செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், மார்ச் 22, 2012

“வெங்காயத் தீர்மானம்.!”போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்சே இந்திய பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்..., “நாங்கள் இந்தியா வுக்காகவும் போரிட்டு இருக்கிறோம்!”


ஆமாம், ராஜபக்சே பொய் சொல்லவில்லை. இந்தப்போரை இந்தியா பின்னின்று நடத்தியது. ‘எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி, ‘விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்களையும் இலங்கைக்கு வழங்கியது. ஆட்களை அனுப்பியது. சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிப்புளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது.

ராஜதந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது. யோசித்துப் பாருங்கள்... இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தம்? ஆனாலும், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், “அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும். ஆனால், தீர்மானத்தின் இறுதி வரைவை ஆய்வு செய்யும்” என்று இரண்டு பக்கமுமாக பதில் சொல்லி இருக்கிறார். இது எப்படித்தெரியுமா இருகிறது... ‘பாம்பும் சாகக்கூடாது, கம்பும் உடையக்கூடாது.’


உங்களுக்கு நினைவிருக்கிறதா?

2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங், அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாரா யணனையும் வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், “இலங்கையில் போர்ப்பகுதியில் ‘பாதிக்கப் பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன” என்று அறிவித்தார்.

விடுதலைப்புலிகள் தலைமை அமெரிக்காவிடம் இருந்தும், இங்கிலாந்திடம் இருந்தும் பொது மன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்துச் சரணடையக் காத்திருந்த நாள் அது. ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொது மன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி, சர்வதேசத்தால் வழங்கப் பட்டதற்கான மறைமுக சாட்சி அது. ஆமாம், அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு.


‘உலகிலேயே மிக ஆபத்தான பயங்கரவாத அமைப்பு’ என்று விடுதலைப் புலிகளுக்கு முதன் முதலில் கட்டம் கட்டியது அமெரிக்காதானே? கொத்துக் கொத்தாகக் குண்டுகள் விழுந்தபோதும், தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின் பேரில்தான் அது நடந்தது?

போர்க் குற்றங்களுக்காக சர்வதேசம் மூன்று வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம். முதலாவது, ஐ.நா.சபையின் பாதுகாப்பு அவையின் மூலம் தீர்மானம் நிறைவேற்று வதன் மூலம். இங்கு இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இலங்கையைக் காப்பாற்ற சீனாவிடம் உள்ள ‘வீட்டோ’ அதிகாரம் போதுமானது.

இரண்டாவது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை மூலம், தன்னுடைய வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முதலாக ஒருவரை - காங்கோவின் தாமஸ் லுபாங்காவை - போர்க்குற்றவாளி என்று அறிவித் திருக்கிறது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம். அதன் சக்தி அவ்வளவுதான். இங்கும்கூட இலங்கை தண்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.


ஏனெனில், போர் அற விதிகளைக் கடைப்பிடிக்கும் உறுதி மொழியை ஏற்று, இந்த நீதிமன்றத்தின் கீழ்வரும் நாடுகள் மீதுதான் சர்வதேச நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கை இதில் கையெழுத்து இடவில்லை.

மூன்றாவது... மனித உரிமை ஆணைய விசாரணை மூலம். வெறும் கண்டனங் களையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தல்களையும் மட்டுமே முன்வைக்க அதிகாரம் பெற்ற அமைப்பு இது. இதன் முன்புதான் இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. சுருக்கமாக இந்தத் தீர்மானம் என்ன சொல்கிறது? போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசு அமைத்த ‘விசாரணை ஆணையம்’ அளித்த அறிக்கையில் உள்ள விசயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறது?

அதிர்ச்சி அடையாதீர்கள். இரண்டு பகுதிகளைக் கொண்ட அந்த அறிக்கையின் முதல்பகுதி போர்க்குற்றங்கள் தொடர்பானது. இலங்கை ராணுவம் எந்தப் போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று சொல்கிறது. இரண்டாவது பகுதி, போருக்குப் பிந்தைய தமிழர்கள் நிலை தொடர்பானது. தமிழர்கள் பகுதி முழுவதும் ராணுவ மயமாக்கப்பட்டுள்ள சூழல் மாற்றப்பட வேண்டும்.

தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. இதைத் தான் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் முன் மொழிகிறது. போரில் நடந்த மனித உரிமை மீறல்களையோ, போர்க்குற்றங்களையோ, அவை தொடர்பான சர்வதேச விசாரணையைப் பற்றியோ அல்ல.!


சரி, அப்படியே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும்? இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கோரும். அப்போதும் இலங்கை அரசு கேட்காவிட்டால்? ஒன்றும் நடக்காது. அதிகபட்சம் சில பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம். இலங்கையைப் பொறுத்த அளவில் அதுவும் நடக்காது. ஏனெனில், விதிப்பவர்களுக்குத்தான் அதிக நட்டம். இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச சொன்னதுபோல், ‘கோக் இல்லாவிட்டால், சிங்களர்கள் செத்துப்போய் விடுவார்களா என்ன?’

சரி, இப்படி ஒரு விசயத்துக்கு ஏன் இத்தனை களேபரம்?

சீனாவுடனான பனிப்போரில், ஆசியப் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தை மட்டுப் படுத்தி வைக்க அதன் நெருக்கமான கூட்டாளி இலங்கையைத் தட்டிவைக்க வேண்டிய அரசியல் அமெரிக்காவுக்கு, தமிழகத்தின் மின்வெட்டு பிரச் சனையைத் திசை திருப்ப வேண்டிய அரசியல் ஆளும் அ.தி.மு.க.வுக்கு.


அதற்குப் பதில் லாவணி பாட வேண்டிய நிர்பந்த அரசியல் தி.மு.க.வுக்கு. மற்ற தமிழர் அமைப்புகள் வேறு ஏதோதோ காரணங்களோடுதான் கூச்சலிடுகின்றன. இது அவர்களின் மன சாட்சிக்கே விட்டுவிடுகிறேன். ஒரு சில இயக்கங்களைத் தவிர.! அதேபோல் இந்த விசயத்தைப் பெரிய விவகாரமாக எடுத்துக்கொள்ள இலங்கை க்கும் அரசியல் உண்டு.

ராஜபக்சே மீதான அதிருப்தி மறைந்து தேசிய வெறி மீண்டும் தலைதூக்க இது உதவும். ஆக, எல்லோருடைய அரசியலுக்கும் செத்தும் உயிர் கொடுக்கிறான் இலங்கைத் தமிழன். ஆக மொத்தத்தில் அமெரிக்கா கொண்டுவந்து ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் ஆதரவுடன் இன்று (22-03-2012) நிறைவேற்றப்பட்டுள்ள இந்த அமெரிக்கா தீர்மானத்தால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. காமராஜர் பாணியில் சொல்ல வேண்டுமானால், ‘வெங்காயத்தை உரிக்க உரிக்க கண்ணீர்தான் மிஞ்சுகிறது.!’

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக