செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, ஏப்ரல் 09, 2016

எதிர்க்கட்சி அரசுகளே இருக்கக் கூடாதா மோடி?`


மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’’ என்பது தன் நோக்கமென்று முழங்கினார் நரேந்திர மோடி. பிரதமர் ஆனதும் இதை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார் என்பதை அவரது அண்மைக்கால செயல்பாடுகள் வெளிச்சம்போட்டு காட்டுகின்றன. அருணாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் நபம் துகிக்கு எதிராக அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியதால் ஏற்பட்ட குழப்பத்தில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு பா.ஜ.க ஆதரவுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தலைவர் கலிக்கோ புல் முதலமைச்சரானார். தற்போது 6 மாத இடைவெளிக்குப் பிறகு உத்தரகண்ட் மாநிலத்தில் கைவைத்திருக்கிறார் மோடி.
உத்தரகண்டில் என்ன பிரச்னை?
உத்தரகண்ட்டில் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் பகுகுணா, உட்கட்சி குழப்பம் காரணமாக பகுகுணா பதவி விலகி, 2014 பிப்ரவரி 1ஆம் தேதி ஹரீஷ் ராவத் முதலமைச்சராகப் பதவியேற்றார். எனினும் ஆரம்பம் முதலே விஜய் பகுகுணாவுக்கும், ஹரீஷ் ராவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கீடு மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, விஜய் பகுகுணா தலைமையில், நிதி அமைச்சர் ஹரக் சிங் ராவத், அம்ரிதா பத்ரா, குன்வார் பிரணவ் சிங், ஷைலா ராணி ராவத், பிரதிப் பத்ரா, சுபோத் உனிவால், சைலேந்திர மோகன் சிங்கால், உமேஷ் சர்மா, விம்லால் ஆரியா ஆகிய 9 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து, மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தினர்.
இதையடுத்து, அடுத்தடுத்த நாட்களில் அரசுக்கு எதிரான நெருக்கடி அதிகரித்ததால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரின் பதவியையும் கட்சித் தாவல் சட்டப்படி பேரவைத் தலைவர் பறித்து உத்தரவிட்டார். தொடர்ந்து, ஒரு நியமன எம்.எல்.ஏ உட்பட காங்கிரஸூக்கு 27 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்த நிலையில், முற்போக்கு ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். மேலும், அதிருப்தி அணியைச் சேர்ந்த விம்லால் ஆரியா என்ற எம்.எல்.ஏ. அரசை ஆதரிப்பதாக கூறினார். இதனால் பேரவையில் எளிதாக காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது.
மத்திய அரசு திடீர் நடவடிக்கை


பெரும்பான்மையை நிரூபிக்கும்போது பேரவையில் அமளி நடக்க வாய்ப்பு உள்ளதாக ஆளுநர் கே.கே.பால் அறிக்கை அளித்தார். இதையடுத்து அவசரம் அவசரமாக பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவையில், மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின் கீழ், கடந்த 27ஆம் தேதி பேரவையை முடக்கி வைத்து, குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தபோது, அக்கட்சி குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது என்றும், ஜனநாயக படுகொலை நடத்துவதாகவும் குற்றம்சாட்டிய பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி செய்ததையே இப்போது பா.ஜ.க.வும் செய்கிறது. காங்கிரஸ் கட்சி, தனது முடிவை அல்லது செயல்பாட்டை எதிர்க்கும் முதலமைச்சருக்கு எதிராக 356ஆவது பிரிவை பயன்படுத்தியது போன்றே, பா.ஜ.க.வும் அருணாச்சலை தொடர்ந்து உத்தரகண்ட்டிலும் செயல்படுத்தியது.
356ஆவது பிரிவு என்ன சொல்கிறது?
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவு குடியரசுத்தலைவர் ஆட்சியை குறிக்கிறது. அதாவது, இந்தியாவில் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு மத்திய அரசின் மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்விதிபடி ஓர் மாநில அரசு இயங்காமல் இருக்கும்போது, அந்த அரசை கலைக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் பெரும்பாலும் எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காகவே 356ஆவது பிரிவு பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக கூறப்படுவது உண்டு. இதற்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் போட்டது.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கு
கர்நாடகத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், முதலமைச்சராக இருந்த ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மையின் அரசு கலைக்கப்பட்டு, 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின்பேரில், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பொம்மையின் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் குல்தீப் சிங் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பொம்மையின் அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தது. 356ஆவது பிரிவை பயன்படுத்துவதில் மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விளக்கங்களையும் தெளிவாக வரையறுத்தது உச்சநீதிமன்றம். ஆனால், அதையெல்லாம் மத்திய பா.ஜ.க அரசு அருணாச்சலிலோ, உத்தரகண்ட்டிலோ கடைப்பிடிக்கவில்லை.
உத்தரகண்டில் பா.ஜ.க.வின் நோக்கம் என்ன?


உத்தரகண்ட் மாநிலங்களவை எம்.பி.யாக, பா.ஜ.க.வைச் சேர்ந்த தருண் விஜய் உள்ளார். இவர் அடிக்கடி தமிழுக்காக குரல் கொடுப்பவர். இவரது பதவிக் காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடைகிறது. காங்கிரஸ் அரசு, உத்தரகண்டில் நீடித்தால் தருண் விஜய் மீண்டும் எம்.பி.யாவது சாத்தியமில்லை. இப்பின்னணியில்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தூண்டிவிட்டு அரசியல் குழப்பத்தை பா.ஜ.க அரங்கேற்றுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் செய்வது சரிதானா மோடி?
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருக்கலாம். தலைமையோடு பிரச்னை ஏற்படலாம். பதவிக்காக அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கலாம். இதையெல்லாம் காரணமாக வைத்து, ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சாசனத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்ப்பது, அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்துவது, சட்டத்துக்கு விரோதமானது மட்டுமல்ல; அரசியல் காழ்ப்புணர்ச்சியும்கூட.
இதுபோன்றதொரு நிலை எங்கள் மாநிலத்திலும் தொடரும் என்று, காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் வீரபத்ர சிங், தனது கட்சித் தலைவர் சோனியாவிடம் புலம்பும் அளவுக்கு ஆளும் பா.ஜ.க அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் நடந்துக் கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள இயலாது. உத்தரகண்ட் நடவடிக்கையை ‘ஜனநாயக படுகொலை’ என்று காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் கூறும் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. காங்கிரஸ் ஆளும் ஒவ்வொரு மாநிலத்தையும் குறிவைத்து, குழப்பத்தையும், அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்துவதை பார்த்தால், மோடியின் பின்னணியில் உள்ள ’காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற ரகசியத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
மோடியின் விரோதப் போக்கு தொடரும்?
அருணாச்சல், உத்தரகண்ட்டை தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களிலும் அடுத்தடுத்து அரசியல் குழப்பம் நிகழ இருக்கிறது. ஹிமாச்சலில் முதலமைச்சர் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், வீரபத்ர சிங் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப் பிரிவின் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இதை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த மோடி அரசு காய் நகர்த்தி வருகிறது. இதேபோல், மணிப்பூர் முதலமைச்சர் இபோபி சிங், மேகாலயா முதலமைச்சர் முகுல் சங்கமா, மிசோரம் முதலமைச்சர் லால்தன் ஆகியோரின் அரசுகளுக்கு எதிராக, அந்தந்த மாநில அரசியல் நிலவரங்களை வைத்து குழப்பம் செய்திட பா.ஜ.க திட்டம் வகுத்து வருகிறது.
கர்நாடக காங்கிரசுக்கும் சிக்கல்?
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகம்தான். அங்கு, மொத்தமுள்ள 124 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 65க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சோனியாவிடம் முறையிட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையாவை உடனடியாக நீக்காவிட்டால், உத்தரகண்ட் நிலைமை கர்நாடகாவிலும் நடைபெறலாம் என்று கூறியிருக்கிறார். இப்படி காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளை அலற வைத்து மகிழ்ச்சிக் கொள்வதிலும், அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் மோடிக்கு என்னதான் சுகமோ? இந்தியாவில் எங்கும் எதிர்க்கட்சிகளின் அரசுகள் இருக்கக் கூடாது என்று நினைத்தால், மக்கள் மத்தியில் பா.ஜ.க.வுக்கோ, நரேந்திர மோடிக்கோ நல்ல பெயரை பெற்றுத் தராது!
-ஜி.எஸ்.பாலமுருகன், மயிலாடுதுறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக