செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், மார்ச் 31, 2016

உணர்ச்சிவயப்படாதீர்கள் வைகோ...

விகடன் இணையதளத்தில் எனது கட்டுரை
மிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம், கொளுத்தும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது. தேமுதிக யாருடன் கூட்டு சேரும் என்று எதிர்பார்த்து இலவு காத்து வந்த தி.மு.க, பா.ஜ.க இன்னும் பிற கட்சிகள், மக்கள் நலக் கூட்டணியுடன் அது இணைந்ததையடுத்து, அந்த கூட்டணியை தற்போது விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. இது ஒருபுறமிருக்க கேப்டன் விஜயகாந்த் அணியில் இணைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நாளுக்கு ஒரு கருத்தைக் கூறி, கூட்டணிக்குள் குழப்பமான நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். 

கேப்டன் விஜயகாந்த் அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ கூட்டணி அமைத்ததே மாபெரும் சாதனையாக நினைத்து, மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார். மிகவும் உற்சாகத்தில் திளைக்கிறார். அதனாலேயே என்ன பேசுகிறோம் என்பதை அறியாமலேயே உணர்ச்சிவயத்தால் சர்ச்சை கருத்துகளைக் கூறி விழிபிதுங்கி நிற்கிறார். 

பேச்சும்... குழப்பமும்...

ம.ந.கூ இனி விஜயகாந்த் அணி என அழைக்கப்படும் என வைகோ தம் கூட்டணிக்கு புதிய திருநாமம் சூட்டியபின் இன்னும் மோசமாகிவருகிறது நிலைமை. ஏற்கனவே விஜயகாந்த் தலைமையை பிடிக்காமல் இடதுசாரிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதை உறுதிபடுத்தும் விதமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனோ, ‘’கேப்டன் விஜயகாந்த் அணி கிடையாது, அது மக்கள் நலக் கூட்டணிதான். அதில்தான் விஜயகாந்த் இணைந்திருக்கிறார்’’ என்று கூறுகிறார். மேலும், ‘’மன்னனை அதாவது கிங்கை உருவாக்குமா கம்யூனிஸ்ட்’’ என்றும் கேள்வி எழுப்புகிறார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இது ‘’மக்கள் நலக் கூட்டணிதான்’’ என்று அழுத்தந்திருத்தமாக தெரிவித்திருக்கிறார். 

இந்த அணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனோ, தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணிதான் என்று தெள்ளத் தெளிவாக தெரிவித்துவிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனோ, விஜயகாந்த் அணி என்று அழைப்பதில் எங்களுக்கு எந்த கவுரவக் குறைச்சலும் இல்லை என்கிறார். குடியாத்தம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த பிரேமலதாவோ மக்கள் நலக் கூட்டணி என்றால் கிராமப்புற மக்களுக்கு புரியாது என்று நகைக்க வைக்கிறார்.
இப்படி கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு தலைவரும், கூட்டணி பெயர் விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை கூறுகிறார்கள். அவர்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லை. இப்படி போகிறப் போக்கில் ஒவ்வொருவரும் ஏதோ ஏதோ கூறி செல்கிறார்கள். 

வைகோவின் சர்ச்சை பேச்சு

கேப்டன் விஜயகாந்த் கூட்டணியில் மக்கள் நலக் கூட்டணியை இணைத்த மறுநாளே, தே.மு.தி.க.வுக்கு 500 கோடி ரூபாயும், 80 சீட்டுகளும் தருவதாக, தி.மு.க தரப்பில் துண்டுச் சீட்டில் எழுதி தந்து பேரம் பேசப்பட்டதாகவும், மாநிலங்களவை எம்.பி சீட், மத்திய அமைச்சர் பதவி தருவதாக பா.ஜ.க தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும் கூறி அரசியல் அரங்கில் வைகோ புதிய பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பிரேமலதா, வைகோவின் கருத்தை உடனடியாக மறுத்து, மறைமுகமாக குட்டு வைத்தார். உடனே தான் நாளிதழ்களில் வந்த செய்தியை சுட்டிக்காட்டியே பேசியதாக வைகோ கூறுகிறார். அடுத்தகட்டமாக வைகோவுக்கு தி.மு.க வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் வைகோ, இதை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று படபடக்கிறார். 

வைகோ அவர்களே, ஒரு இயக்கத்திற்கு தலைவராக இருக்கும் நீங்கள், கேப்டன் விஜயகாந்த் அணிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நீங்கள் இப்படி ஆதாரமற்ற, உறுதியற்ற தகவல்களை தந்து மக்களை குழப்பலாமா?

நீங்கள் என்ன பேசுகிறீர்கள் வைகோ?


கேப்டன் விஜயகாந்த் அணிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நீங்கள்தான், நீண்ட நெடிய காலத்தை அரசியல் வாழ்க்கைக்காக செலவிட்டிருப்பவர். உங்களைவிட அரசியலை பற்றி முழுமையாக‌ அறிந்திராத, கொள்கையே கிடையாத, எந்தவொரு சமூகப் பிரச்னைக்கும் கருத்து தெரிவிக்காத, பிரச்னை என்னவென்றுகூட அறிய முயற்சிக்காத, விஜயகாந்தை தலைவராக ஏற்றுக் கொண்டு, முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து அவரை முதலமைச்சராக ஆக்கியே தீருவேன் என்று சபதம் எடுத்திருப்பது முரண்பாட்டின் உச்சமல்லவா? 

விஜயகாந்த் தலைமையில் நீங்கள் இணைந்துவிட்டதும், ஏதோ ஆட்சியையே பிடித்துவிட்டது போல மகிழ்ச்சியில் திளைக்கிறீர்கள். நாள்தோறும் செல்லும் இடங்களிலெல்லாம் தாறுமாறாகப் பேட்டி கொடுக்கிறீர்கள். தி.மு.க.வை விமர்சிக்கிறீர்கள். அதே நேரம் அ.தி.மு.கவை போகிறப் போக்கில் குற்றம்சாட்டுகிறீர்கள். நாளுக்கொரு கருத்தை கூறுகிறீர்கள். பின்னர் அதை மறுக்கிறீர்கள். அதில் ஒன்றுதான் தி.மு.க, பா.ஜ.க பேரம் பற்றிய உங்கள் கருத்தும். இப்பொழுது கேட்க தோன்றுகிறது, என்னதான் உங்களுக்குப் பிரச்னை என்று?

விதண்டாவாதம் ஆகுமா?


பேரம் பற்றி குற்றம்சாட்டிய வைகோவிடம், அ.தி.மு.க. தரப்பில் உங்களுக்கு 1,500 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறதே என்று கேட்டு முடிக்கும் முன்னரே கோபம் கொப்பளிக்க, பேட்டியை முடித்துக் கொள்வதாக ஒரு தொலைக்காட்சியில் இருந்து எழுந்து செல்கிறீரே. ஏன் இந்த உணர்ச்சிவயம்?... மற்றவர்களுக்கு வந்தால் ரத்தம். உங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? உண்மையோ‌, பொய்யோ கேள்விக்கு நீங்கள் அங்கேயே மறுப்பு தெரிவித்திருக்கலாமே. நீங்கள் உணர்ச்சிவயப்பட்டதை பார்க்கும்போதுதான் மக்கள் மத்தியில் உங்களைப்பற்றிய தவறான புரிதல் உண்டாகிறது.
தே.மு.தி.க.விற்கு தி.மு.க 500 கோடி ரூபாய் பேரம் பேசியது உண்மை என்றால் நீங்களும் கடந்த காலங்களில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மாறி மாறி கூட்டணி வைத்து ‌50 ஆண்டுகால அரசியல் வாழ்வை கடந்திருக்கிறீர்கள். தி.மு.கவுடன் கூட்டணி வைத்தபோது அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபோது எவ்வளவு பேரம் பேசினீர்கள்? எவ்வளவு வாங்கினீர்கள்? என்று கேட்டால் விதண்டாவாதம் என்பீர்கள். ஆனால் கேட்காமல் இருக்க முடியாது அல்லவா? பொதுமக்கள் கேட்கிறார்கள். இப்போது கூறுங்கள், இதற்கு முன்பு நீங்கள் எவ்வளவு வாங்கினீர்கள்? இப்போது மக்கள் நலக் கூட்டணியை தே.மு.தி.க.வுடன் இணைத்ததால் உங்களுக்கு கிடைத்த லாபம் என்ன? என்று நீங்கள் தெரிவித்தாதல் நன்றாக இருக்கும்.

உங்களின் நேர்மையை, பேசும் பேச்சை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. உங்கள் சொல்லும், செயலும் மாறி மாறியிருக்கிறது. நீங்கள் ஒரு வழக்கமான அரசியல்வாதியாக மாறிவிட்டீர்கள் என்பதைதான் உங்கள் செய்கைகள் நிரூபித்துவருகின்றன. முதலில் மக்கள் நலக் கூட்டணியில்தான் தே.மு.தி.க இணைய வேண்டும் என்று கூறினீர்கள். பின்னர், மக்கள் நலக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். எங்களின் செயல்திட்டம்தான் ஹீரோ என்றீர்கள். 

பிறகு 'தலித் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம்' என்றீர்கள். மறுநாள் 'முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவதற்கு நான் ஒன்றும் துறவியல்ல' என்றீர்கள். பிறகு திடீரென விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தீர்கள். ஏன் என்று கேட்டால், ''இது ஒரு யுத்தம். இந்த யுத்தத்திலே ஊழல் பணத்திலே இருக்கிற ராட்சச பலம் கொண்ட இரு கட்சிகளை வீழ்த்த வேண்டியிருக்கிறது. ஆகவே இதில் வியூகங்கள் அவ்வப்போது மாறும். எங்களுக்கு இலக்கு வெற்றி. அந்த இலக்கு நோக்கி செல்கிற போது நாங்கள் சில வேலைகளை, உபாயங்களை மாற்ற வேண்டும். இதில் தவறேதும் இல்லை'' என்று கூறுகிறீர்கள். இது எப்படி சாத்தியம்?

சில நாட்களாக உங்களின் நிலைப்பாடுகள் பற்றி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. 

கொள்கையே கிடையாத விஜயகாந்தை முதலமைச்சராக ஆக்க தீர்மானிப்பீர்கள், ஈழத்திற்கு எதிராக இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைப்பீர்கள், தலித்துக்கு குரல் கொடுத்துக் கொண்டே திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயங்குவீர்கள்? என்ன வைகோ உங்களின் நிலைப்பாடு?

தி.மு.க.வை விட்டு வெளியேறியபோது, கருணாநிதியை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றீர்கள். மீண்டும் கூட்டணியாக இணைந்தபோது, தலைவர் கருணாநிதி கட்சியை விட்டு பிரிந்து போனாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர் என்றீர்கள். அ.தி.மு.க.வுக்கு தாவிய போது, அன்புச் சகோதரி ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர பாடுபடுவேன் என்று திருவாய் மலர்ந்தீர்கள். முதல் முறை விலகியபோது, பாசிச‌ ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றீர்கள். 

பா.ஜ.க.விடம் ஓடிச்சென்று, மோடி வந்தால் தமிழகத்தில் சுவிட்சை போடாமலே கலர் கலர் பல்புகள் எரியும் என்றீர்கள். அவர்கள் துரத்திவிட்டபோது, தமிழகத்தில் மதவாத சக்திகளை காலூன்ற விடமாட்டேன் என்றீர்கள். கருணாநிதி வீட்டு கல்யாணத்தின் போது, தலைவர் கருணாநிதி தங்கமானவர் என்றீர்கள். அடுத்த வாரம் கூட்டணி பேரம் படியாது என்று தெரிந்தபோது தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதியை ஒழிக்க ஒன்றுபடுவோம் என்றீர்கள். 

ஒருநாள் போற போக்கில், தமிழ் தேசியத்தை ஒழிக்க தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்றீர்கள். சில நாட்களுக்கு முன்பு, மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் கண்டிப்பாக வருவார். அவரை முதல்வராக ஏற்றுக் கொள்ள எந்த ஆட்சேபணையும் இருக்காது என்றீர்கள். பின்னர், நாங்கள் விஜயகாந்த் தலைமையேற்க மாட்டோம் என்றீர்கள். எங்கள் கூட்டணியில் இடமில்லை, விமானி இல்லாமலே விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது என்றீர்கள். மறுபடி விஜயக‌ாந்தை மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றீர்கள். திடீரென ஒருநாள் விஜயகாந்துடனேயே மக்கள் நலக் கூட்டணியை இணைத்துவிட்டீர்கள். 

இதுமாதிரியான உங்களின் குழப்பமான பேச்சும், செயலும் கேப்டன் விஜயகாந்த் அணி வாக்குப்பதிவு வரை கரைதேறுமா என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் எழுப்பியிருப்பதுதான் மிச்சம். வயது ஆக ஆக முதிர்ச்சியும், பொறுமையும் வேண்டும் என்பார்கள். ஆனால், உங்களிடம் அதை காணமுடியவில்லை. நேற்றும், மக்கள் நலக் கூட்டணி தொடர்பான கேள்வியால் கொந்தளித்து, செய்தியாளர்களிடமும், உங்கள் கட்சிக்காரரிடமும் கோபமாக பேசுகிறீர்கள். உணர்ச்சிவயப்படாதீர்கள் வைகோ!
- ஜி.எஸ்.பாலமுருகன், ( மயிலாடுதுறை)

செவ்வாய், மார்ச் 29, 2016

ஜெயா ஏன் ஜெயிக்கிறார்? - ஒரே ஒரு கடிதம்... அத்தனை கட்சிகளுக்கும் 'செக்'!

விகடன் இணையளத்தில் வெளிவந்த எனது கட்டுரை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை  வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும்  விடுதலை செய்வதற்கு முடிவு எடுத்திருக்கும் தமிழக அரசு, அது குறித்து மத்திய அரசிடம்  கருத்து கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆனால்  தமிழக அரசின் இந்த கடிதம்,  தேர்தல் ஆதாய நடவடிக்கையாக இருக்குமோ என்று, அ.தி.மு.க.வினர் தவிர அனைவரும் சந்தேகிக்கிறார்கள். அதில் வியப்பேதுமில்லை. அரசியல் காரணங்களுக்காக இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில்,  முந்தைய காலக்கட்டத்தில் ஜெயலலிதா எடுத்திருக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தேர்தல் நேர நடவடிக்கையாகத்தான் அமைந்திருந்தன என்பதை புறந்தள்ளிவிட முடியாது.
''விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலை குற்றவாளிகளை முதலமைச்சர் கருணாநிதி மரண தண்டனையிலிருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சுகள் தமிழகத்தில் பகிரங்கமாக நடைபெறுகின்றன. அவர் இதையெல்லாம் தடுத்து நடவடிக்கை எடுப்பதில்லை. என் ஆட்சியாக இருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன்" என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது  2008-ம் ஆண்டு,  அக்டோபர் மாதம் 23ம் தேதி பேசியவர்தான் ஜெயலலிதா. அந்த வகையில் தற்போதைய கடிதம் எழுதப்பட்ட நேரத்தையும் தேர்தல் நடவடிக்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா அல்லது மாநில அரசுக்கு இருக்கிறதா? என்ற வழக்கில், சி.பி.ஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் முன் அனுமதி பெற்றே குற்றவாளிகளை விடுவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், குற்றவாளிகளின் தண்டனையை குறைத்து விடுதலை செய்ய  அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 161 வழிவகுக்கிறது. இதைப் பயன்படுத்தி, யாரையும் கேட்காமல் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால் அதனை செய்யாமல், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435-வது பிரிவின் கீழ் விடுதலை செய்யும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், ஜெயலலிதா என்ன நினைக்கிறார் என்று தெரிய வருகிறது. ஏற்கனவே எழுதப்பட்ட கடிதங்களின் மீது மத்திய அரசின் தற்போதைய நிலை என்னவென்று மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருப்பதை பார்த்தால்,  இதில் மறைமுக அரசியல் ஒளிந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலரை கடிதம் எழுத வைத்திருப்பதன் மூலம், முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாகவே ராஜீவ் காந்தி கொலை வழக்கை சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தி இருக்கிறாரோ என்றும் யோசிக்க வைக்கிறது. 

தமிழக அரசின் கடிதத்தை எப்படி பார்க்கலாம்? 


தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கூற முடியும். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிக்கு யார் நம்முடன் சேருவார் என்று தவித்து வரும் அக்கட்சிக்கு தமிழக அரசின் கடிதம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்று, கடிதத்தின் மீது தற்போதைக்கு முடிவு எடுக்காமல் தள்ளிப் போடலாம் அல்லது விடுவிக்க முடியும் அல்லது  இயலாது என்று எதையாவது கூற வேண்டிய நெருக்கடி. எந்த முடிவாக இருந்தாலும், அது சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க.விற்கும், அதில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கும் பலத்த எதிர்ப்பை உருவாக்கும். மத்திய அரசு சாதகமான முடிவு எடுக்குமேயானால், அதன் முழு பலனும் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்குமா என்றால் கிடைக்காது. எல்லாம் என்னால்தான், எனது அரசால்தான் என்று ஜெயலலிதா அறிக்கைவிட்டே, முழு பலனையும் அறுவடை செய்துவிடுவார்.

அதேநேரத்தில், பாதகமான முடிவு எடுத்தால், பாரதிய ஜனதாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. காரணம், அவர்கள் ஒன்றும் தற்போதைய சூழலில் தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவது இல்லை. என்றாலும், வளர்ந்து வரும் பாரதிய ஜனதாவுக்கு தமிழர்களிடையே  கசப்புணர்வையும், ஒருவித வெறுப்புணர்வையும் ஏற்படுத்த உதவியாக இருக்கும். தே.மு.தி.க இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று கூறியும், பா.ம.க.வை எப்படியும் தன்வசப்படுத்தி விடலாம் என்று கணக்குப் போட்டு வரும் பா.ஜ.க.வுக்கு, தமிழக அரசின் கடிதம் பேரிடியாக அமைந்திருப்பதை மறுப்பதிற்கில்லை.
மற்றொன்று, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கும் இந்த கடிதம் மூலம் ஜெயலலிதா 'செக்' வைத்திருக்கிறார் என்றே பார்க்க வேண்டும். இவர்கள் 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ், தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. இப்போது 7 பேரின் விடுதலைக்கு ஜெயலலிதா அரசு கடிதம் எழுதி இருப்பதன் மூலம் அதிமுக பயனடைந்துவிடுமோ என்ற பதை பதைப்பில், தன் பங்கிற்கு திமுகவும் அவர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்திருக்கிறது. காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இப்போது திமுக என்ன செய்யும்?  ஏற்கனவே, இலங்கைத் தமிழர் விவகாரத்தால், படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸின் எதிர்ப்பை,  தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக திருப்பிவிட ‌தமிழர் அமைப்புகளும், ஆளும் அ.தி.மு.க.வும் பயன்படுத்திக் கொள்ளும். இதை உணர்ந்துதான், தமிழக அரசின் கடிதம் எழுதப்பட்டதும், ஒரு சில மணி நேரத்தில், 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, 7 பேரின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகோ, திருமாவளவனோடு கைக்கோர்த்திருக்கும் இடதுசாரி கட்சிகள், தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை. மாறாக, இது தமிழக அரசின் அரசியல் நடவடிக்கை என்று பொத்தாம் பொதுவாக வைகோ, திருமாவளன் ஆகியோர் கூறியிருக்கிறார்கள். பிள்ளையையும் கிள்ளிவிட்டு. தொட்டிலையும் ஆட்டணும் என்பதுதான் இடது சாரிகளின் நோக்கம்.  இதே கம்யூனிஸ்ட் கட்சிகள்தான், 7 பேரையும் விடுவிக்க முடிவு எடுத்து சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியோடு  வெளியேறிய கதையும் நடந்தது உண்டு.  இவர்களுக்கு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் என்ன கொள்கை இருக்கிறது ? என்று மக்கள் நலக் கூட்டணியை பார்த்து தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கேள்வி கேட்கலாம்.  இப்படி இந்த கடிதம் மூலம் மத்திய அரசு, பா.ஜ.க, தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி என அனைத்துக் கட்சிகளுக்கும் மிகப்பெரிய 'செக்' வைத்திருக்கிறார் ஜெயலலிதா.

இதுதவிர தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி, பாரதிய ஜனதா அரசு பக்கம் பந்தை தள்ளிவிட்டிருக்கிறார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, 3 மாத காலமாக அமைதியாக இருந்துவிட்டு தற்போது அரசு திடீரென முடிவு எடுத்திருப்பது ஏன் ? என்றும் வினவியிருக்கிறார். (கடந்த ஆண்டு டிசம்பர் 2 ம் தேதி ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.) இதேகேள்விதான் நடுநிலையாளர்களிடமும் எழுந்திருக்கிறது. 

தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கை,  தேர்தல் கால நடவடிக்கைதான் என்ற  எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  எது எப்படியோ ஜெயலலிதாவின் இந்த கடிதத்தையடுத்து உள்துறை அமைச்சகம் 7 தமிழர்களின் விடுதலை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. ஜெயாவின் இந்த நடவடிக்கை தேர்தல் கால நடவடிக்கையாக இருந்தால் கூட,  கால் நூற்றாண்டு காலத்தை, இளமை பருவத்தை சிறை கொட்டடியில் இழந்திருக்கும் 7 தமிழர்களும் விடுவிக்கப்படுவார்களேயான‌ல், அது மகிழ்ச்சிக்குரியதே.

-ஜி.எஸ்.பாலமுருகன்

( மயிலாடுதுறை)

திங்கள், மார்ச் 28, 2016

வாட்ஸ்அப் 256: இனி போட்டியையும் குழுச் சண்டையையும் அதிகரிக்கும்!

விகடன் இணையளத்தில் வெளிவந்த எனது கட்டுரை
ளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல், எதுக்கு பொருந்துகிறதோ இல்லையோ...  'கட்செவி அஞ்சல்' எனப்படும் 'வாட்ஸ்அப்புக்கு நன்றாகவே பொருந்தும்.   நவீன தகவல் தொடர்பு சேவைகளை தரும் அப்ளிகேஷன்களில் வாட்ஸ்ஆப் முன்னிலையில் இருக்கிறது. கடந்த இரண்டாம் தேதி நிலவரப்படி, உலகில் 100 கோடி பயனாளர்கள் வாட்ஸ்அப்  பயன்படுத்துகின்றனர் என அதன் உரிமையாளரும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவருமான மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.
உலகில் 7ல் ஒருவர் கையில் வாட்ஸ்அப்

அதாவது உலகில் 7 பேரில் ஒருவர் வாட்ஸ்‌ அப் பயன்படுத்துகிறார்.  இந்தியாவில் வைபர், ஹைக், லைன் என கடும் போட்டியை தரும் ‘ஆப்கள்’ இருந்தாலும், 'வாட்ஸ்ஆப்'பையே பயனாளர்கள் அதிகம் விரும்புகின்றனர்.  இது வரவேற்கக் கூடியதுதான் என்றாலும், தற்போதைய சூழலில் வாட்ஸ்அப் பயன்பாடு எப்படியிருக்கிறது?
வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் இருக்கிறார்களோ என்ற எண்ணம் வெகுநாட்களாவே மனதில் உருண்டோடுகிறது. தமக்கென்று ஒரு கொள்கையோ, கருத்தோ இல்லாமல் பிறர் அனுப்பிய கதைகள், கட்டுரைகள், படங்கள், வீடியோக்கள் என எல்லாவற்றையும் அப்படியே ஃபார்வர்டு செய்வதில்தான் ஆர்வமும்,‌ வேகமும் காட்டுகிறார்களே தவிர, பகிரப்படும் பதிவில் இருக்கும் உண்மைத்தன்மை என்ன? அது சரியானா தகவல்தானா? நாம் அனுப்புவதால் ஏற்படும் விளைவு என்ன? என்ற எண்ணம் சிறிதளவு கூட இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் ஏற்படுகிறது.
பல்லை காட்டுவார்கள்
ஃபார்வர்டு செய்யும் தகவல்களை முழுமையாக அவர்கள் படித்திருப்பார்களா என்றால் அதுவும் இல்லைதான். ஒருவர் ஃபார்வர்டு செய்யும் ஒரு பதிவுக்கு மற்றொரு குழுவில் நான்கைந்து பாராட்டுகள் வரும். அதை புன்முறுவலுடன் அவர் ஏற்றுக் கொள்வார். அதே அந்தப் பதிவுக்கு எதிர்ப்பும், கண்டனமும் ஏற்பட்டால், நண்பர் அனுப்பினார், தெரிந்தவர் அனுப்பினார் அல்லது வேறொரு குழுவில் இருந்து வந்ததை அப்படியே அனுப்பினேன் என்று சம்பந்தப்பட்ட நபர் பல்லை காட்டுவார். 
 
எந்தவொரு கருத்தையும் நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தமது கருத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும், அதைப் பிறருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருந்தால், அந்தப் பதிவுக்கு முழு பொறுப்பு எடுத்துக் கொண்ட பிறகுதான் பிறருக்கு அனுப்ப வேண்டும். அதாவது வாட்ஸ்ஆப் பயன்பாட்டிலே கூற வேண்டுமானால் ஃபார்வர்டு செய்ய வேண்டும். அதைவிடுத்து பெரும்பாலோனோர் வெறுமனே படங்களையும், வீடியோக்களையும் ஃபார்வடு செய்வதால் மிஞ்சுவது எரிச்சல் மட்டும்தான்.
அப்படியே ஃபார்வர்டு செய்பவர்கள் யோசிக்க வேண்டும் 
 
அண்மையில் ஒரு பதிவு வாட்ஸ்அப்பில்  சுற்றிச் சுற்றி வந்தது. குடியரசு நாள் கொண்டாட்டத்தின் போது, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த திலீபன் என்றொரு இளைஞர், தேசியக் கொடியை எரிப்பது போன்ற ஒரு படமும், அதுதொடர்பான மேலும் சில படங்களும் வாட்ஸ்அப்பில் மின்னல் வேகத்தில்‌ வெளியாகின. குறைந்த‌து மூன்று நாட்கள் அந்த பதிவுகள் தொடர்ந்து அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் சுற்றி வந்தது. இதில் என்னவென்றால், ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருப்பவர் அந்த படத்தை பதிவு செய்துவிட்டாரே என்று எண்ணாமல், அந்த குழுவில் இருக்கும் இன்னும் பலர், மூன்று நாட்களிலும் ஏறக்குறைய ஏழெட்டு முறை அனுப்பி இந்திய தேசத்தின் மீதுள்ள தன் அன்பையும், கொடியை எரித்த நபர் மீதான கோபத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

அதோடு நில்லாமல், இதை எல்லா குழுவிற்கும் அனுப்புங்கள் என்ற 'அன்பு‌ கட்டளை' வேறு. இதுமட்டுமல்லாமல், இந்தியாவையும், இந்திய தேசத்தையும் களங்கப்படுத்திவிட்டார், அவமானப்படுத்தி விட்டார் என்று எல்லோரும் பொரிந்து தள்ளிவிட்டார்கள். அதுபோகட்டும் ‌என்றால், இரு நாட்கள் கழித்து, தேசியக் கொடியை நான் ஏன் எரித்தேன்? என்றொரு நீண்டப் பதிவு வந்தது. அதாவது தேசியக் கொடியை எரித்ததற்கு திலீபன் கூறும் 'நியாய'மான பதிவு அது. அதனை போட்டி போட்டுக் கொண்டு மாறி மாறி இரு நாட்கள் அனுப்பி தீர்த்து விட்டார்கள். இன்னும் ஒரு மாதம் கழித்துக்கூட ஏதாவது ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் ஃபார்வர்டு செய்யப்படும். இதிலிருந்து ஒரு விசயம் புரிந்தது. ஏற்கனவே இளைஞரை திட்டித் தீர்த்தவர்கள்தான், அவரை கைது செய்ய வேண்டும் ‌என்று முழங்கியவர்கள்தான், மீண்டும் அவரது சமாளிப்பு பதிவையும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ்அப் பயனாளர்களுக்கென்று, ‌ஒரு கருத்தும், கொள்கையும் கிடையாதா? வந்ததை அப்படியே ஃபார்வர்டு செய்கிறேன் பேர்வழி என்று இருப்பது எந்த விதத்தில் சரியாகும்?
256 இனி போட்டியை அதிகரிக்கும் 
 
சரி இதுபோகட்டும், வெட்டி அரட்டை, வீண்பேச்சு, தமிழ் மொழி, அறிவியல், மருத்துவம்‌, கல்வி, செய்திக்கதிர், விளையாட்டு, தல, தளபதி, சினிமா, அரசியல் என பல்வேறு வாட்ஸ்அப் குழுக்கள் இருக்கின்றன. ஒருவர் அவருக்கு ஏற்றாற்போல், ஏறக்குறைய 5-லிருந்து 15 குழுக்களில்  இடம்பெற்றிருக்கிறார். ஒவ்வொரு குழுவிலும் அவர் விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெற்றுவிடுவார் அது தனிகதை. இப்பொழுது ஒரு குழுவில் நூறு பேர்தான் இடம் பெற முடியும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டு, 256ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி குழுவை முழுமைப் பெற வைக்க ஒரு போட்டியே நடக்கும். ஒரு குழுவில் பலர் இடம்பெற்றிருக்கும் போது, பல்வேறு மாறுப்பட்ட கருத்துகள் கிடைக்கப் பெறும். பல புதிய தகவல்கள் இடம்பெறும். அந்த வகையில் இது நல்ல விசயம்தான். சுமார் நூறு பேர் இருக்கும் குழுவில் ஒரு பதிவு  அனுப்பப்படுகிறது என்றால், குறைந்தது 20லிருந்து 30 பேர் வரை தான் முதல் ஒரு மணி நேரத்தில் படிக்கிறார்கள். மற்றவ‌ர்கள் எல்லாம் அந்த நாள் முழுவதிலும் ஏதோ ஒரு நேரத்தில் படிக்கிறார்கள். இதனால் என்ன ஆகிறது?
 
‌ஒரு நாளில், ஒரு குழுவில் குறைந்த‌‌பட்சம் 50 பதிவுகள் வந்திருக்கும். இதை யாரும் முழுமையாக படிப்பதில்லை. ஒரே நேரத்தில் எல்லா பதிவுகளும் சேர்த்திருப்பதால் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் ஸ்குரோல் செய்து விட்டுவிடுகிறார்கள். என்ன நடந்தது? என்ன பதிவு வந்தது? என்று பார்க்காமல், படிக்காமல், இரு நாட்கள் கழித்து, இதே குழுவில் வந்த பதிவுகளை, அதிலுள்ள நண்பர்கள் மீண்டும் ஒரு முறை திருப்பி அனுப்புவார். இது மற்றவர்களுக்கு எந்த வகையில் பயன் தரும்? இந்த பதிவு மூன்று நாளைக்கு முன்னரே வந்துவிட்டது. இதை மீண்டும் பதிவு செய்யாதீர்கள் என்று, அந்த குழு அட்மினோ, வேறு ‌ஒரு நபரோ தெரிவிப்பார். அதற்கு இளித்துக் கொண்டு சரி என்று அந்த நபரும் தெரிவிப்பார்.
'அளவுக்கு மீறினால் அமிர்தமும்  நஞ்சு '

இதுபோன்ற உரையாடல்கள் நல்ல தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்று இருப்பவர்களுக்கு‌ எரிச்சலடையச் செய்வதோடு, நாளடைவில் அவர் பதிவு செய்யும் பதிவுகளை குறைத்துக் கொண்டு அமைதிக் காப்பார். இறுதியில் குழுவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வெளியேறிவிடுவார்.‌ இதெல்லாம் பரவாயில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒருவர் விபத்தில் சிக்கிவிட்டார் ‌என்றும், புற்றுநோய்க்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இலவச மருந்தை தருகிறது என்றும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவலங்கள் என்றும், அதிக நோபல் பரிசு பெற்ற நாடு எது தெரியுமா என்றும் கேட்கப்படும் பதிவுகளை ஓராண்டிற்கும் மேலாக, (நான் ஒரு வருடமாக வாட்ஸ்அப்பில் இருப்பதால் சொல்கிறேன்) பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதில் இருக்கின்ற உண்மைத் தன்மைக்கு யார் பொறுப்பு? கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதலாம், அதை பிறருக்கு ஃபார்வர்டு செய்து‌ நம்ப வைக்கலாம் என்ற எண்ணம் சரியா? இதை தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

பல தரப்பட்ட குழுக்களில் ஒருவர் இருப்பதால், ஏராளமான தகவல்கள் கிடைக்கப் பெறும். நல்ல விஷயங்கள் தெரியவரும்‌. அதையெல்லாம், சான்றுக்கு மேற்கூறிய சில ஃபார்வர்டு பதிவுகளால் படிக்க முடியாமல் சோர்வுற்றுவிடுகிறார்கள். எனவே, வாட்ஸ்அப் பயனாளர்கள் இரண்டு விசயங்களை உள்வாங்கி கொள்ளுங்கள். ஒன்று, உங்களுக்கு கிடைக்கும் எந்த தகவலாக இருந்தாலும், அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டு‌ பிறருக்கு பரிந்துரை செய்யுங்கள். இல்லையென்றால் நீங்கள் மட்டுமே படித்து தெரிந்து கொள்ளுங்கள். இரண்டாவது, வரும் எல்லா தகவல்களையும் படித்தாயிற்று, வேண்டபட்டவர்களுக்கு ஃபார்வர்டு செய்துவிட்டாகிவிட்டது என்றால், அதை அழித்துவிடுங்கள். ஒருவேளை சில பதிவுகள் தேவை‌‌படுகிறது என்றால் அதை மட்டும் வைத்து‌ கொண்டு மீதமுள்ளவற்றை அழித்துவிடுங்கள். எதுவும் அளவுக்கு மீறாமல் இருப்பதே நலம். மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். இது வாட்ஸ்அப்புக்கும் அப்படியே பொருந்தும்!

-பாலா, மயிலாடுதுறை

'ஆயிரம் ஆனாலும் மாயூரம் மாறாது' : மயிலாடுதுறை தனிமாவட்டமாக வேண்டியதன் அவசியம் இதுதான்!

விகடன் இணையளத்தில் வெளிவந்த எனது கட்டுரை
யூரம் என்ற வடமொழி சொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா?  இதனால்தான் ''ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது'' என்று மாயவரம் என்றழைக்கப்படும் என்று மயிலாடுதுறைப் பற்றி பெருமையாக கூறுவார்கள். ஆனால், தற்போது இந்த நகரின் நிலைமை என்ன?
''ஆயிரம் ஆனாலும் மாயூரம் மாறாது'' என்று கிண்டலாகப்‌ பேசுமளவிற்கு மாறியிருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், எனக்கு தெரிந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு மயிலாடுதுறை நகரம் எப்படியிருந்ததோ அப்படியேதான் இன்றும் இருக்கிறது, எந்தவித வளர்ச்சியும் இல்லாமல். 

5 ஆயிரம் 
ஆண்டுகள்  வரலாறு உடையது:

பாழ்பட்டுப் போயிருக்கும் காவிரியாறு, இட நெருக்கடியில் சிக்கித் திணறும் 50 ஆண்டுகால பேருந்து நிலையம், வசதிகள் இல்லாத அரசு மருத்துவமனை, குண்டும் குழியுமான சாலைகள், பொதுக் கழிப்பிடம்கூட இல்லாத அவல நிலை போன்றவற்றைதான் எப்போதும் பார்க்க நேரிடுகிறது. சிறு நகரங்களெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், மயிலாடுதுறை மட்டும் அப்படியே இருக்க காரணம், இந்த நகரின் மீது பற்றும், அக்கறையும் இல்லாததுதான். அது அரசியல்வாதியாகட்டும். பொது மக்களாகட்டும். இதில் அனைவருக்குமே பங்குண்டு.
5 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கொண்ட புராதன நகரம் மயிலாடுதுறை என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. மயிலாடுதுறை மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் ஆன்மீக தலங்கள் மற்றும் நவக்கிரக கோயில்கள், புகழ்பெற்ற காவிரிக்  கரைக்கு எழுந்தருளும் பஞ்ச மூர்த்திகள் விழா, இந்தியாவின் தொன்மையான இதிகாசங்களுள் ஒன்றான இராமகாதையை தமிழ்மொழியில் வடித்த கம்பர் வாழ்ந்த நகரம் என்ற பெருமைகளை உள்ளடக்கியது. இதுதவிர, உ.வே.சா சாமிநாத அய்யர், மாயூரம் வேதந‌யகம் பிள்ளை, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் வாழ்ந்த மண் இந்த மாயூரம்.  

மயிலாடுதுறை என்றால் அந்த நகர் மட்டும் அல்ல. அந்த நகர்தான் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரப் பகுதியாகும். அது கல்வி, வேலை, தொழில், வணிகம் என பல்வேறு வகையிலும் மக்களோடு மக்களுக்காக தொடர்புடைய நகரமாகும். ஆனால், இந்த மக்களுக்கு என்று முறையான பேருந்து வசதிகளோ, வந்து செல்வதற்கு உரிய சாலை வசதிகளோ கிடையாது. இதையெல்லாம் ஒரு கொடுமை, மயிலாடுதுறையில் இருந்து ஒருவர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க நாகப்பட்டினம் செல்ல வேண்டும் என்றால், ஒரு நாள் முழுவதையும் அவர் செலவழிக்க வேண்டும். ஒரு யூனியன் பிரதேச மாநிலத்திற்க‌ உள்ளே சென்றுதான் (புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வழியாக) ஆட்சியரை சந்திக்க வேண்டும். இதுவே நாகப்பட்டினத்தின் கடைகோடியாக இருக்கும் கொள்ளிடம் கரையில் இருந்து ஒருவர் நாகப்பட்டினம் சென்று வந்தால், அவரது அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதிவிடலாம். 

கண்டுகொள்ளாத மு.க.ஸ்டாலின்

மயிலாடுதுறையின் வளர்ச்சிதான் மற்ற கிராமங்களின் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது‌. அதனால்தான் என்னவோ, மயிலாடுதுறையை சுற்றியிருக்கும் கிராமங்கள் இன்னும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூட முடியாத நிலையில் இருக்கிறது. அதனால்தான், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் காது கொடுத்து கேட்பார்தான் யாரும் இல்லை. ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும் வேளையில் ஒரு அரசியல்வாதி கூட வாய்மொழியாக கூட மயிலாடுதுறைய‌ மாவட்டமாக மாற்றுகிறோம், அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கிறோம் என்று கூறுவதற்கு மனம் வரவில்லை. ஏன் அண்மையில் 'நமக்கு நாமே' பயணம் மேற்கொண்ட தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், மயிலாதுறை பகுதிக்கும் வந்து சென்றார். ஆனால், ஒரு பகுதி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை பற்றி பேசாமலே கடந்து சென்றிருக்கிறார் என்றால், பின்னர் எதற்கு நமக்கு நாமே? இப்படியே தட்டிக் கழித்து தட்டிக் கழித்து மயிலாடுதுறை மக்களின் ‌உரிமைகளை, நியாயமான கோரிக்கைகளை புறந்தள்ளி விடுகிறார்கள். இதனால், மயிலாடுதுறை மற்றும் சுற்றுப்புற மக்கள் எல்லோரும் தற்போது, தன்னெழுச்சியாக 'மாயூர யுத்தம்' செய்து உரிமையை பெற்றிட உறுதியேற்றிருக்கிறார்கள்.

விழிப்புணர்வும், எழிச்சியும் வேண்டும்

மயிலாடுதுறைக்கு என்று என்னென்ன வேண்டும் என்பதை மக்கள்தான் உணர வேண்டும். மயிலாடுதுறை தனி மாவட்டம், ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற செய்தல், ஆன்மீக சுற்றுலா நகரமாக அறிவித்தல், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைத்தல், அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்துதல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுற்றுவட்டச் சாலை பணிகளை விரைந்து முடித்தல், மயிலாடுதுறை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் (அப்போதுதான், ஷேல் எரிவாயு, மீத்தேன் வாயு எடுப்பதை தடுக்கலாம்), ரயில் நிலையத்தில் நவீன வசதிகளை ஏற்படுத்துதல், கம்பரின் புகழை ஓங்கச் செய்தல், மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் எழுப்புதல் என மயிலாடுதுறையின் தேவை அதிகம். இதையெல்லாம், மக்கள் உணர வேண்டும். எல்லாவற்றையும் நிறைவேற்ற அரசியல் கட்சிகளுக்கும், அரசுக்கும் அழுத்தம் தர வேண்டும். ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தமட்டும் நமக்காகவும், நம் மண்ணுக்காகவும்  குரல் கொடுக்க வேண்டும். இதை உடனே செய்ய வேண்டும்.

இதற்கு தனித்த குரல் போதாது. அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூடி பேச வேண்டும். அப்போதுதான் நம் உரிமையை பெற முடியும். அவர் செய்வார், இவர் செய்வார் என்று இத்தனை காலம் மாறி மாறி வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்கள் நம் மண்ணுக்கும், நமது உரிமைக்கும் செய்தது என்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை. எனவே நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை மயிலாடுதுறை மண்ணின் மைந்தர்கள் உணர வேண்டும். 

தேர்தல் அறிக்கையில் எதிரொலிக்குமா?


அனைத்துக் கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஆயத்தமாகி வருகின்றன. ஏற்கனவே தொகுதிக்கு வலம் வந்துவிட்ட‌போன ஸ்டாலின், மயிலாடுதுறை பகுதி மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத நிலையில், தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தமிழகத்தின் 33வது மாவட்டமாக மயிலாடுதுறையை அறிவிப்போம் என்று வெளியிட வேண்டும். இதேபோல், அ.தி.மு.க, மக்கள் நலக் கூட்டணி, பா‌ம.க என அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கைகளை இடம் பெற செய்து, ஆட்சிக்கு வந்தவுடன் உடினடியாக செய்து தருகிறோம் என்று  உறுதியளிக்க வேண்டும். இதுதான் தற்போதையை நிலையில் மயிலாடுதுறை மக்கள் வைக்கும் உடனடி கோரிக்கை. ஊருக்கு நல்லது செய்வோமே!

-மாயூரம் பாலமுருகன்

'பஞ்சாயத்து'களை பால்டாயில் குடிக்க வைக்கும் வாட்ஸ் அப் வில்லன்கள்!

விகடன் இணையதளத்தில் வெளிவந்த எனது கட்டுரை


  • Share
'களவாணி ' என்றொரு‌ திரைப்படம். அதில் விமல், சூரி உள்ளிட்டோர், சொசைட்டிக்கு லாரியில் எடுத்துச் செல்லப்படும் உர மூட்டையில் ஒன்றை நூதனமான முறையில் திருடுவதாக ஒரு ‌‌நகைச்சுவை காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதைப் பார்த்துவிடும் கஞ்சா கருப்பு,  இந்த இடத்தில் பஞ்சாயத்து, ''சொசைட்டிக்கு போற உரத்தையா திருடுறீக. இந்தாப் போறேன் சொசைட்டிக்கு... என்று செல்வார்.‌''‌ இதனால் பயந்து போகும் விமல், சூரி உள்ளிட்டோர், அங்கு கிடக்கும் பால்டாயில் டப்பாவை எடுத்துக் கொண்டு, பஞ்சாயத்தை‌‌ கலாய்ப்பார்க‌‌ள். எப்படி?

''நம்ம பஞ்சாயத்து பால்டாயில குடிச்சிட்டானாம். அப்படினு ஊரு பூரா சொல்லிபுட்டு அப்படியே ஊர்ல நாலு பேர கூப்பிட்டு, பஞ்சாயத்து பால்டாயில குடிச்சுட்டான்...‌ பஞ்சாயத்து விஷம் குடிச்சுட்டான்... அப்படினு சொல்லிட்டு.‌‌‌‌‌.‌. ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறதுக்கு ஓடி போய் ஒரு கார் எடுத்துட்டு வா'' என்று, ஒரு நண்பரை விமல் அனுப்பி வைப்பார். அவர்‌ ''பஞ்சாயத்து பால்டாயில குடிச்சுட்டான்.‌.‌‌. பஞ்சாயத்து பால்டாயில குடிச்சுட்டானு'' சொல்லி ஊர் முழுக்க‌ தந்தியடிப்பார்.

பொய்யை உண்மையாக்கும் முயற்சி

இதில் இருந்து என்ன தெரிகிறது. ஒரு பொய்யை‌‌‌, உண்மையாக திரித்துக் கூறி தனக்கு சாதகமான ஒன்றை அடைவது. ‌‌அதா‌‌‌‌வது, ஒரு பொய்யை திரும்பத் திரும்‌‌ப சொல்லி உண்மை ‌‌எ‌‌ன்‌‌று நம்ப வைப்பது.‌‌ அதேபோன்ற கதைதான்‌ வாட்ஸ் அப்பில் வரும் பல தகவல்களும் இருக்கின்றன. அப்படிதான் இரண்டொரு நாட்களுக்கு முன்பு, பிரபல தமிழ் வில்லன் நடிகர் ஒருவர் இறந்துவிட்டதாக காட்டுத்தீயாய் வாட்ஸ் அப்பில் ஒரு‌ தகவல் பரவ, பலர்‌ அவருடைய வீட்டுக்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்கள். அவர் நலமாக இருப்பதாக தெரியவரவே,  தொடர்பு கொண்டவர்கள்‌‌‌ சங்கடத்திற்கு‌ ஆளானதோடு, வாட்ஸ் அப் தகவலால் கடுப்பானார்கள்.
பின்னர் நான் நலமாக இருப்பதாகவும், இறந்துவிட்டதாக கூறிய நபர் தன் கையில் கிடைத்தால் பூச்செண்டு தருவதாகவும், அந்த நடிகர் தெரிவித்திருந்தார். அவர் வேறு யாருமல்ல, நடிகர் ஆனந்த ராஜ்தான். இதற்கு என்ன காரணமென்று விசாரித்தால், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சியைவிட, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி ஒஸ்தி என்று ‌ஆனந்தராஜ் பேசியதுதானாம். அதனால் கொதித்தெழுந்த சிலர், ஆனந்தராஜ் இறந்துவிட்டதாக புரளியை கிளப்பியும், காமராஜரை தாழ்த்திப் பேசிய ஆனந்தராஜூக்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு பதிவை  உலாவ விட்டார்களாம்.

பழிவாங்கும் ஆயுதமா வாட்ஸ் அப்?


இப்படிதான் யாரை நமக்கு பிடிக்காதோ அல்லது நம்மிடம் எதிரியாக யார் நடந்து கொள்கிறார்களோ அவர்களை பற்றி திட்டமிட்டு ஒரு தகவலை பரப்பி, சம்பந்தபட்டவரை கதிகலங்க வைக்கும் டிரெண்ட் வாட்ஸ் அப்பில் அரங்கேறி வருகிறது. இதனால், வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள், மக்களிடையே ஒருவித பீதியை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை. கொஞ்ச நாளைக்கு முன்னர், யாரையாவது பிடிக்கவில்லை என்றால், இவருக்கு ரத்தம் தேவை, இவரின் சான்றிதழ் தொலைந்துவிட்டது, இவர் சாலை விபத்தில் சிக்கிவிட்டார் என்று எதையாவது கதைகட்டிவிட்டு, அவருடைய‌ தொலைபேசி எண்ணையும் தொடர்புக்கு கொடுத்து பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார்கள். இது வைரலாக பரவி, அந்த எண்ணிற்கு பலர் தொடர்பு கொண்டு பேசும்பொழுது, குறிப்பிட்ட நபர் எரிச்சலுக்கும், கோபத்திற்கும் ஆளாகிய நிலை இருந்தது. இது சற்றே உருமாறி, தற்போது ஒரு நபர் உயிரிழந்துவிட்டார் என்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறது. 

பொறுப்பும், சமூக கடமையும் அவசியம்


நல்ல பல தகவல்களை தெரிந்து கொள்ளும் ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாகவே வாட்ஸ்அப் மாறியிருக்கும் சூழலில், நம்பிக்கையில்லாத, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிடுவதன் மூலம் வாட்ஸ்அப் பயன்பாட்டின் மீது ஒருவித வெறுப்பும், எரிச்சலும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. இந்த நிலை மாற வேண்டும். இதை சம்பந்தபட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு வரும் அனைத்து தகவல்களையும், பதிவுகளையும் அப்படியே நம்பியோ அல்லது வேண்டுமென்றோ பிறருக்கு அனுப்பி, மகிழ்கிறார்கள். அதனால் விளையும் தீமையை பற்றி அவர்கள் உணர்வதில்லை, புரிந்து கொள்வதுமில்லை. ஒருவர் அனுப்பும் ஃபார்வர்டு தகவல்கள் ஒரு சில நிமிடங்களில் பல ஆயிரம் பேரை சென்றடைவதால், மிகுந்த எச்சரிக்கையும், பொறுப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் தேவை. பயனுள்ள, உண்மையான தகவலாக இருந்தால் சரி. அதுவே, உண்மையில்லாத, சாத்தியமற்ற, தேவையில்லாத ஒரு பதிவாக இருந்தால் என்ன நடக்கும்? நாம் தெரிந்தோ, தெரியாமலோ அனுப்பும் தவறான ஒரு பதிவு, படிக்கும் நபரின் நேரத்தையும்‌, சில நேரம் அவரின் வாழ்க்கையையுமே விழுங்கிவிடுமே என்ற எண்ணம் ஏன் வராமல் போகிறது?

நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்

தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் ஜூரம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான தேர்தல் தகவல்கள், அதுதொடர்புட‌ய பதிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்சி அல்லது தலைவர் மீது வைத்திருக்கும் அதீத பற்றுக் காரணமாக வாட்ஸ் அப்பில் அதுதொடர்புடைய தகவல்களை பரப்பி பலர் ஆதாயம் தேட முயற்சி செய்வார்கள். எதிர்க்கட்சி தலைவர்களையும், எதிர் கருத்துகள் கூறுபவர்களையும் அவதூறாகவும், இழிவாகவும் விமர்சிக்கும் போக்கிலும் சிலர் வாட்ஸ் அப்பில் ஈடுபடுவார்கள். இதை உணர்ந்துதான், சமூக வலைதளங்களில் தலைவர்களை பற்றி இழிவான, அவதூறு பதிவுகளை தவிர்க்கும்படியும், மீறினால்‌ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் ஆணையம் எச்சரித்திருக்கிறது.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் பல்வேறு இன, மத, மொழி பேசுபவர்கள் இணைந்திருக்கிறார்கள் என்பதை முதலில் உணர வேண்டும். தம்முடைய கருத்தோட்டத்திற்கு அனைவரும் ஒத்துப்போக வேண்டும் என்று நினைத்து பதிவுகளை வெளியிடுவதை  தவிர்க்க வேண்டும். அதையும் மீறி பதிவுகளை வெளியிட்டால், அதற்கான எதிர்வினையை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது சரியாக இருக்காது. சமூக வலை தளங்களில் கருத்துச் சுதந்திரம் பற்றி பே‌‌சும் நேரத்தில், அதைப் பயன்படுத்துவதில் உள்ள சமூக கடமையையும், பொறுப்புணர்வையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.‌ இல்லையென்றால், சமூக வலைதளங்களால் உங்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்க நேரிடும்.

-ஜி.எஸ்.பாலமுருகன்

(மயிலாடுதுறை)

பழம் போச்சு... கழகம் பரிதாபமாச்சு!

விகடன் இணையளத்தில் வெளி வந்த எனது கட்டுரை
மிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம்,  இதுவரை காணாத வகையில் புதிய பாதையில் பயணிக்கிறது. இருமுனைப் போட்டி, மும்முனைப் போட்டி என்பதைத் தாண்டி இப்பொழுது பலமுனைப் போட்டியை சந்திக்கிறது. ஒரு பக்கம் அமைதியாக காய் நகர்த்தி வரும் ஜெயலலிதா, மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற இலக்கில் கூட்டணிக்கு தவிக்கும் தி.மு.க, ஆட்சியைப் பிடிக்கப் போகும் கனவில் ‌இருக்கும் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க, பா.ம.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே தே. மு.தி.க.வை  தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவந்தது தி.மு.க.வும், பா.ஜ.க.வும். ஆனால் தேமுதிக  என்ற பழம்,  மக்கள் நலக் கூட்டணியில் விழுந்ததில்  நிலைகுலைந்துப் போனது என்னவோ தி.மு.க.தான். 

எப்படியும் தங்கள் பக்கம் விஜயகாந்தை கொண்டுவந்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நினைப்பில் இருந்த கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும், விஜயகாந்த்தின் அறிவிப்பு பேரிடியாய் அமைந்துள்ளது. விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பதற்காக தி.மு.கவை தில்லு முல்லு கட்சி என்று விஜயகாந்த் கூறியும், தி.மு.க.விடமிருந்தோ, கருணாநிதி, ஸ்டாலினிடமிருந்து மறுப்போ, கண்டனமோ இதுவரை வரவில்லை.

இந்த தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா சாவா போராட்டமாக பார்க்கப்படும் நிலையில், இதில் ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருக்கும் சூழலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டிய கட்டாயத்தில், விஜயகாந்திற்கு பதில் கூறுவது சரியாக இருக்காது என்றுகூட நினைத்திருக்கலாம். அத்தனைக்கும் பலனில்லாமல் போய்விட்டது இப்போது. தமிழகத்தில் பெரிய வாக்குவங்கி இல்லாத காங்கிரசை  மட்டும் நம்பி எப்படி தேர்தலை எதிர்கொள்வது என்று குழப்பத்திலும், அதிர்ச்சியிலும்‌ தி.மு.க உறைந்திருக்கிறது தற்போது.
தேமுதிகவுக்கு வலைவீசியதன் பலன் இன்று திமுக தலைவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுதான் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். தேமுதிகவிடம் இந்தளவிற்கு இறங்கிப்போக தேவையில்லை என்று ஆரம்பத்திலிருந்தே ஸ்டாலின் எதிர்த்துவந்தார். 

தனித்துப் போட்டி, மக்களுடன் கூட்டணி என்று மாறி மாறிப் பேசிய விஜயகாந்துடன், மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கருணாநிதி கூறியதை ஸ்டாலின் விரும்பவில்லையாம். 

இதனால்தான் உடனடியாக கருணாநிதியின் கருத்தை மறுத்து, ஸ்டாலின் பேட்டி கொடுத்தார் சில தினங்களுக்கு முன். ''தே.மு.தி.க.வுக்கு ஏற்கனவே விடுத்த அழைப்புதான். புதிதாக அழைப்பு விடுக்கவில்லை. கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை'' என்று ஸ்டாலின் தெரிவித்தார். இதைப் பார்க்கும் போது, தி.மு.க தலைமைக்குள் குழப்பம் இருப்பதை உணர முடிகிறது. 

இதை உறுதிப்படுத்தும் விதமாக “கருணாநிதியின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து ஸ்டாலின் பேசியது, தி.மு.க.வை உதாசீனப்படுத்தும் செயல் என்றும், இதற்கு முன்பு கட்சிக்குள் இதுபோன்று நிகழ்ந்தது இல்லை‌” என்றும் வைகோ கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, கட்சிக்குள் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே மறைமுகப் போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை பற்றிய கருத்து மோதலில் அது வெளிப்படையாகவே தெரியவந்திருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 

“கருணாநிதியை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஸ்டாலின் ஒன்றும் அடைந்திட முடியாது. திராவிட இயக்கத்தில் இதுபோன்ற ஒரு குழப்ப நிலை ஏற்பட்டிருக்க கூடாது. அதுவும் இந்த தேர்தல் சமயத்தில் இது தவிர்க்கப்படவேண்டும்'' என்கின்றனர் இதுகுறித்து பேசும் தி.மு.க ஆதரவாளர்கள்.

- ஜி.எஸ்.பால‌முருகன், மயிலாடுதுறை