செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், ஏப்ரல் 20, 2016

'அதிமுக, திமுக: நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு!' - ஓர் வாசகர் குரல்

விகடன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரை

முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சி முடியும் அந்திமக் காலத்தில், மதுவிலக்கு குறித்து திருவாய் மலர்ந்திருக்கிறார்.
ஐந்து ஆண்டு காலத்தில் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என ஒட்டுமொத்த தமிழகமுமே,  'மதுக்கடைகளை மூடுங்கள், மதுவிலக்கு பற்றி அறிவியுங்கள்'  என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டபோதெல்லாம், வாய் திறக்காத ஜெயலலிதா, தேர்தல் வந்துவிட்டதும், மதுவிலக்கு குறித்து பேசாமல் வெற்றியை பெற முடியாது என்றெண்ணி, முதல் நாள் பிரசாரத்திலேயே, 'மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்' என்று சொல்லியிருக்கிறார். 

இதற்கு அடுத்த நாளே திமுக,  தனது தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. தேர்தல் நடவடிக்கையாக இருந்தாலும், இரு தலைவர்களின் உறுதிமொழியை வரவேற்கலாம். ஆனால்….

‘’மதுவிலக்கைப் பொறுத்தவரை எனது நெஞ்சார்ந்த குறிக்கோள் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான். பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை ஆகும். ஆனால், பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது என்பது இயலாது. இது படிப்படியாகத்தான் கொண்டுவர முடியும். முதலில் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். பின்னர் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு எனும் லட்சியத்தை நாம் அடைவோம்’’ என்று நீட்டி முழக்கியிருக்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.

‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என பாடிய கோவன் நள்ளிரவில் தேச விரோத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிப்ரவரி மாதம்,  திருச்சியில் பூரண மதுவிலக்கு கோரி மாநாடு நடத்திய ஏழு பேர் மீது தேச விரோத வழக்குப் போடப்பட்டது. மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. மதுக்கடைகளை மூடச் சொல்லி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், காவல்துறையினரின் அலட்சியத்தால் களத்திலேயே பலியானார். இப்படியெல்லாம் போராட்டம் நடந்தபோது, எங்கே படுத்து உறங்கிக் கொண்டிருந்தது ஜெயலலிதாவின் பூரண மதுவிலக்கு கொள்கை?
மதுக்கடைகளை ஒழித்து, மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் உண்மையான எண்ணம் என்றால், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கலாமே? கடந்த ஐந்து ஆண்டுகளில், 110விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்த 187 திட்டங்களும் ‘நிறைவேற்றப்பட்டதாக’ பெருமிதம் அடைந்த ஜெயலலிதா, அதுபோல், மதுவிலக்கு குறித்து ‘110’ வாசித்து அமல்படுத்திய சாதனையை நிகழ்த்தியிருக்கலாமே? அதையெல்லாம் செய்யாமல், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என்று கூறும் அவரது பேச்சை எப்படி நம்ப முடியும்? 

ஒரே கையெழுத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது, படிப்படியாகத்தான் கொண்டுவர இயலும் என்று கூறுவதன் மூலம், அவரின் கடந்த கால மதுவிலக்கு கொள்கை மீது சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 1991-1996 ம் ஆண்டு தவிர, 2001-2006, 2011-2016 என்று மூன்று ஐந்தாண்டுகளை முழுமையாக ஆட்சி செய்த காலத்தில்,  அவர் நினைத்திருந்தால், எப்பொழுதோ மதுக்கடைகளை மூடியிருக்கலாம். ஆனால், செய்தது என்ன?

1991-ம் ஆண்டில் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்றபோது ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் இடம்பெற்றிருந்த, பாக்கெட் சாராயத்தை ஒழிக்க முதல் கையெழுத்திட்ட அவர், அப்போதே படிப்படியாக, மதுவிலக்கை கொண்டு வருவதாக அறிவித்து அந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக்குள் முழுமையான மதுவிலக்கை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
பின்னர் 2001-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தப் பிறகாவது மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்றியிருக்கலாம். அதை செய்யாமல், மதுக்கடைகளை அரசுடைமையாக்கி, மது விற்பனையை அதிகப்படுத்தினார். அதன் பிறகாவது அவருக்கு ஞானோதயம் வந்ததா என்றால் இல்லை. 2011-ம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 300 க்கும் மேற்பட்ட புதிய மதுக்கடைகளையும், உயர்தர எலைட் மதுக் கடைகளையும் திறந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை, போராடியவர்களை கைது செய்தார். 

இப்படி 15 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து மதுவிலக்கை கொண்டுவர முடியாத ஜெயலலிதா, இப்போது தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை கொண்டுவருவேன் என்று வாக்குறுதி தருகிறார். அவரது வாக்குறுதியை ‘தண்ணியில்’  எழுதி வைத்து, வெறிக்கப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். 

ஜெயலலிதா அவர்களே...தேர்தல் மட்டும் தற்போது வரவில்லை என்றால், இந்த அறிவிப்பைக் கூட வாய்திறந்து சொல்லியிருக்க மாட்டீர்கள். சட்டப்பேரவையில் மதுவிலக்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம், அத்துறையின் அமைச்சரை விட்டு பதில் தர வைத்த நீங்கள், தற்போது மதுவிலக்கு குறித்து பேசுவது முரண்பாட்டின் மொத்த உருவமாகதான் பார்க்க முடிகிறது. 

இதுமட்டுமா? மதுவிலக்கை அமல்படுத்தினால் வருமானம் போய்விடும் என்றும், மதுவிலக்கை அமல்படுத்தும் எண்ணமே இல்லை என்றும் சட்டப்பேரவையில் வெவ்வேறு காலக்கட்டங்களில் தடாலடியாக அறிவித்தவர், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியவர் ஜெயலலிதா அரசின் அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

சரி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதே,  அப்பொழுதாவது மதுக்கடைகளை அகற்றி, உங்கள் மதுவிலக்கு கொள்கையை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், அதை செய்ய மனமில்லாமல், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வரைக்கும் அதிமுக அரசு சென்றது என்றால், அது நியாயமான செயலா? 

மதுவிலக்கு கொள்கைதான் நெஞ்சார்ந்த குறிக்கோள் என்று கூறும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், ரூ.1.90 லட்சம் கோடிக்கு மது விற்பனையை செய்திருக்கிறார். இதை எப்படி ஒரே கையெழுத்தில் விட்டுகொடுக்க மனம் வரும்? அதனால்தான் படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்து, மக்களை நம்பவைத்து, வாக்கு அறுவடை செய்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் வருமானம் போய்விடும், அதனால் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. மதுவிலக்கை அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களில் போய் குடிப்பார்கள், கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்றெல்லாம் அவிழ்த்துவிடுவார்கள்.
திமுகதான் மதுக்கடைகளை திறந்தது என்று அதிமுகவும், அதிமுகதான் மதுவிலக்கை ரத்து செய்தது என்று திமுகவும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. 1971ல், கருணாநிதி தலைமையிலான  திமுக ஆட்சியில் மதுவிலக்கை நீக்கி, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள், சாராயம் மற்றும் கள் விற்பனைக்கான கடைகள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டன. பின்னர், அதே ஆட்சிக் காலத்தில், 1974 ல் மீண்டும் மதுக்கடைகளை மூடி, மது விலக்கை கருணாநிதி நடைமுறைப்படுத்தினார். 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் சட்டமுன்வடிவு,  சட்டப்பேரவையில் 22-8-1974 அன்று நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, 1981ல் கள், சாராய விற்பனைக்காக, மதுவிலக்கை ரத்து செய்தது. தொடர்ந்து, 1991ல் பாக்கெட் சாராயத்தை ஒழித்த ஜெயலலிதா, பின்னர் மது விற்பனையை அரசுடைமையாக்கினார்.
சசிபெருமாள் மரணத்திற்கு பிறகு, தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான ஒரு கொந்தளிப்பான நிலை ஏற்பட்டவுடன், திமுகவுக்கு ஞானோதயம் வந்தது. அதன் எதிரொலியாக தற்போது தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருக்கிறது. 5 முறை முதலமைச்சராக இருந்தபோது எதையும் செய்ய மனமில்லாத கருணாநிதி, தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதற்காக, மதுவிலக்கு குறித்து பேசுகிறார். இதை எப்படி நம்புவது? சட்டப்பேரவையில் மதுவிலக்கு பற்றி பேசினால் ஜெயலலிதா வாய் திறப்பதில்லை. அவருக்கு பதிலாக நத்தம் விஸ்வநாதன் பதில் கொடுப்பார். அதேபோல்தான் கடந்த காலங்களில் கருணாநிதியும் செயல்பட்டிருக்கிறார். 

2007-ம் ஆண்டு சட்டப்பேரவையில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டுமென பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேசியபோது, ''நான் அவர்களுக்கெல்லாம் சொல்வது... அறவே கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாததற்குக் காரணம், மதுவிலக்குத் திட்டத்தில் நாம் மற்ற நாடுகளோடு போட்டி போடுவது என்றால், அவர்களை விட இன்னும் நல்ல சரக்குகளை இங்கே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதிலேதான் வெற்றி பெற முடியுமே தவிர, வேறு வழியிலே வெற்றி பெற முடியாது என்பதற்கு இன்றைய உலக நிலை, பண்பாடு, உலகக் கலாச்சாரம் சாட்சியாக இருக்கிறது’’ என்று கருணாநிதி கூறினார்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வைகோ 1,500 கி.மீ பாதயாத்திரை மேற்கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், வயது, உடல் நலம் பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாமல் சென்னை முதல் குமரி வரை பாதயாத்திரை மேற்கொண்டார். காந்தியவாதி சசிபெருமாள், ஒவ்வொருவரின் காலில் விழுந்து குடிக்காதீர்கள், குடிக்காதீர்கள் என்று கெஞ்சினார். பெண்கள், மாணவிகள், மாணவர்கள், சிறுவர்கள் என பலரும் மதுக்கடைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்தனர். ஆனால், அதிமுக மற்றும் திமுக அரசுகள் சாராய விற்பனையில் ஒரே கொள்கையை கடைப்பிடித்து, கூட்டு கொள்ளையடித்து வந்திருக்கின்றன.

மக்களை குடிகாரர்களாக மாற்றி, ஒரு தலைமுறையையே சீரழித்து விட்டன. பள்ளிக்கு போகும் மாணவ – மாணவிகளை குடிக்கும் நிலைக்கு இரு அரசுகளும் மாற்றிவிட்டன. அரசே முன்னின்று மது விற்பனையை செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்மூலமாக்கி, கஜானாவை பெருக்கிக் கொள்கிறது. மதுபோதையில் மக்களை தள்ளாட வைத்து, அதில் வரும் வருமானத்தை, இலவசம் எனும் ஊறுகாயாக தந்து மக்களை எப்போதும் ஏமாற்றியே வந்திருக்கிறது அதிமுகவும், திமுக வும். குடிப்பழக்கம் மட்டுமல்ல, அதிமுகவும், திமுகவும் நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு!

- ஜி.எஸ்.பாலமுருகன் (மயிலாடுதுறை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக