செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், அக்டோபர் 31, 2011

தேர்தலில் தோல்வியா...?


அரசியல் வாழ்க்கையில், 12 முறை சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார் தமிழகத்தின் மு.கருணாநிதி.


தி.மு.க.,தொடங்கிய பின், 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்று இறுதியாக, 2011ல் நடைபெற்ற தேர்தலில் சொந்த தொகுதியான திருவாரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதுவரை ஐந்து முறை முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர். மேலவை உறுப்பினராக இருந்ததால், 1984ல் நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இதுவரை.,

1957 - குளித்தலை - தர்மலிங்கம் (காங்கிரஸ்) 8296 ஓட்டுகள் வித்தியாசம்
1962 - தஞ்சாவூர் - பரிசுத்தநாடார் (காங்கிரஸ்) 1928 ஓட்டுகள் வித்தியாசம்
1967 - சைதாப்பேட்டை - வினாயகமூர்த்தி (காங்கிரஸ்) 20482 ஓட்டுகள் வித்தியாசம்
1971 - சைதாப்பேட்டை - ராமலிங்கம் (காங்கிரஸ்)12511 ஓட்டுகள் வித்தியாசம்
1977 - அண்ணாநகர் - கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.)16438 ஓட்டுகள் வித்தியாசம்
1980 - அண்ணாநகர் - ஹெச்.வி.ஹண்டே (அ.தி.மு.க.) 699 ஓட்டுகள் வித்தியாசம்

1989 - துறைமுகம் - கே.ஏ.வசாப் (முஸ்லீம் லீக்) 31991 ஓட்டுகள் வித்தியாசம்
1991 - துறைமுகம் - கே.சுப்பு (காங்கிரஸ்) 890 ஓட்டுகள் வித்தியாசம்
1996 - சேப்பாக்கம் - நெல்லைக் கண்ணன் (காங்கிரஸ்) 35784 ஓட்டுகள் வித்தியாசம்
2001 - சேப்பாக்கம் - தாமோதரன் (காங்கிரஸ்) 4834 ஓட்டுகள் வித்தியாசம்
2006 - சேப்பாக்கம் - தாவுத் மியான்கான் (சுயேட்சை) 8526 ஓட்டுகள் வித்தியாசம்
2011 - திருவாரூர் - குடவாசல் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 50269 ஓட்டுகள் வித்தியாசம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’


‘சுடுங்கள்... சுடுங்கள்... யார் எதிர்த்தாலும் தயங்காமல் சுடுங்கள்’ என்று தன்னுடைய சிறிய படைக்குக் கட்டளையிட்ட வண்ணம் லிபிய நாட்டு மன்னரின் அரண்மனைக்குள் நுழைந்து, அங்கிருந்த மன்னரின் மருமகனிடம் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. ‘உங்களைக் கைது செய்கிறோம்’ என்று சொன்ன அந்த 27 வயது இளைஞனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அது: இளவரசர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சரணடைந்தது. அன்று யுத்தம், ரத்தம் எதுவுமில்லாமல் மிரட்டிப் பெற்ற ஆட்சியை லிபியாவில் 42 ஆண்டு காலம் தொடர்ந்தவர் மும்மர் கடாஃபி.

பாலைவன கூடாரங்களில் தங்கி, ஒட்டகங்கள் மேய்க்கும் நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்த கடாஃபிக்குப் படிக்க ஆசை. ஆனால், அதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டும். அதனால், அடிக்கடி தடைப்பட்ட படிப்பை தனி ஆசிரியர் மூலம் தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த போது வயது 20. தொடர்ந்து படிக்க நல்ல வாய்ப்பு என்ற எண்ணத்துடன் சேர்ந்தது ராணுவத்தில். பட்டப் படிப்பும் வெளிநாட்டுப் பயிற்சியும் இலவசம் என்பதும் ஒரு காரணம். இந்தப் பயிற்சியின் போது எழுந்த எண்ணங்கள்தான் அவரைத் தலைவராக்கியது.

அன்றைய எகிப்தின் புரட்சித் தலைவர் நாசரினால் பெரிதும் கவரப்பட்டு, தன்னுடைய நாட்டிலும் மன்னராட்சியை ஒழிக்கத் துணிந்தவர். கம்பீரமான தோற்றத்தாலும், மிடுக்கான குரலினாலும் ராணுவத்தில் நண்பர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்ததால், லெப்டினட்டாக இருந்தபோது ஒரு புரட்சிப் படையை உருவாக்கி, மன்னரைக் கைது செய்ய அரண்மனைக்குச் சென்ற இந்தத் துணிச்சல்காரர், சில ஆண்டுகளில் தன்னை கர்னலாக உயர்த்திக் கொண்டார். இறுதிவரை அதே பதவிக்கான இலச்சினையைத்தான் அணிந்திருந்தார். 

1969ல் மன்னரை அப்புறப்படுத்தி, ஆட்சியில் அமர்ந்தவுடன் செய்த முதல் காரியம், 5 ஷரத்துகள் மட்டுமே கொண்ட புதிய இஸ்லாமியச் சட்டம். இதன்படி எல்லா அதிகாரமும் தலைவருக்கே. அடுத்தது, 50 விழுக்காடு லாபத்தை மன்னருடன் பகிர்ந்து கொண்டிருந்த ஐரோப்பிய - அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளை, ‘80 விழுக்காடு தாருங்கள் அல்லது வெளியேறுங்கள்’ என்று சொன்னதுதான்.

நாட்டில் தொண்ணூறு விழுக்காடு சகாரா பாலைவன மாகியிருந்தாலும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் நான்காவது பெரிய நாடான லிபியா, புதிய ஆட்சியில் பெட்ரோல் வளத்தினால் செல்வபுரியாகும் என எதிர்பார்த்த உலகிற்கு, அதன் செயல்கள் வியப்பளித்தன. கிடைத்த பெரும் பணத்தில் ஆயுதங்கள் வாங்கிக் குவித்து, அண்டை நாடுகளில் கலகம் ஏற்படத் தீவிரவாதிகளை வளர்க்கப் பயன் படுத்தினார் கடாஃபி.

ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவின் தலைவனாகத் தன்னை கற்பனை செய்துகொண்டு, அதை உண்மையாக்க கொடுங்கோலனாக உருவெடுத்தார். எதிர்ப்பவர் எவரானாலும் அழித்தார். தூதரங்கள், விமானங்கள், ஹோட்டல்கள் போன்றவை அச்சம் உண்டாக்குவதற்காகவே அழிக்கப் பட்டன.ஆடம்பரமான உடை, பெண் அதிகாரிகள் மட்டுமே கொண்ட பாதுகாப்புப் படை, வெளிநாட்டுப் பயணங்களில் 400 பேர் கொண்ட குழு, போகும் நாடுகளில் கூடாரமிட்டு தங்குவது போன்ற ஆர்ப்பாட்ட ஆடம்பரங்களினால் உலகைக் கவர்ந்திருந்தாலும், உள்நாட்டில் எதிர்ப்பவர்களை அழிக்கும் சர்வாதிகாரப் போக்கினால் மக்களின் வெறுப்பு உச்சகட்டத்திலிருந்தது. இதனால், டூனிசியாவில் எழுந்த எதிர்ப்பு அலைக்கு லிபியாவும் பலியானது.

இப்படியொரு வாய்ப்புக்காக காத்திருந்த அமெரிக்காவின் ஆசியுடன் எழுந்த உள்நாட்டு ராணுவப் புரட்சி, கடாஃபியை ஓட ஓட விரட்டியது. ஒவ்வொரு நகராக புரட்சிப் படையிடம் இழந்தவர், கடைசியில் தன் கிராமத்தில் பதுங்கியிருந்தபோது அவர்களிடம் பிடிபட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள்: ‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், அக்டோபர் 25, 2011

எக்ஸ்ட்ரா வெற்றி !


நம்முடைய சிந்தனையின் பிரமாண்டம் தான், நமது வெற்றி தோல்வியையே தீர்மானிப்பதாகச் சொல்கிறது ‘ The Magic Of Thinking BIG’ என்ற புத்தகம். இந்த நூலின் ஆசிரியர் டாக்டர் டேவிட் ஷாவர்ட்ஸ். நமது சிந்தனைதான் செயலைத் தூண்டுகிறது, பெரிய அளவில் சிந்திக்கிறபோது, நமது மனம் அகலமாகிறது, செயல்வேகம் உயர்கிறது, எல்லாவிதத்திலும் நாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்று அடித்துச் சொல்கிறார் டாக்டர் ஷாவர்ட்ஸ். அதை வளர்த்துக்கொள்ள தன்னம்பிக்கை வேண்டும். அதற்கு சில எளிய வழிகளைச் சொல்லித் தந்திருக்கிறார் டாக்டர் ஷாவர்ட்ஸ். அதில்,


ஒரு வெள்ளைக் காகிதம் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நடுவே ஒரு கோடு கிழியுங்கள். அந்த கோட்டின் இடதுபக்கத்தில், உங்களுடைய மிகச் சிறந்த ஐந்து குணங்களைப் பட்டியல் போடுங்கள். சான்றாக நான் பொய்யே சொல்லமாட்டேன், ஒரு வேலையைக் கையில் எடுத்தால் இரவு, பகல் பார்க்காமல் உழைப்பேன், உங்களுடைய பலங்களை மட்டும் எழுதிக்கொள்ளுங்கள். அடுத்து, அதே காகிதத்தின் இன்னொரு பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்த பெரிய வெற்றியாளர்களின் பெயர்களை எழுதுங்கள்.

இவர்கள் உங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், தூரத்து உறவாக இருக்கலாம், பள்ளியிலோ கல்லூரியிலோ கூடப் படித்தவர்களாக இருக்கலாம், அலுவலகத்தில் சக ஊழியர்களாக இருக்கலாம், அல்லது உங்களுக்குச் தொடர்பே இல்லாத பிரபல புள்ளியாகக்கூட இருக்கலாம், அவர்கள் பெரிய வெற்றியாளர்கள் என்று நீங்கள் நினைக்கவேண்டும், அதுதான் முக்கியம்.

லிஸ்ட் போட்டாச்சா ? இப்போது, அமைதியான ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு, நீங்கள் தயாரித்திருக்கும் இரண்டு பட்டியல்களையும் ஒப்பிடத் தொடங்குங்கள். இதற்காக, நீங்கள் உங்களுடைய ஸ்பெஷல் குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும், வலது பக்கம் உள்ள பிரபலங்கள், வெற்றியாளர்களில் அந்த குறிப்பிட்ட குணம் இல்லாத நபர்களை மட்டும் கண்டுபிடித்து எழுதிக் கொள்ளவேண்டும். சான்றாக நான் பொய்யே சொல்லமாட்டேன், ஆனால் எனக்குத் தெரிந்து பெரிய வெற்றி அடைந்திருக்கும் குப்புசாமி, கந்தசாமி, கோவிந்தசாமி மூன்று பேரும் வாயைத் திறந்தாலே அண்டப்புளுகு ஆகாசப்புளுகுதான் கொட்டும். அடுத்து, நான் ஒரு வேலையைக் கையில் எடுத்தால் இரவு, பகல் பார்க்காமல் உழைப்பேன். ஆனால் என்னுடைய மேனேஜருக்கு வேலை செய்வது என்றாலே சோம்பேறித்தனம், பக்கத்து வீட்டு பரமேஸ்வரனும் அப்படித்தான்.


முக்கியமான விசயம், இங்கே உங்களுடைய மேனேஜர் மீது பரமேஸ்வரன் மீது குறை சொல்வது நம்முடைய நோக்கம் இல்லை. உங்களிடம் இருக்கும் ஒரு நல்ல குணம், இன்னொருவரிடம் இல்லை, ஆனாலும், அவர் வெற்றியடைந்திருக்கிறார், அப்படியானால், உங்களால் அவரைவிட இன்னும் பெரிதாக வளரமுடியும், இல்லையா ? இந்த நம்பிக்கைதான் முக்கியம். இந்த சிறிய பயிற்சியைச் செய்து முடித்தபிறகு உங்களுடைய பட்டியலை முன்னால் வைத்துக்கொண்டு யோசித்துப்பாருங்கள்.

உங்களிடம் ஐந்து விசேஷ குணங்கள் இருக்கின்றன. அந்தக் குணங்கள் இல்லாத வேறு பலர், பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள், அவர்களோடு ஒப்பிடும்போது இந்த நல்ல குணங்கள் கொண்ட நீங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லையா ? இப்படிக் கண்ணெதிரே ஆதாரத்தை வைத்துக்கொண்டு யோசிக்கிறபோது, நம் மனம் தானாக விரிவடைகிறது, தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.


எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள் யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்களுடைய கண்களைப் பார்த்துப் பேசுங்கள். நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்தச் சுறுசுறுப்பு, உற்சாகம் உங்களுடைய செயல்வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

எந்தக் கூட்டத்திலும், அடுத்தவர்கள் பேசட்டும் என்ற காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாக இருக்கட்டும். எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

திங்கள், அக்டோபர் 24, 2011

ஒபாமாவின் வெற்றி ரகசியங்கள் !


மிக குறுகிய காலகட்டத்துக்குள் பிரமாண்டமான வளர்ச்சியைக் கண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஓபாமாவின் முன்னேற்றத்தைப் பலர் வியக்கிறார்கள். அவருடைய புயல் வேக வெற்றிக் கதையில் அரசியல்வாதிகளுக்கு மட்டுமின்றி நம் எல்லோருக்குமே சில பாடங்கள் இருக்கின்றன. ஒபாமாவின் வெற்றி ரகசியங்களைச் சொல்லும் ஒரு நூல் ஸே இட் லைக் ஒபாமா’ Say It Like Obama’. மருத்துவர் ஷெல் லீன் எழுதியிருக்கும் அப்புத்தகத்தில் ஒபாமா வாழ்க்கையிலிருந்து அனைவருக்கும் பயனுள்ள நுணுக்கங்களைப் பட்டியல் போட்டிருக்கிறார்.

இன்றைக்கு ஒபாமாவின் அரசியல் கொள்கைகளை ஏற்காதவர்கள்கூட அவர் தன்னுடைய பேச்சின்மூலம் எல்லோரையும் வசீகரித்துவிடுகிறார் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இப்படிப் பேச்சு, பழகும்முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெறுவது எப்படி என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படை.

இதற்கு சான்றாக 2004-ம் வருடம் ஒபாமாவின் அரசியல் வளர்ச்சியில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்த ஒரு மேடைப் பேச்சை எடுத்துக்கொள்கிறார் ஷெல் லீன். அந்த பேச்சில் தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் ஒபாமா தன் பேச்சில் பயன்படுத்திய நுட்பங்கள் எவை, அதை நாம் நம்முடைய தினசரி வாழ்க்கையில் எப்படிப் பின்பற்றமுடியும் என்று எளிய சான்றுகளுடன் சொல்லித்தருகிறார். ஒருவரிடம் பேசும் போது உங்களுடைய வார்த்தைகள் மட்டுமல்ல, உடல்மொழியும் பல விசயங்களைச் சொல்கிறது என்பதைக் கவனத்தில் வையுங்கள். நீங்கள் பொய் சொன்னாலும் அது காட்டிக் கொடுத்துவிடும்.

நீங்கள் யாரிடம் நல்லுறவு வளர்த்துக்கொள்ள விரும்பினாலும் சரி, அவர்களுக்கும் உங்களுக்கும் பொதுவான விசயம் என்ன என்பதைக் கவனியுங்கள். அதை அடித்தளமாக வைத்து அவர்களை ஈர்க்கப் பாருங்கள். மாற்றம் என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு அத்தனை கோடி அமெரிக்கர்களை ஒபாமா வளைக்க முடிந்த ரகசியம் அதுதான்.


ஓபாமா தன்னுடைய நிறம், மதம், குடும்பப் பின்னனி போன்ற விசயங்களை மறைத்துவைத்து வேசம் போடுவதில்லை. தேவையான நேரங்களில் அவற்றை நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவதாலேயே அவரால் பல தலைவலிகளைச் சுலபமாக எதிர் நின்று சமாளிக்க முடிகிறது.

ஓபாமாவின் அறிக்கைகள், உரைகளை பார்த்தால், அவர் ஒரு தேர்ந்த வழக்கறிஞரைப்போல நேரடியாகவும் தர்க்க ரீதியிலும் சிந்திப்பதைக் கவனிக்கலாம். அதேபோல் அதீதமாக உணர்ச்சிவயப்படாமல் லாஜிக்காகச் சிந்திக்கிறவர்கள், முடிவெடுப்பவர்கள் திணற மாட்டார்கள் அதில் அதிகம் தப்புச் செய்யமாட்டார்கள்.

ஆகவே சக ஊழியர்கள் தொடங்கி மேலதிகாரிகள் வரை எல்லோர் மத்தியிலும் அவர்களுக்கு மரியாதை ஒரு மாற்று அதிகமாகவே இருக்கும். அடுத்தவர்களுடைய கோணத்திலிருந்தும் சிந்திக்கப் பழகுங்கள். அதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, மறுத்தாலும் சரி, அதை வெளிப்பைடயாகச் சொல்லுங்கள். இதன்மூலம் கேட்கிறவர்கள் உங்களுடைய சிந்தனையை, அதில் இருக்கும் நியாயத்தை இன்னும் தௌ¤வாகப் புரிந்துகொள்வார்கள், ஏற்றுக்கொள்வார்கள்.

தப்புச் செய்வது எல்லோருக்கும் சகஜம். அது போன்ற நேரங்களில் அந்தத் தப்பை ஒப்புக் கொள்வதுதனால் உங்களுடைய ஆளுமையை மேம்படுத்த அந்த நேர்மை உங்களுக்கு உதவும். ஓபாமாவின் தேர்தல் பிரசார காலகட்டத்தில் அவர் பேசிய பல விசயங்கள் சர்ச்சைகளை கிளப்பின. தவறு நேர்ந்தபோது தன்னுடைய வார்த்தைகளுக்குப் பொறுப்பேற்று வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டார். அதன்மூலம் மக்கள் அவரது கொள்கைகள், திட்டங்களை மறந்து வேறு சர்ச்சைகளை மெல்லாதபடி பார்த்துக்கொண்டார்.

உங்களுடைய நோக்கத்தில் தௌ¤வாக இருங்கள். அந்தப் பயணத்துக்கு உதவாத அரைகுறை ஆசைகள், கவனச் சிதறல்களையெல்லாம் ஈவு, இரக்கம் பார்க்காமல் வெட்டி எறியத் தயங்காதீர்கள். ஓபாமா முதன்முதலாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட விரும்புவதாகத் தெரிவித்த நாள் தொடங்கி செயல்பாட்டிலும் அந்த ஒற்றை நோக்கத்தை நோக்கிச் செல்லும் தீவிரம் தெரியும். அதுவே அவருக்குப் பிரமாண்டமான வெற்றியையும் தேடிக் கொடுத்தது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

சனி, அக்டோபர் 22, 2011

பட்ஜெட் தயாரிப்பு எப்படி நடைபெறுகிறது?


பட்ஜெட் விளக்கம்: மத்திய-மாநில அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசின் வரவு-செலவு குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதை, பட்ஜெட் என்று அழைப்பர். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘பட்ஜெட்’ என்னும் சொல் எங்கும் இல்லை.

பெயர் வந்த விதம்: பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தின் நிதியமைச்சர், ஆண்டு நிதி தொடர்பான குறிப்புகளை ஒரு தோல் பையில் எடுத்துச் சென்றார். அந்த பைக்கு, ‘பட்ஜெட்’ என்று பெயர். நாளடைவில் அப்பையின் பெயரே பைக்குள் இருந்த ஆவணங்களுக்கு பெயராக, அதாவது ‘பட்ஜெட்’ என மாறியது.

பட்ஜெட்டில் இடம்பெறும் கணக்குகள்: 1. வருவாய் கணக்கு: வரி வருவாய், வரி வருவாய் அல்லாத பிற வருவாய், உதவி மானியங்கள் மற்றும் மத்திய அரசு கொடுக்கும் தொகைகள். 2. வருவாய் கணக்கில் செலவினங்கள்: சம்பளம், படிகள், ஓய்வூதியச் செலவு, பராமரிப்புச் செலவு, வட்டி செலவு. 3. மூலதன கணக்கு: கட்டடங்கள், சாலைகள், பாசனத் திட்டங்கள். 4. பொதுக் கணக்கு: கடன் வரவுகள், கடன் திருப்பிச் செலுத்துதல்.

பட்ஜெட் தயாரிப்பு: பட்ஜெட் தயாரிப்பை பொறுத்தவரை, ஒவ்வொரு துறைக்கான மானியத்துக்கு என, நிதித் துறையில், தனித்தனியாக மொத்தம் 51 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும், ஒரு பிரிவு அலுவலர், இரண்டு உதவி பிரிவு அலுவலர்கள் இருப்பர். முன்பெல்லாம், பட்ஜெட்டுக்கென நியமிக்கப்பட்டிருக்கும் சார்பு செயலர்தான், இவற்றை ஒருங்கிணைப்பார். ஆனால் தற்போது, அனைத்து சார்பு செயலர்கள், துணைச் செயலர்கள் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு துறையினரையும் அழைத்து, பட்ஜெட் கூட்டங்களை நடத்துவர். இக்கூட்டம் பட்ஜெட் தயாரிப்புக்கு ஆறு மாதத்துக்கு முன்பு நடத்தப்படும்.

இதுதவிர, மாநில திட்டம் மற்றும் வளர்சித் துறையும் தனியாக கூட்டம் நடத்தும். அரசின் புதிய திட்டங்கள் குறித்து இதில் ஆய்வு செய்யப்படும். பத்து நாள் முதல் 15 நாட்கள் வரை இக்கூட்டம் நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதனடிப்படையில், எந்தெந்த திட்டங்களை சேர்க்கலாம், அதற்கான நிதி ஆதாரம் ஆகியவை குறித்து நிதித்துறை முடிவு செய்யும்.

பட்ஜெட் தயாரிப்பு பணியின் போது, அதில் ஈடுபடும் நிதித்துறை அலுவலர்கள், மாலை 5.45 மணிக்கு அலுவலக நேரம் முடிந்தபின், இரவு 8.45 மணி வரை கூடுதலாக பணியாற்றுவர். இந்த நேரத்தில் பட்ஜெட் தயாரிப்பு பணியில், ஈடுபடும் உதவிபிரிவு அலுவலர், பிரிவு அலுவலர் ஆகியோருக்கு 75 ரூபாயும், துணைச் செயலருக்கு 100 ரூபாயும், இணைச் செயலருக்கு 125 ரூபாயும் தினமும் படியாக வழங்கப்படுகிறது. இதற்கென தனி வருகை பதிவேடும் பின்பற்றப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவற்றை தயாரிக்கும் பணி வேகமாக நடக்கும். முதலில் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை தயாரிக்கப்படும். துணைச் செயலர் (பட்ஜெட்), நிதித் துறை செயலர், நிதியமைசர், முதல்வர் ஆகியோருடன் கலந்து பேசி, இந்த உரை இறுதி செய்யப்படும். பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு என தனி அடையாள அட்டை வழங்கப்படும். அவர்களுக்கென தனியாக போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படும்.

இதன்பின், பட்ஜெட் தாக்கலுக்கு முதல் நாளன்றுதான் அதை அச்சிடுவதற்கு அனுப்புவர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று காலை 6 மணிக்குதான், அதன் பிரதிகளை அச்சகத்தில் இருந்து எடுத்துவருவர். நிதியமைச்சருக்கும், முதல்வருக்கும் இதன் பிரதி வழங்கப்படும். மற்ற பிரதிகள் ரகசிய ஆவணமாக, சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கப்படும். அவ்வாறு ஒப்படைத்தபின், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அதை வெளியிடாமல் காப்பது, சட்டசபை செயலகத்தின் பொறுப்பு.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

ஆடை அலங்காரம்...புதிய கலாச்சாரம் !


என்னதான் பியூட்டி பார்லருக்குச் சென்றாலும் ஒருவருடைய இளமைத் தோற்றத்தை தீர்மானிப்பது அவர் அல்லது அவள் அணியும் ஆடைகளே. ஒருவருடைய நிறத்துக்கும், உருவத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்தால், அவர் அதிக வயதுடையவராக இருந்தாலும், குறைந்த வயதுடையவர் போல இளமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பார் என்கிறார்கள் ஆடை வடிவமைப்பு வல்லுநர்கள்.

இன்றைக்கு பெரும்பாலானவர்கள் விரும்புவது தொளதொளவென்று இல்லாமல், அளவு குறைவாக இருக்கும் ஆடைகளைத்தான். முட்டியைத் தொடும் சட்டையும், தரையைக் கூட்டும் பேண்டும் அணிந்த காலம் மலையேறி போய்விட்டது. அதேபோல் பெண்களும் முழங்கை வரை நீளும் ரவிக்கையையும், 8 கஜம் புடவையையும் மறந்து, ஸ்கர்ட், டி-சர்ட், டாப்ஸ், கவுன் என்று மாறிவிட்டனர். அதிலும் தற்போது மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் மற்றும் டாப்ஸ் என்று ஆடைகளின் அளவு குறைந்து கொண்டடே வருகிறது.

தற்போது நீங்கள் விரும்பும் பிரபல கம்பெனிகளின் ஆடைகளை தவணை முறையில் பணம் கொடுத்து வாங்கும் வசதியும் வந்துவிட்டதால், உங்களுக்கு விருப்பமான ஆடைகளை வாங்குவதற்குத் தடையேதுமில்லை. விழாக்காலங்களில் சேலை அணிவதை பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சேலை கட்ட தெரியாததால் அவர்களின் அம்மாக்களே சேலை கட்ட உதவி செய்கின்றனர். இவர்களின் கவலையைத் தீர்க்கும் விதமாக தற்போது ரெடிமேட் சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதை 2 நிமிடத்திலேயே அணிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கொசுவம், மடிப்பு என எந்நத் தொந்தரவும் இல்லாமல், ஏற்கனவே மடிக்கப்பட்டு பின் செய்யபட்டிருக்கும். இது தவிரவும், இரண்டு பக்கமும் அணிந்து கொள்ளக்கூடிய ரிவர்சபிள் சேலைகள் வஸ்திரகலா பட்டு என்று புதிய வடிவமைப்புடன் கூடிய சேலைகளைத் தயாரிப்பதில் சென்னை முதலிடத்தில் உள்ளது. ஆடை உலகில் ஒவ்வொரு நாளும் புது புது மாற்றங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பாவாடை சல்வார் கம்மீஸ், சுடிதார் ஆகியவற்றில் உள்ள நாடாவுக்கு பதிலாக எலாஸ்டிக் வைத்து பயன்படுத்துவது.

தற்போது கர்ப்பமான பெண்களுக்கான உடைகளும் வடிவமைக்கப்படுகின்றன. கர்ப்பிணிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் அவர்களின் உடலில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இவர்களுக்கென்று தனி ஆடைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் அணிவதற்கு எளிதாகவும், உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழ்ச்சி அடைவதாகவும் இருக்கும். சிந்தடிக், காட்டன் போன்ற துணிகளில் இவை தயாராகின்றன. இவற்றில் பிரிண்ட் மற்றும் எம்ராய்டரி செய்யப்பட்டவை பிளெய்ன் என பல வகைகள் உள்ளன.

இளசுகளை மட்டுமல்லாமல், நடுத்தரவயதினரையும் ஈர்த்துள்ள ஆடைகளுள் ஒன்று ஜீன்ஸ். அணிவதற்கு எளிதாக உள்ளது. துவைக்காமல் பயன்படுத்தலாம். உடற்கட்டை நன்கு எடுத்துக்காட்டுகிறது போன்ற காரணங்களால் ஜீன்சை விரும்புவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. முதலில் ஆண்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஜீன்ஸ், இன்று பெண்களாலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பூட்கட், ஸ்ட்ரெய்ட் பிட் என பல வகையான ஜீன்ஸ்கள் உள்ளன. பெண்களுக்கென்றுத் தனியாக ஜீன்ஸ்கள் வடிவமைக்கப்படுகின்றன.

தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. அதாவது பருத்தி, வாழைமட்டை போன்ற இயற்கை பொருட்களிலிருந்து நூல் தயாரித்து, அதன் மூலம் ஆடைகள் நெய்யபடுகின்றன. இந்த மாதிரியான ஆடைகளை தற்போது பெரும்பாலானவர்கள் விரும்பி வாங்குகின்றனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வெள்ளி, அக்டோபர் 14, 2011

வாடகைத் தாய்... அறிவியலின் புதுவடிவம்..!


பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்காவிட்டால் அவரது கணவரின் உயிர் அணுவை, சோதனைக் குழாயில் வைத்து கரு உருவாக்குவார்கள். பின்னர் அதை அந்த பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். 10 மாதங்கள் ஆனதும் அந்த பெண் குழந்தையை பெற்று எடுப்பார். ஆண் உயிர் அணுக்களில் குறைபாடு இருந்தால் மருந்துகள் மூலம் அதை சரி செய்து கொள்ளலாம். 

இதேபோல் பெண்ணுக்கு கரு முட்டை உருவாவதில் சிக்கல் இருந்தாலும் மருந்துகள் மூலம் அதை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் குழந்தையை 10 மாதங்கள் சுமக்கக்கூடிய அளவுக்கு பெண்ணின் கருப்பை பலவீனமாக இருந்தாலோ, அல்லது கரு அதில் வளர்வதற்கு உரிய சூழ்நிலை இல்லை என்றாலோ என்ன செய்வது? அப்படிப்பட்ட பெண்களுக்கு கை கொடுப்பவர்கள்தான் வாடகைத் தாய்மார்கள்.இந்தியாவில் 1986-ம் ஆண்டுக்கு பிறகுதான் பெண்கள் கருமுட்டை தானம் செய்வது பிரபலம் ஆனது. கருமுட்டை தானம் செய்வது தொடர்பாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட ஒரு பெண் 6 தடவைக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது அவரது உடலுக்கு நல்லது அல்ல என்றும், ஒரு முறை தானம் செய்வதற்கும், அடுத்த முறைக்கும் குறைந்த பட்சம் 6 மாதங்களாவது இடைவெளி இருக்க வேண்டும்.

ஆண்கள் தங்கள் உயிர் அணுக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கருமுட்டை தானம் செய்யும் பெண்ணுக்கு நிறைய மருந்துகளும், கரு முட்டையை எடுக்க மேற்கொள்ளப்படும் ஆபரேஷனின் போது மயக்க மருந்தும் கொடுக்கப் படுவதால் அது அவரது உடல்நலனுக்கு நல்லது அல்ல. முத்தாய்ப்பாக, அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் வர வாய்ப்பும் உள்ளது.

ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே 4 முதல் 5 லட்சம் கரு முட்டைகளோடு பிறக்கின்றன. அப்போது அவை வளர்ச்சியடையாத நிலையில் இருக்கும். பெண்கள் வயதுக்கு வந்த பின்பு அவை முதிர்ந்து மாத்திற்கு ஒன்று மட்டும் வெடித்து வெளியேறி, கர்ப்பையை நோக்கி நகரும். திருமணமாகி கணவரோடு உறவில் ஈடுபட்டால் கருமுட்டையும், உயிரணுவும் இணைந்து கரு உருவாகும். கருவாக்கம் நிகழாவிட்டால் கரு முட்டை வீணாகி உதிரத்தோடு வெளியாகிவிடும். இதைத்தான் மாதவிலக்கு எனகிறோம்.

கருமுட்டைகள் பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது +37 டிகிரி சென்டிகிரேடில் இருக்கும். இதை 0 டிகிரிக்கும் கீழே கொண்டுவந்து -194 சென்டிகிரேடுக்கு ஆக்கி திரவ நைட்ரஜனில் உறைய வைத்து கிரையோலாஜிக் என்ற நவீன கருவியில் வைத்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாத்து, பயன்படுத்தலாம். 

ஒரு பெண் வயதுக்கு வந்து - தாம்பத்ய வாழ்க்கை நடத்தி வயதாகி மனோபஸ் காலத்தை அடையும் வரை அவளால் பயன்படுத்தப்படுவது 300 முதல் 400 கருமுட்டைகள்தான். ஆனால் அவள் நாலைந்து லட்சம் கருமுட்டைகளோடு பிறக்கிறாள். மனைவியின் கருப்பை, இன்னொரு பெண்ணின் கருமுட்டை, கணவரின் உயிரணு போன்றவை செயலாக்கம் பெறும் போது தாய்மையடைவது நிகழ்கிறது.

கருமுட்டையை ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்ற இளந் தாய்மார்கள் தானமாக கொடுக்கலாம். அவர்கள் ஏற்கனவே கருத்தரித்திருப் பதால், அவர்கள் கருமுட்டை வளமாக இருக்கும். அவர்கள் உடலில் மரபு நோய், பால்வினை நோய், காச நோய் போன்றவை இருக்கக் கூடாது. இந்த நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிய முழுமையான உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்க முன்வரும் பெண்களுக்கு ரூ.31/2 லட்சம் வரையும் பணம் கிடைக்கிறது. குழந்தையை பெற்றுக் கொடுக்கும் வரை வாடகைத் தாய் பெரும்பாலும் மருத்துவ மனையிலோ அல்லது வாடகைக்கு அமர்த்தும் அந்த தம்பதியின் கண் காணிப்பில் அவர்களது வீட்டிலோ இருப்பார். கரு குழந்தையை உருவாகும் காலகட்டத்தில் குறைந்தபட்சம் 12 நாட்களாவது மருத்துவமனையில் வாடகைத்தாய் இருக்க வேண்டும்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வியாழன், அக்டோபர் 13, 2011

நாணயத்தின் ஒரு பக்கம் ‘ஆர்.கே.நாராயண்’.!


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பிரபலமடைவது ஆபூர்வம். அந்த வகையில் ஆர்.கே.நாரயண்-ஆர்.கே.லஷ்மண் சகோதரர்கள், தங்கள் கற்பனைத் திறனால் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்கள். முன்னவர், ஆங்கில நாவலாசிரியராகவும், பின்னவர், கேலிச்சித்திரங்கள் வரைவதிலும் புகழ் பெற்றனர்.

பெங்களூருவில் பிறந்த ஆர்.கே.நாயாண், தொடக்க கல்வியை சென்னையில் பயின்றார். பின்னர், மைசூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ஆங்கில மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர் களில் இவர் குறிப்பிடத்தக்கவர், முதன்மையானவர். எளிமையான, நகைச்சுவை கலந்த இவரது படைப்புகள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தன. இவர் எழுதிய, ‘Swami and Friends’, ‘Waiting for the Mahatma’, ‘Guide’, ‘Man-Eater of Malgudi’, ‘Mr.Sampath’, ‘Vendor of Sweets’, ‘Financial Expert’ ஆகிய நூல்கள் பலரையும் கவர்ந்தவை.

மேலும், இவரின் பல நாவல்கள் தமிழ், பிரெஞ்சு, சுவிடிஷ், இத்தாலி, ஜெர்மன், ரஷ்யன் ஆகியவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. மால்குடி என்னும் ஒரு கற்பனைக் கிராமப் பின்னணி யிலேயே இவரது பெரும்பான்மையான கதைகள் அமைந்தன.


‘தி இந்து’ நாளிதழில் இவரது பல குறுங்கதைகள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து வெளிவந்த, ‘ஜஸ்டிஸ்’ என்ற பத்திரிகை க்கு சிலகாலம் மைசூர் பதிப்புக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இந்து புராணம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் பதிவு செய்த பெருமைக்குரியவர் ஆர்.கே.நாரயண். எழுத்திற்காகப் பல விருதினைப் பெற்றிருக்கும் இவரை, 1956ல் ராக்ஃபெல்லர் என்ற அமெரிக்க அமைப்பு, அங்கே வரவழைத்துப் பாராட்டிக் கொளரவித்தது. 2011ல் மறைந்த இவரைப் பற்றி இவரது சகோதரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண், ‘தொழில் ரீதியான ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக நாங்கள் செயல்பட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

பெட்ரோல் - இப்போது எவ்வளவு?


இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த 22 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ் சமாக லிட்டருக்கு 62 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8.50 ஆக இருந்தது. டீசல் லிட்டர் 3.50 ஆக இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் (1994 பிப்ரவரியில்) பெட்ரோல், டீசல் விலை இரண்டு மடங்காக முறையே 16.78, 6.98 ஆக அதிகரித்தது. இதன் பிறகு படிபடியாக உயர்ந்து 2005ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 43.49 ஆகவும்,டீசல் 30.45ஆகவும் விற்பனையானது. 2010ஆம் ஆண்டில் பெட்ரோல் விலை 53 ஆக அதிகரித்தது.


இதன்பிறகு, பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவ னங்கள் உள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம், நடுவண் அரசு, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. அதாவது, சந்தை நிலவரப்படி, எண்ணெயை சந்தைப் படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலின் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளித்தது.
இதன் காரணமாக, இதுவரை இல்லாத அளவிற்கு மே-15 அன்று லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியது. தற்போது சென்னையில், டீசல் 43.95 ரூபாயும், சமையல் கியாஸ் 404.40 ரூபாயும், மண்ணெண்ணெய் 13.54 ரூபாயாகவும் உள்ளன. பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 70.63 ரூபாயாகவும் இருக்கின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

சனி, அக்டோபர் 08, 2011

கிழிந்து போகும் போலி சாமியார்கள்!


போலி, போலி, போலி எங்கும் போலி எதிலும் போலி, எங்கே கொண்டு போய்த் தலையை முட்டிக் கொள்வது. அரசயல்வாதி யோக்கியனில்லை; அதிகாரி யோக்கியனில்லை; சாமியார் மட்டும் எப்படி யோக்கியனாக இருப் பான்? பிரோமானந்தர்களும், நித்யானந்தர்களும் நவீன காலச் சீரழிவுக் கலாசாரத்தின் தத்துப்பிள்ளைகள். வழி நடத்த வேண்டியவனெல்லாம் அயோக்கியனாக இருக்கும் உலகத்தில் மதிப்பீடுகளெல்லாம் போலியாகத் தானே இருக்கும்.!? விபூதிப் பைகளில் டாலர்களை வைத்திருக்கும் இவர்க ளுக்குச் செய்யும் சேவையை, பெருமையாக கருதும் மக்கள் இருக்கும் வரை எத்தனை சாமியார்கள் வந்தாலும் ஆச்சரியப் படுவதிற்கில்லை. விவேக் சொன்னது போல் இன்னும் எத்தனை பெரியார்கள் வந்தாலும்... உங்களை... ?

அதனால் மக்களே...உழைத்து வாழுங்கள்...உண்மையாய் வாழுங்கள்... சமூகத்திற்கு சேவை செய்ய எந்த காவி உடையும்...ஜடா முடியும்...விபூதி பட்டையும் தேவையில்லை... எல்லா மனிதரையும் மதியுங்கள்...அது போதும் இறை நம்பிக்கைக்கு!

காலத்திற்கேற்றவாறு சாமியார்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்; அமெரிக்காவுக்குப் போகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்" என்பதற்கு மாறாக,"அத்தனைக்கும் ஆசைப்படு" என்று வேறு போதிக் கிறார்கள். இன்னொருத்தர் "கதவைத் திறவுங்கள் காற்று வரட்டும்" என்றார். கதவைத்திறந்து பார்த்தால்தான் தெரிகிறது இவர்களின் 'துறவறம'¢. இப்படி இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? அவர்களை யார் கண்டு பிடிப்பது ? கண்டுபிடித்தால் அதுக்குப்பிறகு மக்கள் இப்படியானவர்களை நம்பாமல் இருப்பார்களா ? கட்டாயம் இல்லை.

இன்று கதவைத்திற காற்று வரட்டும் என்பான். இன்னொருத்தன் நான்தான் அவதாரம் என்று சொல்லுவான். இன்னொருத்தன் மாஜிக் பண்ணுவான். மக்கள் அதை நம்புவார்கள். பணத்தை வாரி இறைப்பார்கள். வாழ்க்கைத் தத்துவம் என்பான், அன்பு செலுத்துங்கள் என்பான் இதில் மயங்கி போவார் கள். இதைத்தானே பத்தாம் ஆண்டு சமயப்புத்தகத்திலும் சொல்லியிருக்கி றார்கள்.

புத்தர், ஏசு, நபிகள் நாயகம் போன்ற மகான்களும் இருந்தர்கள். ஆனால் இவர்கள் மாளிகைகள் கட்டவில்லை. மாலைபோடும் நிகழ்வு நடத்த வில்லை. ஏன் தாங்கள் அவதாரம் எனறு கூறியோ, மாஜிக்கோ செய்ய வில்லை. மக்களோடு வாழ்ந்தார்கள். இறைவனை மட்டும் வணங்கினார்கள். அவர்களின் வழியில் வருகிறேன்¢ என்று கூறுபவர்களை நம்பி பணத்தை வாரியிறைக்கும் சமூகம் எப்போது திருந்தப்போகிறது.?

இத்தனை சொன்னாலும் போலிகளை நம்பி ஏமாறும் கூட்டம் இருக்கத்தானே செய்கிறது. போலிச்சாமிகளிடம் மக்கள் போகத்தானே செய்கிறார்கள். அரசாங்கமும், காவல்துறையும் என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. அவர்களை சொல்லிக்குற்றமில்லை, அவர்கள் போலிகளைக் கைது பண்ணவோ ஏன் விசாரணைகூட செய்யமுடியாதபடி மேலிடத்து அதிகாரிகள் காவல் துறையின் கைகளை கட்டிப் போடுகிறார்கள்.

 அப்படி அதிகாரம் கிடைத்தாலும் ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டால் மதக்கலவரம் வந்துவிடுமோ என்ற பயம். இவற்றுக் கெல்லாம் ஒரே தீர்வுதான் இருக்கிறது. மக்கள் திருந்தணும் அல்லது போலிகள் திருந்தணும். போலிச்சாமிகள் திருந்துவது சாத்தியமல்ல. மக்களே மனிதனை வணங்குவதென்றால் தாய் தந்தையை வணங்குங்குள். கண்ட கண்ட கேவலங்களை அல்ல.

இன்றைய சாமியார்கள் எனப்படுவார்கள் யார் ? தனது பலவீனத்தை முற்றிலும் மறைக்கத் தெரிந்தவர்களே சாமியார்களாக உலா வருகிறார்கள். அதனால்தான் உதறித்தள்ளாத, வெறுமனே முற்றிலும் மறைத்து வைக்கப்பட்ட அவர்களுடைய பலவீனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் எப்படியாவது வெளியாகிவிடுகின்றது.

இந்த பலவீனத்தை மறைக்கத்தான் அந்த, சாமியார்கள் தனி மனிதனாக நின்று போதிக்காமல் ஆசிரம், ஏ.சி., விமானம், பாதுகாவலர்கள், சிஷ்யர்கள் என்று ஒரு நிறுவனமாக மாறிப் போகின்றார்கள். எல்லாவற்றுக்கும் விலை வைக்கின்றார்கள்.

விவேகானந்தர் மறைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கேட்ட எதற்கும் சித்தமான, புகழை விரும்பாத நூறு இளைஞர்கள் உருவாகவில்லை. அவர்கள் உருவாகியிருந்தால் போலி சாமியார்கள் உருவாக மாட்டார்கள். புழுக்களும், கொசுக்களும், கிருமிகளும் அசுத்தமாக இருக்கும் சாக்கடையில் இருந்தே உருவாகின்றன இதே வழிதான் நவீன கால சாமியார்களின் பிறப்பும்.!

லோக குரு என்று சொல்லப்பட்ட காஞ்சிபுரத்து ஆசாமி ஒருவர் வழக்கில் சிக்கவில்லையா? பெண்கள் விசயத்தில் ஆகட்டும் எவ்வளவு அசிங்கம்! ஆனாலும் அந்த ஆசாமி பெரிய மனுசராக பவள விழா கொண்டாடிக் கொண்டு வீதி உலா வந்து கொண்டுதானே இருக்கிறார்?

இயற்கையை அல்லது இயற்கை உண்டாக்கிய உணர்வுகளை வென்றுவிட்டேன் என்று சொல்பவர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒருவர் மகா...மகா...மகாத்மாவாக இருக்க வேண்டும். இல்லை மகா ஃபிராடாக இருக்க வேண்டும். பொதுவாக இந்த இரண்டாவது வகை ஆசாமிகள் தான் அதிகம்.


 மனிதனாகப் பிறந்தவன் தன் உடலின் இச்சைகளை தற்காலிகமாக வேண்டுமானால் ஒத்திப் போடலாம். அல்லது எஸ்க்பைரி ஆகிவிட்ட பிறகு சுவாமிஜி வேடம் போடலாம். அதிகபட்சம் அவ்வளவுதான்¢ முடியும். தனக்கு பின்னால் செயற்கை ஒளிவட்டத்தை பொருத்திக் கொண்டு ஊரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்க்க சுவாமிஜி பதவி வேண்டுபவர்கள், உபதேசம் செய்வதற்கு பிரம்மச்சரியமோ, இந்திரியங்களை அடக்கிவிட்டதன போலிப் பெருமையோ, கண்கட்டி வித்தைகளோ தேவை யில்லை. நேர்மை, ஒழுக்கம் மட்டும்தான் வேண்டும்.

எத்தனையோ சாமியார்கள் நன்கு ஆண்டு அனுபவித்து, உலகின் கள்ளம் மனங்கள் அத்தனையிலும் கரை கண்ட பிறகு, ஓய்ந்து போய் இளைஞர் களுக்கு உபதேசம் செய்வதைப் பார்க்கலாம். இவர்கள் சாதாரண மனிதனாக இருந்துவிட்டு போகவேண்டியதுதானே? ஏன் இந்த கபடத் தனம்.? சாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும்.

 ஒவ்வொரு சாமியாரையும் விசாரணைக்கு உட்படுத்தி குற்றங்களின் அடிப்படையில் கடும் தண்டனையைக் கொடுக்க வேடண்டும். இல்லாவிட்டால் நீங்களும் நானும் மாறாத வரை நாட்டில் ரமணிகளும், பிரேமானந்தா, ஜெயேந்திரர், நித்தியானந்தர் போன்ற கசடுகள் உருவாவதை தடுக்கமுடியாது. எச்சரிக்கை!

பழைய சாமியார்களும், மாடர்ன் வேதாந்திகளும், கம்ப்யூட்டர் கள்ளச் சாமிகளும், தங்கக் கோபுரம் கட்டி ஈயத்தை விட இளித்துப் போய்கிடக்கும், ஒழுங்கீனங்களை கொண்டவர்கள் நமக்கு வேண்டாம். நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் வேண்டவே வேண்டாம்! புரிந்து கொள்ளுங்களேன்...!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

வெள்ளி, அக்டோபர் 07, 2011

ஹால்மார்க்கின் அவசியம் என்ன?


தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகிறது. இவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கும் நகைகளின் உண்மையான மதிப்பு குறித்து சரியாக தெரிவதில்லை. நகைகளை வாங்குவோருக்கு அது 22 காரட்டா, 20 காரட்டா என்பதில் சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதைப் பயன்படுத்தி ஒரு சில கடைகளில் 20 காரட் தங்க நகைகளை 22 காரட் என்று கூறி விற்பனை செய்வதாக புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஹால் மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை வாங்குவது சிறந்தது.

தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் இந்திய தர நிர்ணய நிறுவனம் (பி.ஐ.எஸ்.) 2000ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தில், ஹால்மார்க் தங்க நகைகளை விற்க விரும்பும் வியாபாரிகள், பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பதிவுபெற்ற வியாபாரிகள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை இடப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய முடியும்.

ஐந்து முத்திரைகள்:

ஹால்மார்க் தங்க நகைகளில் பி.ஐ.எஸ். முத்திரை, தங்கத்தின் நேர்த்தி முத்திரை (916), ஹால்மார்க் நடுவத்தின் முத்திரை, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு, நகை விற்பனையாளரின் முத்திரை என ஐந்து முத்திரைகள் காணப்படும். இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது. பூதக்கண்ணாடி மூலம் இந்த ஐந்து முத்திரைகள் இருக்கின் றனவா? என்பதை சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு முத்திரை குறைந்தாலும் அது ஹால்மார்க் தங்க நகை என்ற அந்தஸ்தை இழந்துவிடும்.
23 காரட், 22 காரட், 21 காரட், 18 காரட், 17 காரட், 14 காரட், 9 காரட் நேர்த்தித் தன்மை கொண்ட நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. மேலும் ஹால்மார்க் நகைகளுக்கு அதன் விலையில் இருந்து கூடுதலாக ரூ.20 மட்டும் செலுத்த வேண்டும். அதாவது நாம் எத்தனை கிராம் நகை வாங்கினாலும், கட்டணம் ரூ.20 மட்டுமே. நகை வாங்குவதற்கான ஆதாரமாக வாட் வரி செலுத்தப்பட்டு ரசீது பெற்றிருக்க வேண்டும். ஹால்மார்க் தங்கநகையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பி.ஐ.எஸ். அங்கீகாரம் பெற்ற நடுவங்களில் சோதனை செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ரூ.100.

புகார் தெரிவிக்கலாம்: ஹால்மார்க் அங்கீகாரம் பெறாத நகைக் கடைகளில், ஹால்மார்க் பெயரில் தங்க நகை விற்பனை செய்வதாக தெரியவந்தால், தொடர்புடையவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம். இதில் ஏதேனும் சந்தேக ங்கள் இருப்பின் 044-22541442, 044-22541216 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், அக்டோபர் 04, 2011

சுற்றுச்சூழல் பெண்.!

கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாத்தாய் 1977ல் கிரீன் பெல்ட் இயக்கத்தை நிறுவி அதன் மூலம் மரக்கன்று நடும் பணியை செய்து வந்தார். கென்யா முழுவதும் அவரது இயக்கம் இதுவரை சுமார் 5 கோடி மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளது. கென்யாவில் எங்கெல்லாம் காடுகளுக்கு மனிதர்களால் அச்சுறுத்தல் இருந்ததோ அங்கெல்லாம் மாத்தாய் சென்று காடுகளை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவார். அவரது இந்தப் பணியால் கென்ய மக்கள் மட்டுமல்லாது உலக அளவிலான சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்,வன ஆர்வலர்களும் முன்மாதிரியாகவும் வங்காரி மாத்தாய் திகழ்ந்தார்.

WANGARI MAATHI
காவல்துறையினர் தாக்குதல்:

கென்யாவில் உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதை மாத்தாய் கடுமையாக எதிர்த்தார். அந்நாட்டின் அதிபராக டேனியல் அரேப் மோய் இருந்த போது காடுகள் அழிக்கப் படுவதையும், உயர்ந்தக் கட்டடங்கள் கட்டப்படுவதையும் எதிர்த்து மாத்தாய் தொடர் போராட்டங்களை நடத்தினார். அப்போதெல்லாம் மாத்தாய் காவல்துறையினரால் கடுமை யாகத் தாக்கப்பட்டார்.போரட்டத்தால் அவர் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

இருப்பினும் அவர் தனது சமூகப் பணியை தொடர்ந்து செய்து வந்தார். சுற்றுச்சூழல் அவசியத்தை வலியுறுத்தியதுடன் உலக அமைதியையும் மாத்தாய் தொடர்ந்து வலியுறுத்தினார். இவரது இந்த அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதத்தில் அமைதிக்கான நோபல் விருது 2004ல் வழங்கப் பட்டது. இதன் மூலம் இந்த உயரிய விருதைப் பெற்ற முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.

புற்றுநோயால் மறைவு:

இதனிடையே, 2002ல் கென்ய நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2005 வரை சுற்றுச்சூழல் துணை அமைச்சராகப் பதவி வகித்தர். 1940 ஏப்ரல் 1 ஆம் தேதி பிறந்த மாத்தாய், புற்றுநோயால் அவதிப்பட்டு, 2011 செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த உலகை விட்டு பிரிந்தார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.