பதவிக்காலம்: 25.7.2002 - 25.7.2007
வாக்குகள்: 9,22,884
இரண்டாமிடம்: லட்சுமி ஷேகல்
வாக்குகள்: 107366 
வித்தியாசம்: 8,15,518

13. பிரதீபா தேவி சிங் பாட்டீல் 
பதவிக்காலம்: 25.7.2007 - 25.7.2012 
வாக்குகள்: 6,38,116
இரண்டாமிடம்: ஷெகாவத்
வாக்குகள்: 331306
வித்தியாசம்: 3,03,810

14 பிரணாப் முகர்ஜி 
பதவிக்காலம்: 25.7.2012 முதல்... 
வாக்குகள்: 713763
இரண்டாமிடம்: பி.ஏ.சங்மா 
வாக்குகள்: 3,15,987
வித்தியாசம்: 397776

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

விமர்சனத்திற்கு பயப்படலாமா.?“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிறார் வள்ளுவர். அறிவுரையோ விமர்சனமோ யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் உள்நோக்கம் அற்ற உண்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதே வள்ளுவர், விமர்சனம் செய்பவர் களுக்கும் ஓர் இலக்கணம் சொல்கிறார். “நன்றாற்றலுள்ளும் தவறுண்டாம் அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை” அதாவது நீ நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சொல்கிறாய். ஆனால், அது யாருக்கு செய்கிறாய் என்பது முக்கியம். பண்பற்ற மனிதர்களுக்கு நல்லது செய்தாலும் அது தவறுதான் என்கிறார். ஆட்சியாளர்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்குமே இவைப் பொருந்தும்.!


அதை விடுத்து, “உண்மையை சொன்னால் (கொடநாட்டில் இருந்து ஆட்சிப் புரிகிறார் ஜெயலலிதா)உடனே புகழுக்கும்,பெயருக்கும் களங்கம் விளைவிப் பதாகக் கூறி அவதூறு வழக்குத் தொடருவது என்ன நியாயம்.? இது இங்கு மட்டுமல்ல. பெண் தலைமை வகிக்கும் மேற்கு வங்கத்திலும் உள்ளது. கார்ட்டூன் வரைந்ததற்காக பேராசிரியர் கைது... பொதுக் கூட்டத்தில் எதிர்த்துக் கேள்விக் கேட்டவர் கைது என்று அடாவடியில் ஈடுபடுவது மம்தாவுக்கும் புதிது அல்ல.! விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் எப்படி நிர்வாக ஆளுமை பெற்றிருப்பர் என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

முயற்சிக்கத் தவறக்கூடாது.!“நான் இளைஞனாக இருந்தபோது 10 காரியங்கள் செய்தால் அதில் 9 தோல்வி அடைவதைப் பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையில் தோல்வி அடைவதை நான் விரும்பவில்லை. 9 தடவை வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்த போது, எனக்கு ஓர் உண்மை பளிச்சென்று விளங்கியது. 90 முறை முயன்றால் 9 தடவை வெற்றி கிடைக்கும் என்பதுதான் அது. ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்” என்றார் பெர்னாட்ஷா.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

திங்கள், ஆகஸ்ட் 20, 2012

பட்டினிச்சாவு பீதியில் இந்தியா?!ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதி உணவு தானிய உற்பத்திக்கு இயற்கை பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாகவே, நல்ல விளைச்சல் வந்த காலகட்டம் இது. அதுவும் கடந்த ஆண்டு இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச உணவு தானிய விளைச்சல் கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலிலேயே, அரிசி விலை உயர்ந்து கொண்டே இருக்கும் போது, பற்றாக்குறை ஏற்பட்டால் என்னவாகும்?


“பயப்படத் தேவை இல்லை. இன்னும் ஓர் ஆண்டுக்கான அரிசி சேமிப்பில் இருக்கிறது” என்கிறார் உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ். ஆனால், இவர்களை நம்ப முடியாது. கடந்த 2009ல் நாட்டின் 177 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியபோது, “பயப்பட வேண்டாம். இன்னும் 30 மாதங்களுக்கான உணவு தானியங்கள் கைவசம் இருக்கின்றன” என்றார் அமைச்சர் சரத்பவார். 

வறட்சியின் தாக்கம் அதிகரித்ததும் அடுத்த சில வாரங்களிலேயே “இன்னும் 13 மாதங்களுக்கான உணவு தானியங்கள் கையிருப்பில் இருக்கின்றன. தேவைப் பட்டால், இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்றார். 3 வாரங்களுக்குள் எப்படி 17 மாத தானியங்கள் காலியாகின என்ற கேள்வி எழுந்தபோதுதான் அமைச்சர் வாயில் வந்ததைச் சொல்லிவிட்டுப் போனது தெரிய வந்தது.


இந்தியாவில் அரசின் தானியக் கையிருப்புக் கணக்கு என்பது எப்போதுமே ஏட்டில் உள்ள கணக்கு. திறந்தவெளியில் வெயிலிலும் மழையிலும் புழுத்து, எலிகள் புகுந்து நாசமாக்கியது போக பயன்படுத்தத்தக்க அளவில் இருக்கும் தானியங்கள் குறைவு. இப்போதைய சூழல் முன்பைவிட மோசமானது. நாட்டின் 350 மாவட்டங்கள் வறட்சி அபாயத்தில் சிக்கி இருக்கின்றன. நாட்டின் முக்கியமான நீர்த்தேக்கங்கள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குப் போகிறது.

இந்தியாவில் கடந்த நூற்றாண்டுகளைப் போல வறட்சியால் பஞ்சம் ஏற்பட்டு கோடிக்கணக்கானோர் இறந்து போகும் சூழல் இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், பட்டினிச் சாவுகள் இன்றைக்கும் நடக்கின்றன. ஒவ்வோர் வறட்சியும் எங்கோ ஆயிரம் குடும்பங்களை விவசாயத்தில் இருந்து வெளியேற்றுகிறது, எங்கோ ஆயிரம் குடும்பங்களைக் கடனாளிகள் ஆக்குகிறது. எங்கோ ஆயிரம் கறவை மாடுகளை அடி மாட்டுக்கு அனுப்பி வைக்கிறது. எங்கோ ஆயிரம் பேரைத் தற்கொலை செய்துகொள்ள வைக்கிறது. எங்கோ ஆயிரம் குழந்தைகளை ஊட்டச் சத்துக் குறைவால் கொல்கிறது.

கட்டுரையாளர்:  சமஸ், ஆனந்த விகடன்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, ஆகஸ்ட் 18, 2012

மீண்டும் உணவு பஞ்சம்?!பருவ மழை பொய்ப்பதும், காலம் தாண்டிக் கொட்டித் தீர்ப்பதும் பருவநிலை மாற்றங்களில் சகஜம்தான். அமெரிக்காவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. சீனாவிலோ அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதைக்கூட சாதாரணமான ஒரு செய்தியாகக் கடந்து விடலாம்... ஆனால் கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பத்தை டெல்லி எதிர் கொண்டது. சரிபாதி இந்தியா தென்மேற்குப் பருவ மழை பற்றாக்குறையால் வறட்சியில் சிக்க இருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?

இந்தியா எதிர்கொண்ட முக்கியமான பஞ்சங்கள் வங்கத்துப் பஞ்சமும் (1770) சென்னை மாகாணப் பஞ்சமும் (1877). வங்கத்துப் பஞ்சத்தின்போது, கீழ் கங்கைச் சமவெளிப் பகுதியான இன்றைய வங்கதேசம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ ஒரு கோடிப் பேர் உயிரிழந்தனர்.


சென்னை மாகாணப் பஞ்சத்தின்போது, தக்காணப் பீடபூமிப் பகுதியான இன்றைய தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றில் தொடங்கி மகாராஷ்டிரம் வரை பாதிக்கப்பட்டன. இதிலும் ஒரு கோடிப் பேர் மாண்டனர். பருவ மழை தவறி வறட்சிச் சூழல் ஏற்படும்போது எல்லாம் இந்தியா பதற்றத்துக்கு உள்ளாக, இந்த இரு பஞ்சங்களும் முக்கியமான காரணம். ஆனால், எப்போதுமே பஞ்சம் ஏற்பட வறட்சி ஓர் எரிசக்திதான்; ஆனால் மூல காரணம் அது அல்ல என்பதுதான் வரலாறு சொல்லும் செய்தி.

வங்கத்துப் பஞ்சம் ஏற்படுவதற்கான மூல காரணம், பிளாசி மற்றும் பக்சார் போர்களின் விளைவாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குக் கீழ் வங்கம் வந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள நில வரியைக் கூட்டினார்கள். உணவுப் பயிர்களுக்குப் பதில் பணப் பயிர்களை ஊக்குவித்தார்கள். உணவு உற்பத்தி வீழ்ச்சி அடைய இது வழிவகுத்தது.


உணவுப் பற்றாக்குறை நிலவிய சூழலில், 1770ல் ஏற்பட்ட வறட்சி மக்களைப் பஞ்சத்தில் கொன்றழித்தது. சென்னை மாகாணப் பஞ்சம் ஏற்படுவதற்கான மூல காரணம், சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் சென்னை மாகாணம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. கடுமையான வரிவிதிப்பு. புதிய பணப் பயிர்கள் ஊக்குவிப்பு, ரயில்களின் துணையோடு முழுவீச்சில் ஏற்றுமதி என்று உணவு உற்பத்தியை நெருக்கடியில் தள்ளினார்கள் ஆங்கிலேயர்கள். 

வறட்சி ஏற்பட்டபோது மக்கள் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிட்டபோதும்கூட, தானிய ஏற்றுமதியை ஆங்கிலேயர்கள் நிறுத்தவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துச் சாப்பிடும் நிலை ஏற்பட்டபோது, பஞ்சக் குழுவை அரசு அமைத்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றவர்களுக்கு அரை வயிறு உணவு அளிக்க நாள் முழுவதும் அவர்களை வேலையில் கசக்கிப் பிழியும் கூலித் திட்டத்தை அது அறிவித்தது.

சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் கட்டப்பட்டது எல்லாம் அந்தக் கால கட்டத்தில் தான். ஒரு பக்கம், பசியால் மக்கள் எலும்பும் தோலுமாகி கொத்துக் கொத்தாகச் செத்து விழ, இன்னொரு பக்கம் இலங்கை, பிஜி, பர்மா என்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் கொத்தடிமை சேவகத்துக்குப் போனார்கள். முந்தையை தலைமுறையினரிடம் தாது வருஷப் பஞ்சம் என்று கேட்டால், கதை கதையாகச் சொல்வார்கள். ராமாநாதபுரம் பகுதி கிராமப் புறங்களில் அப்போது வைக்கப்பட்ட கஞ்சித் தொட்டிகளைச் சிதிலம் அடைந்த நிலையில் இன்றைக்கும் பார்க்கலாம்.

நம் நாட்டின் மழைப் பொழிவில் 75 சதவிகிதத்தைத் தென்மேற்குப் பருவமழைதான் வருகிறது. நாட்டின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்குப் பருவ மழையின் பங்கு முக்கியமானது. இந்த ஆண்டு தென்மேற்கு மழைப் பொழிவு வழக்கத்தை விட 21 சதவிகிதம் குறைவு. இதன் விளைவை காரீஃப் பருவப் பயிர்களான அரிசி, எண்ணெய் வித்துக்கள் விளைச்சல் எதிர்கொள்ளும். 2011-12ல் நாட்டின் மொத்த அரிசி உற்பத்தி 103 மில்லியன் டன். இந்த ஆண்டு நிச்சயம் இதில் 10 சதவிகிதம் குறையும்.


இந்தியா போன்ற ஒரு விவசாய நாட்டில் பருவ மழை பொய்க்கும் என்று தெரிந்து விட்டால், வயலுக்கு ஒரு குட்டை, மழை நீர் சேகரிப்பு, விவசாயக் கடன் ரத்து, மானியவிலையில் இடு பொருட்கள், உணவு தானியப் பாதுகாப்பு, பொது விநியோகச் சீரமைப்பு என்று அரசு உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். ஆனால், இந்திய அரசின் அலட்சியம், காலனி ஆதிக்கக் காலத்தை நினைவூட்டுகிறது.

கட்டுரையாளர்:  சமஸ், ஆனந்த விகடன்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012

“தனித்தன்மை” என்றும் குறைவதில்லை.!200 பேர் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளர் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி, “யாருக்கு இது பிடிக்கும்” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தனக்கு பிடிக்கும் என கைகளைத் தூக்கினர். பேச்சாளர், “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால் அதற்கு முன்...” என சொல்லி, அந்த 500 ரூபாய் நோட்டை கசக்கி சுருட்டினார்.


பிறகு அதை சரிசெய்து, “இப்போதும் இதன் மீது உங்களுக்கு மதிப்பு இருக்கிறதா?” என்றார். அனைவரும் கைகளைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டைக் காட்டி, “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா” என்றார். அனைவரும் கைகளைத் தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்த்தாள் பல முறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும் தோல்விகளைச் சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம்.”


நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். அதன்மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்க்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும்தான் உரமும் பூச்சிக்கொல்லியும். ஆகையால் தன்னம் பிக்கையை இழக்காமல் வாழுங்கள்” என்றார். 


(நான் கல்லூரியில் படித்த போது N.S.S. வகுப்பில் 10 நாட்கள் மயிலாடுதுறை அடுத்த கோழிக்குத்தி என்ற கிராமத்தில் பணியாற்றினேன். அப்போது மாலை நேரத்தில் தன்னம்பிக்கை குறித்து வகுப்பு எடுக்கப்பட்டது. அப்போது, இந்தக் கதையை கேட்க நேரிட்டது. தற்போது இதனை தற்செயலாக ஒரு புத்தகத்தில் படித்தேன்.)

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

'இறந்த பெண்ணிடம் செக்ஸ்.!'


“கிளியோபாட்ரா இறந்த போது பண்டைய எகிப்திய சம்பிரதாயப்படி அவர் உடல் 3 நாட்கள் புதைக்கப்படவில்லை. அந்த 3 நாட்களும் அவருடைய சடலம் பலரால் கற்பழிக்கப்பட்டதாம். எந்த வகை மனிதன் ஒரு பிணத்தைக் கற்பழிப்பான் என்று தத்துவஞானி ஒருவர் கூறியுள்ளார்.


அதைப் படித்தால் தாங்களும் புரிந்து கொள்ளலாம். 'எல்லா ஆண்களும் பெண்களைப் பிணமாக்கித்தான் வைத்து உள்ளனர்...குறைந்தபட்சம் உடலுறுவின் போது!’ சொன்னவர் ஓஷோ ரஜினீஷ்”

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

ஆனந்த விகடனில் குங்குமப் பூவிமர்சனம் செய்த ஆனந்தவிகடன் (08-08-2012) இதழக்கு நன்றி.


கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

பிரணாப்புக்கு வெளிநாட்டு சொகுசு கார்.!ஜனாதிபதி பயணம் செய்ய புதிய வெளிநாட்டு காரான மெர்சிடெஸ் பென்ஸ் S-600 (W221) என்ற ரக கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஜெர்மனியின் ஸ்டட்ஹார்ட் என்ற இடத்தில் புல்மண்ட்கார்டு தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை மிகவும் சிறப்பான உட்புறங்களை கொண்டதாக தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் டிரைவர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடைய இருக்கைகள் 2 தனி அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.


இதில் தானியங்கி கவுகள், குண்டு துளைக்காத கண்ணாடிகள், திரைப்படம், இசை ஆகிய நவீன வசதிகளை கொண்டுள்ளன. எந்த நேரமும் செய்திகளை பார்க்கும் வகையில் தொலைக்காட்சி உள்ளிட்டவையும் இதில் உள்ளன. உள்ளே இருந்து ஜனாதிபதியால் வெளியே உள்ள மக்களை பார்க்க முடியும். ஆனால், வெளியில் இருப்பவர்கள் உள்ளே இருப்பவரை பார்க்க முடியாத வகையில் மெர்சிடெஸ் பென்ஸ் S-600 வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தட்பவெட்ப நிலைக்கேற்ற வகையில் உட்புறத்தை சூடாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்கான அமைப்புகளும் இதில் உள்ளன.

மிக நீண்ட பயணங்களை செய்வதற்கு வசதியாக சொகுசு ஷோபாக்கள் படுக்கைகளாக பயன்படுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்லும் வழியை கண்டறிந்து தெரிவிக்கும் ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் அனைத்து வகையான செல்போன் சேவைகள் ஆகியவையும் செய்யப் பட்டுள்ளது. மேலும் தானாகவே இயங்கக்கூடிய தொலைபேசி வசதியும், அவசர தொலைபேசி அழைப்புகளும் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளன.


மேலும், எதிரும் புதிருமாக 2 வரிசை இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஏ.கே.47, எம்.67, கையெறி மற்றும் வெடிகுண்டுகள், உள்ளிட்டவற்றால் பாதிக்காத வகையில் சோதனை நடத்தப்பட்டு தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் 90 லிட்டர் எரிபொருள் நிரப்பும் வசதியுடையது. இதன் சக்கரங்களும் குண்டு துளைக்காத ரப்பரால் தயாரிக்கப்பட்டுளது. 

ஏதேனும் சிறிய கோளாறோ, அசம்பாவிதமோ ஏற்பட்டால் கூட உடனே அலாரம் அடிக்கும் வகையில் மெர்சிடெஸ் பென்ஸ் S-600 அமைக்கப் பட்டுள்ளது. மேலும் சுற்றுப்புறத்தையும், காரின் உட்பகுதியையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப் பட்டுள்ளன. இத்தனை வசதிகளை கொண்ட ஜனாதிபதியின் கார் ரூ.12 கோடியாகும்.


முந்தைய குண்டு துளைக்காத 10 லட்சம் மதிப்புள்ள அம்பாசிட்டர் காரில் இருந்து, தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இந்த புதிய ரக கார் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீலுக்கும் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அம்பாசிட்டர் கார்களே பயன்படுத்தப்பட்டன. இவ்வகை கார்கள் மேற்குவங்காளத்தில் உள்ள உத்தர்பாரா என்ற இடத்தில் தயாரிக்கப்பட்டன.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, ஆகஸ்ட் 11, 2012

காங்கிரஸ் அல்லாத முதல் ஆட்சி.!கேரளாவில் 1957 ஆம் ஆண்டு அமைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிதான், முதல் எதிர்க்கட்சி அமைச்சரவை என்று சுதந்திர இந்தியாவில் கூறப்படுகிறது. இங்கு, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு முதலமைச்சராக இருந்தார். பிற்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர், இந்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரே. இந்த ஆட்சி இரண்டரை ஆண்டுகளே நீடித்தது. ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுக் குழப்பம் எழுந்தது.

இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு 
இதற்குப் பின்னணியில் காங்கிரஸ் கட்சியே இருந்ததாகச் சொல்வார்கள். இதனால், கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வந்தது. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஓர் ஆட்சியை 356 ஆவது சட்டப் பிரிவைப் பயன்படுத்திக் கலைக்கும் காரியம் முதன்முதலாக அரங்கேறியதும் அப்போதுதான். இதைத்தான், ‘வில்லன் வெற்றி பெற்றுவிட்டான்’ என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் எழுதினார். அதற்குப் பிறகும், வில்லன் வெற்றி எத்தனையோ முறை வெற்றி பெற்று இருக்கிறான்.!

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, ஆகஸ்ட் 04, 2012

ராணுவ வீரருக்கு வெள்ளி பதக்கம்.!ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் 30 புள்ளிகளைப் பெற்று விஜய்குமார் இந்த சாதனையை நிகழ்த்தினார். 112 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 22 ஆவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் கியூபாவின் லியூரிஸ் பபோ 34 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், சீனாவின் டிங் ஃபென் 27 புள்ளிகளுடன் வெணகலப் பதக்கமும் வென்றனர். 


இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். முன்னதாக 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் ககன் நரங் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியி லேயே பதக்கம் வென்றுள்ளார் விஜய் குமார். பெரிய அளவில் இவர் மீது எதிர்பார்ப்பு இல்லை யென்றாலும் சிறப்பாக விளையாடி வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்துள்ளார். 2010 தில்லி காமன்வெல்த் போட்டியில் விஜய்குமார் மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும் வென்றுள்ளார்.


26 வயதான விஜய்குமார் இமாச்சல பிரதேசம் ஹமிர்புர் மாவட்டத்தில் உள்ள ஹர்சோர் கிராமத்தை சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் விஜய் குமார், 2 ஆம் நிலை அதிகாரி அந்தஸ்தான சுபேதாராக உள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியாவுக்கு துப்பாக்கிச்சுடுதலில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளியும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபிநவ் பிந்த்ரா தங்கமும் வென்றிருந்தனர். தற்போது லண்டன் ஒலிம்பிக்கில் ககன்நரங் வெண்கலமும், விஜய்குமார் வெள்ளியும் வென்றுள்ளனர்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

தேசிய விளையாட்டு ‘ஹாக்கி’ அல்ல.!நமது நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று நாம் அனைவரும் கூறி வரும் நிலையில், நாட்டின் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து எந்த விளையாட்டுக்கும் அளிக்கப்படவில்லை என மத்திய விளையாட்டு அமைச் சகம் கூறியுள்ளது. ஆனால், இந்திய அரசு இணையதளமான www.india.gov.in ல் இந்திய தேசிய விளையாட்டு என்ற தலைப்பில் ஹாக்கி குறிப்பிடப்பட்டு ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.


இந்நிலையில், லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பிரஷார் என்ற 10 வயது சிறுமி சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவல கத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் தேசிய கீதம், விளையாட்டு, விலங்கு, மைதானம், மலர், தேசிய சின்னம் ஆகியவை குறித்து அறிவிப்புகளின் அதிகாரப்பூர்வ நகல்களை அளிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. உள்துறை அமைச்சகம் தேசிய விளை யாட்டு தொடர்பான விசாரணை என்பதால் விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.


இதுதொடர்பாக, ஐஸ்வர்யாவுக்கு பதில் தெரிவித்து விளையாட்டு அமைச்சக செயலாளர் சிவபிரதாப் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று எதையும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இந்திய அரசு இணையதளத்தில் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று இடம் பெற்று உள்ள நிலையில், நமது நாட்டுக்கு தேசிய விளையாட்டு என்று எதுவும் கிடையாது என்று விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

இதுதான் ‘பஞ்ச தந்திரம்’.!


பஞ்ச தந்திரங்களில் எதுவுமே நல்ல விஷயங்கள் அல்ல. நட்பைக்கெடுத்து பகை உண்டாக்குதல் - மித்திர பேதம். தங்களுக்கு சமமானவர்களுடன் மட்டும் நட்புகொண்டுவிடுவது - சுகிர்ல லாபம். பகைவரோடு உறவு வைத்து அழிப்பது - சந்திர விக்ரகம். தன் கையில் கிடைத்த பொருளையோ மற்றவர்களையோ அழித்துவிடுவது - அர்த்த நாசம். தீர விசாரிக்காமல் ஆலோசிக்காமல் காரியம் செய்வது - அஸம்பிரேட்சிய காரித்துவம். இவை தான் பஞ்ச தந்திரம்.


சுதர்சன நாட்டு மன்னனுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளும் தவறாக வளர்ந்ததாகவும், அவர்களைத் திருத்துவதற்காக விஷ்ணு சர்மா என்ற ஞானி சொன்ன கதைகள்தான் பஞ்ச தந்திரக் கதைகளாக சொல்லப் பட்டன. வேடிக்கைக் கதைகள் எப்படி வாழக்கூடாது என்பதே பஞ்ச தந்திரம் சொல்லும் நீதி.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வியாழன், ஆகஸ்ட் 02, 2012

தங்க மகன் பெல்ப்ஸ்.!


அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் 19 பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் 31-07-2012 அன்று நடந்த 4*200 மீட்டர் நீச்சல் போட்டியில் அமெரிக்க குழுவினர் ரியான், கார்னர், ரிக்கி, பெல்ப்ஸ் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். அதோடு 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியிலும் பெல்ப்சுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.


இதோடு சேர்த்து ஒலிம்பிக்கில் 19 பதக்கங்களை பெற்றுள்ளார். இதில் 15 பதக்கங்கள் தங்கமாகும். முன்னதாக சோவியத் ரஷ்யா ஜிம்னாஸ்டிக் வீரர் லாரிசா 18 பதக்கங்கள் பெற்றதே சாதனையாக இருந்தது. அவர் 1956 - 1964 வரை இந்த பதக்கங்களை பெற்றிருந்தார். அந்த சாதனைகளை பெல்ப்ஸ் தற்போது முறியடித்துள்ளார்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சகோதர பாசத்தின் வெளிப்பாடு ‘ரக்க்ஷாபந்தன்’.!


சகோதர, சகோதரி பாசத்தை வெளிப்படுத்தும் ‘ரக்க்ஷாபந்தன்’ விழா இன்று (ஆகஸ்ட்-1) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சகோதரர்களாக பாவிக்கும் ஆண்களின் கையில் ராக்கி கயிற்றை கட்டி ஆசி பெறுவது இவ்விழாவின் சிற்பம்சம். பாசமுள்ள தங்கைக்கு பரிசுகளை அளிப்பதும், அன்பு செலுத்தும் அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி ஆசி பெறுவதால் பாசத்தின் எல்லை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. புராண கதைகளிலும் அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக மகாபாரத கதை விளங்குகிறது.


ஒரு சமயம் கிருஷ்ணனின் விரலில் காயம் காரணமாக ரத்தம் சொட்டியது. இதைப் பார்த்து திரவுபதி அதிர்ச்சியடைந்தார். உடனே பதறியடித்தப்படி, தான் அணிந்திருந்த புடவையை கிழித்து கிருஷ்ணனின் காயத்துக்கு கட்டுப்போட்டார். திரவுபதியின் பாசத்தில் நெகிழ்ந்த கிருஷ்ணன், ‘எதிர்காலத்தில் என்னுடைய உதவி உனக்கு எப்போது தேவைப்பாட்டாலும் ஓடோடி வருவேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்படியே, துச்சாதனன் திரவுபதியின் துகிலுரித்தபோது கிருஷ்ணன் காப்பாற்றினார். திரவுபதி, கிருஷ்ணனின் காயத்துக்கு புடவையால் கட்டுபோட்ட நிகழ்வே இன்று ராக்கி கயிறாக கையில் கட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.


ஒரு சமயம் மகாபலி சக்கரவர்த்தி ‘தன்னுடைய பிரதேசங்களை மகா பிரபுவாகிய தாங்கள் பாதுகாக்க வேண்டும்’ என்று விஷ்ணுவிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற விஷ்ணுவும், வைகுண்டத்தில் இருந்து கிளம்பி மகாபலி சக்கரவர்த்தியின் தேசங்களை காக்க சென்றார். விஷ்ணு இருக்கும் இடத்தில் தானும் இருக்க வேண்டும் என்று விரும்பிய மகாலட்சுமியும் வைகுண்டத்தை விட்டு வெளியேறி அந்தணர் பெண்ணாக மகாபலி சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்தார்.

சிரவண பவுர்ணமி தினத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் கையில் லட்சுமிதேவி ராக்கி கயிறு கட்டினார். அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக அன்று முதல் 'ரக்க்ஷாபந்தன்' கொண்டாடப்படுவதாகவும் வரலாற்று சுவடுகளில் கூறப்படுகிறது.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

புதன், ஆகஸ்ட் 01, 2012

பசு மாடு பற்றித் தெரியுமா?
பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.
பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகுதான் பால் கொடுக்கும்.
பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 - 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.


ஒரு நாளில் 10 - 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.
சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.
ஒரு நாளில் 6 - 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 - 8 மணி நேரம் அதனை அசை போடவும் பசுவுக்குத் தேவை.
அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 - 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 - 12 லிட்டர் சிறு நீரும் 15 - 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.


பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கவல்லது.
மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.
பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.
மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்கவல்லது.
பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 - 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.
கறக்கும் பசு மாடு நாளுக்கு சுமார் 40 - 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுகிறது..


பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.
உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.
உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.
ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச் சாதனை செய்த மாட்டின் பெயர் உர்பே ஆகும்.
இதுவரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.