செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, அக்டோபர் 24, 2015

ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி!

அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என இன்று ஒருவரே பல எண்களை வைத்துக் கொண்டிருப்பது சாதாரணமான சங்கதி. இதனால் இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களை பயன்படுத்துவோரும் இன்று அதிகம். ஆனால், இந்த போன்களில் இருக்கும் பிரச்சினை, இருக்கும் இரண்டு எண்களில் ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும். மற்றொரு எண்ணைக் கொண்டு, அதே மொபைலில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. இதனால், வாட்ஸ்ஆப் பயன்பாட்டுக்காக மட்டும் வேறொரு புது மொபைலை நாடும் நிலை உள்ளது.

ஆனால் தற்போது, ஒரு மொபைலில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் டூயல் சிம் மொபைல் பயன்படுத்துபவர் என்றால், திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் மொபைலில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயலியை https://goo.gl/bW2ELo என்ற இணைப்பின் மூலம் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது வாட்ஸ்ஆப் பயன்படுத்தாத எண்) '+91' என குறியீட்டோடு தரவும். (உதாரணம்+91 98765*****)

அடுத்து வெரிஃபை செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும். நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள வாட்ஸ்ஆப் இல்லாமல், திசா செயலிக்குள் இன்னொரு வாட்ஸ்ஆப் பக்கம் உருவாகிவிடும். ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள வாட்ஸ்ஆப் மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும். வாட்ஸ்ஆப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது. அதே போல ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் மட்டுமே தற்போது இந்த செயலி வேலை செய்யும்.

காதலால் சொன்னேன்!

-பழ. கருப்பையா

அண்மையில் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில் உள்ள இசுடாலின் (மு.க. ஸ்டாலின்) ஒரு நீண்ட சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருக்கிறார்! தேர்தல் நெருங்கிவிட்ட வேளையில் அரசியலில் இஃதொன்றும் வியப்பானதில்லை.
ஆனால் கோயில்களுக்குச் செல்கிறார்; பூரணகும்ப மரியாதையைப் பெற்றுக் கொள்கிறார் என்பது வியப்பளிக்கின்ற காரணத்தால் "வியப்புகள் தொடர்கின்றன' என ஆங்கில நாளிதழ்கள் தலைப்பிட்டு எழுதுகின்றன.
"என்னுடைய மனைவி தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களுக்குச் செல்கிறார்; அவரைப் "போகாதே' என்று ஒருமுறைகூட நான் தடுத்ததில்லை' என்கிறார் இசுடாலின்.
நான் கடவுளை நம்புகிறேனோ இல்லையோ, நம்புகிறவர்களின் நம்பிக்கையில் நான் குறுக்கிடுபவன் அல்லன் என்று மனைவியைச் சுட்டிச் சொல்வதன் மூலம் நம்பிக்கையாளர்களுக்கு, நம்பிக்கை ஊட்ட விரும்புகிறார் இசுடாலின்!
எப்போது அச்சப்பட்டார்கள் மக்கள்?
கருணாநிதியின் பராசக்தி படத்தில் வெற்றி அவருடைய கடவுள் மறுதலிப்புக் கொள்கைக்கும், அவருடைய உரையாடல் கூர்மைக்கும் கிடைத்த வெற்றிதானே!
"டேய் பூசாரி...!'
"பராசக்தி உனக்குத் தாய்; என் தங்கை கல்யாணி உனக்குத் தாசியா?'
"யார் அம்பாளா பேசுவது?'
"அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே! அவள் பேசமாட்டாள்.. அது கல்.'
இவற்றை எழுதியதால் கடவுள் நம்பிக்கையாளர்கள் சினம் கொண்டிருப்பார்கள் என்றால் கருணாநிதி ஒருமுறை கூடத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கமாட்டார். தி.மு.க. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற காலத்தில் கூட அவர்தான் அந்த வெற்றிக்குரிய ஒருவராக இருந்தார்!
முழுக் கடவுள் மறுப்புக் கொள்கைதான் 1967ல் அண்ணா தலைமையில் தி.மு.க.வை ஆட்சி பீடத்தில் ஏற்றியது.
ஆரிய மாயை எழுதிய அண்ணாவை முதல்வராக்க, இராசாசி பார்ப்பன சமூகத்தை நோக்கி, "பூணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்' என்று கூசாமல் சொன்னார். அவர்களும் கூசாமல் அவ்வாறே செய்தார்கள்.
அண்ணா ஆட்சிக்கு வந்ததால் "நம்மை மறுத்தவன் ஆட்சிக்கு வருவதா?' என்ற சினத்தில் தில்லைக் கூத்தன் கால் மாறி ஆடினானா? அல்லது தீட்சிதர்கள் சம்மு காசுமீர்ப் பார்ப்பனர்களைப் போல் வேறு மாநிலங்களில் குடியேற நேரிட்டு விட்டதா? தமிழை நீச பாஷையாகவும், திராவிட மக்களைச் சூத்திரர்களாகவும் கருதிய நிலைப்பாடுகளுக்கு எதிராகத்தான் அண்ணா போர் தொடுத்தார். மூவாயிரம் ஆண்டு நீண்ட போரின் தொடர்ச்சிதான் பெரியாரும், அண்ணாவும்!
தி.மு.க. பற்றிய தோற்றத்தை பலவந்தமாக மாற்ற நினைக்கிறார் இசுடாலின் என்று வகைந்து வகைந்து எழுதுகின்றன ஆங்கில நாளேட்டு ஆய்வுரைகள்.
இசுடாலின் கோயிலுக்குச் செல்வது குற்றமில்லை. ஒருவேளை கோயிலுக்குள் இருக்கும் மூர்த்தத்தை, அவருடைய தந்தையைப் போல் "கல்' என்று கருதாமல் "கடவுள்' என்றே கருதினாலும் குற்றமில்லை.
கோயில் வழிபாடு என்பதும், கருவறைக்குள் ஆவுடையுள் நிலை கொண்டிருக்கும் லிங்கத்தை வழிபடுவது என்பதும் திராவிட வழிபாட்டு முறைகள்தாம்! ஆரிய முறை வேறு; தீயை வழிபடுபவர்கள் அவர்கள்! "தீயினைக் கும்பிடும் பார்ப்பான்' என்று தெளிவுபடுத்திக் கூறுகிறான் பாரதி.
யாக குண்டத்தில் தீ வளர்த்து, நெய் சொரிந்து, அதற்குள் துணியிலிருந்து தானியங்கள் வரை போட்டு, அவற்றை எரித்து இந்திராதி தேவர்களை வசப்படுத்துவது அவர்களின் முறை!
லிங்கத்தின் மீதோ, முருகனின் மீதோ, திருமாலின் மீதோ நீரைச் சொரிந்து கழுவி, பூவிட்டுப் பூசை செய்வது திராவிட முறை. அதனால்தான் குடநீராட்டு விழாவில் கோபுரக் கலசங்கள் மீது நீருற்றுகிறோம். அறுபதாண்டு முடிந்து மணிவிழா நடத்தும்போது மணிவிழாத் தம்பதியர் தலைகளில் நீரினைச் சொரிகிறோம்.
லிங்க வழிபாட்டைச் "சிசுன வழிபாடு' என்று ஆதிசங்கரர் நகையாடினார். பக்தி இயக்கம் திராவிடச் சமயங்களை நிறுவனப்படுத்தியபோது, சிசுன வழிபாட்டைத் தமிழ்நாடு முழுதும் சுற்றிச் சுற்றிப் பரப்பிய ஆரியரான ஞானசம்பந்தரை "திராவிடச் சிசு' என்று பழித்தார் ஆதிசங்கரர்!
பெரியாரும் லிங்க வழிபாட்டைக் "குறி வழிபாடு' என நகையாடினார். ஆதிசங்கரரும் இதனைச் "சிசுன வழிபாடு' என அதே பொருளில்தான் நகையாடினார்!
சாடல் ஒன்றுதான்; ஆனால் சாடலுக்கான நோக்கங்கள் வேறு வேறு! கோயில்கள் அவர்களின் பிடியில் இருந்தாலும், உள்ளே இருக்கும் கடவுள்கள் திராவிடக் கடவுள்கள்தாம்!
வேதம் படைத்த சமூகம், இந்தக் கறுப்பர்களின் லிங்க வழிபாட்டையா பின்பற்றுவது என்று சினங் கொண்டு ஆதிசங்கரர் பிரும்ம சூத்திரத்தின் அடிப்படையில் "அத்வைத' மெய்பொருளியலை உருவாக்கிக் கொடுத்தார்!
"நீயே அது; பிரும்மம் வேறு நீ வேறல்ல' என்று புதிய தத்துவம் படைத்துக் கோயில் வழிபாட்டை விட்டு ஆரியரை விலக்கிக் கொண்டு வர ஆதிசங்கரர் முயன்றாலும், அது நடக்கவில்லை, திராவிடச் சமயங்களே கடைப்பிடிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் எளியவை!
திராவிடச் சமயங்கள் ஆரியர்களை முற்றாக உறிஞ்சி விட்டன. கருவறைக்குள் அவர்களின் இருப்பும், சமக்கிருத ஒலிப்பும் இந்த உண்மையைப் புறவுலகு அறியாமல் செய்துவிட்டன; கடைசியில் "சிசுனம்' ஆரியர்களின் கடவுளாகிவிட்டது. தில்லைக் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தம் என்றாகிவிட்டது. உச்சநீதிமன்றமே சொல்லி விட்டதே; பெரியவாள் சொன்னால் பெருமாளே சொன்ன மாதிரி! சட்ட நோக்கும், அறநோக்கும் ஒன்றில்லை என்பதற்கு இந்தத் தீர்ப்பே சான்று! சோழர்களே வந்து நாங்கள்தாம் கட்டினோம் என்றாலும் நீதிமன்றம் நம்பாது! வடநாட்டினர்க்குத் தனி மெய்யியல் கிடையாது. பார்ப்பனரல்லாதாரான விவேகானந்தர் வேறு வகை தெரியாமல் வேதாந்தத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று விட்டுத் தென்னாட்டிலும் இந்து மதம் என்று பேச வந்தபோது "நாங்கள் இந்துக்கள் அல்லர்' என அவரைத் திருவனந்தபுரத்திலேயே வழிமறித்து அவருடைய கருத்தை விலைபோகாமல் செய்துவிட்டார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.
இந்து என்னும் சொல்லையே பாரதியால்தான் தமிழ் அறிய நேரிடுகிறது! வள்ளலாருக்கே அப்படி ஒரு மதம் இருப்பது தெரியாது! இப்போது இசுடாலின் வாயிலாக அந்தச் சொல்லைக் கேட்க நேரிட்டதுதான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வாய்த் தவறுதலா? கருத்து மாற்றமா?
"தி.மு.க.வில் இருப்பவர்களில் தொன்னூறு விழுக்காட்டினர் இந்துக்கள்தாம்; அவர்களும் அவர்கள் குடும்பங்களும் கடவுளின் மீதும் மதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களே' என்னும் இசுடாலின் கூற்று தி.மு.க. இந்து எதிர்ப்புக் கட்சியன்று என்று காட்டி கொள்வதற்காகத்தான்! அதிகாரக் குதிரையின் மீது சவாரி செய்ய விரும்புகிறவர்கள் மீது, எண்ணிக்கை வலிமை கொண்ட எல்லாக் கழுதைகளும் சவாரி செய்யாமல் விடா!
இது அண்ணாவுக்கும் தெரியும்; அதனால்தான் அதிகார அரசியலுக்கு வர முடிவெடுத்தபோது, "ஒருவனே தேவன்' என்று இறங்கி வந்தார். வெளியே இருக்கிற மக்களை வெருளாமல் இருக்கச் செய்வதுதான் அதன் நோக்கம்!
"அந்த ஒரு தேவனை எப்படிக் கண்டறிந்தீர்கள்' என்று அண்ணாவிடம் சம்பத்தோ, கருணாநிதியோ, அன்பழகனோ கேட்டிருந்தால், கதை நாறிப் போயிருக்கும்!
தலைவனின் நோக்கம் தூயதாக இருந்தால், அவன் சொல்லாத விளக்கத்திற்குள் உண்மையைக் கண்டறிய இரண்டாம் வரிசைத் தலைவர்களுக்கு இயலும்.
அத்தகைய பின்பற்றுவோரைக் காந்தியும், நேருவும் அண்ணாவும் பெற்றிருந்தனர். அதனால்தான் எந்த நிலையிலும் தி.மு.க.வைப் பகுத்தறிவு இயக்கமாகவே அண்ணாவால் கடைசிவரை கொண்டு செலுத்த முடிந்தது!
பகை முனையை ஒடிப்பதற்குச் சாய்ந்தது போலத் தோற்றம் தரலாம். ஆனால் சாயக் கூடாது. கீதை கீதை என்பார் காந்தி; கீதை அகிம்சை நூல் அல்லவே என்று கேட்டால், அகிம்சைக்கு மாறானவற்றை எல்லாம் கீதையிலிருந்து எடுத்தெறிந்து விடுவேன் என்பார். கிருட்டிணர் சொன்னதை எடுத்தெறியலாமா என்று கேட்டால், அவை எல்லாம் இடைச்செருகலாக இருக்கும் என்பார். கீதையையும் விடமாட்டார்; தன்னுடைய அகிம்சை நிலைப்பாட்டையும் விடமாட்டார் காந்தி! நெருக்கடி வந்தால் கீதையைப் பலியிடுவாரே தவிர, உண்மையைப் பலியிட மாட்டார்.
பேரறிவும், உண்மையும், நெறி பிறழா நிலையும் வாய்க்கப் பெற்றிருக்காவிட்டால், காந்தி தன்னுடைய ஒரு சொல்லால் பேரறிவாளர்களான நேருவையும், படேலையும், இராசாசியையும், காமராசரையும், செயப்பிரகாசு நாராயணனையும், கிருபளானியையும், ஏன் இந்தியாவையும்கூட, காலின் கட்டை விரல் நுனியில் நிற்க வைத்திருக்க முடியுமா? காலம் வழங்கிய கருணை மழை எம்மான் காந்தி!
அது தலைமைக்கான திறன்! அது அண்ணாவிடம் நிரம்ப இருந்தது!
காந்தி, பெரியார், அண்ணா ஆகியோர் காலத்தின் தேவையறிந்து புதியது படைக்க வந்தவர்கள்! சமூகத்தின் போக்கை மாற்றியமைக்க வந்தவர்கள்!
நட்பாக வந்த இராசாசியைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியில் அமர்ந்து, அன்று வரை பகையாக இருந்த பெரியாருக்குத் தன்னுடைய ஆட்சியைக் காணிக்கையாக்க அண்ணாவுக்கு எவ்வளவு நெஞ்சூக்கமும் கொள்கைத் தெளிவும் இருக்க வேண்டும்!
அண்ணா காலத்தை விட இந்துத்துவத்தின் நெருக்கடி காரணமாகத் திராவிடத்தின் இன்றியமையாமை மிகுதியாக உணரப்படும் காலம் இது! ஆனால் காலம் மிகவும் நீர்த்துப் போய்விட்டது. வெறும் பதினெட்டுப் பேரையோ எட்டுப் பேரையோ வைத்துக் கொண்டு தேவகெளடா தலைமையமைச்சராகி விட்டாரே, அதுபோல் நாமும் ஏன் முதலமைச்சராக முடியாது என்னும் நப்பாசைக்காரர்களை நம்பித்தான் இந்துத்துவம் தமிழ்நாட்டில் காலூன்ற முயல்கிறது!
பகைப்புலம் தெரியாமல் அரசியல் நடத்துகிறார்கள்! பாம்பைக் கொண்டு தவளைகள் முடிசூடிக் கொள்வதில்லை!
இதேபோல் திராவிட இயக்கத்தைக் காலநிலைக்கேற்றவாறு முன்னெடுத்துச் செல்வதாக எண்ணியோ அல்லது நுனிப்புல் மேய்கிறவர்களால் வழிகாட்டப்பட்டோ, இசுடாலின் திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ளவர்களில்   தொண்ணூறு விழுக்காட்டினர் இந்துக்கள் என்று சொல்லக் கேட்பதே மேனி முழுவதும் கம்பளிப் பூச்சி ஊர்கின்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது!
"திராவிட அடலேறுகளே' என்று இனம் சுட்டி அழைக்கப்பட வேண்டியவர்கள் "இந்துக்களே' என்று இல்லாத மதத்தின் பேரில் அடையாளப்படுத்தப்படுவார்களேயானால், அது திராவிட இயக்கத்திற்கு மூடுவிழா நடத்துகின்ற முயற்சியாகிவிடும்.
சோர்வு நிலையில்கூட வேட்டி அவிழ்ந்துவிடக் கூடாது! வாய்தவறிக் கூடத் திராவிட உடன்பிறப்புகளை இந்த வகையாக அடையாளப்படுத்தக் கூடாது!
திராவிடத்தின் மீதுள்ள காதலால் சொன்னேன்!
நன்றி - தினமணி