செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், அக்டோபர் 14, 2010

தமிழரின் பெருமை: தஞ்சை பெரிய கோவில் !


தமிழர்களின் பண்டைய பெருமையை பறைசாற்றும் வரலாற்று சான்றுகள் எவை எவை என்று பட்டியலிட்டால் இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மை மிக்க இலக்கியங்கள், வானுயர எழுந்து நிற்கும் கற்றளி எனப்படும் கோவில்கள் இவை இரண்டும்தான் முன்னணியில் வந்து நிற்கும். இத்தகைய பெருமை மிக்க கட்டடங்களுள் ஒன்றுதான் தஞ்சை பெரிய கோவில்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் ஆன்மிகக் களஞ்சியமாகவும், தமிழர்களின் கட்டடத் திறமைக்கு ஒரு சான்றாகவும் திகழ்கிறது ராஜராஜேஸ்வரம் எனப்படும் தஞ்சை பெரிய கோவில். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாய் காட்சி தரும் இக்கோவில், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

சோழ மன்னர்களில் தலைசிறந்த மன்னராகிய முதலாம் ராஜராஜ சோழனின் காலத்தில் கட்டப்பட்டது தஞ்சை பெரிய கோவில். கி.பி.1005 ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு கி.பி.1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளில் கட்டப்பட்ட இக்கோவில், ஆயிரம் ஆண்டுகைக் கடந்தும் கம்பீரமாய் காட்சி தருவதை பார்க்கும்போது, பண்டைய தமிழர்களின் கட்டட நிபுணத்துவத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழ்நாட்டின் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு தஞ்சை பெரிய கோவிலுக்கு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் சன்னதி திருவில்லிபுத்தூர் போன்ற கோவில் கோபுரங்களின் வடிவத்திற்கும் தஞ்சை கோவிலின் கோபுரத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஆகம விதியோடு அதேசமயம் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டது இதன் கோபுரம். தரைத்தளத்தில் இருந்து மொத்தம் 216 அடி உயரம் கொண்டது இதன் கோபுரம். கர்ப்பகிரகத்தில் இருந்து எகிப்திய பிரமிடுகளைப் போன்று 190 அடி உயரத்திற்கு சீரான வடிவில் உயர்ந்து செல்கிறது.

பொதுவாக கோபுரத்தின் ஆதிதளம் முடிந்து முதல் தளம் ஆரம்பிக்கும்போது சுற்றளவு குறையத் தொடங்கும். மேலே செல்ல செல்ல குறுகியப்படி செல்வதால் பிரமிடு போல் காட்சி அளிக்கும். ஆனால், ஆதிதளத்தின் தொடர்ச்சியாக முதல் தளத்தின் சுற்றளவும் இருப்பது இக்கோவிலின் சிறப்பினும் சிறப்பாகும்.

அதேபோன்று பெருவுடையார் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து மேலே பார்த்தால் சிகரத்தின் அடிப்பாகம் தெரியும். அதுவும் கீழே சதுரமாக தெரிய ஆரம்பித்து மேலே செல்ல செல்ல வட்டமாக மாறும் விந்தை எளிதில் புரியாத புதிர்தான். கோபுர உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவிலான கல் சுமார் 80 டன் எடையுடையது. கோவிலின் உள்ளே கர்ப்பகிரகத்தில் காட்சி தரும் லிங்கம் 13 அடி உயரம் உடையது. ஆவுடை எனப்படும் லிங்கத்தின் கீழ்ப்பகுதி வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாகும். இந்த லிங்கம் மத்தியப்பிரதேசம் மாநிலம் நர்மதை ஆற்றங்கரையில் இரந்து எடுத்து வரப்பட்டதாகும்.

கோவிலின் மற்றொரு ஆச்சர்யமாக விளங்கும் மிகப்பெரிய நந்தி பார்ப்போரை விய்ப்போடு வணங்க வைக்கிறது. 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்ட நந்தி உருவம் இந்தியாவில் வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒன்று.

தஞ்சை முழுக்க முழுக்க வேளாண் பூமியாகும். காவிரி ஆற்றின் செழித்த வண்டல் மண் கொழிக்கும் பூமி தஞ்சை. கையால் கிண்டி விதை நட்டாலே, பூ மலரும் மகத்துவம் கொண்டது தஞ்சை மண். இங்கு கனத்த பாறைகளோ, மலையளவு உயரம் கொண்ட கற்களோ இருந்ததற்கான நிலவியல் சான்றுகள் இல்லை. அப்படி இருக்கையில் இவ்வளவு பெரிய தஞ்சை பெரிய கோவிலைக் கட்ட தேவையான கற்களையும், குறிப்பாக விமானத்திற்கு தேவையான கல்லை ராஜராஜ சோழன் எங்கிருந்து கொண்டு வந்தான், எப்படி சாரம் எழுப்பி அதனை மேலே கொண்டு சென்றான் என்பதை எண்ணிப் பார்க்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் கட்டட ஞானம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

தச்சை பெரிய கோவிலுக்குள் கர்ப்பகிரகமான சிவலிங்கம் மட்டுமல்லாது வடமேற்கு மூலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில், வடகிழக்கு பகுதியில் வராகியம்மன் கோவில், சண்டி கேசுவரர் கோவில், கணபதி கோவில், நடராஜர் சன்னதி போன்றவையும் அமைந்துள்ளன. கருவூரார் சித்தரைப் போற்றி கருவூரார் கோவிலும், சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சிலைகளும், 108 சிவலிங்கங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் இரண்டு திருவாயில்களைக் கொண்டு அமைக்கப்பட்ட முதற்கோவில் தஞ்சை பெரியகோவில்தான். கட்டப்பட்ட காலத்தோடு இன்றளவும் காட்சி அளிப்பதும் இதுதான்.

பல்வேறு கோவில்களில் சுற்றுச் சுவர்களை அழகிய ஓவியங்கள் அலங்கரிக்கும் நிலையில், இலக்கிய ஆக்கங்களை கல்வெட்டுகளாக பதிவு செய்த முதல் கோவில் தஞ்சை பெரிய கோவில். 50 மீட்டருக்கும் மேலான நீளத்தில் அமைந்த கல்வெட்டுகளும், கட்டுமானப்பணியில் பங்கேற்றவர்களையும் கல்வெட்டில் செதுக்கி பெருமைப்படுத்தியதும் இக்கோவிலில்தான்.

கோவில் உருவாக்கப்பட்டபோது, கோவில் பணிக்கென பூசகர்கள், ஓதுவார்கள் என 50 பேரும், ஆடல்கலையில் சிறந்த நடனமாதர்கள் 400 பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கோவிலுக்கு அருகே தளிச்சேரி என்ற இடத்தில் குடியிருப்புகள் ஏற்படுத்தியதோடு, கோவில் வருமானத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்க முறை செய்யப்பட்டது. ராஜராஜசோழனின் நிர்வாகத் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒரு பொக்கிசம் என்றால் அது மிகையல்ல. சுற்றுச்சுவர், தூண்கள், கைப்பிடிகள் போன்றவற்றிலும் புதைந்து கிடைக்கும் கல்வெட்டுகள் அன்றைய காலத்தின் தமிழர்களின் கொடைத் தன்மையை பறை சாற்றுபவை.


கோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கை எது, எவ்வளவு, அதனைக் கொண்டு செய்யப்படும் காரியம் எது, அதனை மேற்பார்வையிடும் அதிகாரி யார், அவருக்கு என்ன ஊதியம் என்பது போன்ற விரிவான தகவல்கள் அந்த கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. ராஜ ராஜ சோழன் வழங்கிய நிவேந்தங்களும், குந்தவை நாச்சியார் வழங்கிய செப்புத் திருமேனிகள் குறித்த கல்வெட்டுக்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் பலப் பல.

கோவில் கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்பது போன்ற பல்வேறு கட்டுக்கதைகள் தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி கர்ணப் பரம்பரைக் கதையாக கூறப்படுகிறது. ஆனாலும், அவ்வாறு கூறப்படுவது உண்மையல்ல. கோபுரத்தின் நிழல் சில டிகிரி அளவுக்கு பூமியில் விழுகிறது. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது அது சரியாக நிற்கவில்லை என்றும் கருவூரார் சித்தர் வெற்றிலைச்சாறு துப்பி நிற்க வைத்தார் என்றும், தனக்கு ஏற்பட்ட கருங்குஷ்டம் நோய் சரியாவதற்காவே ராஜராஜசோழன் இக்கோவிலை கட்டினான் என்றும் பல்வேறு கட்டுக்கதைகள் இதைப்பற்றி கூறப்படுகின்றன.

ஆனால் எதற்கும் வரலாற்று சான்றுகள் இல்லை. கதைகள் அனைத்தையும் தன்னகத்தே அடக்கி மவுன சாட்சியாய் நின்று கொண்டிருக்கிறது பெரிய கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம்18 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அதே போன்று வருடந்தோறும் ராஜராஜசோழன் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது வில்வ இலை, வன்னி இலை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்திக் கொழுந்து, அரசங்கொழுந்து உள்ளிட்ட 47 வகையான அபிஷேகம் நடத்தப்படும்.

இத்தனை பெருமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலை 1985 ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலுக்கு உள்ளே அழகிய நடைபாதை, வெளியே அகழி போன்றவை யுனெஸ்கோ நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய கட்டட ஞானத்தை பறைசாற்றும் தஞ்சை பெரிய கோவிலை இனிவரும் தலைமுறையினரும் கண்டு களிக்கும் வகையில் பேணிப் பாதுகாத்திட அனைவரும் ஒத்துழைப்பு அளியுங்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக