செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், அக்டோபர் 27, 2010

தரணி போற்றும் தஞ்சை பெரிய கோவில்!

தஞ்சையின் தனிநிகர் சிறப்பு மட்டுமல்ல இந்தியாவின் கட்டடக் கலைக்கு சான்றாக திகழும் தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டை கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அதன் சிறப்புகளையும் வரலாற்றையும் கடந்த இரண்டு கட்டுரைகளில் மிக நுட்பமாக எழுதியிருந்தாலும் இன்னும் அதன் சிறப்புகள் எண்ணிலடங்காமல் இருப்பதால் மீண்டும் ஒரு கட்டுரையை எழுதியுள்ளேன்.

இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும் வாணவன் மாதேவிக்கும் பிறந்த மைந்தன் இராஜராஜ சோழன். அருள் மொழிவர்மன் என்பது இவனது இயற்பெயர். கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடி சோழன், சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன் என்ற பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கினான்.


‘செந்திரு மடந்தை மண் ஸ்ரீராஜராஜன் இந்திர சமாணண் இராஜசர் வக்ஞன்’ என்று, திருக்கோயிலூர் கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது. ஐப்பசி மாதம் சதய நாளில் இராஜராஜன் பிறந்தான். அவனது பிறந்த நாளான ஐப்பசி சதய நாளில் திருவெண்காடு, திருப்புகலூர், எண்ணாயிரம், கோபுரப்பட்டி (பாச்சூர்) போன்ற பல கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்க தானம் அளிக்கப்பட்டதாகவும் கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

கட்டுமான கற்கோயில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில். இராஜராஜன் கி.பி.985 ல் அரியனை ஏறுகிறார். அவரது ஆட்சியில் கி.பி.1003 ல் துவங்கிய கோயில் கட்டுமானம், அரியனை ஏரிய இருபத்தைந்தாம் ஆட்சியாண்டு 275 ஆம் நாளில் நிறைவுபெற்றதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. கல்வெட்டு அடிப்படையில் கி.பி. 1010 ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள், தஞ்சை பெரிய கோயிலுக்கு மாமன்னன் இராஜராஜனால் முதல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது.


பிரகதீசுவரர் கோவில் என்று இன்று அழைக்கப்ட்டாலும், இராஜராஜீச்சுரம் என்றும், ஸ்ரீஇராஜராஜீசுவர முடையார் கோவில் எனவும் கல்வெட்டுக்களில் உள்ளதைக் காணலாம். கருவறைக்கு மேலே உள்ள விமானம், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், தட்சிண மேரு எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை அமைப்பு தனிச் சிறப்பானது. கருவறை ஒரு திருச்சுற்று உடையதாக விளங்குகிறது. இவ்வகையான கோவில் அமைப்பை, சாந்தாரக் கட்டடம் கலை அமைப்பு எனக் கூறுவர். கருவறை இரண்டு தளம் உடையதாக விளங்குகிறது. மேற் தளத்தில் சிவபெருமானே ஆடவல்லனாக, நடமாடும் சிற்பங்கள் காணப்படுகின்றன. நடனத்தில் வெளிப்படுத்தப்படும் 108 கரணங்களில், 81 மட்டுமே முழுமை அடைடந்ததாக உள்ளது. இறைவனுக்கு மேலே உள்ள விமானத்தின் உட்கூடு, வெற்றிடமாக, கதலிகா கர்ணம் என்ற கட்டடக்கலை அமைப்பில் அமைந்துள்ளது சிறப்பு.

தமிழகத்திலேயே இக்கோவிலில் மட்டும்தான் சோழர் கலை ஓவியங்கள் காணப்படுவது சிறப்பாகும். மேலும் நாயக்கர் கால ஓவியங்கள் மராட்டியர் கால ஓவியங்களும் இக்கோவிலில் காணப்படுகின்றன. இத்திருக் கோவிலில், உலக முழுவதுமுடைய நாயகி எனப்பெயர் கொண்ட அருள் வழங்கும் அம்மன் கோவில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

கோயிலின் இரண்டாம் கோபுரம் இராஜராஜன் திருவாயில் இதில் நாற்பதடி உயரமுள்ள ஒற்றைக்கல் நிலைகால்கள் இரண்டு உள்ளன. கோபுரத்தின் கிழக்குப் பகுதியில் பதினெட்டு அடி உயரமுள்ள ஒரே கல்லினால் ஆன இரண்டு துவார பாலகர் சிற்பங்கள் மிக அபூர்வமானது. அவற்றின் கீழ், பீடப் பகுதியில் சிவபுராணக் கதைகளின் சிற்பத் தொகுப்புகள் உள்ளன.

இராஜராஜன் திருவாயில் சுற்றுச்சுவர் கற்கோட்ட மதில்களில் எட்டு இடங்களில் எட்டுத் திசைத் தெய்வங்கள் எனப்படும் அஷ்டதிக்கு பாலகர்களின் சன்னிதிகள் இராஜராஜன் காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கில் இந்திரன் சன்னிதி உள்ளது. ஆனால் இந்திரன் சிலை இல்¬. தென்கிழக்கில் அக்னி, தெற்கில் எமன், தென்மேற்கில் நிருதி, மேற்கில் வருணன், வடமேற்கில் வாயு, வடக்கில் ஈசானன் ஆகிய சன்னிதிகள் உள்ளன.


கி.பி. 1311 ல் மாலிக்காபூர் படையெடுப்பின் விளைவாக இந்திரன் இல்லாமலும், வருணண், அக்னி, ஈசானன் ஆகிய திருவுருவம் சிலைகள் சிதைந்தும் காணப்படுகிறது. மகாநந்தி மண்டபத்திலிருந்து தெற்கே திருமாளிகைச் சுற்று அருகே, வராஹி அம்மன் சன்னிதி உள்ளது. இது இராஜராஜன் காலத்தில் அமைந்தது எனச் சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே காசியிலும், தஞ்சைப் பெரிய கோயிலும் மட்டுமே இந்தச் சன்னிதி உள்ளதெனக் கூறப்படுகிறது.

திருச்சுற்றில் வடமேற்கில் காணப்படும் சுப்பிரமணியர் கோவில் தஞ்சை நாயக்கர் மன்னர்களின் கலைப்படைப்பாகும். திருச்சுற்றில் தென் மேற்கில் காணப்படும் விநாயகர் சன்னிதி மராட்டியர் கால கலைப்படைப்பாகும். யுனெஸ்கோ அமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலை உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக 1987 ல் அறிவித்தது. அதன் இலச்சு இராஜராஜன் திருவாயிலில் நிறுவப்பட்டுள்ளது.

இப்படி தஞ்சைப் பெரிய கோவில் ஒப்பற்ற ஓர் கலை வரலாற்றுக் களஞ்சியமாகத் திகழ்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக