செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், மே 29, 2012

சிதம்பரம் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் தடை.!


ஜான் மிர்தால் (Jane Myrdal) ஒரு புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு அறிஞர். உலகின் பல நாடுகளில் நடைபெற்று வரும் அமைதி இயக்கங்களில் ஆர்வமுடன் பங்கெடுத்து சர்வாதிகார, கொடுங்கோல் அரசுகளைக் கண்டித்தும் இயக்கம் நடத்தி வருபவர். 85 வயதான இந்த உலகறிந்த அரசியல் அறிஞரை ‘இனிமேல் இந்தியாவுக்குள் நுழையக் கூடாது’ என அறிவித்துள்ளது இந்திய அரசு. ‘மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை வழங்கினார்’ என்ற குற்றத்திற்காக இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிதம்பரம் தலைமை அமைச்சராக இருக்கும் இந்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

யார் இந்த ஜான் மிர்தால்?

ஜான் மிர்தால் புகழ் பெற்ற ஆசிய நாடகம் (Asian Drama) என்ற பொருளாதார நூலை இயற்றிய மறைந்த குன்னர் மிர்தால் (Gunner Myrdal) அவர்களின் புதல்வர். அவரது தாய் ஸ்வீடன் நாட்டின் புகழ் பெற்ற அமைச்சராகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிகளுக்காகவும் பாராட்டப் பெற்ற காலம் சென்ற ஏவா மிர்தால் (Eva Myrdal). கொள்கை அடிப்படையில் இருவரும் சமுக ஜனநாயக வாதிகள், மக்களின் நல்வாழ்வுக்கு அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உடையவர்கள். இவர்கள் இருவரது பணிக்காகவும் தனித்தனியாக உலகின் அதி உயர்ந்த பரிசாகக் கருதப்படும் நோபல் பரிசு தரப்பட்டுள்ளது. இத்தகைய மிகவும் உயர்ந்த சமுக லட்சியங்களுக்காக வாழ்ந்து மறைந்த இந்தக் குடும்பத்தில் பிறந்தவர் ஜான் மிர்தால்.

தமது பெற்றோரைப் போலவே தாமும் உலக மக்களின் நல்வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜான் மிர்தால். தம் வாழ்வின் பெரும் பகுதியை அதாவது சுமார் அறுபது ஆண்டுகளாக ஜான் மிர்தால் மக்கள் பணி ஆற்றி வருகிறார். உலகின் பலபகுதிகளில் நடைபெறும் அமைதி போராட்டங்களுக்கு, இயக்கங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். போராடும் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை எப்போதும் ஆதரித்து வருபவர். தமது நாட்டு அரசாங்கத்தையும் வெளிப்படையாகக் கண்டித்து இவர் பெரிய அளவில் இயக்கங்கள் நடத்தி உள்ளார். அடிப்படையில் இவர் ஒரு ஆய்வாளர்,ஜனநாயகவாதி, எழுத்தாளர், பேச்சாளர்.


இவர் சில காலம் இந்தியாவில் தங்கியும், பல முறை பயணம் செய்தும் பிரபலமான நூல்களை எழுதியிருக்கிறார். 1983-ம் ஆண்டு இவர் எழுதிய ‘இந்தியா காத்திருக்கிறது’ (India Awaits) என்ற நூல் தமிழ் உள்பட பல மொழிகளில், பல பதிப்புகள் வெளிவந்துள்ளது. இதே போலவே கடந்த ஆண்டில் ‘இந்தியாவின் மீதொரு சிவப்பு நட்சத்திரம் ௲ அடிமைப்பட்ட மக்கள் விழித்தெழும்காலையில் நமது பார்வைகள், பிரதிபலிப்புகள், விவாதங்கள்” (Red Star Over India. Impressions, Reflections and Discussions when the Wretched of the Earth are Rising.) என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்த நூல் இந்தியாவின் கல்கத்தா, டில்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இவர் நேரடியாகக் கலந்து கொண்ட கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் முன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
குன்னர் மிர்தால் 

ஆங்கிலத்தில் மட்டும் தற்போது கிடைக்கும் இந்த நூல் இந்தி, தெலுங்கு, வங்காளி, தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் அச்சில் வெளிவர இருக்கின்றது. முன்னெப்போதும் இல்லாத அளவில் வரவேற்புப் பெற்ற இந்த நூலையும் அதன் மொழி பெயர்ப்புகளையும் கண்டு கிலி கொண்ட மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அதன் எழுத்தாளரையே தடை செய்துவிட்டனர். இது மட்டும் அல்லாது தம்மை ‘அறிவாளிகளாக’ கருதிக் கொள்ளும் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டாளியுமான சிதம்பரமும் செய்து வரும் படுகொலைகள் பேராசை பிடித்த தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் செய்து வரும் சேவை என்ற விபரத்தை ஜான் மிர்தால் உலகின் பல பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

பல ஐரோப்பிய,ஆசிய மொழிகளில் வெளியாகும் அவரது எழுத்துகள் சமீப காலமாக இந்திய அரசியல்வாதிகள் குறிப்பாக மன்மோகன் சிங்குக்கும் சிதம்பரத்திற்கும் (அவ)மானப் பிரச்சனையாகியுள்ளது. எனவே, இவரது எழுத்துகளைத் தடை செய்ய ஒரு வழியாக அவரையே தடை செய்து விட்டனர்.

மாவோயிஸ்டுகளுக்கு ஆலோசனை?

மாவோயிஸ்டுக் கட்சியினரின் கருத்துகளை இந்தியப் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது இயக்கம் பணி செய்யும் பகுதிகளுக்குச் சென்று இயக்கத்தின் தலைவர்களையும் மக்களையும் நேரடியாகக் கண்டு பேட்டியெடுத்து வெளியிட்டவர் ஜான் மிர்தால். அவரது பேட்டிகளும் குறிப்புகளும் மத்திய இந்தியாவில் நடக்கும் அடக்குமுறை பற்றிய விபரங்களை சர்வதேசத்திற்கும் சிறப்பாக அறிமுகம் செய்தது.  

இதில் இருந்து தான் உலகம் மாவோயிஸ்டுகளின் உண்மையான நிலைபாடுகளை அவர்களின் வெட்டிச் சிதைக்கப் படாத முழுமையான பேட்டிகள் மூலம் நேரான வழியில் அறிந்து கொள்ள முடிந்தது. அப்போதிருந்தே அவரைக் குறி வைத்திருந்த இந்திய அரசு காரணம் எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் ‘மாவோயிஸ்டுகளுக்கு அவர் ஆலோசனை சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளது’.  தாம் ஆலோசனை எதுவும் சொல்லவில்லை என்றும் தான் பேசிய அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், அறிவாளிகள் பங்கேற்ற அரங்கக் கூட்டங்கள் தவிர வேறெதுவும் செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார். 

Model Photo for maoists
இவருடைய சமீபத்திய நூல், மத்திய இந்தியப் பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலங்களை சிதம்பரமும் மன்மோகன் சிங்கும் பிடுங்கி வருவதை விளக்குகிறது. இந்தியாவின் போலீசையும், ராணுவத்தையும் கொண்டு பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களது நிலங்களை தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதை இந்த நூல் தமது கள ஆய்வு விபரங்களுடன் வெளியிட்டுள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போர் நடத்துகிறோம் என்று சிதம்பரம் சொல்வது உண்மையில் பழங்குடிகளின் நிலத்திற்கான போர் என்ற விபரங்களை மீண்டும் ஒருமுறை இந்த நூல் நிறுவியுள்ளது. 

குறிப்பாக மாணவர்கள்,அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த நூல் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு சகிக்காத சிதம்பரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதுவரை இந்த நூலை இந்திய அரசு தடை செய்ய வில்லை. ஆயினும், அது குறித்துப் பேசவோ மீண்டும் ஆய்வுக்கான விபரங்கள் சேகரிக்கவோ ஜான் மிர்தால் இந்தியாவுக்குள் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் தடையை விதித்துள்ளது.

கட்டுரையாளர் ராமசாமி,சென்னை 
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.
(தொடர்ச்சி நாளை மறுநாள்...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக