செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், மார்ச் 31, 2016

உணர்ச்சிவயப்படாதீர்கள் வைகோ...

விகடன் இணையதளத்தில் எனது கட்டுரை
மிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம், கொளுத்தும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது. தேமுதிக யாருடன் கூட்டு சேரும் என்று எதிர்பார்த்து இலவு காத்து வந்த தி.மு.க, பா.ஜ.க இன்னும் பிற கட்சிகள், மக்கள் நலக் கூட்டணியுடன் அது இணைந்ததையடுத்து, அந்த கூட்டணியை தற்போது விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. இது ஒருபுறமிருக்க கேப்டன் விஜயகாந்த் அணியில் இணைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நாளுக்கு ஒரு கருத்தைக் கூறி, கூட்டணிக்குள் குழப்பமான நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். 

கேப்டன் விஜயகாந்த் அணியின் ஒருங்கிணைப்பாளரான வைகோ, தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ கூட்டணி அமைத்ததே மாபெரும் சாதனையாக நினைத்து, மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார். மிகவும் உற்சாகத்தில் திளைக்கிறார். அதனாலேயே என்ன பேசுகிறோம் என்பதை அறியாமலேயே உணர்ச்சிவயத்தால் சர்ச்சை கருத்துகளைக் கூறி விழிபிதுங்கி நிற்கிறார். 

பேச்சும்... குழப்பமும்...

ம.ந.கூ இனி விஜயகாந்த் அணி என அழைக்கப்படும் என வைகோ தம் கூட்டணிக்கு புதிய திருநாமம் சூட்டியபின் இன்னும் மோசமாகிவருகிறது நிலைமை. ஏற்கனவே விஜயகாந்த் தலைமையை பிடிக்காமல் இடதுசாரிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதை உறுதிபடுத்தும் விதமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனோ, ‘’கேப்டன் விஜயகாந்த் அணி கிடையாது, அது மக்கள் நலக் கூட்டணிதான். அதில்தான் விஜயகாந்த் இணைந்திருக்கிறார்’’ என்று கூறுகிறார். மேலும், ‘’மன்னனை அதாவது கிங்கை உருவாக்குமா கம்யூனிஸ்ட்’’ என்றும் கேள்வி எழுப்புகிறார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இது ‘’மக்கள் நலக் கூட்டணிதான்’’ என்று அழுத்தந்திருத்தமாக தெரிவித்திருக்கிறார். 

இந்த அணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனோ, தே.மு.தி.க-மக்கள் நலக் கூட்டணிதான் என்று தெள்ளத் தெளிவாக தெரிவித்துவிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனோ, விஜயகாந்த் அணி என்று அழைப்பதில் எங்களுக்கு எந்த கவுரவக் குறைச்சலும் இல்லை என்கிறார். குடியாத்தம் அருகே ஒரு குக்கிராமத்தில் பிறந்த பிரேமலதாவோ மக்கள் நலக் கூட்டணி என்றால் கிராமப்புற மக்களுக்கு புரியாது என்று நகைக்க வைக்கிறார்.
இப்படி கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு தலைவரும், கூட்டணி பெயர் விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை கூறுகிறார்கள். அவர்களுக்குள்ளேயே ஒரு ஒற்றுமை இல்லை. இப்படி போகிறப் போக்கில் ஒவ்வொருவரும் ஏதோ ஏதோ கூறி செல்கிறார்கள். 

வைகோவின் சர்ச்சை பேச்சு

கேப்டன் விஜயகாந்த் கூட்டணியில் மக்கள் நலக் கூட்டணியை இணைத்த மறுநாளே, தே.மு.தி.க.வுக்கு 500 கோடி ரூபாயும், 80 சீட்டுகளும் தருவதாக, தி.மு.க தரப்பில் துண்டுச் சீட்டில் எழுதி தந்து பேரம் பேசப்பட்டதாகவும், மாநிலங்களவை எம்.பி சீட், மத்திய அமைச்சர் பதவி தருவதாக பா.ஜ.க தரப்பில் பேரம் பேசப்பட்டதாகவும் கூறி அரசியல் அரங்கில் வைகோ புதிய பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பிரேமலதா, வைகோவின் கருத்தை உடனடியாக மறுத்து, மறைமுகமாக குட்டு வைத்தார். உடனே தான் நாளிதழ்களில் வந்த செய்தியை சுட்டிக்காட்டியே பேசியதாக வைகோ கூறுகிறார். அடுத்தகட்டமாக வைகோவுக்கு தி.மு.க வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் வைகோ, இதை சட்ட ரீதியாக சந்திப்பேன் என்று படபடக்கிறார். 

வைகோ அவர்களே, ஒரு இயக்கத்திற்கு தலைவராக இருக்கும் நீங்கள், கேப்டன் விஜயகாந்த் அணிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நீங்கள் இப்படி ஆதாரமற்ற, உறுதியற்ற தகவல்களை தந்து மக்களை குழப்பலாமா?

நீங்கள் என்ன பேசுகிறீர்கள் வைகோ?


கேப்டன் விஜயகாந்த் அணிக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நீங்கள்தான், நீண்ட நெடிய காலத்தை அரசியல் வாழ்க்கைக்காக செலவிட்டிருப்பவர். உங்களைவிட அரசியலை பற்றி முழுமையாக‌ அறிந்திராத, கொள்கையே கிடையாத, எந்தவொரு சமூகப் பிரச்னைக்கும் கருத்து தெரிவிக்காத, பிரச்னை என்னவென்றுகூட அறிய முயற்சிக்காத, விஜயகாந்தை தலைவராக ஏற்றுக் கொண்டு, முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து அவரை முதலமைச்சராக ஆக்கியே தீருவேன் என்று சபதம் எடுத்திருப்பது முரண்பாட்டின் உச்சமல்லவா? 

விஜயகாந்த் தலைமையில் நீங்கள் இணைந்துவிட்டதும், ஏதோ ஆட்சியையே பிடித்துவிட்டது போல மகிழ்ச்சியில் திளைக்கிறீர்கள். நாள்தோறும் செல்லும் இடங்களிலெல்லாம் தாறுமாறாகப் பேட்டி கொடுக்கிறீர்கள். தி.மு.க.வை விமர்சிக்கிறீர்கள். அதே நேரம் அ.தி.மு.கவை போகிறப் போக்கில் குற்றம்சாட்டுகிறீர்கள். நாளுக்கொரு கருத்தை கூறுகிறீர்கள். பின்னர் அதை மறுக்கிறீர்கள். அதில் ஒன்றுதான் தி.மு.க, பா.ஜ.க பேரம் பற்றிய உங்கள் கருத்தும். இப்பொழுது கேட்க தோன்றுகிறது, என்னதான் உங்களுக்குப் பிரச்னை என்று?

விதண்டாவாதம் ஆகுமா?


பேரம் பற்றி குற்றம்சாட்டிய வைகோவிடம், அ.தி.மு.க. தரப்பில் உங்களுக்கு 1,500 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறதே என்று கேட்டு முடிக்கும் முன்னரே கோபம் கொப்பளிக்க, பேட்டியை முடித்துக் கொள்வதாக ஒரு தொலைக்காட்சியில் இருந்து எழுந்து செல்கிறீரே. ஏன் இந்த உணர்ச்சிவயம்?... மற்றவர்களுக்கு வந்தால் ரத்தம். உங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்டினியா? உண்மையோ‌, பொய்யோ கேள்விக்கு நீங்கள் அங்கேயே மறுப்பு தெரிவித்திருக்கலாமே. நீங்கள் உணர்ச்சிவயப்பட்டதை பார்க்கும்போதுதான் மக்கள் மத்தியில் உங்களைப்பற்றிய தவறான புரிதல் உண்டாகிறது.
தே.மு.தி.க.விற்கு தி.மு.க 500 கோடி ரூபாய் பேரம் பேசியது உண்மை என்றால் நீங்களும் கடந்த காலங்களில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மாறி மாறி கூட்டணி வைத்து ‌50 ஆண்டுகால அரசியல் வாழ்வை கடந்திருக்கிறீர்கள். தி.மு.கவுடன் கூட்டணி வைத்தபோது அல்லது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபோது எவ்வளவு பேரம் பேசினீர்கள்? எவ்வளவு வாங்கினீர்கள்? என்று கேட்டால் விதண்டாவாதம் என்பீர்கள். ஆனால் கேட்காமல் இருக்க முடியாது அல்லவா? பொதுமக்கள் கேட்கிறார்கள். இப்போது கூறுங்கள், இதற்கு முன்பு நீங்கள் எவ்வளவு வாங்கினீர்கள்? இப்போது மக்கள் நலக் கூட்டணியை தே.மு.தி.க.வுடன் இணைத்ததால் உங்களுக்கு கிடைத்த லாபம் என்ன? என்று நீங்கள் தெரிவித்தாதல் நன்றாக இருக்கும்.

உங்களின் நேர்மையை, பேசும் பேச்சை சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. உங்கள் சொல்லும், செயலும் மாறி மாறியிருக்கிறது. நீங்கள் ஒரு வழக்கமான அரசியல்வாதியாக மாறிவிட்டீர்கள் என்பதைதான் உங்கள் செய்கைகள் நிரூபித்துவருகின்றன. முதலில் மக்கள் நலக் கூட்டணியில்தான் தே.மு.தி.க இணைய வேண்டும் என்று கூறினீர்கள். பின்னர், மக்கள் நலக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம். எங்களின் செயல்திட்டம்தான் ஹீரோ என்றீர்கள். 

பிறகு 'தலித் ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம்' என்றீர்கள். மறுநாள் 'முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவதற்கு நான் ஒன்றும் துறவியல்ல' என்றீர்கள். பிறகு திடீரென விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தீர்கள். ஏன் என்று கேட்டால், ''இது ஒரு யுத்தம். இந்த யுத்தத்திலே ஊழல் பணத்திலே இருக்கிற ராட்சச பலம் கொண்ட இரு கட்சிகளை வீழ்த்த வேண்டியிருக்கிறது. ஆகவே இதில் வியூகங்கள் அவ்வப்போது மாறும். எங்களுக்கு இலக்கு வெற்றி. அந்த இலக்கு நோக்கி செல்கிற போது நாங்கள் சில வேலைகளை, உபாயங்களை மாற்ற வேண்டும். இதில் தவறேதும் இல்லை'' என்று கூறுகிறீர்கள். இது எப்படி சாத்தியம்?

சில நாட்களாக உங்களின் நிலைப்பாடுகள் பற்றி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. 

கொள்கையே கிடையாத விஜயகாந்தை முதலமைச்சராக ஆக்க தீர்மானிப்பீர்கள், ஈழத்திற்கு எதிராக இருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுடன் கூட்டணி வைப்பீர்கள், தலித்துக்கு குரல் கொடுத்துக் கொண்டே திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயங்குவீர்கள்? என்ன வைகோ உங்களின் நிலைப்பாடு?

தி.மு.க.வை விட்டு வெளியேறியபோது, கருணாநிதியை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றீர்கள். மீண்டும் கூட்டணியாக இணைந்தபோது, தலைவர் கருணாநிதி கட்சியை விட்டு பிரிந்து போனாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர் என்றீர்கள். அ.தி.மு.க.வுக்கு தாவிய போது, அன்புச் சகோதரி ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர பாடுபடுவேன் என்று திருவாய் மலர்ந்தீர்கள். முதல் முறை விலகியபோது, பாசிச‌ ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன் என்றீர்கள். 

பா.ஜ.க.விடம் ஓடிச்சென்று, மோடி வந்தால் தமிழகத்தில் சுவிட்சை போடாமலே கலர் கலர் பல்புகள் எரியும் என்றீர்கள். அவர்கள் துரத்திவிட்டபோது, தமிழகத்தில் மதவாத சக்திகளை காலூன்ற விடமாட்டேன் என்றீர்கள். கருணாநிதி வீட்டு கல்யாணத்தின் போது, தலைவர் கருணாநிதி தங்கமானவர் என்றீர்கள். அடுத்த வாரம் கூட்டணி பேரம் படியாது என்று தெரிந்தபோது தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதியை ஒழிக்க ஒன்றுபடுவோம் என்றீர்கள். 

ஒருநாள் போற போக்கில், தமிழ் தேசியத்தை ஒழிக்க தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்றீர்கள். சில நாட்களுக்கு முன்பு, மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் கண்டிப்பாக வருவார். அவரை முதல்வராக ஏற்றுக் கொள்ள எந்த ஆட்சேபணையும் இருக்காது என்றீர்கள். பின்னர், நாங்கள் விஜயகாந்த் தலைமையேற்க மாட்டோம் என்றீர்கள். எங்கள் கூட்டணியில் இடமில்லை, விமானி இல்லாமலே விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது என்றீர்கள். மறுபடி விஜயக‌ாந்தை மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றீர்கள். திடீரென ஒருநாள் விஜயகாந்துடனேயே மக்கள் நலக் கூட்டணியை இணைத்துவிட்டீர்கள். 

இதுமாதிரியான உங்களின் குழப்பமான பேச்சும், செயலும் கேப்டன் விஜயகாந்த் அணி வாக்குப்பதிவு வரை கரைதேறுமா என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் எழுப்பியிருப்பதுதான் மிச்சம். வயது ஆக ஆக முதிர்ச்சியும், பொறுமையும் வேண்டும் என்பார்கள். ஆனால், உங்களிடம் அதை காணமுடியவில்லை. நேற்றும், மக்கள் நலக் கூட்டணி தொடர்பான கேள்வியால் கொந்தளித்து, செய்தியாளர்களிடமும், உங்கள் கட்சிக்காரரிடமும் கோபமாக பேசுகிறீர்கள். உணர்ச்சிவயப்படாதீர்கள் வைகோ!
- ஜி.எஸ்.பாலமுருகன், ( மயிலாடுதுறை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக