செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், நவம்பர் 28, 2011

எம்.எல்.ஏ.க்களின் சம்பளம்..!கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் 250 ரூபாயாக மட்டுமே இருந்து வந்தது. இடையில், 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974-ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978-ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசிப் படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழங்கப்பட்டது. இந்த தொலைபேசிப் படி, 1980-ல் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், 1980 ஆம் ஆண்டு, மொத்தமாக 800 ரூபாய் எம்.எல்.ஏ.,க்கள் பெற்று வந்தனர்.

கடந்த 1981-ல், ஈட்டுப்படி 400 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1982-ல், சம்பளம் 300 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1985-ல் சம்பளம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 1985-ல் ஆண்டில், சம்பளம் 600 ரூபாயாகவும், ஈட்டுப்படி 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. கடந்த 1987-ல், தொலைபேசிப் படி 450 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்பின், 1989-ல், ஈட்டுப்படி 700 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 1750 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில், 1990-ல் சம்பளம் 1000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 800 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 700 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1991-ல், புதிதாக தொகுதிப்படி என்று உருவாக்கப்பட்டு, 250 ரூபாய் சேர்த்து வழங்கப் பட்டது. கடந்த 1992-ல், தொலைபேசிப் படி 800 ரூபாயக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 1993-ல், சம்பளம் 1250 ரூபாயாக உயர்த்தப்பட்டு, புதிதாக தபால் படி என்று 250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்டது. இதன்பின், 1994-ல், சம்பளம் 1500 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1000 ரூபாயாகவும், தொகுதிப்படி 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 3950 ஆக உயர்ந்தது.

பின்னர், 1995-ல் சம்பளம், 1700 ரூபாயாகவும், தொகுதிப் படி 400 ரூபாயாக வும், தபால் படி 450 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதன்பின், 1996-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சம்பளம் 2000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1500 ரூபாயாகவும், தொகுதிப்படி 525 ரூபாயா கவும், தபால் படி 625 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 1250 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 6000 ரூபாயை தொட்டது. இதன்பின், 1997-ல் ஈட்டுப்படி, 3500 ரூபாயாகவும், தொகுதிப்படி 625 ரூபாயா கவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, 1998-ல் தொகுதிப்படி 875 ரூபாயாகவும், தபால் படி 875 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 1750 ரூபாயாகவும் உயர்த்தப் பட்டது.


இதுவே, 1999-ல் தொலைபேசிப் படி மட்டும் 2750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 10 ஆயிரம் ரூபாயானது. கடந்த 2000 ஆம் ஆண்டில், புதிதாக தொகுப்புப் படி என்று உருவாக்கப்பட்டு, 2000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர், 2001-ல், ஈட்டுப்படி, 4000 ரூபாயாகவும், தொகுதிப் படி 2000 ரூபாயாகவும், தபால் படி 1500 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 4000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 16 ஆயிரம் ரூபாயானது. அதன்பின் அ.தி.மு.க., ஆட்சி முடியும் வரை எம்.எல்.ஏ., க்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 2006-ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், செப்டம்பர் முதல் தேதியன்று, ஈட்டுப்படி 6000 ரூபாயகவும், தொகுதிப்படி 4000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாயானது.

2007 ஏப்ரலில் புதிதாக வாகனப்படி என்று ஒன்று உருவாக்கப்பட்டு, 5000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2008-ல், 12 ஆண்டுகளுக்குப் பின், சம்பளம் 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன், ஈட்டுப்படி 7000 ரூபாயாகவும், தொகுதிப்படி 5000 ரூபாயாகவும், தபால் படி 2500 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 5000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு மொத்த சம்பளம் 30 ஆயிரம் ரூபாயனது.

இதன்பின், வாகனப்படி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. 2010 முதல், எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாயானது. அதாவது, 2006-ல் ஆட்சி அமைந்த போது, மொத்த சம்பளமாக 16 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சி முடியும் நிலையில், மூன்று மடங்குக்கு மேல் உயர்த்தப் பட்டது. 

2011ல் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது அ.தி.மு.க., இதையடுத்து 14செப்டம்பர் 2011ல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில்¢ முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, உறுப்பினர்களின் தொகுதிப்படி 5 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு, இனி எம்.எல்.ஏ.க்களின் மாத ஊதியம் சம்பளம் 55 ஆயிரமாக இருக்கும் என்றார்.

இதுமட்டுமன்றி, எம்.எல்.ஏ.,க்களின் தினப்படியாக 500 ரூபாய், பயணப் படியாக ஏ.சி., இரண்டடுக்கு ரயில் பயணம், அதுவும் ஆண்டுக்கு இரண்டு தவணை களாக 20 ஆயிரம் ரூபாய்க்கு ரயில் பயணம், ஒரு உதவியாளர் உட்பட இருவருக்கு இலவச பஸ் பாஸ், விடுதியில் ஒரு தொலைபேசி இணைப்பு, வீட்டுக்கு ஒரு தொலைபேசி இணைப்பு ஆகியவற்றுக்கான பில் கட்டணம், இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு ஆகும் செலவை ஈடு கட்டுதல், போன்ற பல்வேறு சலுகைகளும் எம்.எல்.ஏ., க்களுக்கு உண்டு. 

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, நவம்பர் 27, 2011

ஜே.பி.சி. விசாரணை பலன் தருமா?அரசாங்கத்தின் அலுவல்கள் மற்றும் விவகாரங்கள் அனைத்திற்கும், பாராளுமன்றம் நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காண்பது என்பது இயலாத காரியம். எனவே அரசாங்கத்தின் வேலைப்பளுவை குறைத்து, அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்து, தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பல்வேறு குழுக்களை அமைக்கிறது.

இந்த குழுக்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று பாராளுமன்ற நிலைக் குழு என்றும் மற்றொன்று தற்காலிக கூட்டுக் குழு (எச்.ஒ.சி.,) என்றும் அழைக்கப்படுகிறது. பாராளுமன்ற நிலைக்குழு ஆண்டுதோறும் அமைக்கப்படும். ஆனால், எச்.ஓ.சி., எனப்படும் தற்காலிக பாராளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.,) தேவை ஏற்பட்டால் மட்டுமே அமைக்கப்படும்.

ஜே.பி.சி., அமைப்பதற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலும் வேண்டும். ஒரு அவையில் ஜே.பி.சி., அமைக்க மசோதா நிறைவேற்றப் பட்டாலும், மற்றொரு அவையின் ஒப்புதலும் பெற வேண்டும். இல்லையென்றால், இரு அவைகளின் தலைவர்களும் கலந்து பேசி முடிவு எட்டுவர். பாராளுமன்றத்தில் கட்சிகளின் எம்.பி.,க்கள் பலத்தை அடிப்படையாக கொண்டே உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

தவிர, மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மக்களவையிலும், ஒரு பங்கு உறுப்பினர்கள் மாநிலங்களவையிலும் இருந்தும் 2:1 என்ற விகிதத்தில் நியமிக்கப்படுவர். ஜே.பி.சி.,யின் விசாரனை மிகவும் ரகசியமாக நடை பெறும். ஆனால், விசாரனையின் தன்மைகள் குறித்து ஜே.பி.சி., தலைவர் அவ்வப்போது பத்திரிகையாளர்களுக்கு செய்திகளை வெளியிடுவார்

இதுவரை அமைக்கப்பட்ட ஜே.பி.சி., விசாரணை?

கடந்த 25 ஆண்டுகால பாராளுன்ற வரலாற்றில் முக்கியப் பிரச்னைகள் குறித்து விசாரிக்க இதுவரை நான்கு ஜே.பி.சி.,க்கள் அமைக்கப்பட்டன. ஆனால், நான்கு ஜே.பி.சி., விசாரணை அறிக்கைகளால், பிரச்னைகளுக்கு எந்த ஒரு குறிப்பிடத்தக்க தீர்வுகளும் எட்டப்படவில்லை.

போபர்ஸ் பீரங்கி ஊழல்: கடந்த 1987 ஆம் ஆண்டு, நாட்டின் பெரிய ஊழலாக கூறப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து, ஜே.பி.சி., விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கின. இதனால், பாராளுமன்ற அலுவல்கள் பல நாட்கள் முடங்கின. மேலும், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் வி.பி.சிங், ஜே.பி.சி., அமைக்க வலியுறுத்தி எதிர்க் கட்சிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். இதனால், விழிபிதுங்கிய நடுவண் அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்க ஒப்புக் கொண்டது.


VP SING
 நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட இந்த ஜே.பி.சி., பெரும் சர்ச்சையில் சிக்கியது. நடுவண் அரசு அமைத்த ஜே.பி.சி., யில் காங்கிரஸ் எம்.பி.க்களே அதிகம் இடம் பெற்றிருந்தனர். எனவே, ஜே.பி.சி.,யை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால், போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து அமைக்கப்பட்ட ஜே.பி.சி., பயனற்று போனது.

பங்கு சந்தை ஊழல்: கடந்த 1992 ஆம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்தில் ஹர்ஷத் மேத்தா உள்ளிட்ட பங்கு சந்தை தரகர்கள் 1000 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தனர். இதன் எதிரொலியால் இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது.

நாட்டின் பங்கு வர்த்தக துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த மெகா ஊழல் குறித்து ஜே.பி.சி., விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தது. ஆனால், அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை தொடங்க ஐந்து ஆண்டு காலம் பிடித்தது. மேலும் விசாரணை அறிக்கையின் பெரும்பாலான பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இதுவே, பங்கு சந்தை வர்த்தகத்தில் அடுத்து ஒரு மெகா மோசடி நடக்க காரணமாக அமைந்தது.

KETHAN BARAK
மும்பையை சேர்ந்த பங்குச் சந்தை தரகர் கேதன் பரேக், கடந்த 1999 முதல் 2001 வரை பங்கு சந்தையில் பல நூறு கோடி மோசடி செய்தான். இதனால், இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பலத்த அடி விழுந்தது. இந்த மெகா மோசடி குறித்து விசாரணை நடத்த மூன்றாவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. பங்கு சந்தை தரகர் கேதனுக்கும், வங்கி மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்தி நடுவண் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால், மூன்றாவது ஜே.பி.சி., அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தியதால், பங்கு வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பங்கு வரத்தக துறையில், ஜே.பி.சி.,யின் பரிந்துரைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இதனால், மூன்றாவது ஜே.பி.சி., விசாரனையிலும் எந்த வித தீர்வும் கிடைக்கவில்லை.

கோலா ஊழல்: 2003 ஆம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாக எழுந்தப் புகார் குறித்து, விசாரணை நடத்த ஜே.பி.சி., கமிட்டி, 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதில் குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கலந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதை உறுதி செய்தது. மேலும், குளிர்பான நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், இந்த நடைமுறைகள் எந்த அளவுக்கு பின்பற்றப்படுகின்றன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இது புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில் 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து ஜே.பி.சி., விசாரணை நடத்த பாராளுமன்றத்தை இரண்டு வார காலத்திற்கும் மேலாக எதிர்க்கட்சிகள் முடக்கின. ஆனால் நடுவண் அரசு அலைக்கற்றை ஊழல் குறித்து ஜே.பி.சி. அமைக்க ஒத்துக்கொள்ளவில்லை. அப்படியே அமைத்தாலும் அதுவும் விழலுக்கு இரைத்த நீராகவே இருக்கும்!

நன்றி: தினமலர்- சென்னை பதிப்பு.
கருத்துகள் வரவேற்கப் படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வியாழன், நவம்பர் 24, 2011

இந்திய வெளியுறவு அமைச்சக வரலாறு!


பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக வாரன் ஹேஸ்டிங்ஸ் இருந்த போது, 1783 செப்டம்பர் 13ம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி இயக்குனர் குழு, கோல்கட்டாவில் கூடியது. அதில், ஐரோப்பிய நாடுகள் உடனான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான உறவுகளை நிர்வகிப்பதற்காகத் தனித் துறை ஒன்றை அமைக்கும் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், 1843ல் அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல். எட்வர்ட் லா, முதன் முதலாக, இந்திய அரசில், வெளியுறவு, உள்துறை, நிதி மற்றும் ராணுவ அமைச்சகங்களை உருவாக்கினார்.

GENERAL EDWARD LAW
1935ல் கவர்னர் ஜெனரலின் நேரடிப் பொறுப்பில் தனியாகச் செயல்படத் தொடங்கிய மத்திய வெளியுறவு அமைச்சகம், 1946ல் இந்திய வெளியுறவுச் சேவை (ஐ.எப்.எஸ்.,) என்பதை துவக்கியது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் 162 வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் இரண்டையும் சேர்த்து, தற்போது மொத்தம் 600 ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் பணியில் உள்ளனர். 1948ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்திய சிவில் சேவைத் தேர்வுகளின் மூலம் முதல் முதலாக வெளியுறவுச் சேவைக்கான அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று வரை இந்தத் தேர்வு மூலம்தான் வெளியுறவு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அணிசேராக் கொள்கை: இந்தியா விடுதலை பெற்றவுடன், முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவே வெளியுறவு பொறுப்பையும் கவனித்துக் கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய வல்லரசுகளின் பக்கம் சார்ந்து இரண்டாகப் பிரிந்து கிடந்தன. இவற்றுக்கிடையே காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலையான புதிய நாடுகள் இருந்தன. அனைத்துக்கும் ஒரு வழிகாட்டியாக, எந்த நாட்டின் பக்கமும் சேராமல், புதிய உலக நாடுகள் அனைத்தும் தனி ஒரு அணியாக இருப்பதற்கு வகையளித்த "அணிசேராக் கொள்கையை' நேரு உருவாக்கினார்.

பஞ்சசீல கொள்கை: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் 1954ல் பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தானது. இதில், இருநாடுகளும் பரஸ்பரம் எல்லை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும். ஒருவருக்கு எதிராக இன்னொருவர் வலிந்து தாக்குதலில் ஈடுபடக் கூடாது. இன்னொரு உள்நாட்டின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. இருநாடுகளும் சம மாகவும் பரஸ்பரம் நன்மை தரும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும். அமைதியான இணக்க உறவு.இந்த பஞ்சசீலக் கொள்கையை உலக நாடுகள் தங்கள் வெளியுறவில் பயன்படுத்திக் கொண்டன. ஆனால் இவற்றை சீனா மீறியது தனிக் கதை.

இந்தியாவுடன் ராணுவ உறவில் உள்ள நாடுகள்: உலகில் குறிப்பிடத்தக்க வல்லரசாக வளர்ந்து வரும் இந்தியா, பல நாடுகளுடன் ராணுவ உறவு கொண்டிருக்கிறது. எனினும், குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டின் ராணுவத்து டனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. இந்தியாவுக்கு அதிகளவில் ராணுவத் தளவாடங்களை வினியோகம் செய்வதில் ரஷ்யா முதலிடத்தில் இருக்கிறது. அதையடுத்து, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன.

இவை தவிர, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், பிரேசில், தென்னாப்ரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளுடனும் ராணுவ உறவை மேற் கொண்டுள்ளது. தஜிகிஸ்தானில் இந்தியாவுக்கு ஒரு விமானப் படைத்தளம் உள்ளது. 2008ல் கத்தார் நாட்டுடன் ராணுவ ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது.

கருத்துகள் வரவவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், நவம்பர் 22, 2011

எப்படி உள்ளது கூடங்குளம்?


கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க, 1988ல் இந்திய பிரதமர் ராஜிவ் மற்றும் ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ஆகியோர் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டனர். பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொண்டு, வி.வி.இ.ஆர்.-1000 என்ற தொழில் நுட்பத்துடன் பணிகள் தொடங்கப்பட்டன. இந்திய அணுமின் கழகத்தின் 13 ஆயிரத்து 171கோடி மதிப்பில் திட்டங்கள் தொடங்கின.

இரண்டு யூனிட்களில், தலா 1000மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. மேலும், 3, 4 ,5, 6 என தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுள்ள நான்கு அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன. கடந்த 2001ல் அணு நிலைய கட்டுமான பணிகள் தொடங்கி 2007ல் முடிந்தன.


பின்னர், தொழில்நுட்ப ரீதியான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2007ல் கொதிகலன் நிறுவப் பட்டது. அணுமின் உற்பத்திக்கான கருவிகள் 2008ல் நிறுவப்பட்டு, எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு நடுவங்கள் அமைக்கப்பட்டன. தற்போது, கட்டுமான பணிகள், கருவிகள் பொருத்துதல் என அனைத்தும் முடிந்து, முதல் யூனிட்டில் மின் உற்பத்தி செய்வதற்கான ஒத்திகை பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் முதல் ஒரு யூனிட்டிலும், அடுத்த ஆண்டில் இரண்டாம் யூனிட்டிலும் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கூடங்குளம் அணு மின்நிலையம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்றாக கருதப்படுகிறது. ஒரே நேரத்தில், எந்த சுற்றுச் சூழல் சீர்கேடும் இல்லாமல் 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய உகந்த திட்டம் என கூறப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தால் மக்களுக்கோ, சுற்றுப்புறத்திற்கோ எந்த ஆபத்தும் இல்லை என அணுமின் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணுமின்நிலையத்தின் இயல்புநிலை குளிர்விப்பான் 40 மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப் பட்டுள்ளது.


மேலும், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளை தாங்கக்கூடிய வகையில் கடல் மட்டத்திலிருந்து ஏழரை மீட்டர் உயரத்தில் அணுமின்நிலைய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலைய வளாகத்தின் ஒரு புறம் கடல் பகுதியை ஒட்டி வருவதால், பாதுகாப்பு காரணங்க ளுக்காக 500 மீட்டர் வரை மீன் பிடிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சு பாதிப்பு குறித்து ஆராய, பாப அணுமின் நிலைய சுற்றுச்சூழல் ஆய்வகம் ஒன்று கூடங்குளம் ஏரியாவில் 2004 முதல் செயல்பட்டு வருகிறது.

இருபது ஆண்டுகளாக கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம், வெற்றிகரமாக உற்பத்தியை தொடங்கவுள்ள நிலையில் திடீர் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து நடுவண் அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

திங்கள், நவம்பர் 21, 2011

அண்ணா நூலகம் இடம் மாறுகிறது... !


இந்தியாவிலேயே நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். 172 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ள இந்த நூலகம்தான் சிங்காரச் சென்னையின் தற்போதைய லேண்ட் மார்க். சுமார் மூன்று லட்சத்து 75 ஆயிரம் நூல்களுடன் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது இந்த நூலகம்.

ஆகஸ்ட்- 16, 2008 ல் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது, மூன்று லட்சத்து 75 ஆயிரம் சதுர அடியில்,எட்டுத்தளங்களோடு பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. இந்த நூலகம் தேசிய விடுமுறை நாட்கள் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும். இந்த பெருமைமிகு அண்ணா நூலகத்தினை அவரது பிறந்த தினமான செப்டம்பர்-15,2010 அன்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.


கட்டடத்தின் நுழைவாயிலில் ஐந்து அடி உயரத்தில், வெண்கலத்தினால் செய்யப்பட்ட, உட்கார்ந்தபடி புத்தகம் படிக்கும் அண்ணாதுரையின் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. அ முதல் ஃ வரை அனைத்திலும் சர்வதேசத் தரம். எட்டுத் தளங்களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளுகுளு வசதியோடு கட்டப்பட்டுள்ளது.

நூலகத்தின் அனைத்துத் தளங்களிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத சி.எஃப்.எல். விளக்குகள் பொறுத்தப்பட்டுளளன. இளநீலநிற, கண்ணாடி சுவர் வழியே சூரிய வெளிச்சம் முழுமையாக கட்டடத்திற்குள்ளே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை கட்டடமாக’ இருப்பது இதன் மற்றொரு சிறப்பு.!

அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 493 இடங்களில் ரகசிய கேமராக்கள் (சி.சி.டி.சி.,) பொருத்தப்பட்டுள்ளன. எல்லா தளங்களிலும் யார் நுழைந்தாலும், வெளியே சென்றாலும் படமாக்கப்படும். செக்யூரிட்டி அதிகாரிகள் இந்த 493 கேமராக்கள் படமாக்குவதை தொடர்ந்து கண்காணித்து வருவர். அதோடுமட்டுமில்லாமல், நூலக கட்டடத்தின் எல்லா தளங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் விசேஷ கேமராக்கள், நூலகம் மூடிய பிறகு, இருட்டில் யாராவது அசைந்தால் கூட படம் பிடித்துவிடும். நூலகத்திற்கு 24 மணி நேரமும் முழுமையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

முதல்தளம் குழந்தைகளுக்கு: குழந்தைகள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் ரசிக்கும் வண்ணம், ஜங்கிள் புக் மற்றும் கார்ட்டூன் சேனல்களில் வரும் பிரபலமான கதாபாத்திரங்கள் போல் வித்விதமான சித்திரங்கள் சுவர் முழுவதும் காட்சியளிக்கின்றன. குழந்தைகள் சிரமமின்றி அமர்வதற்கும், தாங்களே புத்தகங்களைத் தேர்வு செய்வதற்கும் வசதியாக நாற்காலிகள், மேசைகள், அலமாரிகள் என அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்காகவே முதல் தளத்துக்கு எஸ்கலேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் அழகான மரம் ஒன்றும் உள்ளது. கலை இயக்குநர் தோட்டா தரணியால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை மரம் அது. அந்த மரத்தடியில் பெஞ்ச் அல்லது தரையில் அமர்ந்து குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கலாம். குழந்தைகளுக்காக தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மல்டிமீடியா சி.டி.க்களும், 127 டாகுமெண்டரி சி.டி.க்களும் உள்ளன.

முதல் தளத்தின் மற்றொரு பகுதியில் செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களுக்கான பிரிவு உள்ளது. இரண்டாவது தளம் முழுக்க தமிழ்ப் புத்தகங்களும், மூன்றாவது தளம் முழுக்க ஆங்கில நூல்களும் இடம்பெற்றுள்ளன. அறிவியல், வரலாறு, பொருளாதாரம் ஆகியவற்றில் தொடங்கி புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் உள்ளிட்ட இலக்கிய நூல்கள் என இதுவொரு புத்தகச் சமுத்திரம். நான்காவது தளத்திலும் இதே வகையான நூல்கள்.


சர்வதேச அளவில் புகழ்பெற்ற செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களின் பழைய பதிப்புகள் (Back Issues Of News Papers And Periodicals) ஐந்தாவது தளத்தில் உள்ளன. ஆறாவது தளத்தில் அரசு ஆவணங்கள் வைக்கப்படுகின்றன. இந்நூலகத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நூல்கள் ஏழாவது தளத்தில் வைக்கப்படுகின்றன. ஜி.யு.போப், பாரதியார் போன்றோரின் கையெழுத்துப் பிரதிகள், ஓலைச் சுவடிகள், பழங்கால வரைபடங்கள் போன்ற அரிய பொக்கிஷங்கள் எட்டாவது தளத்தில் இடம் பெறுகின்றன. அங்கு டிஜிட்டல் நூலகமும் உண்டு.

மருத்துவம் தொடர்பான ஏராளமான அரிய நூல்கள் இடம்பெறுவது இந்நூலகத்தின் சிறப்புகளில் ஒன்று. மிகவும் விலை உயர்ந்த இத்தகைய மருத்துவ நூல்கள் இந்தியாவில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தில் மட்டுமே உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மட்டுமே இத்தனை அரிய மருத்துவ நூல்கள் உள்ளன. மொத்தம் 10 ஆயிரம் மருத்துவ நூல்கள் இடம் பெற்றுள்ளன.

1,200 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியம் ஒன்றும், 850 பேர் அமரக்கூடிய ஓர் அரங்கமும்,151 பேர் அமரக்கூடிய மினி கான்ஃபரஸ் ஹாலும், 60 பேர் அமரக்கூடிய அரங்கம், 31 பேர் அமரக்கூடிய இன்னொரு அரங்கமும் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து நிகழ்ச்சிகளுக்கு வரும் அறிஞர்கள் தங்குவதற்காக அதிநவீன தங்கும் விடுதி ஒன்றும் இங்கு உள்ளது. நூலக வளாகத்தில் நட்சத்திர அந்தஸ்துடைய உணவகம் ஒன்றும் செயல்படுகிறது. வட இந்திய, தென் இந்திய உணவு வகைகளும், சைனீஸ் உள்ளிட்ட வெளிநாட்டு உணவு வகைகளும் இங்கு கிடைக்கும். ஒரே நேரத்தில் 170 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு வசதிகள் உள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் அனைத்துத் தீர்ப்புகளும் இந்த நூலகத்தில் கிடைக்கும். தமிழக வழக்கறிஞர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம். ஏனென்றால், இவற்றைப் பெற வேண்டுமானால் ஓராண்டுக்கு 10 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இங்கு அவற்றை இலவசமாகவே படிக்கலாம். சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து நூல்களும் இங்கு உள்ளன. மத்திய அரசு வெளியிடும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இந்நூலகத்தில் கிடைக்கும். இவை சிவில் சர்வீஸ் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது என ஒவ்வொரு மொழிக்கும் ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக ‘தி கார்டியன்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ போன்ற 1,500 சர்வதேச செய்தித்தாள்கள், 11 ஆயிரம் இதழ்களையும் (Journals) வாசிக்கலாம். அவற்றின் பழைய பதிப்புகளையும் இங்கு வாசிக்க முடியும். 95 நாடுகளில் வெளியாகும் 2 ஆயிரம் வார, மாத இதழ்களை (Magazines) வாசிக்கலாம். இந்த ஆன்லைன் புத்தகங்கள் மற்றும் இதழ்கள் அனைத்தையும் கன்னிமாரா நூலகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட நூலகங்கள், தாலுகா நூலகங்கள் ஆகியவற்றிலும் வாசிக்க முடியுமாம்.


ஆன்லைனில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களை வாசிப்பது மட்டுமின்றி, அவற்றை செவி வழியாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இ-புக்ஸ் எனப்படும் மின்னணு நூல்களையும் வாசிப்பது மட்டுமின்றி, செவி வழியாகவும் கேட்கலாம். கண்பார்வையில் லேசான குறைபாடு உடையவர்கள் புத்தகங்களைத் திரையில் ஓடவிட்டு அதை வாசிக்கும் வசதியும் உள்ளது. தற்போது, ஒரு லட்சத்துக்கும் மேல் இ-புக்ஸ் உள்ளன.

ஆர்.எப்.ஐ.டி., என்ற மைக்ரோ சாதனம், இந்த நூலகத்தில் உள்ள எல்லா புத்தகங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். இதன்மூலம் புத்தகங்களை தேடுவது சுலபமாகும். நூலக ஊழியர்களுக்கு தெரியாமல், யாராவது புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயற்சித்தால், இந்த மைக்ரோ சாதனம் காட்டிக் கொடுத்துவிடும்.

வாங்கிப் படித்த புத்தகத்தை திருப்பி தருவதற்காக தாம்பரம், அண்ணா நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் உள்ள பொது நூலகங்களில் இதற்கென்று அமைக்கப்பட உள்ள, ‘ட்ராப் பாக்ஸ்’ மூலம் போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இப்படி போடும் புத்தகத்தின் தகவல் உடனே ஸ்கிரீனில் தெரிந்து விடும்.

நூலகமாக மட்டுமில்லாமல், இதுவொரு கல்வி மையமாகவும் செயல்படுகிறது. சி.ஏ., எம்.பி.ஏ., வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு அந்தந்த துறைகளில் ஏற்பட்டுள்ள தற்கால வளர்ச்சி தொடர்பாக மாஸ்டர் வகுப்புகள் அவ்வப்போது நடைபெறும். உலகின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த வல்லுநர்கள் வகுப்புகள் நடத்தி சான்றிதழும் வழங்குவார்கள்.

முழுக்க முழுக்க தானியங்கி நூலகமாக இருக்கிறது இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம். வாசகர்களுக்கு ஏ.டி.எம்.கார்டு மாதிரியான உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. உறுப்பினர்கள் தங்கள் கார்டு மூலம் ‘ஸ்வைப்’ செய்து தாங்களே நூல்களை எடுத்துச் செல்லலாம். திருப்பிக் கொடுக்கும் போது அங்குள்ள பெட்டியில் வைத்துவிட்டுச் செல்லலாம்.


இந்நூலகத்தில் மொத்தம் 550 கணினிகள் வைக்கப்பட்டுள்ளன. நூலகத்தின் நிர்வாகத்துக்காக 230 கணினிகளும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 270 கணினிகளிலும் வாசகர்களின் உபயோகத்திற்காக இன்டர்நெட் வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்காக ஏராளமான சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வயதானவர்களுக்காக எல்லா தளங்களிலும் ஓய்வறைகளும் உண்டு. சற்று நேரம் ஓய்வு எடுக்கலாமே தவிர, அங்கு தூங்குவதற்கு அனுமதி இல்லை.

புதிது புதிதாக வரும் புத்தகங்கள் உடனடியாக காட்சிக்கு வைக்கப்படும். தினந்தோறும் ஒரு கருப்பொருள் (தீம் பேஸ்டு) அடிப்படையாகக் கொண்டு புத்தகங்கள் வைக்கப்படும். பெண்கள் தினம், பெற்றோர் தினம், ஆசிரியர் தினம் என வரும் போது அவை தொடர்பான நூல்கள் வைக்கப்படும். பொங்கல் திருநாள் போன்ற பண்டிகை தினத்தின் போதும் அது தொடர்பான நூல்கள், படங்கள் வைக்கப்படும். இதற்காக ஒரு தனி குழுவே செயல்படுகிறது.

நகரத்துக் குழந்தைகளுக்கு கிராமங்களை அறிமுகப்படுத்தும் வகையில் கிராமத்துப் பண்பாடு, கலாச்சாரம், விளையாட்டு ஆகியவற்றை நூல்கள், படங்கள் மற்றும் வீடியோ மூலம் அறிமுகம் செய்யப்படும். அதுமட்டுமில்ல! பிறந்தநாள், நினைவு நாள் போன்ற தினங்களில் தேசத் தலைவரகள், அரசியல் தலைவர்களது பேச்சுக்கள், அவர்களது சொந்தக் குரலிலேயே நூலகத்தில் ஒலிபரப்பப்படும். இது, இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

இந்த பெருமை மிகு நூலகத்தைத்தான் தமிழக அரசு குழந்தைகள்நல சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவித்திருக்கிறது. இது நியாயமா என்பதை நீங்களே கூறுங்கள்.!

கருத்துகளை வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

சனி, நவம்பர் 19, 2011

எத்தனை ரகசியங்களோ சிதம்பரத்தில்...!தோற்றம், அவதாரம், பிறப்பு போன்ற மாசு மலங்கள் இல்லாத தூய செம் பொருளாக இருப்பதால் பரமசிவம் ‘சித்து’ எனப்படுகிறது. ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ என்று பொருள். எல்லாவற்றையும் கடந்து எல்லாமாக உள்ள பரிபூரண சித்து அம்பரமாக எழுந்தருளி இருக்கும் திருத்தலமே சிதம்பரம் (சித்து+அம்பரம்) என்று அழைக்கப்படுகிறது.

சிதம்பரம் நகருக்கு கோவில் நகர், நாட்டிய நகர் என்ற புனைப் பெயர்களும் உண்டு. திருச்சிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என்றானது என்றும் கூறுவர். சிதம்பரத்தில் உள்ள சிவ ஆலயம் உலகப் புகழ்பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், ‘தில்லை’ என்றும் ‘தில்லையம்பலம்’ என்றும் அழைக்கப்பட்டது. நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாயன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது ‘பாடல் பெற்ற தலம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராஜர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயமும், வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் ஆலயமும் சிதம்பரம் நகரில் அமைந்துள்ளது, அந்நகரத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. பிற கோவில்களில் லிங்க வடிவில் இருக்கும் சிவ பெருமான், சிதம்பரம் கோவிலில் மட்டும் நடனமாடும் நிலையில் நடராஜராக காட்சித் தருகிறார். நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக் கலைக்கு முதற்கடவுளாக இந்த நடராஜரை வணங்குகின்றனர்.


40 ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கு ஒரு கோபுரம் என நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது சிதம்பரம் ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் 108 பரதநாட்டிய நிலைகளில் உள்ள சிற்பங்களை காணலாம். இங்கு மூலவர் சிலை இருக்கும் இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற் கூரை வேயப்பட்டு கனகசபை என்ற பெயர் பெற்றதாகும்.

பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம் வடிவில் சிவபெருமான் இக்கோவிலில் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்த்தும் வகையில் ‘சிதம்பர ரகசியம்’ அமைக்கப்பட்டுள்ளது. ரத்தினக்கல்லால் செய்யப்பட்ட நடராஜர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், சிதம்பர ஆலயத்தில் இன்றும் அவற்றிற்கு பூஜை செய்யப்படுகிறது. வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச்சித்திரக் கூடம் என்ற சபையில், நடராஜரின் கனகசபைக்கு அருகில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருச் சித்திரக்கூடம் பற்றிய குறிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் சிவகாமி அம்மனும் அருள் பாலித்து வருகிறார் என்பதும் சிறப்பு. இங்கு ஆயிரம் தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், சிற்பக் கலைக்கும்- கட்டிடக் கலைக்கும் சிறப்பு பெற்றது.

நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் பல வகையான நடனங்களில் இத்தலத்தில் அவரது ‘ஆனந்த தாண்டவம்’ இடம் பெற்றுள்ளது.

இந்த கோவிலில் நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்ற னர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர்.

பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்துள்ளனர். சோழர்களுக்குப் பிறகு பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் இங்கு வழிப்பட்டதாகவும், திருப்பணிகள் பல புரிந்ததாகவும் இக்கோவில் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் காணப்படு கின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

புதன், நவம்பர் 16, 2011

கலக்கத்துடன் சிரித்தார்!


வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசும் பழக்கம் உடையவர். அவர்களுடன் பேசும் போது இடையிடையே ஜோக் சொல்லி சிரிக்கவைப்பார். எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே இருப்பார். ஆனால், அவரை ஒருநாள் நான் சந்திக்கச் சென்று இருந்த போது, வழக்கத்துக்கு மாறாக சோகமாக இருந்தார். ‘என்னாச்சு உங்களுக்கு? என்றைக்கும் இல்லாத அளவுக்கு இவ்வளவு இறுக்கம்?’ என்றேன் நான்.

‘இன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்னைச் சந்திக்க வரப் போகிறார்’ என்று சிரித்தார். எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது! - இது அவுட்லுக்கின் முதன்மை ஆசிரியர் வினோத் மேத்தா ஒரு விழாவில் சொன்னது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அணு குண்டு சோதனையை நடத்தி உலக நாடுகளை அதிரவைத்தவர் வாஜ்பாய். அவர் மீதே அணு குண்டுகளை வீசியவர் ஒருவர் உண்டென் றால், அது நமது புரட்சித் தலைவிதான்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், நவம்பர் 15, 2011

பத்திரிகைகள் கண்களை திறந்து விட்டவர்.!


இலக்கியம், பத்திரிகை, நாடகம், சினிமா முதலிய துறைகளில் சிறப்பும், திறமையும் மிக்கவர்களுக்கு அமெரிக்காவில் ஆண்டுதோறும் ‘புலிட்சர் விருது’ வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது. ஜோசப் புலிட்சர் எனும் சாமானியர் பின்னாளில் பத்திரிகை உலகில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். புலிட்சரின் வாழ்க்கை சுவாரஸ்யமும், திருப்பங்களும் நிறைந்தது.

ஜோசப் புலிட்சர்
1864ல் லண்டனுக்கு வந்த ஹங்கேரிய இளைஞரான ஜோசப் புலிட்சருக்கு அப்போது வயது 17. பிரிட்டிஷ் ராணுவத்தில் சேருவதுதான் அவர் கனவு. ஆனால், உடற்கட்டும் இல்லை, கண்பார்வையில் குறைபாடு வேறு. முதலில் நிராகரிக்கப்பட்டாலும், பின்னர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த யூனியன் படைகளுக்கு ஆள் திரட்டிய ஏஜென்டின் சிபாரிசால் ராணுவத்தில் சேர்ந்தார்.

அமெரிக்காவில் சிறிது காலம் ராணுவச் சேவையில் ஈடுபட்டபின், செயிண்ட் லூயிக்கு சென்றார். சின்ன சின்ன தொழில்களை செய்து பிழைத்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மனிய பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்ந்தார். நாலே ஆண்டுகளில் அதாவது அவரது 24ஆவது வயதில் அந்த பத்திரிகையின் உரிமையாளர் களில் ஒருவராகவே ஆனார். அதுமட்டுமா...? நஷ்டத்தில் நிறுத்தப்படும் சூழலில் இருந்த வேறொரு பத்திரிகையைக் குறைந்த விலைக்கு வாங்கினார். அதை தரகர் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு கைமாற்றினார். இதன் மூலம் 7,000 பவுண்டுகளைச் சம்பாதித்தார்.

இதுமட்டுமா...? பின்னர் புலிட்சர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. ஆங்கில மொழி, சட்டம், அரசியல் ஆகியவற்றில் வல்லுநரானார். சரியாக நடத்தப்படாமல் இருந்த மேலும் 2 ஆங்கில நாளிதழ்களை விலைக்கு வாங்கினார். இரண்டையும் ஒன்றாக இணைத்து ‘செயிண்ட் லூயி போஸ்ட் டெஸ்பாட்ச்’ என்ற பத்திரிகையை உருவாக்கினார். அரசியல் வாதிகளின் முகத்திரைகளையும் அரசாங்கத்தின் திரைமறைவு நிகழ்வுகளையும் போர்க் கொடூரங்களையும் தைரியமாக தோலுரித்துக் காட்டினார்.

1972ல் நடந்த வியட்நாம் - அமெரிக்க போரின் கோர காட்சி. புலிட்சர் விருதைப் பெற்ற புகைப்படம் இது.
‘இன்றைக்கு நம்மைப் பற்றி என்ன எழுதியிருக்கின்றனர்’ என்று அதிகாலையிலேயே பயத்துடன் இவரது பத்திரிகையை படித்த அரசியல்வாதிகள்தான் அதிகம். சக்தி மிக்க செய்தி பத்திரிகை என்ற அங்கீகாரம் வாசகர்களிடம் இருந்து இந்த பத்திரிகைக்கு கிடைத்தது. நாளடைவில் தனது ‘நியூயார்க் வேர்ல்ட்’ என்ற பத்திரிகையின் மூலம் அரசியலில் புலிட்சர் தனி செல்வாக்குப்பெற்றது தனிக்கதை.

40 வயதில் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவராவோம் என அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால், பல பத்திரிகைகளின் கண்களை திறந்து விட்ட புலிட்சர் தன் கண்பார்வை முழுவதும் இழந்தார். பார்வையை இழந்தாலும் சிறந்த அறிவாளிகளின் துணை கொண்டு மேலும் சிறப்படைந்தார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

புதன், நவம்பர் 09, 2011

வக்கீல்கள் எப்படி?


ADVOCATE INGERSOL
ஒரு நீக்ரோ பசுவைத் திருடிவிட்டான். அவனுக்காக வாதாட யாருமில்லை. இங்கர்சால் தானே முன்வந்து வாதாடினாராம். அவனுக்கு விடுதலை கிடைத்தது. அப்புறம் அவனைத் தனியாக அழைத்து இங்கர்சால் கேட்டார். நீ தான் விடுதலை ஆகிவிட்டாயே இப்போதாவது உண்மையைச் சொல்! நீ பசுவைத் திருடியது உண்மைதானே? அதற்கு அவன் “நான் திருடியது உண்மைதான். இந்த வழக்கின் தொடக்கத்தில் நான் குற்றவாளிதான். ஆனால் நீங்கள் ஆதாரங்களை அள்ளி வீசி வாதம் நடத்த நடத்த நான்தான் பசுவைத் திருடினேனான்னு எனக்கே சந்தேகமாகிவிட்டது.”

 கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், நவம்பர் 08, 2011

வாழ்க்கை பாடங்கள் பத்து!


நமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை...


1. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதேபோல மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும் போது, நீங்கள் அதைவிட்டு ஓடிவிட நினைக்கலாம். அல்லது பிரச்சினையை மற்றவர்களிடம் தள்ளிவிட நினைக்கலாம். அல்லது அதில் உங்களது தலையை நுழைக்கலாம். அப்படி இல்லாமல், உங்களது பணிகளை நீங்களே தீர்மானியுங்கள்.

2. மகிழ்ச்சியைச் சம்பாதியுங்கள்

நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்படும்போது, நினைவில் கொள்ளத்தக்க சாதனைகளை விளக்குகிறார்கள். அதேசமயம் அவர்கள் சந்தித்த கடினங் களும்கூட அவர்களது மகிழ்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதிதான். பாராட்டை சம்பாதிப்பதில் இருப்பதைப்போல வேறு பெரிய திருப்தி இல்லை என்பதைக் கண்டறிந்தேன். கஷ்டப்பட்டு போராடி சம்பாதித்தால்தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும்.

3. தோல்வியே வெற்றிக்கு வழி

ஒவ்வொரு முறையும் பாராட்டே கிடைத்துக் கொண்டிருக்காது. வாழ்க்கையில் பல சவால்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். சில வெற்றிகளைப் பெறலாம். சில தோல்விகளைப் பெறலாம். வெற்றியால் மகிழலாம். ஆனால், அதைத் தலையில் ஏற்றிக் கொள்ளக்கூடாது. அவ்வாறு, தலையில் ஏற்றிக் கொள்ளும் கணத்திலிருந்தே நீங்கள் தோல்விப் பாதையில் பயணம் செய்யத் தொடங்கி விடுவீர்கள். தோல்வியை எதிர்கொள்ள நேர்ந்தால் கவலைப்படாதீர்கள். வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுங்கள். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். இழப்பைச் சந்திக்கும் போது இழப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை இழந்துவிடாதீர்கள்.

4. வெற்றியைப் போல தோல்வி

தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் இடையே மெல்லிய கோடுதான் இருக்கிறது. தன்னம்பிக்கை உள்ளவர்கள் எப்போதும் கற்றுக் கொள்ள திறந்த மனதுடன் இருப்பார்கள். எந்த நிலையிலும் கற்றுக் கொள்ள விரும்புவதே தலைமைப் பண்புக்கு முக்கியமானது. மற்றொருபுறம் கர்வம். அனைத்தும் நமக்குத் தெரியும் என்று நினைப்பது, நாம் கற்றுக் கொள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. மாறி வரும் உலகில் விதிமுறைகள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் மனநிறைவு கொள்வது உங்களது உணர்வுகளை சோம்பேறி ஆக்கும். உங்களைச் சுற்றி நடப்பதைப் புரிந்து கொள்வதைத் தடுக்கும். இதுதான் தோல்விக்கு முதல்படி.

5. சிறந்த வழி இருக்கிறது.

சிறப்புடன் செயல்படுதல் என்பது இலக்கு அல்ல. அது தொடர்ந்து செல்ல வேண்டிய பயணம். தொடர்ந்து முன்னேற்றம் நிகழ வேண்டுமானால், அதில் நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்காக உழைக்கவும் விரும்ப வேண்டும். நமது படைப்பாக்கத்திற்கும் புத்தாக்கத்திற்கும் மற்ற துறைகளிலிருந்து ஊக்கம் பெற வேண்டியது அவசியம். இயற்பியலில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவுக்கு இசையிலும் ஆர்வம் காட்டினார் ஐன்ஸ்டீன். பெட்ரண்ட் ரஸ்ஸல் தத்துவமேதை மட்டுமல்ல, கணிதவியலாளரும் கூட. திறமையும் படைப்பாக்கமும் ஒன்றிணைந்து நடைபோட வேண்டும்.

6. சாதகமான எதிர்வினை, எதிர்நிலைச் செயல்பாடு

அமைதியான மனநிலையில் நாம் மதிப்பீடு செய்யும்போது சாதகமாக எதிர்வினை செய்கிறோம். நமது செயல்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. ஆனால், எதிர் நிலையாக செயல்படும்போது, எதிராளிகள் நாம் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்களோ அதையே செய்து கொண்டிருக் கிறோம். ஒரு விசயத்தை ஏற்க இயலாத நிலையில், மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் சாதகமான எதிர் வினை இருக்க வேண்டும். அதுவே தற்போதைய நிலைமைக்க்கு சவா லையும் வளங்குன்றாத சமூக சீர்திருத்தத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.

7. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்இளம் வயதில் உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. 24 வயதில் நுழையும்போது நேரப்படி செயல்பட வேண்டியதிருக்கும். நேர நெருக்கடிக்குள் ஆளாகாமல் இருக்க பிசிக்கல் பிட்னஸ் அவசியம். உடற் பயிற்சி, நாம் உழைக்கச் செலவழிக்கும் நேரத்தின் தரத்தை மேம்படுத்துவ துடன், படுக்கச் சென்றதும் சீக்கிரம் தூக்கம் வரவும் உதவியாக இருக்கும். மன உளைச்சலை தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.

8. அடிப்படை நெறிகளில் சமரசம் வேண்டாம்

‘மனதின் ஜன்னல்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும். அதேசமயம், காற்றில் நமது கால்கள் அடித்துக் கொண்டு போய்விடக்கூடாது’ என்று மகாத்மா காந்தியடிகள் அடிக்கடி கூறுவார். நீங்கள் எதற்காக நிற்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அறநெறி என்பது சொல்லும் வார்த்தைகளில் இல்லை. செயல்களில் இருக்க வேண்டும். அடிப்படை நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் சமரசம் வேண்டாம்.

9. வெற்றி பெற விளையாடு

வெற்றி பெற விளையாடு. எப்படியாவது விளையாடு என்று அர்த்தம் அல்ல. கண்ணியமற்ற விளையாட்டு வேண்டாம். ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. மற்றவர்களின் உழைப்பில் வெற்றி பெற வேண்டாம். கடந்த முறை செய்ததைவிட இந்த முறை மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும். நோக்கத்தில் வெற்றி பெற முழுத் திறமையைக் காட்ட வேண்டும். இதற்கான உறுதி இருக்க வேண்டும்.

10.சமூகத்திற்குத் திருப்பிக் கொடு

இந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றாலும், பல சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, இதற்குத் தீர்வு காணும் வகையில் நம் அனைவருக்கும் ஒருங்கிணைந்த சமூகப் பொறுப்புணர்வு அவசியம் தேவை. அனைத்துச் சவால்களிலும் முக்கியமானது கல்வி. ஒரு புறம் வேலைக்குத் தகுந்த திறமையாளர்கள் கிடைக்காத நிலை உள்ளது. மற்றொருபுறம் வேலை இன்மையும், வறுமையும் உள்ளன. இந்த இரு முனைகளையும் இணைப்பதற்கு அனைவருக்கும் தரமான கல்வியை கிடைக்கச் செய்ய வேண்டும்.

 கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பால முருகன்.

திங்கள், நவம்பர் 07, 2011

தமிழ் வலைப்பூக்களின் நிலை!


 ‘பிளாக்’ என்று ஒரே சொல்லில் ஆங்கிலத்திலும், ‘வலைப்பதிவு’, ‘வலைப்பூ’ என்று இரண்டு சொற்களில் தமிழிலும் வழங்கப்படும் இலவச இணைய தளங்களால், தமிழில் புதிய எழுத்தாளர்களின் வரவு அதிகரித்து வருகிறது எனலாம். ஒரு மின்னஞ்சல் மூலம் வலைப்பூவைத் தொடங்கலாம் என்பதால் வலைப்பூக்கள் வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இங்கு எல்லாமுமே இலவசம் என்பதால், மிக குறுகிய காலத்திலேயே அபார வளர்ச்சியை எட்டியுள்ளது.


தமிழ் வலைப்பூக்களில் எழுதுதல் என்பது 2003 ஆம் ஆண்டு கார்த்திக் ராமதாஸ் என்ற அமெரிக்க வாழ் தமிழரால் தொடங்கப்பட்டது. அந்த ஆண்டில் அறிமுகமான தமிழ் யுனிகோடு எழுத்துருவின் காரணமாக, வலைப்பூக்களில் எழுதக்கூடிய வாசல் திறந்திருக்கிறது. இன்று சுமார் 4500 முதல் 5000 வலைப்பூக்கள் வரை உள்ளன. ஆன்மீகம், அரசியல், வரலாறு, பொது அறிவு, கல்வி, சுயபுராணம், பைத்தியக்காரத்தனம், குழு விவாதம், வசைகள், சினிமா, நையாண்டி என எல்லாவற்றுக்கும் இதில் இடம் இருக்கிறது.

இணையத்தளத் தொடர்பு இருந்தால் உலகின் எந்த மூளையிலிருந்தும் தங்கள் கருத்துகளை எழுதிக் குவித்து, பிறரைப் படிக்க வைக்கக் கூடிய அளவிற்கு வலைப்பூக்கள் முன்மாதிரியாக இருக்கின்றன. எந்தப் பிரச்சனை க்கும், படித்த இளைஞர்களின் கருத்து என்ன என்பதை இதில் நடக்கும் விவாதங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரு கட்டுரையின் கருத்துக்கு எதிர்வினை இருப்பின் அதுவும் இங்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விவாதிக்கக் கூடிய அளவிற்கு ஆரோக்கியமான நிலையும் வலைப்பூவில் இருக்கிறது. அதே சமயம் வலைப்பூவில் வரக்கூடிய பெரும்பாலான கட்டுரைகள் குப்பைகளாகத்தான் இருக்கின்றன என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

வலைப்பதிவில் தொடக்கத்தில் சுமாராக எழுதி போகப் போக எழுத்தில் கில்லியாகி பிரபலப் பத்திரிகைகளால் கவனிக்கப்பட்டு வாய்ப்பு பெற்றவர் களும் உண்டு. அவர்களில் நிறைய பேர் புத்தகங்களும் எழுதியிருக் கிறார்கள். அதேசமயம், மூன்றாவது வலைப்பதிவிலேயே சரக்கு காலியாகி, டைரி லெவலுக்கு வந்து, பின் பத்திரிகைகளில் வந்ததை எடுத்து காப்பி பேஸ்ட் செய்பவர்களும் உண்டு.

யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை எழுதுவதற்கு அல்லது வெளியிடுவதற்கு பத்தரிகைகள், தொலைக்காட்சிகளை விட தற்போது வலைப்பூக்களில்தான் கட்டற்ற சுதந்திரம் இருப்பதை பலர் உணர்ந்து ள்ளனர். ஆதலால், இங்கு யாராக இருந்தாலும் விமர்சனத்துக்கு ஆளாக்கப் படுகின்றனர். போற்ற வேண்டியதைப் போற்றியும் தூற்ற வேண்டியதைத் தூற்றியும் எல்லோரும் தைரியமாகப் பதிவு செய்கிறார்கள்.

பேனா நட்பு அருகிப்போகியிருக்கும் இக்காலத்தில் வலைப்பதிவுகள் மூலமாக உருவாகும் நட்புகள் மிக ஆழமானவையாக உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த நட்பு வட்டத்தின் மூலம், வலைப்பதிவர்கள் ஆரோக்கியமான சில சமூகப் பணிகளையும் செய்கிறார்கள். அதேபோல், புதிய பதிவர்களுக்கு வலைப்பதிவு தொடர்பான தொழில் நுட்ப அறிவு மேம்படவும், புதிய பதிவர்களை வரவேற்கும் முகமாகவும் அவ்வப்போது பதிவர் பட்டறைகளும் நடைபெறுகின்றன.

ஆனால், செய்திகளை வாசித்து அவற்றை அலசி மாற்றுக் கருத்தை முன்வைப்பவர்களும் இத்தளங்களில் அரிதே. அதே சமயம் பழைய நல்ல சினிமாக்கள் குறித்தும் மாற்று சினிமாக்கள் குறித்தும் தெரிந்து கொள்ள நல்ல வலைப்பதிவுகள் இருப்பினும், கிழக்குப் பதிப்பகம் பத்ரி ஒருவர்தான் அவரது வலைப்பூவில், உலகின் எல்லா விசயங்களுக்கும் ஏதோ ஒரு கருத்தோ அல்லது தகவலோ வைத்திருக்கிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை.ஜனரஞ்சகமாக எழுதும் பதிவர்களுக்குதான் இங்கு மவுசு அதிகம். அதேசமயம், தங்கள் பிரச்சினைகளை விலாவாரியாக நாகரிகமாக எழுதுவதில் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், நிறைவாக எழுதுகிறவர் கள் பெண் பதிவர்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். பெற்றோர் உதவியுடன் எழுதும் குழந்தைப் பதிவர்கள் கூட இங்கு உண்டு.

ஒருபுறம் இப்படி மிகவும் பாசிட்டிவான விசயங்கள் இருக்கின்றன. ஆனாலும், சைபர் க்ரைம் போலீசார் தலையிடும் அளவுக்கு கட்டுக் கடங்காமல் போன சில சம்பவங்களும் உண்டு. சொந்த தகவல், புகைப் படங்கள் போன்றவற்றை எந்தக் காலத்திலும் பகிர்ந்து கொள்ள இயலாத அளவுக்கு வலையுலகம் பாதுகாப்பு அற்றதாக இருக்கிறது என்பது நடுநிலையாளர்களின் கணிப்பு.


தமிழ் வலைப்பதிவுகளை திரட்டுவதற்கென்றே சில திரட்டிகளும் உண்டு. இந்தத் திரட்டிகளில் இணைந்து கொள்வதில் மூலமாக நொடிகளில் நம் வலைப்பதிவினை உலகின் எந்த மூலைக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை இருப்பதால், எளிதில் எழுத்தாளர்கள் புகழ்பெறுகின்றனர். ஜெய மோகன், ரவிக்குமார், சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், பா.ராகவன் போன்ற பிரபலமான பலரும் தமிழில் வலைப்பூ எழுதுகிறார்கள். ஊடகங்களில் தங்களால் எழுத முடியாத சில விசயங்களுக்கு வலைப்பூவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

வலைப்பூக்கள் என்பது வெறும் இலக்கியம் மற்றும் பொழுது போக்கானது மட்டுமல்லமால் பல்வேறு தளங்களிலும் எழுதப்படுவதால் ஒரு மாற்று ஊடகமாகவும் இவை உருவாகி வருகின்றன. அதோடுமட்டுமல்லாமல் சொந்த தளங்களாகவும், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றின் கிளைகளாக வும் வலைப்பூக்கள் பிரிந்துள்ளன. இன்னும் சிறப்பாகச் செயல்பட்டால் பல நல்ல விவாதங்களையும் படைப்புகளையும் வலைப்பூக்களின் மூலம் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையோடு நடைபோடுகிறது தமிழ் வலைப்பூக்கள்!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

ஞாயிறு, நவம்பர் 06, 2011

தூக்குத்தண்டனையிலிருந்து விடுதலை...!


1972 ஆம் ஆண்டு பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த பிரதாப்சிங் கெயரோன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தயாசிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அவருடைய கடிதத்தையே மனுவாகக் கொண்டு விசாரித்த நீதிபதிகள் ஜெ.எஸ்.வர்மா, எல்.எம்.சர்மா ஆகியோர் நீண்ட காலம் அவர் சிறையில் அடைக்கப் பட்டிருந்ததை கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையாக குறைத்தனர்.


1983ஆம் ஆண்டு சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள், மர்மமான முறையில் உயிரிழந்தனர். இவர்களை வைத்தி என்கிற வைத்தீஸ்வரம் (19), என்பவர் விஷ ஊசி போட்டு கொன்றது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட வைத்தீஸ்வரத்திற்கு, 8 ஆண்டுகளுக்கு பிறகு, ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்து ஆணையிட்டது.

கேரள மாநிலத்தில் சி.ஏ.பாலன் என்பவருக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்தபோது, அப்போதைய முதலமைச்சர் இ.எம்.எஸ்.நம்பூதிபாட், சட்ட அமைச்சரும், முன்னாள் நீதிபதியுமான வி.ஆர். கிருஷ்ணய்யர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நீங்கள் ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் 161ன் விதியின்படி நாங்கள் தூக்கு தண்டனையை ரத்து செய்கிறோம் என்றார். அதன் பின்னர் சி.ஏ.பாலனின் மரண தண்டனை நிறுத்தப்பட்டது.


கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நாயர், ஈரோட்டை சேர்ந்த கோவிந்தசாமி, தோழர் தியாகு, ஆகியோரும் தூக்கு தண்டனையில் இருந்து உயிர் தப்பியவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாவ் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் தூக்குத்தண்டனை கைதிகள் தண்டனையை எதிர்நோக்கி உள்ளனர். இதில், அப்சல் குருவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வெள்ளி, நவம்பர் 04, 2011

தேசிய மக்கள் தொகை பதிவேடு.!


தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, பலவித தகவல்களை அறிந்து கொள்ள பயன்படுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும், நடுவண் மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு செய்ய வேண்டிய நலப்பணிகள் தொடர்பாக நிதி ஒதுக்கவும், திட்டத்தை அமலாக்கவும் முடியும். இது முதல் முறையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தில், பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, தந்தையின் பெயர், தாய், கணவன் அல்லது மனைவி உள்ளிட்ட பல தகவல்கள் இருக்கும். குடியிறுப்புகளில் இருப்பவர்கள் இந்த கணக்கெடுப்புக்கு தகுதி உள்ளவர்கள் ஆவர். வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தபின், கணக்கெடுப்பு எடுத்ததற்கான அத்தாட்சி சீட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கப்படுகின்றன.இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் எடுக்கப்படும் புள்ளி விவரங்கள் கணினியில் உள்ளூர் மற்றும் ஆங்கில மொழியில் அந்தந்த மாநிலங்களில் பதிவு செய்யப்படுகின்றன. 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் புகைப்படத்துடன் கூடிய பயோமெட்ரிக் புள்ளிவிவரங்கள், பத்து விரல்களின் ரேகைப்பதிவு மற்றும் கருவிழிப்படலத்தின் அமைப்பு ஆகியவையும் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு கிராமத்திலும், நகரங்களில் வார்டு அளவிலும் முகாம்கள் அமைத்து விவரங்கள் சேகரிக்கப்படும். முகாம்களில் விவரங்கள் சேகரித்ததற்கான அத்தாட்சி சீட்டு அளிக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து, சேகரிக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரங்களை தொகுத்து முக்கிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைத்து, விவரங்களில் குறைபாடுகள் இருப்பின் அதை திருத்தி இறுதி செய்கின்றனர். கணக்கெடுப்பு விவரப்பட்டியல், கிராமங்களில் கிராம சபைக் கூட்டத்திலும், நகரங்களில் வார்டு கமிட்டியிலும் வைக்கப்படுகின்றன.

இந்த கட்டத்திலும், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டு, அவற்றை சரிசெயகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆட்சேபனைகள் சரி செய்யப்பட்டு பட்டியல் இறுதி செய்யப்படுகின்றது. தேசிய மககள் தொகை பதிவேட்டில், பயோ மெட்ரிக் முறையில், பதியப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், பதிவாளர் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தில் இருந்து அனுப்பும் தேசிய அடையாள அட்டை ஒவவொரு வீட்டிற்கும் கொடுக்கப்படுகின்றது.

எந்த மாதிரியான தகவல்கள் சேகரிக்கப்படுகிறது?

ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு விதமான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. வீட்டில் உள்ள பொருட்களின் விவர பட்டியல் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் குறித்த விவரம. வீட்டில் உள்ள பொருட்கள், வீட்டின் பயன்பாடு, குடிநீர், எந்த கழிப்பறை பயன்படுத்தப்படுகிறது, மின்வசதி, சொத்துவிவரம் உள்ளிட்ட 35 கேள்விகள் கேட்டு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றது.

விடுபட்டவர்கள் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?

உள்ளூர் வட்டாட்சியர்/வார்டு அதிகாரி அல்லது அதற்கென உள்ள அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். முற்றிலும் இலவசமான இந்தச் சேவையில் ஒவ்வொரு நபரையும் பதிவு செய்ய அரசுக்கு 31 ரூபாய் செலவாகிறது. நாம் பதிவு செய்த 90 முதல் 120 நாட்களுக்குள் ஆதார் அட்டை கிடைக்கும். இதுகுறித்து மேலும் தகவல்கள் அறிய, 18001801947 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தகவல்களை எவ்வாறு பதிவு செய்வது?

என்.பி.ஆர்., படிவத்தில் கையெழுத்திட வேண்டும். தகவல் சேகரிப்பவர், உங்களுக்கு தகவல்களை படித்து காண்பித்தபின் கையெழுத்தோ அல்லது கைநாட்டோ இட வேண்டும். இதனால் சரியான தகவல்களை பதிவு செய்யலாம். தகவல் சேகரிப்பவர், கொடுக்கும் எல்லா தகவல்களையும் பதிவு செய்து கொள்வர். இதற்காக எந்த சான்றுகளையும் அவரிடம் காண்பிக்க வேண்டியதில்லை. கொடுக்கும் தகவல்கள் சரியானதாகவும், உண்மை யானதாகவும் இருக்கட்டும். தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், மக்கள் தொகை மற்றும் குடியுரிமை சட்டப்படி தண்டனை உண்டு.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

புதன், நவம்பர் 02, 2011

நவீன நரகாசுரர்கள்!


உத்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் உம்லேஷ் யாதவ் கடந்த (2007) சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, பத்திரிகைகளுக்குப் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டார் (PAID NEWS) என்ற புகார் எழுந்தது. விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அப்புகார் உண்மை என்பதால், அவரைத் தகுதி நீக்கம் செய்துள்ளது. உம்லேஷ் யாதவ் தேர்தல் நேரத்தில் சில இந்தி பத்திரிகைகளில் தன்னுடைய படம், செய்தி வருவதற்காக பணம் கொடுத்துள்ளார் என்பது உண்மைதான்.

என்றாலும், இவரது தகுதிநீக்கம் என்பது பணம் கொடுத்து வாங்கிய செய்திக்காக அல்ல. இந்தச் செய்திகள் விளம்பரம் என்பதைக் குறிக்கும் அடையாளக் குறிப்புடன் (ஏடிவிடி) பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அதைச் செய்தியாகவே கருதிக் கொண்ட உம்லேஷ் யாதவ், தேர்தல் செலவில் கணக்குக் காட்டத் தவறிவிட்டார். ஆகவே, இது விளம்பரச் செலவாகக் கருதப்பட்டு, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.
umlesh yadav
 இதுபோன்று, தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து செய்தி வெளியிட்டதாகப் புகார்கள் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் இருப்பவர் மகாராஷ் டிரத்தின் முன்னாள் முதல்வர் அசோக் சவாண். அவர் மீதான அனைத்துக் குற்றச் சாட்டுகளும் ஆதாரங்களுடன் உள்ளன. அவருடைய செய்திகளில் விளம்பரம் (ஏடிவிடி) என்பதற்கான அடையாளக் குறிப்பு கிடையாது.

தேர்தலின் போது அசோக் சவாண் பணம் கொடுத்து செய்திகள் வெளியிடச் செய்தார் என்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஒரே ஆதாரம் - அவரைப் புகழ்ந்து தள்ளும் ஒரே செய்தி, ஒரு வார்த்தை மாறாமல், எல்லாப் பத்திரிகைகளிலும் அப்படியே பிரசுரமாகியிருக்கிறது என்பதுதான். பணம் கொடுக்காமல் இப்படி ஒரே செய்தி எல்லா பத்திரிகைகளிலும் வெளியாக வாய்ப்பே இல்லைதான். ஆனாலும் அவர் பணம் கொடுத்தார் என்பதை நிரூபிக்க வழியில்லாத நிலையில், தேர்தல் ஆணையம் தனது விசாரணையை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ashok chavan 
 இவ்வாறு பணம் கொடுத்து செய்தி வாங்கி, விளம்பரம் தேடிக் கொள்ளும் நுகர்வுக் கலாசாரம் பத்திரிகை உலகில் நுழைந்துவிட்ட நிலையில், அதை சில வேட்பாளர் களும், சில பத்திரிகைகளும் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்கின்றனர். முன்னணி யில் உள்ள ஆங்கிலத் தொலைக்காட்சி செய்திச் சேனல்களும் பத்திரிகைகளும் தேர்தல் நேரங்களில் இதில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுகின்றன.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் (2011), செய்திப் படங்களை தினமும் பிரசுரிக்க அதன் அளவுக்கேற்ப பணம் வழங்கியதாக ஒரு வேட்பாளர் கூறிய தகவலை ஓர் ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

ஒரு பத்திரிகையில் ஒரு வேட்பாளர் குறித்து எத்தனை செய்திகள் வரலாம், அல்லது எத்தனை சதுர சென்டி மீட்டர் செய்தி இடம் பெறலாம் என்பதையெல்லாம் தேர்தல் ஆணையம் வரையறுக்க முடியாது. ஒரு பத்திரிகை உரிமையாளர் தேர்தலில் போட்டி யிட்டால், அவரைப் பற்றித்தான் அந்தப் பத்திரிகை அதிகமாக செய்தி வெளியிட முடியும். கட்சி சார்புடைய பத்திரிகை என்றால், அவர்களது வேட்பாளர்களைப் பற்றி மட்டும்தான் செய்தி வெளியிடும். இதில் வரையறைகள் சாத்தியமே இல்லை.

பத்திரிகைகள் மட்டுமல்ல, ஊடகங்களிலும் இதுதான் நிலைமை. போதாக்குறைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கென்று ஒரு தொலைக்காட்சி சேனலையே நடத்தும்போது, நடுநிலையாக ஊடகங்கள் செயல்படுவது என்பது இந்தியாவில் சாத்தியமே இல்லை. அதற்காக, அரசியல் கட்சிகள் தொலைக்காட்சிச் சேனல்களை நடத்தக் கூடாது என்று தடுப்பதும் இயலாத காரியம்.

ஆளுங்கட்சியின் தவறுகளை வெளிச்சம் போடப் பத்திரிகைளால் முடியுமே தவிர, செய்திகளைத் தொடர்ந்து பிரசுரித்துத் தகுதியில்லாத ஒருவரை வெற்றி பெறச் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.வேண்டுமென்றே திணிக்கப்பட்ட செய்திகள் ஒரு போதும் வாக்குகளாக மாறுவதில்லை என்பதுதான் மிகப்பெரிய உண்மை. அந்த அளவுக்கு வாசகர்கள் தௌவானவர்களாக இருக்கிறார்கள். 

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி சார்பாக தமிழகத்தின் மிகப் பிரபலமான தொலைக்காட்சி சேனல் ஒரு நகைச்சுவை நடிகரைக் களமிறக்கி அவருக்கு முக்கிய த்துவம் கொடுத்துத் தனிநபர் தாக்குதல் நடத்தியும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லையே. ஆகையால் பத்திரிகைச் செய்திகளோ காட்சி ஊடகப் பிரசாரங் களோ தனிநபரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில்லை என்பதுதான் உண்மை.

உண்மையிலேயே பயமுறுத்துவது தொழில்நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை விளம்பரப்படுத்துவதற்காகப் பணம் கொடுத்துத் திணிக்கும் செய்திகள் (PLANTED NEWS)தான். கார்ப்பரேட் கலாசாரத்தின் இன்றியமையாத பகுதியாக இது மாறிவிட்டி ருக்கிறது. இதற்காக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டு விடுகிறார். அல்லது இதற்காகவே பத்திரிகைத் தொடர்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த அதிகாரிகள் அல்லது நிறுவனங்கள் பத்திரிகை நிருபர்களைத் தங்களது நட்பாலோ, அன்பளிப்புகளாலோ, விருந்துகளாலோ, பணத்தாலோ வசப்படுத்தி அவர்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டிய விஷயங்களைச் செய்திகளாக நுழைந்து விடுகின்றனர். அந்தச் செய்தி திணிக்கப்பட்டது என்பது தெரியாத அளவுக்கு சுவாராஸ்யமாக எழுதப்படுவதுடன், பத்திரிகை செய்தி ஆசிரியர்களின் கண்களிலி ருந்தும் இந்தத் திணிப்புகள் தப்பிவிடுகின்றன.

செய்திகள் திணிக்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல, ஏதாவது ஒரு விதத்தில் பத்திரிகையாளர்களை இந்தக் கார்ப்பரேட் கலாசாரம் விலைபேசி விடுகிறது என்பது தான் வேதனைக்குரிய ஒன்று. அன்பளிப்புக்கு அடிமையாகிவிட்ட பத்திரிகையாளர் களை எப்படி மீட்டெடுப்பது? நிருபர்களிலிருந்து பத்திரிகை அதிபர்கள் வரை பலரையும் விலைபேசத் தயங்காத கார்ப்பரேட் நரகாசுரர்களிடமிருந்து பத்திரிகை தர்மத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான் ஊடகங்களையும் இந்திய ஜனநாயகத் தையும் எதிர்நோக்கும் மிகப் பெரிய சவால்.!

பத்திரிகைகளும் ஊடகங்களும் தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துக் கொள்ளவும், பத்திரிகை அறம் சார்ந்து நிற்பதும் மட்டுமே இத்தகைய போக்குகளைத் தடுக்க முடியும் என்பதுதான் உண்மையான கருத்து

நன்றி: தினமணி, 26-10-2011
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், நவம்பர் 01, 2011

வர்ணஜாலம் காட்டும் ரங்கோலி.!


நமது இந்து கலாச்சாரத்தில் வீட்டின் முன் தினமும் கோலமிடுவது மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. தற்போது விழாக்கள், விசேஷங்கள் போன்றவற்றிற்கு கலர் பொடிகள் கொண்டு கோலமிடுவது வழக்கத்தில் உள்ளது. இதில் ரங்கோலி எனப்படுவது வண்ணங்களின் அணிவகுப்பாகும். இந்த ரங்கோலி கோலங்கள் மகாராஷ்டிரா மாநிலத் திலிருந்து தொடங்கி மெல்ல இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. 

இந்த ரங்கோலி தென் இந்தியாவில் கோலம் என்றும், வட இந்தியாவில் சவுக்பூரணா என்றும், ராஜஸ்தானில் மதனா என்றும், பீகாரில் அரிபனா என்றும், வங்காளத்தில் அல்பனா என்றும் அழைக்கப்படுகிறது. கோலங்கள் பற்றிய ஒரு சுவராசியமான கதை ஒன்று உண்டு. அக்காலத்தில் இருந்த ஒரு மன்னனின் நாடும், மக்களும் அந்நாட்டு இளவரசனின் மரணத்தினால் மிகவும் துக்கமடைந்திருந்தது. எல்லோரும் பிரம்மாவை வேண்டி அழுதனர்.


பிரம்மா, அவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து மன்னரிடம், இளவரசனைப் போன்ற உருவப் படத்தை தரையில் வரையும் படியும் அந்த படத்திற்கு தாம் உயிர் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படியே இளவரசன் உயிர் பெற்றெழுந்தான் என்பது புராணக் கதை. அதிலிருந்து உயிரோட்டமுள்ள கோலம் உருவானது என்று நம்பப்படுகிறது. இதனாலே மலர்கள், அரிசி மற்றும் மாவின் மூலமாக கோலமிட்டு இறைவனை வணங்குகின்றனர். மேலும், கலர் பொடிகளைத் தவிர மலர்களைக் கொண்டும் தற்போது ரங்கோலி வரைகின்றனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.